இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
தவறிழைத்த மனிதன் தன் தவறை ஒப்புக்கொள்ள மறுத்தான். கடவுள் அவனிடத்தில் என்ன செய்தாய் என்று வினவிய போது, தான் தவறு இழைத்ததாக அவன் ஏற்றுக்கொள்ளாமல், தன்னுடைய தவறை மற்றவரின் தவறு என, நீர் கொடுத்த அந்த பெண் தான் நான் தவறிழைக்க காரணமாக அமைந்தாள் என்று மற்றவர் மீது குற்றத்தை சுமத்தி தன்னை நீதிமானாக காட்டிக் கொள்ள முயன்றான் என்பதை இன்றைய முதல் வாசகம் நமக்கு வெளிப்படுத்துகிறது. ஆனால் இன்றைய நற்செய்தி வாசகத்தின் அடிப்படையில் இந்த முதல் வாசகத்தை நாம் இணைத்து சிந்திக்கின்ற போது கடவுள் மனிதர்கள் மீது எப்போதும் பரிவு கொண்டவராக இருக்கிறார். மனிதன் தவறு இழைத்ததன் விளைவாக பாவத்திற்கு உரியவனாக மாறினாலும் கூட இந்த மனிதனின் மீது இரக்கம் கொள்ளக்கூடியவராக கடவுள் இருந்தார். அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து அகற்றிய போதும் கூட அவனுக்கு தேவையானவற்றை செய்து கொடுக்கக் கூடியவராக கடவுள் இருந்தார் என்பதை நாம் உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகிறோம்.
இன்றைய நற்செய்தி வாசகத்திலும் கூட ஆண்டவர் இயேசுவின் வார்த்தையை கேட்பதற்காக பலரும் ஒன்று கூடி வந்திருந்தார்கள். வந்திருந்தவர்களுடைய உள்ளத்து தேவையை உணர்ந்தவராக அவர்கள் மீது பரிவு கொண்டு, உணவு இல்லாமல் அவர்கள் போகின்ற வழியில் மயக்கமற நேரலாம் என்பதை உணர்ந்தவராக ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் கடவுளின் வல்லமையோடு பகிர்ந்து கொடுக்கின்ற ஒரு நிகழ்வைத் தான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் வாசிக்க கேட்கின்றோம்.
நம் மீது பரிவு கொண்டிருக்கின்ற இந்த இறைவனிடம் காணப்பட்ட அத்தகைய பரிவு குணத்தை நமது குணமாக மாற்றிக்கொண்டு தீமை செய்பவர்களை கூட நமக்கு எதிராக தீமைகளை புரிகின்ற நபர்களின் மீதும் கூட பரிவு காட்டக்கூடிய நபர்களாக, நாம் இருப்பதற்கான ஆற்றலை வேண்டி இன்றைய நாளில் இறைவனிடத்தில் மன்றாடுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசிர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக