திங்கள், 18 ஆகஸ்ட், 2025

நன்றியுணர்வோடு வாழ்வோம்...(20.8.2025)

நன்றியுணர்வோடு வாழ்வோம்...


அன்பான சகோதர சகோதரிகளே,
இன்று நாம் கேட்ட முதல் வாசகத்தில் (நீதித்தலைவர்கள் 9:6-15), யோத்தாம் மக்களிடம் ஒரு உவமை கூறுகிறார். மரங்கள் தமக்குப் பேரரசனைத் தேடுகின்றன. ஒலிவு, அத்தி, திராட்சை கொடி – எல்லாவற்றும் தமது இயல்பான பணியையும், கடவுள் கொடுத்த பணியை நிறைவேற்றுவதையும் விட்டு விலக விரும்பவில்லை. ஆனால் முட்புதர் தானாக அரசராக முன்வருகிறாது. முட்புதருக்கு நிழலும் இல்லை, அதனால் பயனும் இல்லை; ஆனால் ஆட்சி வேண்டும் என்று வற்புறுத்துகிறது. அது நெருப்பை உண்டாக்கி அழிவை மட்டுமே தர வல்லது.

இதன் மூலம் யோத்தாம் மக்களிடம் ஒரு எச்சரிக்கையை விடுக்கிறார்: "உங்களின் தலைவரைத் தேர்வு செய்யும்போது, கடவுள் கொடுத்த பணியை உண்மையாய் நிறைவேற்றுகிறவரைத் தேடுங்கள். வீண் பெருமை கொண்டவரைத் தேர்வு செய்தால், அவர் உங்களை அழிவுக்கே இட்டுச் செல்கிறார்."

அன்பானவர்களே, நம்முடைய வாழ்க்கையிலும் இதே பாடம் பொருந்துகிறது. சில சமயம் சின்னப் புகழ், பெருமை, அதிகாரம் என்ற ஆசையால் நாம் வழி தவறுகிறோம். ஆனால், கடவுள் நமக்கு கொடுத்த பணியை உண்மையாய், எளிமையாய் செய்வதே நம்மை ஆசீர்வதத்திற்கு அழைத்துச் செல்கிறது.

நற்செய்தி வாசகத்தில் (மத். 20:1-16), இயேசு ஒரு நிலக்கிழார் பற்றிய உவமையைக் கூறுகிறார். காலை முதலே வேலைக்குச் சென்றவரும், ஐந்து மணிக்கு வேலைக்குச் சென்றவரும் ஒரே கூலியைப் பெறுகிறார்கள். அது மனிதக் கணக்குப்படி நியாயமல்ல. ஆனால், கடவுளின் கணக்குப்படி அது நீதியும், அன்பும், கருனையுமாகும். ஏனெனில், கடவுளின் நீதிக்குள் அவருடைய இரக்கமும், கருணையும் அடங்கியுள்ளன.

இங்கே நிலக்கிழார் சொல்வது நமது வாழ்வுக்கான முக்கியமான செய்தி:
“நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?”

அன்பான சகோதர சகோதரிகளே, நாமும் எப்பொழுதும் அடுத்தவரோடு நம்மை ஒப்பீட்டு பார்க்கும் கணக்கில் வாழ்கிறோம் – "அவருக்கு அதிகம், எனக்கு குறைவு" என்று நினைக்கிறோம். ஆனால் கடவுள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அன்பு செய்கிறார். நம் வாழ்க்கையில் நாம் பெறுவது தேவையானதும் போதுமானதும். அவருடைய பரிசுகள் எப்போதும் நியாயமற்றவை அல்ல; அவை அளவில்லா அன்பின் அடையாளங்கள்.... இதை இன்றையநாளில் உணர்வோம்....

நம் வாழ்வுக்கான பாடம்:

  • கடவுள் கொடுத்த பணியை உண்மையாய் செய்ய வேண்டும்.
  • பொறாமையின்றி, நமக்கு வழங்கப்பட்ட அருளுக்கும் ஆசீர்வாதத்திற்கும் நன்றி சொல்ல வேண்டும்.
  • மற்றவர்களின் நல்வாழ்வை பார்த்து மனம் கலங்காமல், “எனக்குக் கொடுக்கப்பட்ட பகுதி போதும்” என்று உணர வேண்டும்.

எனவே அன்பானவர்களே, யோத்தாம் எச்சரித்தபடி, அழிவை உண்டாக்கும் முட்புதர் மாதிரி ஆட்சி செய்ய விரும்பாமல், பயன் தரும் மரங்கள் போல வாழ்வோம். மேலும், இயேசு சொன்னபடி, கடவுள் நல்லவர் என்பதால் நம் உள்ளத்தில் பொறாமை வராமல், நன்றியுணர்வோடு வாழ்வோம். இதற்கான அருள் வேண்டி இன்றைய நாளில் இணைந்து ஜெபிப்போம் ...

என்றும் அன்புடன் 

அருள்பணி ஜே. சகாயராஜ்

திருச்சி மறைமாவட்டம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எழு! ஒளிவீசு!... 4.1.2026

 “எழு! ஒளிவீசு!” – காணிக்கைத் திருநாளின் மறையுரை.... அன்பான சகோதரர் சகோதரிகளே, இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயா, ஒரு சக்திவாய்ந்...