இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன் !
கட்டுவோர் புறக்கணித்த கல்லை கட்டிடத்தின் மூலைக்கல் ஆயிற்று என்ற இறைவார்த்தைக்கு ஏற்ப
தன்னுடைய உடன்பிறந்த சகோதரர்களால் புறக்கணிக்கப்பட்ட யோசேப்பு தன் உடன் பிறந்த சகோதரர்களை பாதுகாப்பவராக மாறுவதை இன்றைய முதல் வாசகத்தின் வாயிலாக நாம் வாசிக்கக் கேட்டோம்.
நற்செய்தி வாசகத்திலும் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை சரிவர செய்யாத நபர்களை குறித்து மறைமுகமாக உவமை வழியாக உரையாடுகின்றார். இந்த இறைவார்த்தை பகுதியை நமது வாழ்வோடு ஒப்பிட்டு பார்க்கிற போது, கடவுள் நம்மீது அதீத அன்பு கொண்டிருந்தார்; அதன் விளைவே இந்த அகிலத்தில் நம்மை படைத்திருக்கிறார். அவரால் படைக்கப்பட்ட நாம் இந்த அகிலத்தில் உள்ள ஒவ்வொன்றையும் பாதுகாக்கவும் பராமரிக்கவும் கடமைப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். பல நேரங்களில் இந்த கடமையை உணர்ந்து செயல்படாமல் நாம் இருக்கின்ற போதெல்லாம் கடவுள் பொறுமையோடு காலம் தாழ்த்துகிற நபராக, பல மனிதர்கள் மூலமாக, நம் வாழ்வு நெறிப்பட வேண்டுமென, நாம் படைக்கப்பட்டதன் நோக்கத்தை உணர்ந்து கொண்டு இந்த மண்ணில் செயல்பட வேண்டும் என்பதற்கான அழைப்பினை கொடுக்கிறார். அந்த இறைவனின் வார்த்தைகளுக்கு செவி கொடுத்து நம் வாழ்வை நாம் நெறிப்படுத்த தவறுகிற போது தீர்ப்பு நாளில் இறைவன் நீதி தவறாத நீதிபதியாக இருந்து நமக்கு தீர்ப்பு வழங்குவார் என்பதை இந்த உவமையின் வாயிலாக உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகிறோம். இந்த இறை வார்த்தையின் அடிப்படையில் நமது வாழ்வில் நாம் செய்யத் தவறிய காரியங்களை எல்லாம் நினைவு கூர்ந்து, மனம் வருந்தி மன்னிப்பு வேண்டுவோம். சில நேரங்களில் நாம் செய்யாமல் விட்டு வந்த காரியங்கள் தான் நாம் செய்ய வேண்டிய மூலைக்கல்லாக, தலையாய பொறுப்பாக அமைகிறது.
இன்றைய நாளில் இறைவனால் படைக்கப்பட்ட நாம் ஒவ்வொருவரும் நம் கடமையை செய்யத் தவறிய தருணங்களுக்காக மனம் வருந்தி மன்னிப்பை வேண்டுவோம். நம் கடமையை உணர்ந்து சரிவர செய்கின்ற நபர்களாக இருப்பதற்கான ஆற்றல் வேண்டி இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக