இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தீய ஆவி பிடித்த மனிதர்களிடத்தில் இருந்து தீய ஆவியை அகற்றுகிறார். இயேசுவின் இச்செயலை ஏற்றுக் கொள்ள விரும்பாத அங்கிருந்த பரிசெயர்களும் சதுசேயர்களும், தீய ஆவியின் தலைவனை கொண்டு தான் இவர் இப்பணியை செய்கிறார் என்று சொல்லி, இயேசுவின் பணியை நிராகரிக்கிறார்கள்.
ஆனால் இயேசு கிறிஸ்து அவர்களின் வார்த்தையை கொண்டே, அவர்களோடு உரையாடி, அவர்களை வாயடைக்கச் செய்கின்றார். பல நேரங்களில் நாம் நல்ல பணிகளை முன்னெடுக்கிற போது, இயேசுவின் வார்த்தைகளை வாழ்வாக்க முயற்சிக்கிற போது, நம் வாழ்வை பலரும் ஏளனம் செய்யலாம். பல நேரங்களில் பலர் நாம் செய்கிற செயல்களை விமர்சிக்கவும் செய்யலாம். விமர்சனங்கள் எதுவாக இருந்தாலும், சரி, யார் எப்படி நினைத்தாலும் சரி, நாம் செய்ய விரும்புகின்ற நன்மைத்தனங்களை செய்கின்ற நபர்களாக இருக்க அழைக்கப்படுகிறோம்.
இயேசுவின் பணியை பலரும் விமர்சித்த போது ஒவ்வொருவரின் விமர்சனத்திற்கும் பதில் தருகின்றவராக இயேசு செல்லவில்லை. பல நேரங்களில் அதனை எதிர்கொள்வதற்காக அவர்களோடு அவர் உரையாடச் செய்தார். ஆனால் அவர் உரையாடிய போது அவர்கள் மௌனம் காத்தார்கள். அப்படி மௌனம் காத்த நேரத்தில் எல்லாம் ஆண்டவர் தாம் செய்ய விரும்பிய பணியை செய்யாமல் சென்று விடவில்லை. தான் செய்ய விரும்பிய நல்ல பணியினை தொடர்ந்து செய்கிறவராக இருந்தார்.
இந்த இயேசுவை பின்பற்றக்கூடிய நீங்களும் நானும் எத்தனை தடைகள் வந்தாலும், எத்தனை விமர்சனங்கள் வந்தாலும், நாம் செய்ய விரும்புகின்ற ஆண்டவரின் பணியினை ஆற்றலோடு தொடர்ந்து செய்வதற்கான ஆற்றல் வேண்டி இறைவனிடத்தில் இன்றைய நாளில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக