இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
இன்றைய முதல் வாசகத்தில் அனைத்தையும் விட்டுவிட்டு வந்த ஆபிரகாமை குறித்து நாம் வாசிக்க கேட்டோம். இந்த ஆபிரகாமை போலவே கடவுள் மீதான ஆழமான நம்பிக்கையில் நாம் நிலைத்திருக்க வேண்டும் என்பதை இன்றைய இறை வார்த்தைகள் நமக்கு வலியுறுத்துகின்றன. ஆண்டவர் இயேசு கிறிஸ்து தனது பாடுகளை பற்றி அறிவித்த போது இவ்வாறு உமக்கு நேரக் கூடாது என்று பேதுரு அவரை கடிந்து கொண்டார். பேதுருவின் வார்த்தையை கேட்ட மாத்திரமே ஆண்டவர் இயேசு கிறிஸ்து அப்பாலே போ சாத்தானே! என்று சொல்லி, நீ கடவுளுக்கு உரியவற்றை நாடாமல் மனிதனுக்குரியவற்றை நாடுகிறாய் என்று கூறினார். அதன் பிறகு தான் இந்த தாபோர் மலை உருமாற்றமானது நிகழ்கிறது தன்னுடைய சீடர்கள் தன்னையும் தனது பணியையும் இன்னும் ஆழமாக புரிந்து கொள்ளவில்லை என்பதை உணர்ந்தவராக தாபோர் மலைக்கு தன்னுடன் சில சீடர்களை அழைத்துக் கொண்டு இயேசு செல்லுகிறார். தாபோர் மலையில் அவர்கள் இரண்டு விதமான குரலை கேட்கிறார்கள். ஒன்று- இவரே என் அன்பார்ந்த மகன் இவருக்கு நீங்கள் கீழ்ப்படியுங்கள் என்பதாகும். அந்த வார்த்தையை கேட்ட மாத்திரமே அவர்கள் இந்த ஆண்டவரின் மீது அளவு கடந்த நம்பிக்கை கொண்டவர்களாக மாறுகிறார்கள். அதனை முடித்த பிறகு இந்த மலையிலேயே நாம் தங்கியிருப்பது எத்தனையோ நல்லது என்று அவர்கள் எடுத்துரைத்த போது, நாம் இங்கிருத்தல் ஆகாது என்று சொல்லியவராக அவர்களை மலையிலிருந்து கீழே அழைத்துச் செல்லுகின்றார், இயேசு கிறிஸ்து.
இந்த நிகழ்வுகளை நமது வாழ்வோடு ஒப்பிட்டு பார்க்க நாம் அழைக்கப்படுகிறோம். பல நேரங்களில் மேன்மை மிக்கவர்களாக, மதிப்பு மிக்கவர்களாக, உயர்ந்த இடத்தை நாடுகிறவர்களாக நம்மை நாமே உயர்த்திக் கொண்டிருக்கிறோம். ஆனால் கடவுளுக்கு முன்னிலையில் நம்மை நாமே தாழ்த்திக் கொள்ளக்கூடியவர்களாக அவர் மீது ஆழமான நம்பிக்கை கொண்ட ஆபிரகாமை போல, நமது வாழ்வையும் அவர் மீது நம்பிக்கை கொண்ட ஒரு வாழ்வாக அமைத்துக் கொண்டு, அவரது பணியை செய்வதற்காக நாம் இருக்கின்ற நிலையில் இருந்து இன்னும் நாம் இறங்கி வர வேண்டும் என்பதை இன்றைய இறை வார்த்தை வழியாக நீங்களும் நானும் உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகிறோம். இந்த இறை வார்த்தையை இன்றைய நாளில் நமது வாழ்வோடு ஒப்பிட்டு பார்த்து, நம்மிடம் இருக்கின்ற மதிப்பு மிக்க காரியங்கள், உயர்ந்த எண்ணங்கள், நான்தான் பெரியவன் என்ற ஆணவம் அனைத்தையும் தளர்த்தியவர்களாக ஆண்டவர் இயேசுவின் பணியை செய்வதற்காக நம்மை நாமே தாழ்த்திக் கொண்டு, இந்த தவக்காலத்தில் அவருக்குரிய மனிதர்களாக மாறிட ஆண்டவரிடத்தில் அருள் வேண்டி இன்றைய நாளில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக