“தம்மைத் தாழ்த்துகிறவர் உயர்த்தப்படுவார்”
அன்பான சகோதர சகோதரிகளே,
இன்றைய முதல் வாசகம் ரூத்து நூலில் இருந்து வருகிறது. நகோமி தனது வாழ்வில் பஞ்சத்தையும், கணவனை, பிள்ளைகளையும் இழந்த துன்பத்தையும் அனுபவித்தார். ஆனால், அவரது பக்கத்தில் மருமகள் ரூத்து இருந்தார். ரூத்து, “உங்கள் மக்கள் என் மக்கள்; உங்கள் இறைவன் என் இறைவன்” (ரூத்து 1:16) என்று கூறி, நம்பிக்கையில் நிலைத்திருந்தார். அவரது உழைப்பும், பணிவும், அன்பும் கடவுளின் கண்களில் வீணாகவில்லை. கடவுள் அவருக்குப் போவாசு என்ற பாதுகாப்பினரை அருளினார். இறுதியில், ரூத்தின் வழியே தாவீதின் சந்ததியும், இயேசு கிறிஸ்துவும் உலகத்திற்கு வந்தனர்.
இதன் மூலம் நாம் உணர வேண்டியது கடவுள் ஒருவரையும் கை விட்டு விடமாட்டார். மனிதர் பார்வையில் எளியவள், அந்நியவள், பெண் எனக் கருதப்பட்ட ரூத்து, கடவுளின் திட்டத்தில் மிகப் பெரிய பங்கு பெற்றார். கடவுள் எப்போதும் எளிமையிலும், அன்பிலும், நம்பிக்கையிலும் நம் வாழ்வை முன்னிட்டு நமது வாழ்வில் நாம் எதிர்பார்க்காத வகையில் செயல்பட கூடியவர் என்பதை இதயத்தில் இருத்துவோம். .
நற்செய்தியில் (மத் 23:1-12), இயேசு மறைநூல் அறிஞர்களையும் பரிசேயர்களையும் குறித்துக் கண்டித்தார். அவர்கள் சொல்வார்கள், ஆனால் செய்வதில்லை. மக்களுக்கு பாரமான சுமைகளை சுமத்துவார்கள், ஆனால் தாங்கள் விரலால் கூட தொடமாட்டார்கள். அவர்கள் அதிகாரத்தையும் மரியாதையையும் நாடினர்; ஆனால் அன்பையும் சேவையையும் தவிர்த்தனர். இயேசு சொல்லுகிறார்:
- "உங்களுள் பெரியவர் உங்களுக்குத் தொண்டராக இருக்க வேண்டும்."
- "தம்மை உயர்த்துகிறவர் தாழ்த்தப்படுவார்; தம்மைத் தாழ்த்துகிறவர் உயர்த்தப்படுவார்." என்று...
இன்றும் பல இடங்களில் நாம் “ரூத்துபோன்ற” எளியவர்களைப் பார்க்கிறோம் — உழைக்கும் பெண்கள், சிறிய வேலைகளில் உழைத்தாலும் தங்கள் குடும்பத்தைக் காப்பவர்கள், அந்நிய தேசத்தில் வாழ்ந்து துன்பத்தைக் கடக்கும் தொழிலாளர்கள். அவர்களை கடவுள் மறக்கவில்லை. நாமும் கூட அவர்களை மதித்து, அவர்களுக்கு துணை நிற்க வேண்டும்.
அதே நேரம், சில சமயம் நம்மிடமும் பரிசேயர்களின் மனப்பான்மை வந்துவிடுகிறது. நாம் சொல்வோம், ஆனால் செய்வதில் பின் வாங்குவோம். வெளியில் மதிப்பையும் புகழையும் நாடுவோம்; ஆனால் உள்ளத்தில் கருணையையும் தாழ்ச்சியும் அற்றவர்களாக இருப்போம். இன்று இயேசுவின் வார்த்தைகள் நம்மைத் தாழ்ச்சிக்கும், தன்னார்வ தொண்டிற்கும் அழைக்கிறது.
எனவே
- நான் என் குடும்பத்தாருக்கு, சமூகத்தாருக்கு ரூத்துபோல் அன்பையும் நம்பிக்கையையும் காட்டுகிறேனா?
- நான் என்னுடைய கடமைகளைச் செயலில் காட்டுகிறேனா, இல்லையா?
- நான் தேடும் புகழ் என்னிடம் மட்டுமா, அல்லது கடவுளுக்காகவா? என சிந்திப்போம் ...
ரூத்து மற்றும் போவாசின் வாழ்க்கை இன்று நமக்கு கற்றுக் கொடுக்கும் செய்தி — கடவுள் எளிமையானவர்களுக்குத் துணை நிற்பவர்... அவரைப்போல நாமும் எளியோருக்கு துணை நிற்க வேண்டும் என்பதாகும்.
இயேசுவின் நற்செய்தி— உண்மையான உயர்வு தன்னார்வ தொண்டிலும் தாழ்ச்சியிலும் இருக்கிறது.
ஆகவே, அன்பானவர்களே, இன்று நாமும் நம் வாழ்க்கையில் தாழ்ச்சியையும், உண்மையையும், அன்பையும் நமது அன்றாட வாழ்வில் நடைமுறைப்படுத்துவோம். அப்போதுதான் கடவுள் நம்மை உயர்த்துவார்.
எனவே அன்பர்களே
“தம்மைத் தாழ்த்துகிறவர் உயர்த்தப்படுவார்” என்று இயேசு கூறிய வார்த்தை, நம் வாழ்வின் அடிப்படையாக அமையட்டும்.
என்றும் அன்புடன்
அருள்பணி ஜே. சகாயராஜ்
திருச்சி மறை மாவட்டம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக