இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன் !
எத்தனையோ நன்மைகளை ஆண்டவரிடத்தில் இருந்து பெற்றுக்கொண்ட இஸ்ரேல் மக்கள் தான் பெற்றுக் கொண்ட நன்மைகளின் நிமித்தமாக மற்றவர்களுக்கு நன்மை செய்து, இருக்கின்றவர்களோடு இணைந்து வாழ்வதற்கு பதிலாக, தங்களுக்குள்ளாக பல்வேறு கருத்து முரண்களை வைத்துக்கொண்டு மனிதர்களை அன்னியப் படுத்தி வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என்ற வகையில், பலரை தங்களிடம் இருந்து அந்நியப்படுத்தி வாழ்ந்தார்கள்.
அதிலும் குறிப்பாக சமாரியர்களோடு யூதர்கள் பழக விரும்பாதவர்களாகவும் சமாரிய பகுதிகளுக்கு செல்லுவதை கடவுளுக்கு உகந்த காரியம் அல்ல என்று எணணக் கூடியவர்களுமாக தங்கள் வாழ்வை அமைத்துக் கொண்டார்கள். தாங்கள் மட்டுமே தூய்மையானவர்கள் என்று மனநிலையோடு கடவுள் தங்களுக்கு உரியவர் என்ற மனநிலையோடு வாழ்ந்து வந்தார்கள். இந்தச் சூழ்நிலையில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து சமாரியர்களை தேடிச் சென்று, அவர்களோடு அமர்ந்து, அவர்களோடு தங்கி இருந்து, அவர்களுக்கு ஆண்டவரின் வார்த்தைகளை எடுத்துரைத்தார். இந்த இயேசுவைப் போலவே நாமும் நமது வாழ்வை அமைத்துக் கொள்ள அழைக்கப்படுகிறோம். நாம் வாழுகின்ற இந்த சமூகத்தில் எத்தனையோ பிரிவினைகளும் எத்தனையோ கருத்து முரண்களும் இருந்தாலும், அனைத்திற்கும் மத்தியிலும் நமக்கு நன்மை செய்து கொண்டிருக்கின்ற கடவுளைப் போல, நாமும் மற்றவர்களுக்கு நன்மை செய்கின்றவர்களாக, நம்மோடு இருப்பவர்கள் அனைவருமே கடவுளின் பிள்ளைகள் என்பதை உணர்ந்தவர்களாக நமது வாழ்வை வைத்துக்கொள்ள ஆற்றல் வேண்டி இன்றைய நாளில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக