இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
ஆண்டவர் இயேசுவின் பணியை செய்ய அழைக்கப்பட்டு இருக்கக்கூடிய நீங்களும் நானும் இந்த இயேசுவை உறுதியாக பற்றிக்கொண்ட மனிதர்களாக, நம்பிக்கையோடு அவரை இதயத்தில் சுமந்தவர்களாக நற்செய்தி பணியாற்றிட அழைக்கப்படுகின்றோம். இந்த நற்செய்தி பணியை செய்வதற்கு நமக்கு பணமுமோ பொருளோ அவசியம் அல்ல. மாறாக ஆண்டவர் இயேசு கிறிஸ்து ஒருவர் மட்டுமே போதும் என்ற மனநிலையோடு தொடர்ந்து பயணம் செய்ய அழைக்கப்படுகின்றோம்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தனது பணியை செய்ய அனுப்பிய சீடர்களுக்கு எதை எடுத்துச் செல்வது, எதை எடுத்துச் செல்ல வேண்டாம் என்பதை வலியுறுத்துகின்றார். அவர்கள் பணத்தையோ பொருளையோ நம்பிச் செல்ல வேண்டாம். இந்த ஆண்டவரை நம்பி உங்கள் பயணத்தை அமைத்துக் கொள்ளுங்கள் என்ற ஆறுதலான வார்த்தைகளை கடவுள் அவர்களுக்கு தருகிறார். செல்லுகின்ற இடத்தில் எல்லாம் இறையாட்சியை பற்றிய நற்செய்தியை அறிவிக்க சொல்கிறார். ஏற்றுக்கொள்பவர்களுக்கு எல்லாம் அமைதியை தரச் சொல்லுகிறார். இந்த இயேசுவை ஏற்றுக் கொண்டிருக்க கூடிய நாமும் நமது வாழ்வில் நாளும் இயேசுவை அறிவிக்க அழைக்கப்படுகிறோம். இயேசுவின் இறையாட்சி இந்த மண்ணில் வளர்வதற்கு நீங்களும் நானும் நல்லதொரு முன்மாதிரிகளாக, நமது செயல்கள் மூலம் இறையாட்சியை இம்மண்ணில் மலரச் செய்ய அழைக்கப்படுகிறோம்.
நாம் காணுகின்ற மனிதர்களுக்கு எல்லாம் அமைதியை கொடுக்கின்றவர்களாகவும், நம் வாழ்வு மூலமாக அவர்களின் வாழ்வு மேலோங்குவதற்கு நாம் நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு, நாளும் கடவுளை இதயத்தில் சுமந்தவர்களாக நம்பிக்கையோடு பயணம் செய்ய இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம். இந்த அழைப்பை இதயத்தில் ஏற்றவர்களாக நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு கடவுளின் பாதையில் நாளும் பயணம் செய்து ஆண்டவர் இயேசுவின் இறையாட்சியை இம்மண்ணில் மலர்விப்பதற்கான கருவிகளாக இருப்பதற்கான ஆற்றல் வேண்டி இன்றைய நாளில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக