இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
இன்று தாய்த் திரு அவையானது சிமியோன் அவர்களை நினைவு கூர நமக்கு அழைப்பு விடுக்கின்றது. இவர் இயேசுவுக்கு முன்பாக பிறந்தவர். இவரை இயேசுவின் சகோதரர் என்றும் அழைப்பார்கள். காரணம், இயேசுவின் வளர்ப்புத் தந்தையான யோசேப்பும் இவரது தந்தையும் உறவினர்கள் என்பதன் அடிப்படையில் இவர் இயேசுவின் சகோதரர் என பல நேரங்களில் அடையாளம் காட்டப்பட்டவர். எத்தனையோ இன்னல்களுக்கும், இடையூறுகளுக்கும் மத்தியிலும் இயேசுவை அறிவிக்கின்ற பணியில் தன்னை இணைத்துக் கொண்டவர்.
எம்மாவூசுக்கு சென்ற சீடர்களுள் இவரும் ஒருவர் என இவரை குறித்து குறிப்பிடுவார்கள். இந்த சிமியோனை நினைவு கூருகின்ற இந்த நந்நாளிலே இன்றைய இறை வார்த்தையின் அடிப்படையில் சிந்திக்கின்ற போது, இன்றைய இறை வார்த்தையானது ஆண்டவர் மீது அதீத நம்பிக்கை கொண்ட மனிதர்களாக இருப்பதற்கு அழைப்பு தருகிறது.
ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன்னுடன் சில சீடர்களை அழைத்துக் கொண்டு தாபோர் மலைக்குச் சென்று அவர்கள் முன்னிலையில் உருமாற்றமடைந்து எலியாவோடும் மோசையோடும் உரையாடிக் கொண்டிருக்கின்றார். இந்த உரையாடலை கடந்த நிலையில் இயேசுவின் சீடர்கள், இங்கேயே இருப்பது நல்லது எனச் சொல்லியபோது, வாருங்கள் நாம் இறங்கிச் செல்வோம் என்று சொல்லக்கூடியவராய் மக்கள் மத்தியில் சென்று பலவிதமான இன்னல்களுக்கும் இடையூறுகளுக்கும் மத்தியிலும் பல்வேறு துன்பங்களுக்கு உட்பட்டு தன் இன்னுயிரையே அடுத்தவருக்காக தியாகம் செய்தார். இந்த இயேசுவின் மனநிலை நமது மனநிலையாக இருக்க வேண்டும். எத்தனை இன்னல்கள் இடையூறுகள் வந்தாலும் அத்தனைக்கும் மத்தியிலும் ஆண்டவரின் பணியை செய்வதில் ஆர்வம் உள்ளவர்களாக சிமியோனை போல நீங்களும் நானும் இருப்பதற்கான அழைப்பு இன்றைய நாளில் நமக்கு தரப்படுகிறது. இந்த அழைப்பை இதயத்தில் ஏற்றுக் கொண்டவர்களாய், நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு ஆண்டவரின் பணியை செய்ய ஆவலோடு செல்ல இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக