இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன் !
குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கும் என்பதற்கு ஏற்ப ஏரோதின் உள்ளமானது கலக்கமுறுகிறது.
இயேசுவின் பெயர் எங்கும் பரவுகின்ற நேரத்தில் யார் இந்த இயேசு? என்ற கேள்வி அவனுக்குள் எழுகிறது. தன்னால் கொலை செய்யப்பட்ட திருமுழுக்கு யோவானாக இந்த இயேசு இருப்பாரோ என்ற அச்ச உணர்வு இந்த இயேசுவை பார்க்க வேண்டும் என்ற ஆவலை ஏரோது அரசனுக்குள் ஏற்படுத்தியது.இந்த ஏரோது அரசன் தனது வாழ்விலே தான் செய்த தவறுகளின் நிமித்தமாக எப்பொழுதும் குற்ற உணர்வோடு வாழ்ந்து கொண்டிருந்தான் என்பதை இந்த இறை வார்த்தை பகுதிகள் நமக்கு விளக்கி கூறுகின்றன. ஆனால் ஆண்டவர் இயேசு கிறிஸ்து இந்த சமூகத்தில் நாம் ஒவ்வொருவரும் சகோதர அன்பில் நிலைத்திருக்க வேண்டும் என்பதைத்தான் இன்றைய முதல் வாசகத்தின் வாயிலாக நமக்கு வலியுறுத்துகிறார்.
இயேசுவின் வாழ்வும் இந்த சகோதர அன்பை வலியுறுத்திய ஒரு வாழ்வாகவே இருந்து. அவர் வாழ்ந்த போது அந்த சமூகத்தில் வாழ்ந்தவர்களின் வாழ்வு நெறி தவறி இருந்தபோது சகோதரர்களாக மற்றவர்களை பார்க்கத் தவறி, அந்நியப்படுத்தி வைத்திருந்த அந்த சமூகத்தில் அனைவரையும் அரவணைப்பவராக அனைவரையும் தேடி செல்லுகின்ற ஒரு மனிதனாக இயேசு இருந்தார். சகோதர அன்பில் நிலைத்திருங்கள் என்ற இயேசு, அதை தன் சொல்லிலும் செயலிலும் வெளிகாட்டினார். இவரை ஏற்றுக்கொண்டு பின் தொடர்ந்து கொண்டிருக்கக் கூடிய நாம் ஒவ்வொருவரும் நாம் வாழுகின்ற இச்சமூகத்தில் இருக்கிற ஒவ்வொருவரோடும் சகோதர அன்பில் நிலைத்திருப்பதற்கான ஆற்றலை வேண்டுவோம். நாம் சகோதர அன்பில் நிலைத்திருக்கின்ற போது கடவுளுக்கு உகந்த ஒரு வாழ்வை நமது வாழ்வாக மாற்றிக் கொள்வோம் என்பதை இதயத்தில் இருத்திக் கொண்டு நாம் வாழுகின்ற சமூகத்தில் சகோதர அன்பு நிலைத்திருக்க அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக