திங்கள், 11 ஜனவரி, 2021

இயற்கையை பாதுகாப்பது - நமது கடமை... (12.1.2021)

இயற்கையை பாதுகாப்பது - நமது கடமை...
சுற்றுவதில் *புவி* அழகானது.......!!!
சுடுவதில் *சூரியன்*அழகானது.......!!!
வளர்வதில் *பிறை* அழகானது.......!!!
மின்னுவதில் *விண்மீன்* அழகானது........!!!
தவழ்வதில் *குழந்தை* அழகானது........!!!
குதிப்பதில் *கடல்* நீர் அழகானது......!!!
விழுவதில் *அருவி* அழகானது..........!!!
எரிவதில் *தீபம்* 
அழகானது...!!!
உறைவதில் *பனி* அழகானது........!!!
விளைவதில் *பயிர்கள்* அழகானது.......!!!
தலை சாய்ப்பதில் *நெற்கதிர்*அழகானது......!!!
குளிர்ச்சியில் *தென்றல்*அழகானது........!!!
உழைப்பதில் *வியர்வை* அழகானது.......!!!
பாடுவதில் *குயில்* அழகானது.........!!!
பறப்பதில் *புறா* அழகானது........!!!
உறவினில் *நட்பு* அழகானது........!!!
மொழிகளில் *மழலை* மொழி அழகானது.......!!!
மலர்களில் *ரோஜா* 
அழகானது......!!!
மலர் வாசனையில் *மல்லிகை* அழகானது....!!!
கலர்களில் *கருப்பு*
அழகானது.....!!!
கலாச்சாரத்தில் *நம் நாடு* அழகானது...!!!
எப்போதும் *தாய்மை* அழகானது........!!!
இதனை உணர்ந்த அத்தனை *உள்ளங்களும்* அழகானது.....!!!

       இந்த அழகான உள்ளங்களுக்கு இன்றைய முதல் வாசகத்தின் வழியாக இறைவன் இந்த உலகம் எவ்வளவு அழகானது என்பதனை நமக்கு எடுத்துரைக்கிறார். இந்த அழகான உலகை படைத்த இறைவன், இதனை மனிதனுக்கு கீழ் உட்படுத்தினார். கடவுள் நம்மிடம் கொடுத்த இயற்கையை பேணி பாதுகாக்காமல், அதனை தங்களின் சுயநலத்தால் அழிக்கக் கூடியவர்கள் இன்று அதிகமாகிக் கொண்டே செல்கிறார்கள். இந்நிலை தொடர்ந்து கொண்டே சென்றால், இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் வாசிக்க கேட்பது போல இறைவன் படைத்த ஒரு மனிதனுக்குள் தீய ஆவி குடிகொண்டிருந்தபோது அதிகாரத்தோடு அத்தீய ஆவியை அம்மனிதனிடமிருந்து விரட்டினார். அதுபோலவே,  இறைவன் படைத்த இந்த அழகிய உலகை அழித்துக் கொண்டே இருப்போமாயின்,  கண்டிப்பாக இயற்கை சீற்றங்கள் போன்றவற்றின் வழியாக இறைவன் அதிகாரத்தோடு தான் படைத்த இயற்கையை மீட்டெடுக்கக் கூடியவராக இருப்பார். இயற்கைக்கு எதிரான இன்னல்களையும் அநீதிகளையும் கண்டிக்க கூடியவராக குரல் கொடுப்பார் என்பதில், எந்தவித ஐயமும் இல்லை. இன்று திருஅவை கூட, இயற்கையை அழித்துக் கொண்டிருக்க கூடிய செயலை வன்மையாக கண்டிக்கிறது. இயற்கை, இவ்வுலகம், நாம் வாழும் வீடு என திருத்தந்தை இயற்கையினை பேணி பாதுகாப்பதற்கு நம் ஒவ்வொருவரையும் சுற்று மடல்கள் மூலம் அழைப்பு தருகின்றார். சமீபத்தில்கூட கிரேட்டா  துன்பர்க் என்ற ஒரு சிறுமி, நாங்கள் வாழ வேண்டிய இந்த உலகத்தை எப்படி நீங்கள் அழிக்க முடியும் என்று இயற்கை அழிவுகளை சுட்டிக்காட்டி, ஐநாவில் கேள்வியை எழுப்பியது, பலருடைய மனங்களையும் சிந்தித்துப் பார்க்கத் தூண்டியது.
            இன்றைய வாசகங்கள் வழியாகவும் இறைவன் நாம் நன்றாக வாழ வேண்டும் என்பதற்காக இறைவன் நமக்குத் தந்த இந்த அழகிய பரிசான இந்த உலகத்தை, நாம் நமது சுயநலத்தால் வேரறுத்துக் கொண்டிருக்கக் கூடிய செயல்களை சிந்தித்துப் பார்த்து,  அதனை நிறுத்தி, இறைவன் படைப்பின் சிகரமாக படைத்த மனித இனம்,  இம்மனித இனம் வாழ்வதற்காக உருவாக்கப்பட்ட இந்த இயற்கையை, இறைவனின் படைப்பு அது அனைவருக்குமானது, தனிப்பட்ட நபருக்கு மட்டும் அல்ல என்பதை ஆழமாக உணர்ந்தவர்களாய், இறைவன் கொடுத்த அன்புப் பரிசன இந்த இயற்கையை பாதுகாக்கவும் பண்படுத்தவும்,   வளப்படுத்தக்கூடிய செயல்களில் ஈடுபடவும் இயற்கையை நேசித்த புனித பிரான்சிஸ் அசிசியாரைப் போல இயற்கையிடமிருந்து பல பாடங்களை கற்றுக் கொண்ட பல நாடுகளைப் போல நாமும் இறைவன் படைத்த இயற்கையின் துணையோடு தான் இம்மண்ணில் வாழ்கிறோம் என்பதை உணர்ந்தவர்களாய் இயற்கையை பாதுகாக்கவும், பராமரிக்கவும் இறையருளை வேண்டுவோம். தொடர்ந்து இயற்கைக்கு எதிராக நடக்கக்கூடிய அநீதிகளைத் தட்டிக் கேட்கவும், இயற்கையை பாதுகாக்கவும், முடிந்தால் நம்மைச் சுற்றி இருக்கக் கூடிய இடங்களில் பல விதமான மரங்களையும் செடிகளையும் வளர்க்கவும் சுதந்திரமாக திரியும் பார்வைகளுக்கு மொட்டை மாடியில் தண்ணீர் வைத்து உணவு அளிக்கவும் நமது சின்னஞ்சிறு செயல்களால் இயற்கையை பாதுகாப்பதற்கான முயற்சியில் ஈடுபட தொடர்ந்து இறையருளை வேண்டுவோம். இயற்கையை பாதுகாப்பதற்கான முயற்சியில் சிறு செயல்கள் வழியாக ஈடுபட உள்ளத்தில் உறுதி ஏற்போம்.

சனி, 9 ஜனவரி, 2021

ஒளி வீசுவோம்.... (11.1.2021)

ஒளி வீசுவோம்....

ஒருவரை ஒருவர் செதுக்கிக் கொள்வதே இந்த உலகில் வாழ்க்கை ஆகிவிட்டது. 
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! 

 உங்கள் அனைவரையும் இன்றைய கல்வாரி திருப்பலிக்கு அழைப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

ஊரும் சதமல்ல! 
உற்றார் சதமல்ல! 
உற்றுப் பெற்ற பேரும் சதமல்ல! 
பெண்டீர் சதமல்ல! பிள்ளைகளும் சீரும் சதமல்ல! தேசத்திலே யாரும் சதமல்ல! நின்தாள் சதம்! கச்சியேகம்பனே! 
ஊரும் நிரந்தரமல்ல! உறவினர் நிரந்தரமல்ல! பேரும் புகழும் நிரந்தரமல்ல! செல்வமும் நிரந்தரமல்ல! 

ஒன்றே ஒன்று மட்டுமே 
நிரந்தரம்!
 இறைவா! அது நீ ஒருவனே! என்ற பட்டினத்தாரின் பாடல் வரிகளுக்கேற்ப இன்றைய நாளில், அந்த இறைவனை பின்தொடர கூடிய, உண்மை சீடர்களாக வாழ நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகிறோம்.

 இன்றைய நற்செய்தி வாசகத்தில் மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்! என இயேசு நம்மை அழைக்கின்றார். இயேசுவின் அழைப்புக்கு  செவிகொடுத்தவர்களாய்,  நம்மை நாமே செதுக்கிக் கொண்டு பயணிக்கும் போது,  கடவுளின் மாட்சியில் சுடரொளியாக விளங்குவோம் என, இன்றைய முதல் வாசகம் வழியாக நமக்கு சுட்டிக் காட்டப்படுகிறது. நாம் கடவுளின் மாட்சியில் சுடரொளியாகிட,  மனம் மாறி நற்செய்தியை நம்பக் கூடியவர்களாய்,  இயேசுவின் உண்மைச் சீடர்களாய்,  அவரின் பின்னே அவர் காட்டிய பாதையில் அவரைப் பின் தொடர்ந்து பயணிக்க கூடியவர்களாய் இருக்க நாம் அழைக்கப்படுகிறோம். 
வாழும் ஞானிகள் செய்வதெல்லாம் சேவையை என்பார்கள். நாமும் நமது சேவைகளால் நாம் இயேசுவின் உண்மைச் சீடர்கள் என்பதையும் நற்செய்தியின் வழி வாழக் கூடியவர்கள் என்பதையும் இவ்வுலகிற்கு பறைசாற்றும் வகையில் நமது வாழ்வை இயேசுவின் வார்த்தைகளின் படி அமைத்துக் கொண்டு அவரின் பாதையில் அவரைப் பின்தொடர்ந்து  இந்நன்னாளில் நாமும் பயணித்து, இறையாட்சியை இம்மண்ணில் மலரச் செய்ய, நமது பங்களிப்பை வெளிப்படுத்தி, கடவுளின்  ஆட்சியில் சுடரொளியாக ஒளி வீசுவோம்!

வெள்ளி, 8 ஜனவரி, 2021

தாகம் கொள்வோம்! (10.1.2021)

தாகம் கொள்வோம்!  
இறைவன் இயேசுவில் அன்புக்கு உரியவர்களே!  இன்றைய நாள் இறைவார்த்தைகளின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.  

தாகம் இன்றி இத்தரணியில் மனிதரில்லை. பலருக்கும் பலவிதமான தாகம் உண்டு. தாகம் என்றால் நீர் தாகம் என்பது மட்டுமல்ல. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான தாகத்தினை கொண்டுள்ளார்கள். சிறுவயதில் பொம்மையின் மீது தாகம் ஏற்படுகிறது. விவரம் அறியும்போது  விளையாட்டின் மீது தாகம் ஏற்படுகிறது. பருவமடைந்ததும் காதலின் மீது தாகம் ஏற்படுகிறது. பின் தாரத்திலும் தாகம் ஏற்படுகிறது.  பணத்தில் தாகம்,  பதவியில் தாகம், பெயரில் தாகம், புகழில் தாகம், என ஆயிரம் தாகங்களை அடுக்கிக் கொண்டே போகலாம் இந்த உலகத்தில்.    ஆனால்   மனித வாழ்வின்   இறுதியில் ஆறடி நிலத்தின் தாகத்திற்கே அர்ப்பணமாகிறது, இந்த உடல். தாகம் இன்றி இத்தரணியில் யாரும் இல்லை எனக்கூறலாம்.  இப்படிப்பட்ட சூழலில், இன்றைய நாளில், இறைவன், தாகமாய் இருப்பவர்களே  என்னிடம் வாருங்கள்!  என்று நம் அனைவரையும் அழைக்கிறார், தாகத்தில் இருந்து நமக்கு நிறைவு அளிக்கவே. ஆம்! அந்த அன்பு தாகத்தின்  வெளிப்பாடுதான், இன்று நம் முன்பாக இருக்கக்கூடிய சிலுவை. நமக்காக, நமது வாழ்வு அர்த்தமுள்ள வகையில், அடுத்தவருக்கு நலன் தரக் கூடிய வகையில்,  அன்பு பணியின் அடிப்படையிலான வாழ்வாக அமையவேண்டும் என்பதற்காக, தன்னுடைய சொல்லாலும் செயலாலும் நமக்கு பாடம் கற்பித்த இயேசுவின் தாகத்தின் வெளிப்பாடுதான் இந்த சிலுவை. இன்று இச்சிலுவையை உற்று நோக்கும் நாம்,  அவரை போல அன்பு தாகம் கொண்டவர்களாக அன்பு பணி செய்ய அழைக்கப்படுகின்றோம்.  இதனையே இன்றைய இரண்டாம் வாசகத்தில் நாம் காணலாம். 

இயேசு கிறிஸ்துவை இறைமகன் என்று நம்புவோரைத் தவிர உலகை வென்றவர் யார்? நீராலும் இரத்தத்தாலும் தூய ஆவியாலும் வந்தவர் இந்த இயேசு கிறிஸ்து.  இந்த இயேசு கிறிஸ்துவைப் போல நாமும் அன்பு பணிசெய்ய அழைக்கப்படுகிறோம்.  இதன் வெளிப்பாடுதான் இன்றைய நற்செய்தி வாசகமும். திருமுழுக்கு யோவான் தன்னைத் தாழ்த்தி இயேசுவை முன்னிலைப்படுத்தும் தாழ்ச்சி வழியான அன்பின் பரிமாணம். 

அன்பில் மட்டும் தான் நாம் அனைத்தையும் இழக்கின்றோம்.  அந்த அன்பை இம்மண்ணில் காணும் மனிதர்களிடத்தில் விதைத்திட அன்பு தாகம் கொள்ள இன்றைய நாளில் நாம் அனைவரும் அழைக்கப்படுகிறோம்.  இயேசு தன்னுடைய வாழ்வில் அன்பை  மையப்படுத்தி வாழ்ந்த போது அவரை தூய ஆவியானவர் தனது கொடைகளால் நிரப்பி வழி நடத்தியது போல, நம்மையும் தன் அன்பான கொடைகளால் நிரப்பிட, தன் அன்பு கொடைகளால் தூய ஆவியானவர் நிரப்பிட, தூய ஆவியானவரை  நோக்கி ஜெபிப்போம்.   

அன்னை தெரசா அவர்கள் கூறுவார்கள், வெறுப்பது யாராக இருந்தாலும், நேசிப்பது நீயாக இரு என்று. அன்னையின் வார்த்தைகளையும் ஆண்டவர் இயேசுவின் வாழ்க்கையையும், ஆண்டவர் இயேசு கொண்டிருந்த அன்பு தாகத்தையும்,  மனதில்  ஏற்றவர்களாக, நமது வாழ்வில் நாமும் பலவிதமான தாகங்களுக்கு மத்தியில்,  அன்பு தாகத்தை நமக்குள் வளர்த்துக் கொண்டு, கண்ணில் காணும் மனிதர்களிடத்தில் அன்பை பகிரவும், அன்பின் வடிவமாக நாம் திகழ்ந்திடவும், இறைவனது அருளைை வேண்டி, இணைந்து  ஒருவர் மற்றவருக்காக தொடர்ந்து ஜெபித்து,இயேசு தனது பணி வாழ்வை திருமுழுக்குப் பெற்றது முதல் துவங்கியது போல நாமும் இன்றைய நாள் முதல் நமது அன்பு பணியை இச்சமூகத்தில் தொடர  இன்றைய நாளில் இறையருளை வேண்டுவோம். .

நீங்களும் அவருடன் தான் இணைந்து வாழ்கிறீர்களா? (9.1.2021)

நீங்களும் அவருடன் தான் இணைந்து வாழ்கிறீர்களா? 

 இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! 
 இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.  

 இன்றைய நற்செய்தி பகுதியானது திருமுழுக்கு யோவானின் தாழ்ச்சியை நமக்கு சுட்டிக் காட்டுகிறது.  திருமுழுக்கு யோவான் பழைய புதிய ஏற்பாட்டின் இணைப்பு கோடு எனக் கூறலாம்.  இயேசுவின் காலத்தில் வாழ்ந்த இறைவாக்கினர் இவர். யோவான் என்றால் "கடவுள் இரக்கத்தால்" எனப் பொருளுண்டு.  யோவான் இயேசுவின் குரலாக இருந்தார். இயேசுவை பற்றி அறிவிப்பதே இவரது பணியாக இருந்தது.  இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட இயேசுவின் பணியை கண்டு வியந்துபோன யோவானின் சீடர்கள் நம்மை போலவே ஒருவர் திருமுழுக்கு தருகிறார் என கூறியபோது, நான் மெசியா அல்ல. அவரே மேசியா!. அவரைப் பற்றி சான்று பகரவே நான் வந்தேன் எனக்கூறி, நீங்களும்  அவரைப் பற்றி கூறுங்கள் என்று கூறுகிறார்.   என் செல்வாக்கு குறைய வேண்டும். அவரது செல்வாக்கு பெருக வேண்டும் என்று இயேசுவை அறிவிக்கும் பணியில் தன்னைத்தானே தாழ்த்திக் கொள்ளக் கூடிய ஒரு தாழ்ச்சியின் வடிவமாக இந்த திருமுழுக்கு யோவான் விளங்குகிறார்.  இன்றைய வாசகங்கள் நமக்கு தரக்கூடிய செய்தி, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவோடு இணைந்து வாழ வேண்டும் என்பதாகும். இயேசு கிறிஸ்துவைப் பற்றி திருமுழுக்கு யோவான் தன் சீடர்களுக்குச் சொன்னபோது, அவர் கூறுவதை மிகவும் கவனத்தோடு செவிகொடுத்துக் கேட்டார்கள், திருமுழுக்கு யோவானின் சீடர்கள். இன்று நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில் சொல்வதை கவனமாக கேட்பது என்பது, அவ்வளவு சிரமமானது இல்லை. ஆனால் யாருமே அதை செய்வதில்லை. அன்றாட வாழ்வில் நாம்  உறவுகளிடையே ஏற்படக்கூடிய, பல பெரிய பிரச்சனைகளுக்கு காரணம் ஒருவர் பேசுவதை மற்றவர் காது கொடுத்து கேட்காதது தான். மனிதர்கள் பொறுமையாக கவனிப்பதே இல்லை. தான் பேச நினைப்பதை முதலில் தெரிவிக்க வேண்டும் என்றே அவசரப்படுகிறார்கள். குழந்தைகளையும் பல நேரங்களில் நாம் பேச அனுமதிப்பதில்லை. அவர்கள் பேசுவதை நாம் அமைதியாக கேட்பது இல்லை. கவனமாக கேளுங்கள். கவனமாக கேட்பதற்கு நாம் பழகிக் கொண்டாலே, வாழ்க்கையில் பாதி விஷயங்களில் நாம் வெற்றி கொண்டு விடலாம். இப்படி மற்றவர் பேசுவதை கவனமாகக் கேட்கும் ஒருவர், அனைவருக்கும் பிடித்தமான ஒருவராக இருப்பார் என கூறுவார்கள். நாம் திருமுழுக்கு யோவானின் சீடர்களைப் போல, திருமுழுக்கு யோவான் கூறியதை சீடர்கள் கவனத்தோடு கேட்டு,  ஆண்டவர் இயேசுவைப் பற்றி சான்று பகர கூடியவர்களாக மாறியது போல நாமும் நமது வாழ்வில், பிறர் பேசும் போதும், இறைவார்த்தை அறிவிக்கப்படும் போதும், கவனத்தோடு அதற்கு செவி கொடுத்து, நமது வாழ்வை, அவ்வார்த்தைகளின் படி அமைத்துக் கொள்ள, இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம். அப்படி நாம் கடவுளின் வார்த்தைகளின் படி நமது வாழ்வை அமைத்துக் கொள்ளும் பொழுது, நாம் அனைவருமே இயேசு கிறிஸ்துவோடு இணைந்து வாழக் கூடியவர்களாக இருப்போம். இந்தச் செய்தியினைத் தான் இன்றைய முதல் வாசகமும் நமக்கு எடுத்துரைக்கிறது. எனவே, நாம் வாழும் இந்த உலகத்தில்,  இறைவார்த்தையை கவனத்தோடு கேட்கவும்,  அவ்வார்த்தைகளின்படி வாழ்வை அமைத்துக் கொண்டு, எப்போதும் ஆண்டவர் இயேசுவோடு இணைந்து வாழ உள்ளத்தில் உறுதி ஏற்றவர்களாய், இறையாட்சியை இம்மண்ணில் மலரச் செய்ய இயேசுவின் பாதையில் அவரது சீடர்களாய் பயணிப்போம்.

வியாழன், 7 ஜனவரி, 2021

நிலை வாழ்வைப் பெற வேண்டுமா?... (8.1.2021)

நிலை வாழ்வைப் பெற வேண்டுமா?...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் ...
தாமஸ் ஆல்வா எடிசன் சிறுவனாக இருந்தபோது ஒருநாள் வகுப்பாசிரியர், தாமஸ் ஆல்வா எடிசன் அவர்களின் தாயாரிடம், உங்கள் பிள்ளையின் தலையில் களிமண் மட்டுமே உள்ளது. இவனை பள்ளியில் வைத்திருந்தால் எங்கள் பள்ளியின் பெயர் கெட்டுப் போய்விடும் என்றார்.  தற்காலத்தில் இவரின் பெயரை தங்கள் பள்ளியின் பெயராக மாற்றினார்கள்.  இவர் இறந்த போது மின் விளக்குகள் அனைத்தும் இரண்டு நிமிடத்திற்கு அணைக்கப்பட்டன. அப்போது தலைவர் ஒருவர் கூறினார்,  இவர் இல்லை எனில், இந்த உலகம் இவ்வாறு தான் இருந்திருக்கும் இன்று.... நம்பிக்கையோடு தொடர் முயற்சியில் ஈடுபடும்போது வெற்றி நிச்சயம் என்ற பாடத்தினை தாமஸ் ஆல்வா எடிசன் அவர்களின் வாழ்வு நமக்கு கற்பிக்கிறது. நாமும் ஒவ்வொரு நாளும் நம்பிக்கையோடு பயணிக்க வேண்டும் என்ற செய்தியினைத் தான் இன்றைய வாசகங்கள் வழியாக இறைவன் நமக்கு உணர்த்துகிறார்.  நம்பிக்கையால் நாம் அனைவரும் நிலை வாழ்வைப் பெற்றுக் கொள்ள முடியும் என இன்றைய முதல் வாசகத்தின் வழியாக யோவான் தனது கடிதத்தில் குறிப்பிடுகிறார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஒரு தொழுநோயாளி, ஆண்டவரே! நீர் விரும்பினால் எனது நோயை குணமாக்க முடியும்! என மன்றாடி,  இயேசுவிடம் இருந்து உடல்நலனை பெற்றுச் செல்கிறார்.  

வாழ்க்கையில் துன்பங்கள் நேரும் போது நாம் நமது நம்பிக்கையை இழந்து விடுகிறோம். ஆனால் துன்ப நேரத்தில் துணிவோடு இருக்கவும், நம்பிக்கையோடு தொடர்ந்து பயணிக்கவும், இன்றைய வாசகங்கள் நமக்கு உணர்த்துகின்றன. தொழுநோயாளி பல ஆண்டுகளாக நோய்வாய்ப்பட்டு இருந்தாலும் நோயுற்றவரை அச்சமூகத்தில் உள்ளவர்கள் எல்லாம், ஓரம் கட்டி, ஒதுக்கி வைத்திருந்தனர்.  அவர்களை தொடுவதும் பார்ப்பதும் தீட்டு என கருதினர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு தொழுநோயாளி இயேசுவிடம், நீர் விரும்பினால் என்னை குணமாக்க உம்மால் முடியும்! என்று கூறுகிறார் என்றால், இந்த தொழுநோயாளிகளை தேடி இயேசு சென்றார் என்பதுதான் உண்மை. அந்த இயேசுவினிடத்தில் நம்பிக்கை கொண்டிருந்த வண்ணமே, அவர் தனது நலம் பெறுதலுக்காக ஆண்டவர் இயேசுவிடம் வேண்டினார். நம்பிக்கையோடு கேட்கும் அனைவரும் பெற்றுக் கொள்கின்றனர், என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப, இயேசு அந்த  தொழுநோயாளரின் நம்பிக்கையைக் கண்டு வியந்த வண்ணம், அவருக்கு உடல்நலம் கொடுத்தார்.  அவர் நலமுற்றார் என்ற செய்தியை, அன்று யூத சமூகத்தில் நிலவிய சடங்கு முறைகளை பின்பற்றுமாறு கூறி, அவர் குணம் அடைந்ததை சமூகத்திற்கு தெரிவிக்கிறார்.

ஒரு எறும்பானது தன்னை விட 8 மடங்கு சுமையை சுமக்கும். அதுவே போர் காலங்கள் என்றால் 15 மடங்கு சுமையை சுமக்கும் என்று கூறுவார்கள். ஆனால் நாம் ஏதேனும் சிறிய துன்பம் நேர்ந்தாலே நம்பிக்கையை இழந்து, முடங்கிப்போய், வீட்டுக்குள் முடங்கி விடுகிறோம். இன்றைய நாளின் வாசக பகுதிகள் வழியாக இறைவன் நம்மை நம்பிக்கையோடு இவ்வுலகில் பயணம் செய்ய அழைக்கின்றார். நம்பிக்கையோடு நம்மை சுற்றி உள்ள ஒவ்வொருவரையும் அன்பு செய்து, ஒருவர் மற்றவர் நலனில் அக்கறை காட்டக் கூடிய இயேசுவின் சீடர்களாக பயணம் செய்ய துவங்குவோம் இந்நன்னாளில் ....

வானின் மழைத்துளி மண்ணை முத்தமிட்டால் மண்ணகம் செழிக்கும். 
கடல் கரையை முத்தமிட்டால் கடற்கரை கண்கொள்ளா காட்சி தரும்.
கவிஞனின் பேனா முனை காகிதத்தை முத்தமிட்டால் வெள்ளை காகிதம் காவியமாகும்.
ஓவியனின் தூரிகை வெற்றிடத்தை முத்தமிட்டால் கவின்மிகு அழகு ஓவியமாகும்.
சிற்பியின் உளி கரடுமுரடான கல்லை முத்தமிட்டால் கலைநயமிக்க சிலையாகும்.
அதுபோலவே.....
நம்பிக்கை நமது உள்ளத்தில் முத்தமிட்டால் நமது வாழ்வு நிலை வாழ்வு கொண்டதாக மாறும்.
 நிலை வாழ்வை பரிசாகப் பெற, இந்நாளில் நம்பிக்கையின் நாயகனாம் ஆண்டவர் இயேசுவின் தலைமையில், நம்பிக்கையோடு நமது வாழ்க்கை என்னும் தொடர் பயணத்தில் ஈடுபடுவோம் .

புதன், 6 ஜனவரி, 2021

உலகை வெல்வோம்! (7.1.2021)

உலகை வெல்வோம்!

 இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

 இன்றைய முதல் வாசகம் கடவுளின் கட்டளையை கடைபிடிக்க நம்மை அழைக்கிறது. கடவுளின் கட்டளை இது என்று இன்றைய வாசகத்தை நோக்கும்போது அன்பு செலுத்துவது மட்டுமே கடவுளின் கட்டளையாக யோவான் தனது கடிதத்தின் வழியாக நமக்கு காட்டுகிறார். அன்பு செலுத்துகிறேன் என சொல்லிக்கொண்டு தமது சகோதர சகோதரிகளை  வெறுப்போர் அனைவரும் பொய்யர் என எடுத்துரைக்கின்றார். அன்பால் நாம் இவ்வுலகத்தை ஆளவேண்டும். ஏனென்றால் இந்த அன்பு கடவுளிடமிருந்து பிறந்தது. கடவுளிடமிருந்து பிறக்கக்கூடிய அனைத்தும் இந்த உலகை வெல்லும். இந்த உலகை அன்பால் வெல்வோம் என்ற நம்பிக்கையை நாம் கொண்டிருக்க வேண்டும் என யோவான் நற்செய்தியாளர் தன்னுடைய கடிதத்தின் வழியாக நாம் இறைவனின் அன்பை கடைபிடிக்க கூடியவர்களாக, இறைவன் கூறக்கூடிய அன்பை கடைபிடிக்கக் கூடியவர்களாக இருக்க அழைப்பு தருகின்றார். இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட ஆண்டவர் இயேசு கிறிஸ்து தூய ஆவியின் வல்லமையால் வல்லமை கொண்டவராய் தொழுகைக் கூடத்தில் எசாயாவின் சுருளேட்டை வாசிக்கின்றார். அதில் இவ்வாறு எழுதியிருந்தது: ஆண்டவரின் ஆவி என்மேல் உளது. ஏனெனில் அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கவும், சிறைபட்டு விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வை பெறுவர் என முழக்கமிடவும், ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும், ஆண்டவர் அருள் தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார் என்ற பகுதியினை வாசிக்கின்றார். இந்தப் பகுதியில் இடம்பெறக்கூடிய அனைத்தும் அன்பை மையப்படுத்தியதாக அமைகிறது.  ஏழைகள், சிறையில் வாடக்கூடியவர்கள், பார்வையற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள், பல்வேறு காரணங்களால் ஒடுக்கப்படக்கூடியவர்கள் இவர்கள் அனைவருமே அன்பில்லாமல் புறக்கணிக்கப்பட்டவர்கள். அன்பால் அவர்கள் அனைவரையும் அரவணைக்க வேண்டும். அவர்களோடு இணைந்து பயணிக்க வேண்டும் என்ற செய்தியினை ஆண்டவர் இயேசு கிறிஸ்து, அன்று தொழுகைக் கூடத்தில் வாசித்தார். வாசித்தது மட்டும் நில்லாமல், அந்த வாசித்த ஏட்டுச் சுருளை, ஏவலரிடம் கொடுத்துவிட்டு,  இன்று நீங்கள் வாசிக்கக் கேட்ட இந்த மறைநூல் வாக்கு நிறைவேறிற்று என்று கூறினார். நாமும் பல நேரங்களில் ஆண்டவர் இயேசுவின் அன்பு கட்டளையை வாசிக்கின்றோம். பலரும் கூறக் கேட்கின்றோம். ஆனால் வாசித்து விட்டு வழக்கம் போல நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளக் கூடியவர்களாக இருக்கின்றோம். வாசிக்கக்கூடிய அனைத்தும் நமது வாழ்வில் வாசத்தை பரப்பக் கூடிய வகையில் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என கூறுவார்கள். 

உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக. உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக!  என்ற
இறைவனது வார்த்தைகள் நம்மை அவ்வார்த்தைகளின் படி வாழ அழைக்கின்றது. ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இவ்வார்த்தைகள், இன்று நம்மை அவரைப் போல ஒருவர் மற்றவரை உண்மையாக அன்பு செய்து, அன்பை பகிர்ந்து வாழ அழைப்பு தருகின்றது. இன்றைய நாளில் நாம் நினைவு வரும் கூடிய புனித ரேமுத்து என்ற புனிதர் கூட தன்னுடைய வாழ்நாளில் மாணவர்களுக்கு அறிவு புகட்டுவதோடு மட்டுமல்லாமல் அவர்களின் ஆன்ம நலனுக்காக,  அவர்கள் ஆன்மாவும் நல்வழிப்படுவதற்கான வழிகளை தனது ஆசிரியப் பணி மூலம் செய்து வந்தார் என அறிகின்றோம். இன்று நாமும் பல நேரங்களில் பலரிடம் இருந்து அன்பை பெற்றிருக்கிறோம். அன்பைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். அன்போடு வாழ அழைக்கப்பட்டிருக்கிறோம்.  இவைகளை எல்லாம் மனதில் இருத்தி இன்றைய நாளில் நாம் ஒருவர் மற்றவரை அன்பு செய்யவும், அந்த அன்பால் இந்த உலகை வெல்வோம் என்ற நம்பிக்கையோடு,  அன்பால் அகிலத்தை ஆள ஆண்டவர் இயேசு காட்டிய பாதைகளின்படி அவரை பின்தொடர்ந்து அன்பால் இவ்வுலகை வெல்வோம்! வாருங்கள்!

செவ்வாய், 5 ஜனவரி, 2021

அச்சம் களைந்து அவரோடு இணைவோம்!....(6.1.2021)

இறைவன் இயேசுவில் அன்புக்கு உரியவர்களே!  இன்றைய நாள் வாசகங்களின் வழியாக என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

 அச்சம் களைந்து அவரோடு இணைவோம்!
 இன்றைய முதல் வாசகமானது அன்பைப் பற்றியும் நாம் ஒருவர் மற்றவர் மீது அன்பு காட்ட வேண்டும் என்ற நாம் கொண்டிருக்கக்கூடிய கடமை பற்றியும் தெளிவாக எடுத்துரைக்கிறது.

 இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தனிமையில் இறைவனிடம் வேண்டி விட்டு,  சீடர்களை நோக்கி கடல்மீது நடந்து செல்வதையும், இயேசுவை கண்டு கொள்ளாமல், கடல்மீது வருவது பேய் என எண்ணி அஞ்சக் கூடிய சூழலில் கலங்கி நின்ற சீடர்களைப் பார்த்து இயேசு, துணிவோடிருங்கள்! நான்தான்! அஞ்சாதீர்கள்! என்று அவர்களுக்கு துணிவூட்டிய நிகழ்வையும் நாம் வாசிக்க கேட்கின்றோம்.

 இம்மண்ணில் வாழுகின்ற ஒவ்வொருவரும் ஆண்டவரோடு இணைந்திட ஆசைப்படுகிறோம். ஆண்டவரோடு இணைந்திட விருப்பம் இல்லாதவர் யாரேனும் உண்டா இந்த அகிலத்தில்? என்ற கேள்வியை எழுப்பினால் அக்கேள்விக்கு ஆம் என்று பதில் கூற நாம் எப்போதும் தயாராக இருக்க மாட்டோம் என நம்புகிறேன். இம்மண்ணில் பிறந்த ஒவ்வொருவருமே ஆண்டவரோடு இணைய விரும்புகிறோம்.  இந்த உடல் மண்ணுக்கு செல்கிறது. நமது ஆன்மாவோ இறைவனை நோக்கிச் செல்கிறது. உடலைவிட அகம் எப்போதும் தூய்மையாக இருக்கவேண்டும்.  ‌இந்த செய்தியினை தான் இன்றைய வாசகங்கள் நமக்கு உணர்த்துகின்றன.  அகம் தூய்மையாக இருக்க வேண்டும் என்றால் அகத்திற்குள் அன்பு இருக்க வேண்டும்.  அந்த அன்பை ஒருவர் மற்றவரோடு நாம் காட்டவும் கடமைப்பட்டிருக்கிறோம்.  அன்பு காட்டும் போது மட்டுமே நாம் கடவுளோடு இணைந்திருக்கிறோம். ஏனென்றால் கடவுள் அன்பாய் இருக்கிறார். கடவுள் நம்மீது கொண்ட அன்பின் வெளிப்பாடுதான் இயேசு இந்த மண்ணிற்கு மனிதனாக வந்து சிலுவையில் சிலுவையில் தம்முயிரை கையளித்தார்.  வேடிக்கையாக கூறுவார்கள், ஒரு குழந்தை இயேசுவிடம் சென்று எந்த அளவுக்கு என்னை உங்களுக்கு பிடிக்கும்? என்று கேட்டதாம்.  அதற்கு இயேசு சிலுவையில் தொங்கிய வண்ணம்,  இந்த அளவிற்கு என்று கைகளை விரித்துக் காட்டினார் என்று கூறுவார்கள்.  இந்த அளவிற்கு என்று சிலுவையில் தொங்கும் கூடியவராக அக்குழந்தை முன் தோன்றினார் என்று கூறுவார்கள். இவ்வுலகத்தில் தலையாக நாம் ஒவ்வொருவருக்கும் இருக்கக் கூடிய மிக முக்கியமான கடமைகளில் ஒன்று அன்பு காட்டுவது. இந்த அன்பில் அச்சம் இருக்கக்கூடாது. அச்சம் இருக்கும் இடத்தில் அன்பு இருக்காது என்பதை முதல் வாசகம் விளக்குகிறது. இயேசுவின் சீடர்கள் இயேசுவின் மீது அன்பு கொண்டிருந்தார்கள். ஆனால் அந்த அன்பு நிலையான அன்பாகவும் உறுதியான அன்பாகவும் இல்லை.  மாறாக  வெளியே நடக்கக்கூடிய நிகழ்வுகளை எல்லாம் கண்டு அவ்வப்போது அவர்கள் தாங்கள் இயேசுவின் மீது கொண்டிருந்த அன்பிலிருந்தும் நம்பிக்கையில் இருந்தும் விலக கூடியவர்களாக இருந்தார்கள் என்பதனை இன்றைய வாசக பகுதி நமக்கு விளக்குகிறது.
 ஆம்! அன்புக்குரியவர்களே!

 ஆண்டவர் இயேசு கிறிஸ்து தங்களோடு இருந்தபோதும், அவர் செய்த பலவிதமான அற்புதங்களையும் அதிசயங்களையும் கண்ட போதும் கூட, தங்களுக்கு ஒரு இன்னல் நேரும் போது இறைவன் இயேசுவை கண்டு கொள்ளாதவர்களாக சீடர்கள் கலங்குகின்றனர்.  அவர்களிடம் இயேசு, துணிவோடிருங்கள்! நான்தான்! அஞ்சாதீர்கள்! என்ற வார்த்தைகளின் மூலம் தேற்றுகிறார்.  பல நேரங்களில் நாம் எதிர்பாராமல் நடக்கக் கூடிய சில நிகழ்வுகளால், தடுமாற்றம் அடைகிறோம்.  அந்த தடுமாற்றத்தால் அருகில் இருப்பவர்களை கூட அன்பு செய்யாமலிருக்கக் கூடியவர்களாக இருக்கிறோம்.

 ஆனால் இன்றைய நாளில் இறைவன் நமக்குத் தருகின்ற வார்த்தை, துணிவோடு இருங்கள்! அஞ்சாதீர்கள்! என்ற வார்த்தைகளாகும்.  இறைவன் இவ்வார்த்தைகளால் நம்மை தன் தேற்றுகிறார்.  நாம் துணிவோடு இருந்து அச்சங்களை எல்லாம் களைந்து அன்பால் ஆண்டவர் இயேசுவோடு இணைந்திட இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம். அன்னை தெரசா அவர்கள் கூறுவார்கள், வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு என்று! ஆண்டவர் இயேசு கிறிஸ்துவும் நமக்கு கொடுத்த அன்பு கட்டளையே, உன்னை நீ நேசிப்பது போல உனக்கு அடுத்திருப்பவரையும் நேசி என்பதாகும்.  நாம் அடுத்தவர் மீது அன்போடு இருக்க வேண்டும் என்பது தான் இறைவன் நமக்குக் கொடுத்துச் சென்ற அன்புக்கட்டளை. அந்தக் கட்டளையை மனதில் இருத்தியவர்களாய்,  நாம் அச்சங்களை எல்லாம் களைந்து  ஒருவர் மற்றவரை அன்பு செய்து அதன் வழியாக ஆண்டவர் இயேசுவோடு இணையக் கூடியவர்களாக மாறிட இன்றைய நாளில் அச்சம் களைந்து ஆண்டவரோடு அன்பால் இணைவோம். இறையாட்சியினை மலரச் செய்வோம்.

திங்கள், 4 ஜனவரி, 2021

அன்புறவில் வாழ... (5.1.2021)

அன்புறவில் வாழ...  

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

 இன்றைய வாசகங்கள் நமக்கு மூன்று விதமான சிந்தனைகளை கொடுக்கின்றன. 
1. கொடுங்கள்! 
2. பாருங்கள்! 
3. சேர்த்து வையுங்கள்! 

என்ற சிந்தனைகளை இன்றைய வாசக பகுதிகள் நமக்கு வழங்குகின்றன. இன்றைய முதல் வாசகமானது, நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்த வேண்டும் என்பது பற்றிக் கூறுகிறது. இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து  தன்னைச் சூழ்ந்திருந்த மக்கள் மீது பரிவு கொண்டு அவர்களுக்கு உணவு கொடுக்க கூடிய பகுதியினை வாசகமாக நாம் வாசிக்கின்றோம். இந்த வாசக பகுதியில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து பயன்படுத்தக்கூடிய மூன்று முக்கியமான வார்த்தைகள் என்று பார்க்கும் பொழுது, முதல் வார்த்தையாக, கொடுங்கள்! என்ற வார்த்தையை நாம் பார்க்கின்றோம்.  அதாவது இயேசுவின் சீடர்கள் இயேசுவிடம் நெடு நேரம் ஆகிவிட்டது.  சுற்றிலும் உள்ள பட்டிகளுக்கும் ஊர்களுக்கும் சென்று உண்பதற்கு ஏதாவது அவர்கள் வாங்கிக் கொள்ளுமாறு நீர் மக்களை அனுப்பிவிடும் என்றனர். ஆனால் ஆண்டவர் இயேசு கிறிஸ்து அவர்களிடம், நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்! என்றார்.  இந்த "கொடுங்கள்" என்ற வார்த்தையினை இன்றைய முதல் வாசகத்தோடு ஒப்பிட்டு பார்க்கும்பொழுது நாம் ஒருவர் மற்றவருக்கு அன்பைக் கொடுக்க கடமைப்பட்டிருக்கிறோம். ஒருவர் மற்றவரிடம் நாம் அன்பை கொடுக்கவேண்டும் என்ற செய்தியினை இப்பகுதியானது உணர்த்துகிறது. 

ஆம்! அன்புக்குரியவர்களே! அன்பு கடவுளிடமிருந்து வருகிறது. அன்பு செலுத்தும் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள்.  அவர்கள் கடவுளை அறிந்துள்ளார்கள். அன்பில்லாதோர் கடவுளை அறிந்து கொள்ளவில்லை. ஏனெனில் கடவுள் அன்பாய் இருக்கிறார் என்ற செய்தியினை இன்றைய முதல் வாசகம் நமக்கு எடுத்துரைக்கிறது. நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில் நாம் ஒருவருக்கு நம்மிடம் உள்ளதை கொடுக்க வேண்டுமாயின், கண்டிப்பாக நமது உள்ளத்தில் அன்பு இருக்க வேண்டும். எனவே இன்றைய வாசக பகுதிகளில் முதல் கருத்தாக அன்பை நாம் ஒருவர் மற்றவருக்கு கொடுக்கவேண்டும் என்ற செய்தியினை இயேசு நமக்கு வழங்குவதாக நாம் பொருள் கொள்ளலாம்!  அதனைத் தொடர்ந்து இந்த மக்களுக்கு உணவளிக்க கூடிய பகுதியில் இயேசுவிடம் அவர்கள்,  தங்களிடம் எதுவும் இல்லை என்று கூறிய போது இயேசுவிடம் அவர்கள், நாங்கள் போய் 200 தெனாரியத்திற்கு அப்பம் வாங்கி இவர்களுக்கு உன்னை கொடுக்க வேண்டும் என்கிறீரா?  என்ற கேள்வியை எழுப்பினார்கள்.  அப்போது அவர் உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கின்றன? எனப் பாருங்கள் என்று இயேசு கூறுகிறார். 
 நாம் இன்று ஒவ்வொருவரும் நம்மை நாம் சுய ஆய்வு செய்து பார்க்க அழைக்கப்படுகிறோம். நாம் எப்பொழுதும் நம்மிடம் இருப்பதை பற்றி பேசுவதைவிட வெளியே இருப்பதை பற்றி தான் அதிகம் பேசுகிறோம். ஆனால் ஆண்டவர் இயேசு கிறிஸ்து இன்றைய நற்செய்தி வாசகங்கள் வழியாக நம்மை நமக்குள்ளாக உற்று நோக்கி பார்க்க அழைப்பு தருகிறார். சீடர்களிடத்தில் உங்களிடையே எத்தனை அப்பங்கள் இருக்கின்றன? என்ற கேள்வியை அவர் கேட்டது போல,  இன்று நாமும் நமக்குள்ளாக நாம் எத்தகைய அன்புள்ளம் கொண்டவர்களாக இருக்கின்றோம்? என்ற கேள்வியை நமக்குளாக எழுப்பிப் பார்க்க வேண்டும்.  எப்படி இயேசு சீடர்களிடம் உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கின்றன? போய் பாருங்கள் என்று கூறினாரோ, அதுபோல நம் ஒவ்வொருவரையும் இன்றைய நாளில் இறைவன் நமக்குள்ளாக இருக்கக் கூடிய  அன்பு என்ற மனப்பாங்கை சுய ஆய்வு செய்து பார்க்க அழைப்பு தருகின்றார், ஆண்டவர். ஆண்டவரின் அழைப்பை ஏற்று அவர்களை நாம் எந்த அளவிற்கு நம்மிடையே அன்பு என்ற குணத்தினை கொண்டிருக்கிறோம்? என்பதை சிந்தித்துப் பார்க்க இன்றைய வாசகப்பகுதி இன்று நமக்கு அழைப்புத் தருகிறது. 

இயேசு சீடர்களுடன் தன்னைச் சுற்றி இருந்த மக்களுக்கு உணவுகளை கொடுத்து      பிறகு, மீதம் இருந்த அப்பத் துண்டுகளையும் மீன் துண்டுகளையும் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர் என்று நாம் வாசிக்கின்றோம். இவை சேர்த்து வைக்க வேண்டும் என்ற பாடத்தை நமக்குக் கற்பிக்கின்றன. இன்று நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில், பல நேரங்களில் பலவற்றை நாம்  தேடித்தேடி சேர்த்து வைக்கின்றோம். ஆனால் உண்மையிலுமே நாம் சேர்த்து வைக்க வேண்டியது அன்பால்! பல உள்ளங்களை நம் பால் சேர்த்து வைக்க கடமைப்பட்டிருக்கிறோம்.  இதையே இறைவன் என்ற வாசக பகுதி வழியாக நமக்கு மூன்றாவது கருத்தாக வழங்குகிறார்.  எனவே இன்றைய நாளில் வாசகங்களின் அடிப்படையில் இறைவன் அன்பை கொடுக்கவும், நம்மிடையே இருக்கக்கூடிய அன்பு என்ற குணத்தை பற்றி சுய ஆய்வு செய்து பார்க்கவும், அன்பால் பல உறவுகளை சேர்த்துக்கொள்ளவும், எப்போதும் அன்பில் நிலைத்திருக்கவும் நமக்கு அழைப்பு தருகின்றார். ஏனென்றால் கடவுள் அன்பாய் இருக்கிறார். அன்பு கடவுளிடமிருந்து வருகிறது. அன்பு செலுத்தும் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள்.  நாமும் அன்புள்ளம் கொண்டவர்களாக, அன்பு செலுத்தும் கடவுளின் பிள்ளைகளாக ஒருவர் மற்றவரோடு இணைந்து அன்புறவில் வாழ  இன்றைய நாளை இனிதே துவங்குவோம்.

ஞாயிறு, 3 ஜனவரி, 2021

ஒளியைக் கண்டோமா!.... (4.01.2021)

ஒளியைக் கண்டோமா!

இறைவன்இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாளின் வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

நேற்று நாம் கொண்டாடி மகிழ்ந்த திருக்காட்சி பெருவிழாவில் விண்மீனின் வழிகாட்டல் முக்கிய இடம் பெற்றது என்பதை நாம் அறிவோம். விண்மீனை கண்டு கொண்ட ஞானிகள், ஆண்டவர் இயேசுவை சென்றடைந்தார்கள். தங்கள் காணிக்கைகளை ஆண்டவராகிய பாலன் இயேசுவுக்கு அர்ப்பணித்து விட்டு மகிழ்ச்சியோடு தங்கள் நாடு திரும்பினார்கள். 

           நேற்று விண்மீனின் ஒளி ஞானிகளுக்கு வழிகாட்டியது. இன்றைய வாசகத்தில் ஆண்டவராகிய இயேசுவே பேரொளியாக இருக்கின்றார். பேரொளியாம் ஆண்டவர் இயேசுவை கண்டுகொண்டு அவரை ஏற்றுக்கொண்டவர்களிடம் இருந்து வரும் தூண்டுதல் அனைத்தும் கடவுளிடம் இருந்து வருகின்றது. அந்த தூண்டுதலே, அவர்களையும் அவர்கள் பின்பற்றுகிற அவர்களையும் கடவுளின் கட்டளைகளைக் கடைபிடிக்கச் செய்கின்றது. கடவுளிடமும் கடவுளது சாயலாகப் படைக்கப்பட்ட அருகில் இருக்கும் அனைத்து சகோதர சகோதரிகளிடமும் நிறைவான அன்பை வெளிப்படுத்த செய்கின்றது. அன்பில் இணைந்து இருக்கிறவர் கடவுளோடு இணைந்திருக்கிறார். கடவுளும் அவர்களோடு இணைந்து இருக்கிறார் என்று இன்றைய முதல் வாசகம் நமக்கு வெளிப்படுத்துகின்றது.

     இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு நாசரேத்தை விட்டு கடலோரமாய் அமைந்திருந்த கப்பர்நாகுமுக்குச் சென்று அந்த மக்களோடு குடியிருந்தார், அதாவது அவர்களோடு தன்னுடைய வாழ்வை இணைத்துக்கொண்டார் என்பதை நாம் காண்கிறோம். 
                இறைவாக்கினர் எசாயா முன்னறிவித்த, "காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர் மேல் சுடர் ஒளி உதித்துள்ளது"
             என்ற இறைவார்த்தை பகுதியானது இன்று ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாக நிறைவேறுவது நாம் காண்கிறோம். ஆண்டவர் இயேசுவை ஏற்றுக்கொண்ட கப்பர்நாகும் மக்களுக்கும், அதைச் சூழ்ந்துள்ள கலிலேய பகுதியில் வாழ்ந்த அனைத்து மக்களிடையேயும், "மனம் மாறுங்கள்! விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது!" என்று ஆண்டவர் இயேசு பறைசாற்றுவதையும், ஆண்டவர் இயேசுவை ஏற்றுக் கொண்டவர்கள் தங்களை வாட்டி வதைத்த பல்வேறு பிணிகளில் இருந்தும், நோய்களிலிருந்தும், பேய்களின் பிடியில் இருந்தும் விடுதலை பெற்றனர். ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அன்பில் வாழ்வு பெற்றனர் என்பதை நாம் அறிகிறோம்.
             ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அன்பு, அனைவருக்கும் வாழ்வு கொடுத்தது! மனம் மாற அழைப்பு விடுத்தது! இறையாட்சியை இவ்வுலகில் மலரச் செய்தது! 
                  ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைப் போல இவ்வுலகிற்கு ஒளியாக வாழ இன்றைய வாசகங்கள் நமக்கு அழைப்பு தருகின்றன. பேரொளியாய் இப்புவியில் உதித்த நம் ஆண்டவர் இயேசுவின் அன்பு ஒளியை பிரதிபலிப்பவர்களாக, ஆண்டவர் இயேசுவைப் போல, அனைவரையும் அன்பு செய்து இறையாட்சியின் மக்களாக! ஒளியின் மக்களாக வாழ்ந்து, அவரது அன்பில் நம்மை இணைத்துக் கொள்வோம்! சுடரொளிகளாய் இவ்வுலகில் வலம் வருவோம்!

வெள்ளி, 1 ஜனவரி, 2021

ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா (03.01.2021)

 ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா 


"எழுகிறது ஆனால் மறைக்கப்படுகிறது..."

எதார்த்தமாய் 

நடக்க வேண்டிய செயல்கள்

இன்றைக்கு 

எதர்த்தமாய் நடைபெறுவதில்லை

வாடிக்கையாய் 

நடைபெற வேண்டிய பணிகள்

தடையின்றி 

வாடிக்கையாய் நிகழ்வதில்லை

சொல்லிச் செய்ய வேண்டியவை

நடப்பதில்லை

ஆனால்

சொல்லாமல் செய்ய கூடியவை

மட்டும் 

இன்னும் சிறப்பாய் 

நடந்தேறுகிறது

எங்குமே சிரமமங்கள்

இல்லாதது போன்று 

சுழல்கிறது நம்முடைய பூமி

நாமும் சுற்றி வருகின்றோம்!

அவசரம் எதற்கு?

ஆரவாரம் எதற்கு?

ஆர்பாட்டம் எதற்கு? 

என்று கேட்ட நாள்கள் எல்லாம் 

இன்று மறைந்துவிட்டன

இப்போதெல்லாம் 

போராட்டங்கள் 

நடக்கவில்லையென்றால்தான் 

ஆச்சரியம்...

மனிதன் வாழ்வதை நிறுத்திவிட்டான் 

வாழ்வதுபோன்று 

நடிக்க பழகிவிட்டான்

பாசாங்கான சிரிப்பு

போலியான வார்த்தை

மாற்றிடும் நட்பு

ஆளுக்கு ஏற்றாற் பேசுவது

நகர்ந்து செல்லும் வாழ்க்கையில் 

மூழ்காமல் 

நனைந்துவிட்டு செல்லும் 

மனிதர்களில் ஒருவராக 

நீங்களும் நானும் 

வாழ தொடங்கிவிட்டோம் 

ஆனால் அப்படிப்பட்ட 

சிந்தனைகளைத் தூக்கியெறிந்துவிட்டு

கடவுள் துணையோடு 

நேரிய வாழ்;வை 

அமைத்து கொள்ள 

அழைப்பு விடுக்கிறது 

இன்று நாம் கொண்டாடும் 

திருக்காட்சி பெருவிழா!

இன்றைய வாசகங்களும் 

நற்செய்தியும் 

நாம் எப்படிப்பட்ட வாழ்வு

மேற்கொள்ள வேண்டுமென்ற 

புரிதலைத் தருகிறது.

மூன்று ஞானிகள் 

இயேசுவைக் காண வந்தார்கள்

அவர்கள் விண்மீன் 

வழிகாட்ட வந்தார்கள்

உலகின் ஒளியாய் பிறந்திருக்கும் 

இயேசுவைக் காண

விண்மீன் ஒளியின் வழியில் 

தொலைதூரத்திலிருந்து

பாலகன் இருந்த பெத்லகேமிற்கு 

வந்தார்கள் 

அன்று வந்திருந்த ஞானிகள்

காணிக்கைகளை வைத்துவிட்டு

கடவுளை வணங்கிவிட்டு

தங்கள் நாட்டிற்குத் திரும்பினர்!

இது நற்செய்தியின் சுருக்கம்...

நமக்கான செய்தி என்ன?

நம்மிடையே ஞானிகளும் உண்டு

இடையர்களும் உண்டு

ஏரோதும் உண்டு

இது நற்செய்தியிலிருந்து

நாம் அறிய வேண்டிய முதல் பாடம்

இது அவர் அவரைப் பொறுத்தது

நீங்களும் நானும் 

முடிவு செய்வோம் 

நாம் ஞானிகளா? இடையர்களா? ஏரோதா?

இரண்டாவதாக 

நான் மையப்படுத்த விரும்புவது

எழுந்த விண்மீன்

இன்று மறைகிறது

எழுந்த விண்மீன்

இன்று காணாமல் போகிறது

எழுந்த விண்மீன் 

இன்று ஒதுக்கப்பட்டுவிட்டது

எழுந்த விண்மீன் 

இன்று புறந்தள்ளப்பட்டுவிட்டது

வந்த மூன்று பேரும் 

உண்மையிலேயே ஞானிகள்தான் 

எவ்வாறு?

அவர்கள் கடவுளி;ன் உடனிருப்போடு 

பெத்லகேமை அடைந்தார்கள்

ஏரோதுவின் அரண்மனைக்குள் 

நுழைந்தார்கள் 

ஆனால் தங்கவில்லை

அங்கிருந்து சென்று

இயேசுவைக் கண்டார்கள்

வருகிறேன் என்று 

ஏரோதுவிடம் சொன்னார்கள்

ஆனால் போகவில்லை...

நாம் எப்படி?

கடவுளைச் சந்திக்க வருவோம் 

நமக்கு முன்னும் விண்மீன் 

துணைக்கு வரும் 

நாமும் ஏரோதுவின் அரண்மனைக்குள் 

நுழைவோம் 

அது எது?

நம்முடைய பொழுதுபோக்கு

நம்முடைய தீயநாட்டம் 

நம்முடைய சுயவிருப்பம் 

நம்முடைய சுயநலம் 

நம்முடைய பழிவாங்கும் எண்ணம் 

நம்முடைய பொறாமை

நம்முடைய பகைமை

நம்முடைய கடவுள் சார் இல்லா திட்டம் 

நம்முடைய போலியான வாழ்க்கை

நம்முடைய நிரந்தரமற்ற மகிழ்ச்சி

அடுக்கிக்கொண்டே போகும் 

இந்த அட்டவணை நிச்சயம் 

நிற்காது

நம்மில் ஞானிகளைவிட

ஏரோதுகள் இன்று அதிகமாய் 

தோன்றிவிட்டனர்

தோற்றுவிக்கப்பட்டுவிட்டனர்

கடவுளைப் பார்க்க விரும்பிய 

நாம் ஏரோதாய் எட்டிப்பார்க்கும் 

நம்முடைய சுய விருப்பு வெறுப்புக்குள் 

நுழைந்துவிட்டு 

வெளியே வர யோசிக்கிறோம் 

அப்படியிருக்க நாம்  

எப்படி கடவுளைக் காண முடியும்?

கண்டால்தானே அது காட்சியாகும்?

சிந்திப்போம் 

திருக்காட்சி பெருவிழா நமக்கு

விழாவாய் வருகிறதா?

அல்லது வாடிக்கையாய் வந்து

நம்மைக் கடந்துச் செல்கிறதா?

இத்தகைய சிந்தனைகளை 

உள்வாங்குவோம் 

விண்மீன் எப்போதும் எழுகிறது

அது நமக்கு வழியும் காட்டுகிறது

நாம் அதைப் பார்க்கிறோமா 

நம் கண்களுக்குத் தென்படுகிறதா

இதுதான் நாம் கேட்கப்பட வேண்டிய 

கேள்வி... 




யார் பொய்யர்? (02.01.2021)

யார் பொய்யர்?

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்!


கத்தோலிக்க தேவாலயம் ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை  திருப்பலி நடந்துகொண்டிருந்தது. குருவானவர் ஆவேசமாக உரையாற்றிக் கொண்டிருந்தார். அன்பே கடவுள் கடவுள்! அன்பு அதுவே உண்மை என்று போதித்தார். அனைவரும் தூங்கி வழிந்து கொண்டு இருந்தனர். சோம்பேறிகளாக இருந்தனர். குருவானவரின் மறையுரையை எவரும் கேட்கவில்லை. பலம் கொண்ட மட்டும் மிகவும் உருக்கமாக கத்திப் பார்த்தார். யாரும் கவனிக்கவில்லை. உடனே அய்யோ! தீ!  ஆலயத்தில் தீ என கத்தினார். அனைவரும் அதிர்ந்து போய் விழித்து எழுந்தனர். பரபரப்பாய் நிதானமாக புன்னகையோடு குருவானவர் சொன்னார் நான் அன்பே கடவுள் என்று உண்மையை உரைத்த போது எல்லோரும் தூங்கி வழிந்தீர்கள். சோம்பேறிகளாக இருந்தீர்கள். உண்மையை கண்டு கொள்ளவில்லை. ஆனால் நான் தீ தீ என்று பொய் சொன்னேன். எல்லோரும் விழித்தெழுந்து பொய்மையை மதிக்கிறீர்கள்! பரபரப்பாக இருக்கிறீர்கள்! உண்மைதான்! நீங்கள் உண்மைக்கு தூங்குகிறீர்கள்! பொய்கைக்கு விழித்தெழு கிறீர்கள் என்று கூறினார். நமது வாழ்விலும் கூட பல நேரங்களில் நாம் பொய்யை நம்பக்கூடியவர்களாக இருக்கிறோம்.

இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவையும் தந்தையையும் மறுப்போரே பொய்யர் என்று புனித யோவான் கூறுகிறார். 
இத்தகைய பொய்மை நின்று விலக்கி உண்மையை நோக்கி வழி நடக்க, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைஉறுதியுடன் ஏற்றுக் கொண்டவர்களாக நாம் தொடக்கமுதல் நிலை வாழ்வு பற்றி, கேட்டறிந்த காரியங்களில் நிலைத்திருக்க புனித யோவான் நம்மை அழைக்கிறார். மேலும் இன்றைய நாளில் நீங்கள் ஆண்டவரால் அருள்பொழிவு பெற்றிருக்கிறீர்கள். நீங்கள் பெற்றுக்கொண்ட அருள்பொழிவால் அனைத்தையுமே கற்றுக் கொள்கிறீர்கள். நீங்கள் பெற்றுக்கொண்ட அருள்பொழிவு உண்மையானது. ஆண்டவரின் அருள் பொழிவால் நிலைவாழ்வு பற்றி கற்றுக் கொண்ட நீங்கள், அந்த நிலை வாழ்வின் ஊற்றாகிய ஆண்டவரை உறுதியாக பற்றிக் கொள்ளுங்கள். அவரோடு இணைந்து வாழுங்கள், என்று புனித யோவான் நம்மை அழைக்கின்றார்.
       
         இன்றைய நற்செய்தி வாசகத்தில் யூதர்கள் பரிசேயர்களையும் லேவியர்களையும் திருமுழுக்கு யோவானிடம் அனுப்பி, நீர் யார்? என கேட்ட போது, அவர் நான் மெசியா அல்ல என்பதை வெளிப்படையாகக்  கூறினார். மீண்டும் அவர்கள் அப்படியானால் நீர் எலியாவா? அல்லது இறைவாக்கினரா? என்று அவரிடம் கேட்கிறார்கள். திருமுழுக்கு யோவானும் அவர்களிடம் நான் அல்ல என்று வெளிப்படையாக அவர்களிடம் கூறுகிறார். மேலும் அவர்,  பாலை நிலத்தில் ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்க அனுப்பப்பட்ட குரல் நான்! என்று தன்னைப்பற்றி வெளிப்படையாகக் கூறுகிறார். 
     
           இன்று நாம் நற்செய்தி வாசகத்தில் காணும் புனித திருமுழுக்கு யோவானை போல, உண்மையை உரக்கச் சொல்ல கூடியவர்களாக வாழ முற்படுவோம். நமது உள்ளத்தை உண்மையின் பால் திருப்புவோம். உண்மையும் வழியும் வாழ்வும் நானே என்று கூறிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவே, உண்மையின் வடிவாக திகழ்கிறார். ஆண்டவரோடு உள்ள உறவில் இணைந்திருந்து அவரோடு நிலைத்திருந்து நாம் உண்மையை பற்றிக் கொள்ளவும், அதனை வாழ்வில் வெளிப்படுத்தக் கூடியவர்களாகவும் வாழ இன்றைய நாளில் புனித யோவான் வழியாக இறைவன் அழைக்கின்றார். அழைக்கும் இறைவனின் குரலுக்கு செவிகொடுத்தவர்களாய், நமது வார்த்தையாலும் வாழ்வாலும் உண்மையை உயர்த்திப் பிடிக்க, இறையருளில் நம்மை இணைத்துக் கொள்வோம்! ஆண்டவரின் உண்மை பிள்ளைகளாக, அவரது அன்புச் சீடர்களாக தொடர்ந்து வாழ்ந்து, நம் ஆண்டவர் இயேசுவுக்கு பெருமை சேர்ப்போம்!

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...