ஞாயிறு, 12 மார்ச், 2023

யாருக்கு யார் அறிவுரை கூறுவது!! (13-3-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன் !

      இறைவாக்கினர் தனது சொந்த ஊரில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை என்ற இறைவார்த்தைகளுக்கு ஏற்ப,  ஆண்டவர் இயேசு கிறிஸ்து இன்றைய நற்செய்தி வாசகத்தில் இரு இறைவாக்கினர்களை சுட்டிக்காட்டுகின்றார். ஒருவர் எலியா; மற்றொருவர் எலிசா. இந்த எலியா இறைவாக்கு உரைத்த போது மூன்றரை ஆண்டுகள் வானம் பொய்த்து போகும் என்று சொன்னார். ஆனால் பலரும் அவரது வார்த்தைகளின் மீது நம்பிக்கை அற்றவர்களாக தங்கள் வாழ்வை அமைத்துக் கொண்டார்கள். இத்தகைய சூழ்நிலையில் ஆண்டவர் எலியாவிற்கான உணவினை பஞ்சகாலத்தில் ஏற்பாடு செய்கின்றார். அதன் விளைவாக சாரிபாத்தில் வாழ்ந்த ஏழைக் கைம்பெண்ணிடம் சென்று, அந்த பஞ்ச காலம் முழுவதும் அங்கு தங்கியிருந்தார் என்பதை விவிலியத்தின் துணைகொண்டு நாம் அறிந்து கொள்கிறோம். அதுபோல இந்த எலியாவை பின்பற்றி வந்த எலிசா இறைவாக்கினர் எத்தனையோ நன்மைகளை முன்னுரைத்த போதும், ஆண்டவரின் வார்த்தைகளை அறிவித்தபோதும், அதற்கு செவி கொடுக்க மறுத்தவர்களாக,  நம்மோடு இருப்பவர்கள் நம்மை விட பெரிதாக என்ன செய்து விடப் போகிறார்கள்? என்ற மனநிலையோடு வாழ்ந்து கொண்டிருந்த இஸ்ரேல் மக்களிடையே தொழுநோயால் பாதிக்கப்பட்ட பலர் இருந்தார்கள். ஆயினும், சிரிய நாட்டிலிருந்த படைத் தலைவன் நாமான் என்பவர், நம்பிக்கையோடு இந்த எலிசாவை சந்தித்து நோயிலிருந்து முழுவதுமாக குணம் பெறுவதைத் தான் இன்றைய முதல் வாசகமாக வாசிக்கக் கேட்டோம். 

இந்த எலிசாவையும் ஆண்டவர் இயேசு கிறிஸ்து இன்றைய நாளில் நமக்கு சுட்டிக்காட்டுகின்றார்.  இந்த எலியாவும் எலிசாவும் மக்கள் மத்தியில் வாழ்ந்த போது அவர்களின் வாழ்வு நெறிப்பட எத்தனையோ வழிகளை கற்பித்தார்கள். அதைக் கேட்டு தங்கள் வாழ்வை நெறிப்படுத்திக் கொள்ள தவறியவர்களாகவே தங்கள் வாழ்வை அங்கிருந்தவர்கள் அமைத்துக் கொண்டார்கள். ஆனால் நாம் இன்றைய இறை வார்த்தையோடு நமது வாழ்வை ஒப்பிட்டு பார்க்கிற போது, நாம் வாழுகின்ற இந்த சமூகத்தில் நமது வாழ்வு நெறிப்பட வேண்டும் என்பதற்காக எத்தனையோ அறிவுரைகளை, இறை வார்த்தையின் வழியாகவும், மூத்தவர்கள் வழியாகவும்,  நாம் அறிந்த நபர்கள் வழியாகவும் இறைவன் எடுத்துரைத்துக் கொண்டிருக்கிறார். இவர்கள் கூறுகின்ற காரியங்களை எல்லாம், இவர்கள் என்ன நமக்கு கூறுவது? என்ற மனநிலையோடு கடந்து சென்று விடாமல்,  சொல்லுகின்ற வார்த்தைகள் நம் வாழ்வை நெறிப்படுத்துமாயின் அதனை ஏற்றுக்கொண்டு, நம் வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு, நாளும் இயேசுவின் பாதையில்,  அவரின் சீடர்களாக பயணிக்க ஆற்றல் வேண்டி இன்றைய நாளில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...