இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
வாழ்வும் அழிவும் நன்மையும் தீமையும் நமக்கு முன்பாக இருக்கிறது. இதில் எதை நாம் எடுத்துக் கொள்ள போகிறோம் என சிந்திக்க இன்றைய நாள் வாசகங்கள் நமக்கு அழைப்பு விடுக்கின்றன.
முதல் வாசகமானது நமக்கு முன்பாக ஆசிகளும் சாபங்களும் இருக்கிறது; நாம் ஆசிகளை நாடுகின்ற நபர்களாக இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து கொள்ள அழைப்பு விடுக்கிறது. இன்றைய நற்செய்தி வாசகத்திலும் ஆண்டவர் இயேசு கிறிஸ்து, அவரை பின்பற்ற விரும்புகிற எவருமே தன்னலம் துறந்து பொதுநலத்தோடு தங்களின் சிலுவையை சுமந்து கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்துகின்றார்.
இந்த வாசகங்களின் பின்னணியில் நமது வாழ்வை சீர்தூக்கிப் பார்க்க அழைக்கப்படுகிறோம். இந்த கடவுளுக்குரிய காரியங்கள் இந்த மண்ணில் பல இருக்கின்றன. இந்த காரியங்களை முன்னெடுத்துச் செல்வதால் பலவிதமான இன்னல்களையும் இடையூறுகளையும், சவால்களையும் நாம் எதிர்கொள்ள நேரிடும். ஆனால் அனைத்தையும் எதிர்கொள்ளக்கூடிய ஆற்றலை கடவுள் நமக்கு தரவல்லவர் என்பதை நாம் இதயத்தில் இருத்தியவர்களாக இந்த உலகின் போக்கிற்கு நாம் முக்கியத்துவம் கொடுக்காமல் அனைத்து சூழ்நிலையிலும் கடவுளுக்கு உரியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொள்ள இன்றைய நாள் இறை வார்த்தை வழியாக நாம் அழைக்கப்படுகிறோம்.
இந்த வார்த்தைகளுக்கு ஏற்ப நமது வாழ்வை சுய ஆய்வு செய்து பார்ப்போம் ; நாம் கடவுளுக்குரிய காரியங்களுக்கு முன்னுரிமை கொடுக்க தவறி இருப்போமாயின் அத்தகைய தருணங்களை நினைவு கூர்ந்து கடவுளிடத்தில் மன்னிப்பு வேண்டுவோம். வெறும் வார்த்தைகளில் மன்னிப்பு என்று விட்டுவிடாமல் நமது வாழ்வில் இனி வருகின்ற நாட்களில் கடவுளுக்குரிய காரியங்களை ஆர்வத்தோடு நாடுவதற்கு ஆற்றல் வேண்டி இன்றைய நாளில் இறைவனிடத்தில் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக