இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
பொதுக்காலத்தின் ஆறாம் ஞாயிற்றுக்கிழமையை கொண்டாடிக் கொண்டிருக்கின்ற இந்த நந்நாளிலே இன்றைய இறை வார்த்தை அடிப்படையில் நாம் நமது வாழ்வை சுய ஆய்வு செய்து பார்க்க அழைக்கப்படுகின்றோம்.
முதல் வாசகம் அழகாக குறிப்பிடுகிறது நமக்கு முன்னிலையில் வாழ்வும் சாவும் இருக்கிறது. எதை நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம் என்ற கேள்வியை நமக்குள் எழுப்புகிறது.
இன்றைய இரண்டாம் வாசகத்திற்கு கடந்து செல்லுகிற போது நம் மத்தியில் இருந்த இயேசு கிறிஸ்து நமக்கு வாழ்வு வழங்க வந்தவர். அதை உணர்ந்து கொள்ளாமல் ஞானமற்றவர்களாக இந்த இயேசுவின் இறப்புக்கு நாம் அனைவரும் காரணமாகி விட்டோம் என்பதை பவுல் எடுத்துரைக்கின்றார்.
நற்செய்தி வாசகத்திற்கு கடந்து செல்கிற போது, ஆண்டவர் இயேசு கிறிஸ்து இந்த மண்ணில் வாழுகிற போது, நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு வாழ்வதற்கான பல காரியங்களை முன்னுரைக்கின்றார். அத்தகைய காரியங்கள் அத்தனையுமே நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு எதை செய்தாலும் அதை அர்த்தமுள்ள உணர்வோடு அதன் அர்த்தத்தை உணர்ந்தவர்களாக செய்வதற்கான அழைப்பை தருகிறது. நாம் கடவுளுக்கு முன்னிலையில் கொடுக்கிற காணிக்கை பொருட்களை அவர் விரும்புவதில்லை. மாறாக உள்ளார்ந்த மாற்றத்தோடு உறவுகளோடு இணைந்து வாழ்கின்ற வாழ்வையே அவர் விரும்புகின்றார். இந்த கடவுளின் முன்னிலையில் எண்ணிப் பாராமல் நம் வார்த்தைகளை கொடுப்பதை விட, எதையும் எண்ணிப் பார்த்து செய்வதற்கான அழைப்பை தருகிறார்.
நம் வாழ்வை நெறிப்படுத்திக் கொள்ள அத்தனை காரியங்களை ஆண்டவர் இயேசு கிறிஸ்து உரைத்ததை இன்றைய நற்செய்தி வாசகமாக நாம் வாசிக்கக் கேட்டோம். இந்த இறைவார்த்தை பகுதிகள் அனைத்தும் நமக்கு உணர்த்துவது முதல் வாசகம் சொன்னது போல வாழ்வையும் சாவையும் தேர்ந்து கொள்வதற்கான ஒரு அழைப்பு. இயேசுவின் வார்த்தைகளை கேட்டு நாம் வாழ்வை தேர்ந்து கொள்ளக்கூடியவர்களாக நமது வாழ்வை அமைத்துக் கொள்ள அழைக்கப்படுகிறோம். ஆண்டவர் எடுத்துரைத்த அத்தனை காரியங்களும் நமது வாழ்வை நெறிப்படுத்துவதற்கு என்பதை உணர்ந்து இருக்கின்ற நாம், அந்த காரியங்களுக்கு எல்லாம் செயல் வடிவம் தருகின்ற மனிதர்களாக நாளும் வளர்வதற்கான ஆற்றலை இன்றைய நாளில் இறைவனிடத்தில் மன்றாடுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக