இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
இன்றைய முதல் வாசகம் முதல் பெற்றோரின் பாவத்தையும் இரண்டாம் வாசகம் பாவத்தினால் உண்டான சாவு குறித்தும் நற்செய்தி வாசகத்தில் இயேசு கிறிஸ்துவின் சோதனைகளை பற்றியும் நாம் வாசிக்க கேட்டோம். தொடக்கத்தில் கடவுள் மனிதனை படைத்து இந்த மனிதன் தனக்கு கீழ்படிகின்ற மனிதனாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு ஒரு கனியினை உண்ணக்கூடாது என்று சொன்னார். ஆனால் அவர் சொன்னதை மீறி மனிதன் சோதனைக்கு உள்ளாகி விலக்கப்பட்ட கனியினை உண்டு கடவுளிடமிருந்து தன்னை விலக்கிக் கொண்டான் என்பதை விவிலியத்தின் துணைகொண்டு அறிந்து இருக்கிறோம். ஒருவிதத்தில் இது போன்ற ஒரு சோதனையினை இயேசுவும் தன் வாழ்வில் மேற்கொள்ளுகிறார். 40 நாட்களுக்கு பிறகாக அவரை சந்திக்கின்ற அலகை உண்பதற்கு இனிய அப்பங்களை அவருக்கு உண்பதற்கு ஏற்ற வகையில் கல்லினை அப்பமாக மாற்றி உண்ணுமாறு அவரை தூண்டிய போது, அவர் கடவுளின் வார்த்தைகளே உணவு என்பதை எடுத்துரைக்கின்றார். இந்த உலகத்தின் செல்வங்கள் அனைத்தையும் காண்பித்து தனக்கு அடிபணிந்தால் அனைத்தையும் தருகிறேன் என்று சொன்னபோது கூட ஆண்டவர் இயேசு கிறிஸ்து உலக மாயைகளுக்கு தன்னை உட்படுத்திக் கொள்ளாமல், கடவுளுக்குரியவற்றை நாடுகிறவராக இருந்து சாத்தானின் சோதனையிலிருந்து வெற்றி பெறுகிறார். மூன்றாவதாக கடவுளை சோதிக்கும் நோக்குடன், மேலிருந்து கீழே குதியும். உம்முடைய தூதர்கள் உம்மை தாங்கிக் கொள்வார்கள் என்று சொன்னபோது, நான் கடவுளை சோதித்தல் ஆகாது என்று சொல்லி அலகையினுடைய அத்தனை சோதனைகளையும் ஆண்டவர் இயேசு கிறிஸ்து முறியடித்ததை இன்று நாம் வாசிக்க கேட்டோம்.
இந்த தவக்காலத்தில் எண்ணிலடங்கா தவ முயற்சிகளை நாம் மேற்கொள்வதற்காக திட்டங்கள் பல தீட்டி இருந்தாலும் இந்த திட்டங்களை செயல்படுத்துவதற்காக நாம் முனைப்போடு செயல்படுகிற போது பல நேரங்களில் பலவிதமான தடைகளை நமது வாழ்வில் சந்திக்க நேரிடலாம். அப்படி சந்திக்கின்ற போதெல்லாம் கடவுளின் துணைகொண்டு சோதனைகளை எதிர்கொண்ட இயேசுவை இதயத்தில் இருத்தியவர்களாய் எல்லாவிதமான தடைகளினின்றும் நம்மை நாம் மேற்கொள்ளுகின்ற தவ முயற்சிகளில் இருந்து விலகி விடாமல் நிலைத்திருந்து ஆண்டவருக்கு உரியவர்களாக நம்மை நாமே மாற்றிக்கொள்ள இன்றைய இறை வார்த்தைகள் வழியாக நாம் அழைக்கப்படுகின்றோம். இந்த இறைவார்த்தைகளுக்கு ஏற்ப நம் வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு ஆண்டவருக்கு உகந்தவர்களாக நமது வாழ்வை அமைத்துக் கொள்ள, சோதனைகளுக்கு மத்தியிலும் சாதனைகள் புரியக்கூடிய மனிதர்களாக மாறிட ஆண்டவரிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக