இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் லேவி என்ற மனிதனை தன்னை பின்பற்றி வருமாறு அழைக்கின்றார். இந்த லேவி என்ற மனிதன் வரி வசூலிக்க கூடிய பணியினை செய்து வந்தார். இப்பணியை செய்வதால் அவர் உரோமை அரசருக்கு நெருக்கமானவராக கருதப்பட்டார். இவர் உரோமை அரசுக்கு நெருக்கமாக இருந்து, நம்மிடமிருந்து அதிக வரிகளை பெற்று அவர்களுக்கு கொடுக்கிறார் என்ற எண்ணத்தின் பெயரில் உடன் இருந்தவர்கள் எல்லாம் அவரை பாவி எனவும், நேர்மையற்ற மனிதர் எனவும் கருதி, அவரை அந்நியப்படுத்தினார்கள். இப்படி அந்நியப்படுத்தப்பட்ட நபரை எல்லோரும் அந்நியப்படுத்திய போது ஆண்டவர் அவரை தேடிச் சென்றார். தன்னைப் பின் செல்வதற்கான அழைப்பை அவருக்கு கொடுத்தார். இயேசு அவரோடு கொள்ளுகின்ற அந்த உறவை கண்டு பலரும், பாவிகளோடு இவர் விருந்து உண்கின்றாரே என்று சொல்லி அவரை ஏளனமாக பேசியபோது மருத்துவர் நோயுற்றவருக்குத்தானே அன்றி, நோயற்றவருக்கு அல்ல என்று சொல்லி தான் இந்த சமூகத்தில் யாரெல்லாம் தங்கள் வாழ்வை நெறி தவறி அமைத்துக் கொண்டார்களோ அவர்களை நெறிப்படுத்துவதற்காகத் தான் இவ்வுலகிற்கு வந்தேன் என்பதை இயேசு தன் சொல்லாலும் செயலாலும் வெளிக்காட்டுவதை தான் இன்றைய வாசகத்தில் நாம் வாசிக்கக் கேட்டோம்.
இந்த வாசகத்தின் பின்னணியில் நமது வாழ்வை சீர்தூக்கி பார்க்க நாம் அழைக்கப்படுகிறோம். நாமும் பல நேரங்களில் இந்த லேவியை போல நமது வாழ்வை தவறிழைத்த பாதையில் அமைத்துக் கொண்டிருந்தாலும், இன்றைய நாளில் நம்மை நாமே சரி செய்து கொண்டு ஆண்டவர் இயேசுவை நோக்கி முன் செல்லக்கூடியவர்களாக நம் வாழ்வை நெறிப்படுத்திக் கொள்ள இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசிர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக