இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
கடவுள் படைத்த மனிதன் கடவுளின் வார்த்தைக்கு செவி கொடுத்து வாழ வேண்டும் என கடவுள் விரும்பினார் ஆனால் மனிதன் கடவுளின் வார்த்தைக்கு செவி கொடுப்பதை விட தீமையின் உருவமான சாத்தானின் வார்த்தைகளுக்கு செவி கொடுத்து தன் வாழ்வை கறைபடுத்திக் கொண்டதை இன்றைய முதல் வாசகத்தின் வாயிலாக நாம் வாசிக்க கேட்டோம். இந்த வாசகப் பின்னணியோடு நற்செய்தியை நாம் நோக்குகிற போது, பல நபர்கள் நம்பிக்கையோடு கடவுளை நாடி வந்து, நலன்களை பெற்றுக் கொண்டதை நற்செய்தி வாசகம் நமக்கு சுட்டிக்காட்டுகிறது.
தவறிழைத்த ஒவ்வொரு மனிதனுமே தான் செய்த செயலை சீர்தூக்கிப் பார்த்து தான் செய்தது தவறு என உணர்ந்து மனம் வருந்தி மன்னிப்பு வேண்டுகிற போது கடவுள் அவனை மன்னிக்க கூடியவராக இருக்கின்றார்.
ஆனால் தொடக்கத்தில் தான் செய்தது தவறு என்பதை அறிந்திருந்த நிலையில் கடவுள் அவரிடத்தில் கடவுளின் குரலை கேட்டு அவரிடத்தில் மனம் வருந்தி மன்னிப்புக் கேட்பதற்கு பதிலாக தன்னை மறைத்துக் கொள்ளக்கூடியவனாக மனிதன் இருந்தான் என்பதை முதல் வாசகம் நமக்கு சுட்டிக்காட்டுகிறது.
இந்த இறை வார்த்தை பகுதிகளின் அடிப்படையில் நமது வாழ்வை சீர்தூக்கிப் பார்க்க அழைக்கப்படுகிறோம். நாம் அறிந்தோ அறியாமலோ செய்த அத்தனை தவறுகளையும் நினைவு கூருவோம். கடவுளிடத்தில் நம்பிக்கையோடு அவர் நம்மீது மனமிரங்கி நம்மை மன்னிப்பார் என்ற நம்பிக்கையோடு அவரிடத்தில் நமது குற்றங்களை அறிக்கையிட்டு மனமாற்றம் பெற்றவர்களாக பாவத்திற்கு ஏதுவான அத்தனை சூழ்நிலைகளையும் தகர்த்தெறியக் கூடியவர்களாக கடவுளின் வார்த்தைகளை மட்டுமே இதயத்தில் இருத்திக் கொண்டு அவரின் வார்த்தைகளை வாழ்வாக்கக் கூடிய மனிதர்களாக நாம் இருப்பதற்கான அழைப்பு இன்றைய இறை வார்த்தை பகுதி வழியாக நமக்கு வழங்கப்படுகிறது.
இந்த வார்த்தைகளை இதயத்தில் ஏற்றுக்கொண்டு நமது வாழ்வாக மாற்றுவதற்கு இறைவனுடைய அருளை இன்றைய நாளில் இறைஞ்சி மன்றாடுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக