இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
இன்றைய இறை வார்த்தையானது செபிப்பதை குறித்து சிந்திக்க நமக்கு அழைப்பு விடுக்கிறது. ஆண்டவருக்கு முன்னிலையில் வார்த்தைகளை அடக்கி கொண்டே போவதிலோ அல்லது அடுக்கு மொழிகளை பேசுவதிலோ அல்லது ஆயிரம் ஆயிரம் துதிகளை பாடுவதிலோ இறைவன் நாட்டம் கொள்வதில்லை. மாறாக ஆண்டவரோடு உரையாடுகின்ற நாம் எதைச் சொல்லி உரையாடுகிறோம்? என்பதை உணர்ந்தவர்களாக கடவுள் முன்னிலையில் பேசுகிற போது, எண்ணி பார்த்து எதையும் செய்ய வேண்டும் என்பதை இன்றைய வாசகங்கள் வழியாக நாம் உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகிறோம்.
ஆண்டவர் இயேசு கிறிஸ்து தம் சீடர்களுக்கு எப்படி செபிக்க வேண்டும் என கற்றுக் கொடுத்தார். அந்த ஜெபத்தை நாம் சீர்தூக்கி பார்க்கிற போது நாம் நமது செயல்பாடுகளை வைத்து தான், அந்த ஜெபம் உருவாகி இருப்பதை நாம் உணர்ந்து கொள்ள முடியும். நாம் மற்றவரை எந்த அளவிற்கு மன்னிக்கிறோமோ அதே அளவிற்கு கடவுள் நம்மீது மன்னிப்பை பொழிய வேண்டும் என வேண்டுகிறோம். சோதனைகளை எதிர்கொள்ளுகிறபோது அந்த சோதனைகளுக்கு மத்தியிலும் மீண்டும் எழுந்து நிற்பதற்கான ஆற்றலை தர வேண்டுமென இறைவனிடத்தில் மன்றாடுவதற்கு இயேசு கற்றுக் கொடுத்தார்.
இயேசுவின் செபம் நம்மால் உணரப்படக்கூடிய, நமது செயல்களை மையப்படுத்திய ஜெபமாக அமைந்தது. அத்தகைய செபமாக நமது வாழ்வும் அமைய வேண்டும் என்பது தான் இன்றைய நாள் இறைவார்த்தை நமக்கு தருகின்ற வாழ்க்கைப் பாடமாக இருக்கிறது. இந்த வாழ்க்கை பாடத்தை உணர்ந்தவர்களாக இறைவனோடு உள்ள செப உறவில் நாம் எப்போதும் நம்பிக்கையோடும் பக்தியோடும் இறைவன் முன்னிலையில் எதைச் சொல்லுகிறோம் என்பதை சிந்தித்தவர்களாய், நாம் இறைவனோடு உள்ள உரையாடலை தொடர்வதற்கும், தொடர்ந்து இந்த உரையாடல் வழியாக இறைவனோடு உறவில் நிலைத்திருப்பதற்கும் ஆற்றல் வேண்டி, இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக