ஆண்டவரின் உருமாற்றப் பெருவிழா
“இவரே என் அன்பார்ந்த மைந்தர்... இவருக்குச் செவிசாயுங்கள்” (லூக் 9:35)
அன்பான சகோதர சகோதரிகளே!
இன்று நாம் ஆண்டவரின் உருமாற்றப் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். இது ஆண்டவராகிய இயேசு, தன் விண்ணக மகிமையைத் தெளிவாக சீடர்களுக்குக் காண்பித்த நாளாகும். இது புனித கதிரொளியால் மின்னும் ஒரு காட்சி மட்டுமல்ல, நமக்கான ஒரு அழைப்பு – துன்பங்களை தாங்கி, மகிழ்வான உயிரின் வழியை தேர்ந்தெடுக்கும் அழைப்பு.
உருமாற்றத்தின் தரிசனம் – விண்ணகத்தின் அறிகுறி
இயேசு, பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகிய மூவருடன் மலைமேல் ஏறுகிறார். அங்கே அவர் வேண்டிக்கொண்டு இருக்கும்போது, அவரது முகம் ஒளிமயமானது; அவரது ஆடை வெண்மையாய் மின்னியது. மோசேயும் எலியாவும் தோன்றி, எருசலேமில் அவர் அடைய இருக்கும் இறப்பைப்பற்றிப் பேசுகிறார்கள்.
இக்காட்சி நமக்கு இயேசு ஒரு சாதாரண மனிதரல்ல, விண்ணக மகிமையுடன் கூடிய இறைவனின் மைந்தர் என்பதை உறுதிப்படுத்துகிறது.
மோசேயும் எலியாவும் – பழைய ஏற்பாட்டின் சாட்சி
மோசே – திருச்சட்டத்தை வழங்கியவர்
எலியா – இறைவாக்கினர்களில் தலைசிறந்தவர்
இவர்கள் இருவரும் உருமாற்றத்தில் தோன்றுவதன் வழியாக, இயேசு திருச்சட்டத்தையும் இறைவாக்கினங்களையும் நிறைவேற்ற வந்தவர் என நமக்குப் புரிகிறது (மத் 5:17). இவர்களின் வருகை இயேசுவின் தெய்வீகத்துவத்தையும், அவர் செய்கிற உருமாற்றத்தின் உண்மைத்தன்மையையும் உறுதிப்படுத்துகிறது.
விண்ணகத் தந்தையின் குரல் – “இவருக்குச் செவிசாயுங்கள்”
ஒரு மேகம் அவர்கள்மீது நிழலிடுகிறது. அதில் இருந்து ஒரு குரல் –
“இவரே என் மைந்தர், நான் தேர்ந்தெடுத்தவர். இவருக்குச் செவிசாயுங்கள்” (லூக் 9:35)
இது நமக்கான அழைப்பாகஉணரப்பட வேண்டியவை ...
இயேசுவின் வார்த்தைகளைக் கேட்க வேண்டும், அனுசரிக்க வேண்டும். அவருடைய வழி, சலுகை நிறைந்தது அல்ல – ஆனால் அது நிலைவாழ்வுக்கு வழிகாட்டுகிறது.
பாடுகள் வழியாக மகிழ்ச்சி – உருமாற்றத்தின் பாடம்
உருமாற்றம் என்றால் உடனடியாக மகிழ்ச்சி அல்ல. அது ஒரு முன் தயாரிப்பு.... இயேசு, உருமாற்றத்துக்குப் பிறகு சிலுவைச் சாவுக்கு முனைந்து செல்கிறார். நாமும் இந்த உலகில் மகிழ்ச்சியோடு வாழ விரும்பினால், துன்பங்களை ஏற்கும் துணிவும் நம்பிக்கையும் இருக்கவேண்டும்.
நிறைவாக ...
அன்பானவர்களே, ஆண்டவரின் உருமாற்ற நிகழ்வு நம்மை இரு முக்கியமான வாழ்வுக்கான பாடங்களை கற்றுக்கொள்ள அழைப்பு விடுக்கிறது.... அவை
-
இயேசுவின் வார்த்தைகளுக்குச் செவிசாய்த்து வாழ வேண்டும்.
➤ ஏனெனில் அவர் மட்டுமே நிலைவாழ்வை அளிக்கக் கூடியவர். -
துன்பங்களை மன உறுதியுடன் ஏற்று வாழ வேண்டும்.
➤ ஏனெனில் அது வழியாகவே மகிழ்வும் மேன்மையும் வந்து சேரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக