இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
ஆண்டவர் நம்மீது கொண்ட அன்பின் காரணமாக நாம் வாழ்வதற்கான இந்த அழகிய உலகை பார்த்து பார்த்து படைத்தார் என்பதை இன்றைய முதல் வாசகம் நமக்கு சுட்டிக்காட்டுகிறது. கடவுளால் படைக்கப்பட்ட உயரிய படைப்பாகிய மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவருமே உள்ளார்ந்த தூய்மை கொண்டவர்களாக, கடவுளுக்கு உகந்தவற்றை நாடுகின்ற நபர்களாக இருப்பதற்கான ஒரு அழைப்பு இன்றைய இறை வார்த்தை வழியாக நமக்கு தரப்படுகிறது. உள்ளார்ந்த மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள விரும்பாத பலர் வெளிப்புற அடையாளத்தை வைத்துக்கொண்டு ஆண்டவரின் செயல்களில் கூட குற்றத்தை கண்டுபிடிக்கக் கூடியவர்களாக தங்கள் வாழ்வை அமைத்துக் கொண்டதை இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு சுட்டிக்காட்டுகிறது. இந்த இறை வார்த்தை பகுதியோடு நமது வாழ்வை உரசிப் பார்க்க இன்று நாம் அழைக்கப்படுகிறோம். கடவுளால் படைக்கப்பட்ட நாம் உள்ளார்ந்த மாற்றத்தோடு கடவுளை நாடுகிறவர்களாக இருக்கின்றோமா அல்லது வெளிப்புற அடையாளத்தை மட்டுமே நாம் முதன்மைப்படுத்தக்கூடிய நபர்களாக நமது வாழ்வை அமைத்துக் கொள்கிறோமா? கேள்வியை நமக்குள்ளாக எழுப்பி பார்த்து நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு உள்ளார்ந்த மாற்றத்தோடு கடவுளை நாடிச் செல்லவும் அவரது வார்த்தைக்கு செயல் வடிவம் தருகின்ற மனிதர்களாக இருக்கவும் இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம் இறைவன் தொடர்ந்து நம்மை ஆசிர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக