வெள்ளி, 3 மார்ச், 2023

நம்பிக்கையால் சான்று பகருவோம்! (30-1-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
 இன்றைய இறை வார்த்தையின் வழியாக நம்பிக்கையால் சான்று பகருகின்ற மனிதர்களாக நீங்களும் நானும் இருப்பதற்கான அழைப்பு தரப்படுகிறது.  ஆண்டவர் இயேசு கிறிஸ்து இன்றைய நற்செய்தி வாசகத்தில் பேய் பிடித்திருந்த ஒரு மனிதனிடத்தில் இருந்து அப்பேயை அகற்றுகின்றார். இயேசுவின் இந்த செயலைக் கண்டு இயேசுவால் தங்களுடைய தொழிலுக்கு இழப்பு ஏற்பட்டதாக எண்ணி பன்றிகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் இயேசு செய்த அரும் அடையாளங்களை கண்டிருந்தாலும் கூட, அவர் செய்த செய்கையினால் இயேசுவை ஏற்றுக் கொள்ள தயங்கியவர்களாக இவ்விடத்தை விட்டு அகன்று விடும் என்று சொல்லியபோது, இயேசு மற்றொரு இடத்திற்கு நற்செய்தி ஆற்றுவதற்காக தன் பயணத்தை மேற்கொண்டார்.

 அவர் தன் பயணத்தை மேற்கொள்ளுகின்ற அந்த தருணத்தில் குணம் பெற்ற மனிதன் தானும் உம்மை பின் செல்ல விரும்புகிறேன் என்று சொன்னபோது நீ உன் வீட்டிற்கு சென்று உறவுகளை சந்தி என்று சொல்லி அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தார். வீட்டிற்கு அனுப்பப்பட்ட நபர் வீட்டிற்கு சென்றதோடு மட்டுமல்லாமல், அங்கிருந்த மக்களுக்கு எல்லாம் தான் எப்படி குணம் பெற்றேன் என்பதை எடுத்துரைக்கக் கூடியவராக, தான் அறிந்து கொண்ட இந்த இயேசுவை அடுத்தவருக்கு அறிவிக்கின்ற ஒரு மனிதனாக தன் வாழ்வை அமைத்துக் கொண்டார் என்பதை இன்றைய நற்செய்தி வாசகத்தின் வாயிலாக நாம் உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகின்றோம்.

   இந்த மனிதனைப் போலவே எத்தனையோ நன்மைகளை ஆண்டவரிடமிருந்து
பெற்றுக் கொண்டிருக்கக் கூடிய நாம் ஒவ்வொருவருமே நாம் அறிந்து அன்பு செய்கின்ற அந்த ஆண்டவரை நமது நம்பிக்கையின் நிமித்தமாக  மற்றவருக்கு அறிவிக்கின்ற நல்லதொரு சாட்சிகளாக மாறிட இன்றைய இறைவார்த்தை நமக்கு அழைப்பு தருகிறது. இந்த இறை வார்த்தையின் அடிப்படையில் நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு,  நாம் கொண்டிருக்கும் நம்பிக்கையின் அடிப்படையில்  நாம் மற்றவருக்கு இந்த இயேசுவை அறிவிக்கின்ற மனிதர்களாக மாறிட ஆண்டவரிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசிர்வதிப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...