இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன் !
இன்றைய இறை வார்த்தை வழியாக தீமை செய்வதை விட்டுவிட்டு நன்மை செய் கற்றுக் கொள்ளக் கூடியவர்களாக நாம் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதை நாம் நமது வாழ்வுக்கான பாடமாக எடுத்துக் கொள்ள அழைக்கப்படுகின்றோம். இன்றைய நற்செய்தி வாசகத்திலும் ஆண்டவர் இயேசு கிறிஸ்து அன்றைய சமூகத்தில் நிலவிய ஒரு நிலையை சுட்டிக்காண்பிக்கின்றார். பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் தங்களை நீதிமான்களாக காட்டிக் கொள்ள, கடுமையான சட்டங்களை பின்பற்றுவதற்காக மக்களை தூண்டினார்கள். கடுமையான சட்டங்களாக அவை இருந்தாலும் வாழ்வை நெறிப்படுத்துவதற்கான சட்டமாக இருந்தது பல நேரங்களில். அப்படிப்பட்ட சட்டங்களை கூட அவர்கள் பின்பற்றாமல் இவர்கள் அதனை பின்பற்றவில்லை நாம் மட்டும் எதற்கு பின்பற்ற வேண்டும் என்ற மனநிலையோடு, தங்கள் வாழ்வை தடம் புரண்ட வாழ்வாக அமைத்துக் கொண்டார்கள். இத்தகைய சூழ்நிலையில் தான் ஆண்டவர் இயேசு கிறிஸ்து உங்களுக்கு கற்பிக்கின்றவற்றில் நன்மையானதை எடுத்துக் கொண்டு அதை பின்பற்றுபவர்களாக நீங்கள் இருங்கள். அவர்கள் பின்பற்றவில்லை என்பதால் நாமும் பின்பற்ற வேண்டாம் என்பது அல்ல என்று சொல்லி, பிறர் உங்களுக்கு கற்பிப்பவற்றை குறித்து கவனமாய் இருக்கவும், நன்மையானதை எடுத்துக் கொள்ளவும், தீமையை விலக்கி விட்டு நன்மையை பின்பற்றக்கூடிய மனிதர்களாக நாளும் வளர்வதற்கான அழைப்பை இன்றைய இறை வார்த்தை வழியாக இறைவன் நமக்கு தருகிறார். இந்த இறைவனுடைய அழைப்பை உணர்ந்தவர்களாக நமது வாழ்வில் தீயது எனப்படுவதை விட்டுவிட்டு நன்மையெனக் கருதுவதை எல்லாம் எடுத்துக்கொண்டு, ஒவ்வொரு நாளும் பலவிதமான நன்மைகளால் நம் வாழ்வை அலங்கரிக்க இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசிர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக