திங்கள், 18 ஆகஸ்ட், 2025

மீட்பை உரியதாக்கிக் கொள்வோம்...(24.8.2025)

மீட்பை உரியதாக்கிக் கொள்வோம்...

அன்பான சகோதர சகோதரிகளே,

இன்றைய வாசகங்கள் நம்மை மூன்று முக்கியமான சிந்தனைகளுக்கு அழைப்பு விடுக்கின்றன :

  1. எசாயா இறைவாக்கினர் (66:18-21):
    இங்கு ஆண்டவர் கூறுகிறார் – அனைத்து மக்களையும், அனைத்து மொழிகளையும், அனைத்து நாடுகளையும் தம் மாட்சியை காண அழைப்பேன். “உங்கள் உறவின் முறையார் அனைவரையும், எருசலேமிலுள்ள என் திருமலைக்கு அழைத்து வருவார்கள்” என்கிறார். கடவுளின் திட்டம் எல்லோரையும் ஒரே குடும்பமாக இணைப்பதே. யூதர்களுக்கே மட்டும் அல்ல, உலகமெங்கும் பரவியுள்ள மக்களையும் அவர் அழைக்கிறார்.

  2. எபிரேயருக்கு எழுதிய திருமுகம் (12:5-13):
    இங்கு, ஆண்டவர் தம் அன்பால் நம்மைத் திருத்துகிறார் என்பதை நாம் அறிகிறோம். “ஆண்டவர் தாம் யாரிடம் அன்பு கொண்டிருக்கிறாரோ அவர்களைக் கண்டிக்கிறார்.” நம் வாழ்வில் சோதனைகள், துன்பங்கள் வரும் போது அது தண்டனை அல்ல, அன்பான தந்தை தனது பிள்ளையைத் திருத்துவது போன்றது. அந்தத் திருத்தமே நம்மை வளர்க்கிறது, நம்மை நேர்மையான பாதையில் நடத்துகிறது.

  3. லூக்கா நற்செய்தி (13:22-30):
    இங்கு இயேசு சொல்கிறார்: “இடுக்கமான வாயில் வழியாக நுழைய முயலுங்கள்.” மீட்பு எளிதில் கிடைப்பதல்ல, ஆனால் முயற்சியாலும் நம்பிக்கையாலும் தாழ்ச்சியாலும்  கிடைக்கும். மேலும், “கிழக்கிலும் மேற்கிலும், வடக்கிலும் தெற்கிலும் இருந்து மக்கள் வந்து பந்தியில் அமர்வார்கள்” என்கிறார். கடவுளின் மீட்பு அனைவருக்கும் திறந்தது. ஆனால், “முதலில் இருப்பவர்கள் கடைசியாகவும், கடைசியில் இருப்பவர்கள் முதலில்” என்றும் எச்சரிக்கிறார். அதாவது, புகழும் பதவியும் முக்கியமல்ல, அன்பும் உண்மையும் முக்கியமானதாகும.


என்று தாய் திரு அவை நினைவு கூறுகின்ற புனித பார்த்தால மேயு (நத்தனியேல்) பற்றி இயேசு சொன்னார்: “இவர் உண்மையான இஸ்ரயேலர்; கபடமற்றவர்” (யோவான் 1:47). கபடமற்ற வாழ்வு – அதுவே பார்த்தலமேயுவின் சிறப்பு. தூய ஆவியின் வருகைக்குப் பிறகு, அவர் தூர நாடுகளுக்கு சென்று நற்செய்தி பணி செய்தார் – இந்தியாவிலும், ஆர்மேனியாவிலும். கடவுளின் நம்பிக்கையை  பரப்பியதற்காக, கடுமையான துன்பங்களைச் சந்தித்து, உயிரை கொடுத்தார்.

அவரின் வாழ்க்கை நமக்கு சொல்லும் பாடம்:

  • நம் வாழ்வு கபடமற்றதாக இருக்க வேண்டும்.
  • சவால்கள் வந்தாலும் நம்பிக்கையை உறுதியாக பிடித்திருக்க வேண்டும்.
  • எல்லா மக்களிடமும் இறைவனின் அன்பை எடுத்துச் செல்ல வேண்டும்.

இன்று நாம் வாழும் உலகமும் எசாயா சொன்ன மாதிரியே: எல்லா இனத்தாரும், எல்லா மொழிகளும், எல்லா நாடுகளும் ஒரே கடவுளின் குடும்பமாக இருப்பதற்கு அழைக்கப்படுகிறார்கள். ஆனால் நாம் இன்று இதற்கு பல தடைகளை போடுகிறோம் –( சாதி, மொழி, இனம், அரசியல், மதம், மேலும் பல  பிரிவுகள்.) உண்மையான கிறிஸ்தவர்கள் என்றால், பார்த்தலமேயு போல் எல்லையற்ற அன்பை வெளிப்படுத்துபவர்கள்.

அதேசமயம் இன்றைய நற்செய்தி எச்சரிக்கையை நாம் மறக்கக்கூடாது – “நாங்கள் உம்மோடு உணவு உண்டோம், குடித்தோம்” என்று சொல்லுவதால் மட்டும் மீட்பு உறுதியாக கிடைக்கும் என்பது அல்ல மாறாக   நம் உண்மையாக வாழ்வில் நம்பிக்கையை அடிப்படையாக வைத்து சேவைகள் பல செய்வதன் மூலம் மீட்பை உரியதாக்கிக் கொள்ள முடியும் என்பதை உணர்வோம் ... 

இன்று நமக்கான அழைப்பு

  1. கடவுளின் அழைப்பு அனைவருக்கும் – நாம் ஒருவரையும் தவிர்க்கக்கூடாது.
  2. துன்பங்கள் வந்தாலும் அதைத் தண்டனையாக அல்ல, கடவுளின் அன்பான திருத்தமாக பார்க்க வேண்டும்.
  3. பார்த்தலமேயுவைப் போல, கபடமற்ற நம்பிக்கையுடன் , சவால்களை எதிர்கொண்டு நற்செய்தியை வாழ்வில் சான்று பகர வேண்டும்.

இதற்கான அருள் வேண்டி இணைந்து இன்றைய நாளில் இறைவேண்டல் செய்வோம்... இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்....


என்றும் அன்புடன் 

அருள்பணி ஜே. சகாயராஜ் 

திருச்சி மறை மாவட்டம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நம் வாழ்வு எதில் வேரூன்றப்பட வேண்டும் ...(17.9.2025)

அன்பிற்குரிய சகோதரர் சகோதரிகளே, நமது அடித்தளம்... திருத்தூதர் பவுல் கிறிஸ்துவின் மறைநிகழ்வுகளை மிகச் சிறிய சொற்களிலே மிகப் பெரி...