இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
கடவுளின் கட்டளைக்கு செவி கொடுக்க மறந்து இருந்தாலும், மனிதன் மீது கடவுள் இரக்கம் கொண்டார் என்பதன் அடையாளம் ஆதிப் பெற்றோருக்கு ஆண்டவர் குழந்தை செல்வத்தை கொடுத்தார். இந்த குழந்தைகளை கடவுளுக்குரிய காரியங்களில் வளர்க்க அவர்கள் தவறியதன் விளைவு, காயின் ஆபேல் மீது பொறாமை கொண்டு ஆபேலை கொன்றான். ஆபேலை கொன்று இருந்த நிலையிலும் கூட கடவுள் அவர்கள் செய்ததை தவறு என்பதை சுட்டிக்காட்டி, வாழ்வை நெறிப்படுவதற்கான அழைப்பை கொடுத்தார். மீண்டும் மூன்றாவதாக சேத்து என்ற மகனையும் அந்த ஆதி பெற்றோருக்கு கடவுள் கொடுத்து அவர்களுக்கு ஆசிகளை வழங்கினார்.
தவறிழைக்கின்ற போதெல்லாம் கடவுள் மன்னித்து இரக்கம் காட்டுவதை உணர்ந்து கொள்ள இன்றைய இறை வார்த்தை பகுதிகள் நமக்கு வலியுறுத்துகின்றன.
ஆனால் இயேசு கிறிஸ்து இந்த மண்ணில் வாழ்ந்த போது, அவர் செய்த அத்தனை அருள் அடையாளங்களை கண்டிருந்தாலும் கூட அவரிடத்தில் இன்னும் அதிகமாக அடையாளங்களை தேடுகிறவர்களாக கேட்கிறார்களாகத் தான் பரிசேயர்களும் சதுசேயர்களும் இருந்தார்கள். வானத்திலிருந்து ஒருவர் அடையாளத்தை தருகிறார் என்றால் அவர் மானிடமகன் என்ற எண்ணம் அவர்கள் உள்ளத்தில் மேலோங்கியது. எனவே இயேசுவின் இடத்தில் வந்து நின்று வானத்திலிருந்து ஒரு அடையாளத்தை தங்களுக்கு காட்டுமாறு கேட்டார்கள். ஆனால் ஆண்டவர் இயேசு கிறிஸ்து கண்டு விசுவாசிக்காத அவர்களுடைய உள்ளத்தை உணர்ந்தவராக, நான் உங்களுக்கு எந்த அடையாளத்தையும் தரப் போவதில்லை என்று சொல்லக்கூடியவராக, தான் செய்கின்ற நற்காரியங்களை தொடர்ந்து செய்கிறவராக இருந்தார். இந்த இயேசுவின் மனநிலை இன்று நமது மனநிலையாக இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகிறோம். நாம் நமது வாழ்வை, தவறு இழைத்த ஒரு வாழ்வாக அமைத்துக் கொண்டிருந்தாலும் கூட, நம்மை சரி செய்து கொள்வதற்கு இறை வார்த்தைகள் அழைப்பு தருகின்றன. இந்த இறை வார்த்தைகள் வழியாக கடவுள் நமக்கு கொடுத்திருக்கின்ற அத்தனை காரியங்களையும் முறையாக செய்வதற்கு அழைக்கப்படுகின்றோம். பல நேரங்களில் வெளிப்புற அடையாளத்தை நாடிச் செல்வதை விட, கடவுள் நமது வாழ்வில் செய்த அத்தனை காரியங்களையும் அமைதியில் அமர்ந்து உணர்ந்து கொண்டு இந்த இயேசுவின் மீதான ஆழமான நம்பிக்கையில் தொடர்ந்து பயணிப்பதற்கான ஆற்றலை வேண்டி இன்றைய நாளில் இறைவனிடத்தில் மன்றாடுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக