இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன் !
தவறிழைத்த ஒரு மனிதன் தன் தவற்றை உணர்ந்து வருகிற போது அவனை மன்னிக்கும் மனநிலை படைத்தவராக கடவுள் இருக்கிறார் என்பதை ஊதாரி மைந்தன் நிகழ்வு வழியாக ஆண்டவர் இயேசு கிறிஸ்து நமக்கு வழியுறுத்துகின்றார். ஊதாரி மைந்தன் தன் தந்தையின் சொல்லுக்கு இணங்க மறுத்து தனக்குரியதை எல்லாம் பெற்றுக்கொண்டு அதை ஊதாரித்தனமாக செலவழித்து விட்டு தான் துன்புறுகின்ற நேரத்தில் தான் செய்த தவறுகளை எல்லாம் எண்ணிப் பார்த்து மனம் வருந்தியவனாய், நான் என் தந்தையிடம் செல்வேன் என்று சொல்லி தந்தையிடம் வந்து மன்னிப்பு வேண்டுகிறான். தந்தையும் அவனை மன்னித்து ஏற்றுக்கொண்டு விலை உயர்ந்த ஆடைகளையும் பட்டாடைகளையும் அவனுக்கு உடைத்தி, மோதிரங்கள் அணிவித்து, அவனுக்காக விழா எடுப்பதை நாம் இன்றைய நற்செய்தி வாசகத்தின் வாயிலாக வாசிக்க கேட்டோம்.
பல நேரங்களில் நாம் செய்த தவறுகளை எல்லாம் நினைவு கூர்ந்து மனம் வருந்தி மன்னிப்பு வேண்டியவர்களாக இயேசுவை நோக்கி திரும்பி வருகிற போது கடவுள் நம்மை குறித்து மகிழக்கூடியவராக இருக்கிறார் என்பதை உணர்ந்து கொண்டவர்களாக நாளும் இந்த சமூகத்தில் நாம் வாழுகின்ற போது, அறிந்தும் அறியாமலும் செய்த தவறுகளை நினைவு கூர்ந்து மனம் வருந்தி மன்னிப்பு வேண்டி ஆண்டவரிடத்தில் மீண்டுமாக திரும்பிச் செல்வதற்கான அழைப்பு இன்றைய நாளில் நமக்கு தரப்படுகிறது. இந்த அழைப்பினை இதயத்தில் ஏற்றுக் கொண்டவர்களாக நமது வாழ்வை சீர்தூக்கி பார்த்து நம்மிடம் சரி செய்யப்பட வேண்டியவைகளை எல்லாம் சரி செய்து கொண்டு மீண்டுமாக ஆண்டவர் இயேசுவை நாடிச் செல்ல இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக