வியாழன், 17 மார்ச், 2022

மாற்றம் அது நமக்குள் நிகழ வேண்டும் ...(18.3.2022)

மாற்றம் அது நமக்குள் நிகழ வேண்டும் 

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
        இன்று கொடிய குத்தகைக்காரர் உவமையை நாம் வாசிக்க கேட்டோம். இந்த உவமை வாயிலாக இறைவன் நமக்குத் தருகின்ற வாழ்வுக்கான பாடம்: 

       இறைவன் நம் ஒவ்வொருவருக்கும் இந்த அழகிய வாழ்வை கொடுத்திருக்கிறார்.  இந்த வாழ்வில் பல நேரங்களில் நாம் நமது சுயநலத்தை மட்டும் முன்னிறுத்தி, பலவிதமான தீமைகளை மற்றவருக்கு இழைக்கிறோம்.  வாழ்வைக் கொடுத்த இறைவனை மறந்து போனவர்களாய்,  மற்றவர்களுக்கு தீமையை கொடுக்கிறோம்.  நமது நலனுக்காக நமக்கு இந்த  வாழ்வை தந்த இறைவனது மதிப்பீடுகளை மறந்த மக்களாக வாழுகின்றோம்.  ஆனால் இறைவன்  நாம் மனமாற்றம் பெற வேண்டும் என பல வழிகளில் நமக்கு அழைப்பை தருகின்றார்.  அந்த அழைப்பை உணர்ந்து கொண்டு, நல்லதொரு மன மாற்றத்தை நாம் பெற்றுக்கொண்டு வாழ வேண்டும் என்பதை இன்றைய வாசகங்கள் நமக்கு வலியுறுத்துகின்றன. 

       இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் வாசிக்க கேட்ட திராட்சை தோட்டம் என்பது நமது வாழ்வை குறிக்கிறது. இஸ்ரயேல் மக்கள் தங்கள் வாழ்வைத் திராட்சை தோட்டத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தார்கள் என எசாயா  5: 7ல் நாம் வாசிக்கின்றோம். 

     படைகளின் ஆண்டவரது திராட்சைத் தோட்டம் இஸ்ரயேல் குடும்பத்தாரே என எசாயா  5 ஆம் அதிகாரம் 7 ஆம் வசனம் குறிப்பிடுகிறது.  இந்த இஸ்ரயேல் மக்கள் தான் கட்டுவோரால் புறக்கணிக்கப்பட்ட கல். 

                  யோசேப்பு ஆட்சி அதிகாரத்தில் இருந்த 
போது எகிப்தில் சென்று குடியேறியவர்களை எண்ணிக்கையில்  மிகுதியாகிறார்கள் என்று எண்ணிய எகிப்தியர்கள், நம்மை விட வலிமை வாய்ந்தவர்களாக இவர்கள் மாறி விடக் கூடும் என்ற எண்ணத்தோடு அவர்களை அடக்கி ஆளக் கூடிய பணியினை  செய்தார்கள்.  புறக்கணிக்கப்பட்ட ஒரு கல்லாக மாறிப் போனார்கள். இந்த புறக்கணிக்கப்பட்ட மக்களையே இறைவன் தனது திட்டத்திற்கு பயன்படுத்துகிறார். அவர்களை மீட்டு வருகிறார். அவர்களை மூலைக் கல்லாக மாற்றுகிறார். உதறித் தள்ளப்பட்ட மக்களை கட்டிடத்தின் மூலைக்கல்லாக மாற்றக் கூடியவராக இயேசு இருக்கின்றார்.   நாமும் பல நேரங்களில்  ஆண்டவரின் வார்த்தைகளுக்கு ஏற்ப நமது வாழ்வை அமைத்துக் கொள்ளாது, நமது செயல்பாடுகளை நமது மனம் போன போக்கில் அமைத்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.  அதனையெல்லாம் நினைத்துப் பார்த்து நம்மை நாம் சரி செய்து கொள்ளவே இந்த தவக்காலம் நமக்கு தரப்படுகிறது.  இதனை உணர்ந்து கொண்டவர்களாக நல்லதொரு மன மாற்றத்தை நாம் பெற்றவர்களாய், ஆண்டவரை நோக்கிச் செல்ல வேண்டும் என்பதை இன்றைய வாசகங்கள் நமக்கு வலியுறுத்துகின்றன. வாசகங்கள் வலியுறுத்தும் வாழ்க்கைப் பாடத்தை உணர்ந்தவர்களாக, தவக்காலத்தை தகுந்த காலம் என எண்ணி, நல்லதொரு மன மாற்றத்தை நாம் நமக்குள் உருவாக்கிக் கொண்டு, ஆண்டவர் கொடுத்த இந்த அழகிய வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றிக் கொண்டு, அடுத்தவர் நலனை பாதுகாப்பதும், ஆண்டவரின் வார்த்தைகளின் படி வாழ்வை அமைத்துக் கொள்வதுமே, நமது தலையாய கடமை என்பதை உணர்ந்தவர்களாய் செயல்பட  இறையருள் வேண்டி தொடர்ந்து இந்த திருப்பலி வழியாக செபிப்போம்.

புதன், 16 மார்ச், 2022

நாம் வாழும் இச்சமூகத்தின் மீது அக்கறை கொண்ட மனிதர்களாக நாம் மாறிட ...(17.3.2022)

நாம் வாழும் இச்சமூகத்தின் மீது அக்கறை கொண்ட மனிதர்களாக நாம் மாறிட 

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
 இன்றைய நற்செய்தி வாசகத்தின் வாயிலாக நாம் செல்வந்தன், ஏழை லாசரைக் குறித்து வாசிக்க கேட்டோம்.  இந்த வாசகப் பகுதி நமக்குத் தருகின்ற வாழ்வுக்கான பாடம் என்ன என சிந்திக்கின்ற போது, தவக்காலம் என்பது நமது செயல்களை சீர்தூக்கிப் பார்த்து,  நம்மை நாமே சரி செய்து கொள்வதற்கான ஒரு காலம் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.  

              இன்றைய நற்செய்தி வாசகத்தின் வாயிலாக சமூகத்தின் மீது அக்கறையற்று இருக்கக்கூடிய தன்மையை இயேசு சுட்டிக்காட்டுகிறார்.  பல நேரங்களில் நாம் செல்வந்த இளைஞனைப் போலத் தான் நம் அருகில் இருப்பவர்களின் துயரத்தை கண்டும் காணாதவர்களாக இருந்து கொண்டிருக்கிறோம்.  நாம் வாழுகின்ற சமூகத்தின் மீது அக்கறையற்ற மனிதர்களாக இருந்து கொண்டிருக்கிறோம். இத்தகைய செயலை தவறு என இறைவன் சுட்டிக்காட்டுகிறார்.  எப்படி செல்வந்த இளைஞன் தன் வீட்டுக்கருகில் இருந்த ஏழை லாசரைக் கண்டுகொள்ளாமல் இருந்தானோ,  அது போலத்தான் பல நேரங்களில் நாமும் நாம் வாழுகின்ற சமூகத்தில் பல்வேறு துன்பங்களைப் படுகின்ற மக்களை பார்க்கிற போது,  பார்த்தும் பாராதது போல இருந்து விட்டுச் செல்லக் கூடியவர்களாக இருக்கிறோம். 

         ஒரு பத்திரிகை ஆசிரியர் இவ்வாறு குறிப்பிடுகிறார்,  இந்த உலகத்தில் ஒரு இனத்திற்கு ஒரு துன்பம்  நேர்கிறது என்றால், அந்த இனத்தைச் சார்ந்த அனைத்தும் அதனை எதிர்த்துப் போராடும். ஆனால் மனித இனம் மட்டுமே புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கும் என்று.

 இன்று  நாம் வாழுகின்ற சமூகத்தில், இந்த சமூகத்தில் காணக்கூடிய அவலங்களை கண்டும் காணாமல் செல்வதற்காக நாம் படைக்கப்பட்டவர்கள் அல்ல.  நாம் காணுகின்ற அவலங்களை எல்லாம் சரி செய்வதற்கான ஆற்றலை இறைவன் நமக்குத் தந்திருக்கிறார். நமது மத்தியில் பசியோடு வாடுபவரை  காணும் போது, அவரது பசியைப் போக்கக் கூடியவர்களாகவும்,  துன்பத்தில் வாடுபவர்களைக் காணும் போது, அவர்களின் துன்பத்தில் அவர்களோடு உடனிருக்க கூடியவர்களாகவும் நாம் இருக்க வேண்டும் என்பதை இறைவன் வலியுறுத்துகிறார்.

     இறைவன் வலியுறுத்தும் இந்த வாழ்க்கைப் பாடத்தை உணர்ந்து கொண்டவர்களாக நாம் வாழும் இச்சமூகத்தின் மீது அக்கறை கொண்ட மனிதர்களாக நாம் மாறிட இறையருள் வேண்டி தொடர்ந்து திருப்பலி வழியாக செபிப்போம்.

செவ்வாய், 15 மார்ச், 2022

வாழ்வுக்கான முத்தான சிந்தனைகள்...(16.3.2022)

வாழ்வுக்கான மூன்று முத்தான சிந்தனைகள்...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். 
   இன்றைய இறைவார்த்தை பகுதியானது வாழ்வுக்கான  முத்தான சிந்தனைகளை...வழங்குகிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தனது சாவினை மூன்றாம் முறையாக சீடர்களுக்கு அறிவுறுத்துகிறார்.  தான் எத்தகைய துன்பங்களை எல்லாம் படப் போகிறோம் என்பதை நன்கு அறிந்திருந்த நிலையிலும் துன்பத்தை எதிர்கொள்வதற்கு துணிவோடு இயேசு செல்வதை இயேசுவின் வாழ்வு நமக்கு வெளிப்படுத்துகிறது.  

இன்றைய வாசகங்கள் இயேசு என்னுடைய துன்ப கிண்ணத்தில் உங்களால் பருக இயலுமா? என்ற கேள்வியை எழுப்புகிறார்.


பொதுவாக யூதர்கள் அப்பத்தை பகிர்தல் என்பதை மகிழ்வின் அடையாளமாகப் பார்த்தனர்.  அதே சமயம் யூத சமூகத்தில் கிண்ணத்தை பகிர்தல் என்பது துன்பத்தை பகிர்தல் என்ற அடிப்படையில் பார்க்கப்பட்டது.  

      என்னுடைய கிண்ணத்தில் உங்களால் பருக இயலுமா?  என்ற இயேசுவின் கேள்விக்கு சீடர்கள் அறிந்தும் அறியாமலும், இயலும் என்றார்கள். இயேசுவும் ஆம்! நீங்கள் என் கிண்ணத்தில் பருகுவீர்கள் என்று கூறினார்.  எதிர்காலத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதை அறிந்தவராய், இவர்கள் எந்த அளவிற்கு தனக்கு சாட்சி உள்ளவர்களாக இருப்பார்கள் என்பதை நன்கு அறிந்தவராய், இயேசு அவர்களின் வார்த்தைகளை கேட்டு அதற்கு பதில்  மொழி தருகிறார்.

         இன்று உம்மோடு இருப்போம்,  உமது துன்பத்தில் பங்கெடுப்போம் என சொல்லக் கூடியவர்கள் எல்லாம், தன்னை விட்டுவிட்டு ஓடி விடுவார்கள் என்பதையும் இயேசு அறிந்திருந்தார்.  அதே இயேசு தனது இறப்பு உயிர்ப்புக்கு பிறகாக இவர்கள் மீண்டும் நம்பிக்கைக்குரிய சாட்சிய வாழ்வு வாழ்வார்கள் என்பதையும் அறிந்திருந்தார்.


துன்பங்களுக்கு மத்தியிலும் தன்னுடன் இருப்பவர்கள் தன்னை விட்டுவிட்டு செல்வார்கள் என்பதை அறிந்திருந்த நிலையிலும் ஆண்டவர் இயேசுகிறிஸ்து அனைத்தையும் ஏற்றுக்கொள்ள தன்னை தகுதி படுத்திக் கொண்டார்.  துணி போட்டு துன்பத்தையும் துரோகத்தையும் ஏற்றுக்கொள்ள தயாரானார் வளர வேண்டும் என்பதை இறைவன் நமக்கு உணர்த்துகின்றன பாடமாக உள்ளது. 
 இயேசு கொண்டிருந்த அதே மன நிலையை நாமும் கொண்டிருக்க இன்றைய நாள் வாசகங்கள் நமக்கு அழைப்பு விடுக்கிறன.



இயேசு தனது துன்பத்தை பற்றி பேசிக்கொண்டிருக்க,   தன்னுடைய மகனின் நலன்களை மட்டுமே முன்னிறுத்தியவளாய் செபதேயுவின் மனைவியானவள் தன் பிள்ளைகளுக்கு பதவி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, வலப்புறமும் இடப்புறமும் அரியணையில் இடம் கேட்டு நிற்கிறாள். 

      தாய்மார்களின் குணம் பெரும்பாலும் தன் குழந்தைக்கு எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான். இன்று தன் குழந்தைக்கு எல்லாம் கிடைக்க வேண்டுமென சேர்த்து வைப்பதை விட தன் குழந்தைக்கு தேவையானதை அவர்களே உழைத்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற பாடத்தினை கற்பிக்க வேண்டிய கட்டாயம் நம் மனதில் இருக்கிறது. பிள்ளைகளின் மீது நாம் கொண்டிருக்கின்ற பாசம் என்பது அவர்களுக்கான இடத்தினை, அவர்களுக்கான வாழ்வை ஏற்படுத்திக் கொடுப்பதில் அல்ல. மாறாக, அவர்களுக்கான வாழ்வை அவர்களே ஏற்படுத்திக்கொள்ள அவர்களை தகுதிப்படுத்துவது என்பதை உணர்ந்துகொள்ள இன்றைய வாசகம் நமக்கு அழைப்பு விடுக்கிறது. 


 

    இன்றைய வாசகம் நமக்கு வெளிப்படுத்துகிற வாழ்வுக்கான பாடத்தை கற்க முயல்வோம்.

 

திங்கள், 14 மார்ச், 2022

செயல்களே சீடர்கள் என்பதன் அடையாளம் ...(15.03.2022)

செயல்களே சீடர்கள் என்பதன் அடையாளம் ...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்
சொல்லை விட சிறந்தது செயல் என்பதை இன்றைய நாள் வாசகங்கள் நமக்கு வலியுறுத்துகின்றன.

அன்றைய காலகட்டத்தில் வாழ்ந்த யூதர்களின் மனநிலையை இயேசு சுட்டிக்காட்டி நமது மனநிலை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதற்கான வாழ்வுக்கான பாடத்தை இயேசு என்ற என்னால் நற்செய்தி வாசகத்தில் வழியாக நமக்கு முன்மொழிகிறார்.

 அன்றைய காலத்தில் யூதர்கள் தாங்கள் ரபி என அழைக்கப்பட வேண்டும் என விரும்பினார்கள்.  எனவே தங்களிடமிருந்த அதிகாரங்களை பயன்படுத்தி அடுத்தவரை பாவிகள் என சுட்டிக்காட்டி தங்களை முதன்மையான இடத்திற்கு உரியவர்கள்  என்பதையும், இறைவனோடு நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள் தாங்கள் மட்டுமே என்பதையும் வலியுறுத்த கூடியவர்களாக இருந்தார்கள். எனவேதான் முதன்மையான இருக்கைகளையும், மக்கள் பார்க்கக் கூடிய இடங்களில் ஜெபங்களையும் ஏரெடுக்கக்கூடிய மனிதர்களாக இருந்தார்கள். இவர்களின் இந்த தவறான முன்னுதாரணங்களை யே இயேசு சுட்டிக் காண்பித்தார். இறைவனோடு உறவில் இருக்கிறேன் என கூறி கொள்ளக் கூடியவர்கள் இறைவனோடு உள்ள உறவில் இருக்கவில்லை. ஏனெனில் அவர்கள் சக மனிதர்களை தங்கள் போல எண்ணாமல் அவர்களைவிட தங்களை உயர்ந்தவர்களாகக் கருதியவர்கள்.

எனவேதான் இயேசு விண்ணகத் தந்தையை தவிர நமக்கு வேறு ஒரு தந்தை இல்லை. விண்ணகத் தந்தையை விட உயர்ந்த ஆசிரியர் நீங்கள் இல்லை. விண்ணகத் தந்தையை விட பெரியவர் நீங்கள் இல்லை என்பதை அவர்களுக்கும் சுற்று இருந்தவர்களுக்கும் வெளிப்படுத்த கூடியவராக இருந்தார் என்று இதே வார்த்தைகளை தான் அவர் நமக்கும் வெளிப்படுத்துகிறார்.

உயர்ந்த இடத்தை தேட கூடியவர்களாகவும், அனைவரையும் விட பெரியவர் நாம் என எண்ணக் கூடியவர்களாகவும், இறைவனோடு உள்ள உறவில் நிலைத்திருப்பவர் நாம் மட்டுமே என்ற மமதையோடு வாழக் கூடியவர்களாக நாம் இருப்போமாயின் நமது எண்ணங்களையும் வார்த்தைகளையும் விட உயர்ந்தது நமது செயலாக இருக்க வேண்டும் நமது செயல்கள் அனைத்துமே ஆண்டவர் இயேசுவுக்கு உரிய செயல்களாக இருக்க வேண்டும் அதற்கு நாம் சக மனிதர்களை எந்தவித பாகுபாடுமின்றி நம்மில் வருவதாக எண்ணி அவர்களின் நலனில் அக்கறை காட்டக்கூடிய மனிதர்களாக இயேசுவைப் போல இருக்க வேண்டும்.  இந்த செயல் நம்மில் இல்லாதவரை வெற்று வார்த்தைகளால் வீண் பெருமை பேசக் கூடியவர்களாக மட்டுமே நாம் இருப்போம்..... நாம் இயேசுவுக்கு உகந்தவர்களாக இல்லை என்பதை இன்றைய நாள் வாசகம் நமக்கு வெளிக்காட்டுகிறது... 

இறைவனது வார்த்தைகளுக்கு ஏற்ப நமது வாழ்வை மாற்றிக் கொள்ளவே இந்த தவக்காலம் தரப்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்து கொள்வோம். வாழ்வில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தி... நமது செயல்களை நல்ல செயல்களாக மாற்றுவோம் .... செயல்கள் வழியாக இறைவனின் உண்மை சீடர்களாக மாறிட இறையருள் வேண்டி தொடர்ந்து ஜெபிப்போம்... 

ஞாயிறு, 13 மார்ச், 2022

நாம் வாழ ...அவர் காட்டும் வழிகள்....(14.03.2022)

நாம் வாழ ...அவர் காட்டும் வழிகள்....


இன்றைய நாள் இறைவார்த்தை வழியாக ஆண்டவர் இயேசு கிறிஸ்து நாம் எப்படி வாழவேண்டும் என்பதை  கற்பிக்கின்றார்.
மனிதர்களாகிய நாம் சக மனிதர்களை தீர்ப்படாது வாழ வேண்டும் என்பதே இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில்  இயேசுவின் முதல் படிப்பினையாக இருக்கிறது.


தீர்ப்பிடாதீர்கள், தீர்ப்புக்குள்ளாக மாட்டீர்கள் என்பது இயேசு சொல்கிற முதல் செய்தி. பிறரை குற்றவாளி என தீர்ப்பிட எழும்போதே நாம் குற்றவாளிகளாக இருந்து கொண்டிருக்கிறோம் என்பது மிகப் பெரிய அடையாளம் என்பார்கள். 

 தீர்ப்பிடுதல் என்பது கடவுளுடைய பணி, நமது பணி அல்ல. இந்த உலகத்தைப் படைத்தவர் கடவுள்.  நமக்கு வாழ்வு என்கிற கொடையைக் கொடுத்தவர் கடவுள். கடவுள் தந்த இந்த அழகிய உலகத்தில் அடுத்தவரை குற்றவாளிகள் என நான் தீர்ப்பிடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதை இன்றைய நாள் இறைவார்த்தை வழியாக இந்த தவக்காலம் நமக்கு நினைவூட்டுகிறது.

 அதனைத் தொடர்ந்து நாம் வாழுகின்ற இந்த சமூகத்தில் இருப்பதை இல்லாதவரோடு பகிரக் கூடியவர்களாகவும் மன்னிக்கும் மனம் கொண்ட மாமனிதர்கள் ஆகவும் நாம் திகழ வேண்டும் என்பதை இயேசு வலியுறுத்துகிறார். இந்தத் தவக்காலத்தில் இறைவன் இறைவார்த்தை வழியாக நம்மோடு உரையாடுகின்ற இந்த வார்த்தைகளை மனதில் இருத்தி நமது செயல்களை நாம் சரி செய்து கொள்ள இந்த நாளில் இறைவன் அழைப்பு தருகிறார் . 

இறைவன் தருகின்ற அழைப்பை உணர்ந்து கொண்டவர்களாய் நாம் வாழுகிற சமூகத்தில் சக மனிதர்களை தீர்ப்பிடாமலும் மன்னிப்பை வழங்கக்கூடிய மனிதர்களாகவும் நம்மிடம் இருப்பதை இல்லாதவரோடு பகிரும் மனம் கொண்ட மனிதநேயமிக்கவர்களாகவும் வாழ  இந்த திருப்பலியில் தொடர்ந்து ஜெபிப்போம் ...

சனி, 12 மார்ச், 2022

நம்பிக்கையே ஆண்டவரோடு உள்ள உறவில் நம்மை ஆழப்படுத்தும்...(13.3.2022)

நம்பிக்கையே ஆண்டவரோடு உள்ள உறவில் நம்மை ஆழப்படுத்தும்...


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

 

தவக்காலம் என்பதே நமக்கும் - கடவுளுக்கும், நமக்கும் - நமது செயல்களுக்கும், நமக்கும் - நமது சகோதரர்களுக்கும் இடையே உள்ள உறவை குறித்து சிந்திப்பதும் ... நமது உறவை சரிப்படுத்திக் கொள்வதற்குமான ஒரு காலம் ...

நமக்கும் கடவுளுக்கும் இடையேயான உறவு சரியாக இருக்கும் பொழுது நமது செயல்களுக்கும் பிற சகோதரர்களுக்கும் இடையேயான உறவும் சரியானதாக அமையும்.

இன்றைய வாசகங்கள் அனைத்தும் ஆண்டவரோடு உள்ள உறவில் நிலைத்திருப்பதே நம் வாழ்வில் மகிழ்ச்சி என்பதை  நமக்கு வலியுறுத்துகின்றன ...


ஆண்டவரோடு உள்ள உறவில் நாம் நிலைத்திருக்க ஆபிரகாமிடம் காணப்பட்ட நம்பிக்கை நமது நம்பிக்கையாக இருக்க வேண்டும் என்பதை முதல் வாசகம் வலியுறுத்துகிறது ...

தொடக்க நூல் 12ல் நாம் வாசிக்கிறோம் ...


வசதி வாய்ப்புக்களோடு, உறவுகளோடு இணைந்திருந்த ஆபிரகாமை 
ஆண்டவர்  நோக்கி, “உன் நாட்டிலிருந்தும் உன் இனத்தவரிடமிருந்தும் உன் தந்தை வீட்டிலிருந்தும் புறப்பட்டு நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்குச் செல்.

உன்னை நான் பெரிய இனமாக்குவேன்; உனக்கு ஆசி வழங்குவேன். உன் பெயரை நான் சிறப்புறச் செய்வேன்; நீயே ஆசியாக விளங்குவாய்.

உனக்கு ஆசி கூறுவோர்க்கு நான் ஆசி வழங்குவேன்; உன்னைச் சபிப்போரை நானும் சபிப்பேன்; உன் வழியாக மண்ணுலகின் மக்களினங்கள் அனைத்தும் ஆசி பெறும்” என்றார்.

ஆபிரகாமும் ஆண்டவரின் வார்த்தைகளின் மீது நம்பிக்கை கொண்டவராய் ஆண்டவரின் வார்த்தைகளை தன் வாழ்வாக மாற்றுகிறார். நாள்கள் பல கடந்த நிலையிலும் தனக்கென ஒரு வாரிசு இல்லாத நபராகவே ஆபிரகாம் நெடுநாட்கள் வாழ்ந்தார். ஆனால் அவர் ஆண்டவரின் வார்த்தைகளின் மீது கொண்டிருந்த நம்பிக்கையிலிருந்து பின்வாங்கவில்லை. நம்பிக்கையில் நிலைத்திருந்தார்... பல நேரங்களில் கடவுள் அவரோடு உரையாடுகின்ற பொழுதெல்லாம் தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதாக அவருக்கு மீண்டும் மீண்டும் தன் வாக்குறுதிகளை நினைவுறுத்திக் கொண்டே இருந்தார்.  இதைத்தான் இன்றைய முதல் வாசகமாக நாம் வாசிக்க கேட்டோம்.... ஆபிரகாமை வெளியே அழைத்துச் சென்ற கடவுள், 

“வானத்தை நிமிர்ந்து பார். முடியுமானால், விண்மீன்களை எண்ணிப்பார். இவற்றைப் போலவே உன் வழிமரபினரும் இருப்பர்” என்றார்.

ஆபிராம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார். அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார்.
தொடக்கநூல் 15: 6-7

ஆண்டவர் இயேசுவின் மீது நாம் கொள்ளுகின்ற நம்பிக்கைதான் ஆண்டவரோடு உள்ள உறவில் நாம் நிலைத்திருக்க நமக்கு உந்து சக்தியாக இருக்கிறது என்பதை இன்றைய முதல் வாசகம் நமக்கு வலியுறுத்துகிறது.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் பிலிப்பு நகர மக்களுக்கு எழுதிய கடிதத்தில் அவர்களிடத்தில் காணப்பட்ட தவறான நடைமுறைகளை சுட்டிக் காண்பித்து....

 சகோதர சகோதரிகளே, நீங்கள் அனைவரும் என்னைப்போல் வாழுங்கள். நாங்கள் உங்களுக்குக் காட்டிய முன்மாதிரியின்படி வாழ்பவர்களைப் பின்பற்றுங்கள்.
பிலிப்பியர் 3:18
என வலியுறுத்துகிறார் ....

பவுலைப் போல நாம் வாழ வேண்டுமாயின் பவுலிடத்தில் காணப்பட்ட ஆண்டவர் மீதான ஆழமான நம்பிக்கை நமது நம்பிக்கையாக இருக்க வேண்டும்.  அவர் முன்மாதிரியாகக் காட்டிய திருத்தூதர்களின் வாழ்வில் வெளிப்பட்ட நம்பிக்கை, நமது நம்பிக்கையாக இருக்க வேண்டும். இந்த நம்பிக்கை மட்டுமே ஆண்டவரோடு உள்ள உறவில் நாம் நிலைத்திருக்க வழிவகுக்கும்.  அதுவே நமது மகிழ்ச்சி என்பதையும் திருத்தூதர் பவுல் தனது கடிதத்தின் வாயிலாக நமக்கு இன்றைய இரண்டாம் வாசகம் வழியாக வலியுறுத்துகிறார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உருமாற்றத்தை குறித்து வாசிக்க கேட்டோம்.

பழைய ஏற்பாட்டு நூல்களில் மிகப் பெரிய ஆளுமையாக காட்டப்படக் கூடிய மோசேயுடனும், மிகப்பெரிய தீர்க்கதரிசியாக கருதப்பட்ட எலியாவுடனும் இயேசு மலைமீது உரையாடிக் கொண்டிருக்கிறார் ... அதனைக் கண்ட சீடர்கள் இந்த இயேசுவை யார் என அறியாதவர்களாய் வியப்புக்குள்ளானவர்களாய் வியந்து பார்த்த போது பேதுரு, ஆண்டவரே! மூவரும் தங்குவதற்கு இங்கே கூடாரம் அமைக்கட்டுமா? என, தான் சொல்வது என்னவென்று அறியாதவராய் அதைச் சொன்னார் என விவிலியம் சுட்டிக்காட்டுகிறது.  இயேசுவைப் பற்றிய தெளிவற்ற நிலையில் இருந்த சீடர்களுக்கு தெளிவை உணர்த்தும் விதமாக  மேகத்தினின்று, ″ இவரே என் மைந்தர்; நான் தேர்ந்து கொண்டவர் இவரே. இவருக்குச் செவிசாயுங்கள் ″ என்று ஒரு குரல் ஒலித்தது....

ஒலித்த இறைவனது வார்த்தைகளின் அடிப்படையில் தங்களோடு இருக்கின்ற இறைவன் இயேசுவின் மீதான நம்பிக்கையில் வேரூன்றியவர்களாக சீடர்களும் அவரைப் பின்தொடர்ந்தார்கள் என்பதை நாம் சீடர்களின் வாழ்விலிருந்து அறிகிறோம்.

 ஆனால் பல நேரங்களில் அவர்கள் தாங்கள் கொண்டிருந்த நம்பிக்கையில் இருந்து விலகியவர்களாய், மனித இயல்புக்கு ஏற்ப ஆண்டவர் இயேசுவை விட்டுவிட்டு ஓடக்கூடிய மனிதர்களாக இருந்தார்கள். அவரோடு கொண்டிருந்த உறவில் இருந்து தங்களை விலக்கிக் கொள்ளக் கூடிய நிலையிலும் அவர்கள் இருந்தார்கள் என்பதை வரலாறு நமக்கு சீடர்களின் வாழ்விலிருந்து வெளிப்படுத்துகிறது ...
 
சீடர்களைப் போலவே, ஆண்டவர் இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டிருக்கக்கூடிய நாமும் பல நேரங்களில் அவரோடு கொண்டிருக்கின்ற நம்பிக்கையில் இருந்து விலகியவர்களாய் இயேசுவோடு உள்ள உறவிலிருந்து விடுபட்டுப் போகக்கூடிய சூழ்நிலைகளை நமது வாழ்வில் சந்திக்க நேரலாம்.  சந்திக்கின்ற போதெல்லாம் இதயத்தில் இருத்திக் கொள்ள வேண்டிய இறைவார்த்தை....

நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் வழியாய் மீட்புக்காகக் கடவுளுடைய வல்லமையால் பாதுகாக்கப்பட்டு வருகிறீர்கள். இம்மீட்பு இறுதிக் காலத்தில் வெளிப்பட ஆயத்தமாய் உள்ளது.


இப்போது சிறிது காலம் நீங்கள் பல்வகைச் சோதனைகளால் துயருற வேண்டியிருப்பினும், அந்நாளிலே பேருவகை கொள்வீர்கள்.

அழியக்கூடிய பொன் நெருப்பினால் புடமிடப்படுகிறது. அதைவிட விலையுயர்ந்த உங்கள் நம்பிக்கையும் மெய்ப்பிக்கப்படவே துயருறுகிறீர்கள். இயேசு கிறிஸ்து வெளிப்படும்போது அந்நம்பிக்கை உங்களுக்குப் புகழும் மாண்பும் பெருமையும் தருவதாய் விளங்கும்.

நீங்கள் அவரைப் பார்த்ததில்லை; எனினும், அவர்மீது அன்பு செலுத்துகிறீர்கள். இப்பொழுதும் நீங்கள் அவரைக் கண்டதில்லை; எனினும், நம்பிக்கை கொண்டு சொல்லொண்ணா, ஒப்பற்ற மகிழ்ச்சியடைந்து பேருவகை கொள்கிறீர்கள்.
                                  1 பேதுரு 1:5- 8
என்பதாகும் .... 

நாம் கொண்டிருக்கின்ற நம்பிக்கையினால் தான் நாம் கடவுளோடு உள்ள உறவில் ஆழப்படப் போகிறோம் என்பதை உணர்ந்தவர்களாய் வாழ்வில் பல நேரங்களில் சோதனைகளை சந்திக்கின்ற சூழல்களை நாம் சந்தித்தாலும், சோதனைகளுக்கு மத்தியிலும் அதனையெல்லாம் துணிவோடு எதிர் கொண்டவர்களாய் நாம் அனைவரும் ஒன்றிணைந்து நம்பிக்கையில் நிலைத்திருந்து ஆண்டவரோடு உள்ள உறவில் நாளும் வளரவேண்டும் என்பதற்காகவே இந்த தவக்காலம் நமக்குத் தரப்பட்டிருக்கிறது.  இந்த காலத்தில் நாம் மேற்கொள்கின்ற அனைத்து விதமான முயற்சிகளும் ஆண்டவரோடு உள்ள உறவில் நம்மை  இணையச் செய்கிறது என்பதை உணர்ந்தவளாய் நாம் நம்புகின்ற இறைவன் மீது இன்னும் ஆழமான நம்பிக்கை கொண்டு அவரைப் பின்தொடர்வோம். 
நம்பிக்கையே ஆண்டவரோடு உள்ள உறவில் நம்மை ஆழப்படுத்தும் என்பதை அறிந்தவர்களாய் இறைவனோடு உள்ள உறவில் ஆழப்பட ...
 இறையருள் வேண்டி இணைந்து தொடர்ந்து திருப்பலி வழியாக செபிப்போம் ...

வெள்ளி, 11 மார்ச், 2022

இயேசுவின் மனநிலையில் நமது பயணம்...(12.3.2022)

இயேசுவின் மனநிலையில் நமது பயணம்

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். 
உதிக்கின்ற சூரியனும்,  பெய்கின்ற மழையும்,  அகிலத்தில் உள்ள அனைவருக்கும் உரியதாக இருக்கிறது.  உதிக்கின்ற சூரியன் நல்லோர் தீயோர் என பார்த்து தனது ஒளிக் கதிர்களை அவர்கள் மீது வீசுவதில்லை.  அனைவர் மீதும் வீசுகிறது.  விழுகின்ற மழைத்துளியானது நல்லோர் தீயோர் என பார்த்து பெய்வதில்லை. மாறாக, அது அனைவருக்குமானதாக வந்து சேருகிறது.  இந்த மழையையும் வெயிலையும்,  கதிரவனின் ஒளியையும் இறைவனது இயல்புகளாக கண்டிட இன்றைய நாள் வாசகங்கள் அழைப்பு தருகின்றன.  கடவுளின் பார்வையில் நாம் அனைவரும் சமமானவர்களே. நம்மிடையே பலவிதமான ஏற்றத்தாழ்வுகளும் பாகுபாடுகளும் பிரிவினைகளும் உருவெடுத்திருந்தாலும் கடவுளின் பார்வையில் நாம் அனைவரும் சமமானவர்கள்.  கடவுளின் இயல்பையே நாம் கொண்டிருக்க வேண்டும் என்பதை இந்த தவக்காலம் நமக்கு வலியுறுத்துகின்றது. 



ஏற்கெனவே இந்த தவக்காலத்தில், 
நாம் ஒவ்வொருவருமே ஒரு சில முயற்சிகளை மேற்கொண்டிருப்போம்.   மேற்கொள்ளுகின்ற இந்த தவ முயற்சிகளில் நாம் இன்னும் ஆழப்பட இன்றைய வாசகங்கள் நமக்கு வலியுறுத்துகின்றன. ஒவ்வொருவருமே ஆண்டவர் இயேசுவின் மனநிலையை நமது மனநிலையாகக் கொண்டிருக்கின்ற அழைக்கப்படுகிறோம்.  எப்படி கடவுள் பாகுபாடு பாராது,  நல்லோர் மேலும் தீயோர் மேலும் மழையைப் பெய்விக்கின்றாரோ, கதிரவனின் ஒளியை உதிக்கச் செய்கின்றாரோ,  அதுபோல நாமும் எந்தவித பாகுபாடுமின்றி அனைவரையும் ஏற்றுக் கொண்டு வாழக்கூடிய மனிதர்களாக இச்சமூகத்தில் இருக்க அழைக்கப்பட்டிருக்கிறோம்.  அதன் அடிப்படையில் தான் நாம் பகைவர்களையும் அன்பு செய்ய வேண்டும் என்பதை இன்றைய நாள் வாசகங்கள் வலியுறுத்துகின்றன. பகைவரையும் அன்பு  செய்வதற்கு சொல்லுவது எளிதாக இருக்கும். ஆனால் செயலில் காட்டுவதற்கு அது கடினமாகத் தோன்றலாம்.  ஆனால் இயேசு கிறிஸ்து இந்த சமூகத்தில் மனிதனாக வாழ்ந்த போது, தன்னை குற்றுயிரும் குலை உயிருமாக சிலுவையில் தொங்க வைத்தவர்களுக்கு மத்தியில், 
அந்த நிலைக்கு அவர்களை ஆளாக்கியவர்களை, மனனித்தார். அவர்களுக்காக தந்தையினிடத்தில் மன்றாடினார். 

இந்த இயேசுவைப் போல நீங்களும் நானும் மாற வேண்டும் என்பதுதான் இந்த தவக்காலம் நமக்கு வலியுறுத்துகின்ற  வாழ்வுக்கான பாடம்  என்பதை உணர்ந்து கொண்டவர்களாக,  நாம் ஆண்டவர் இயேசுவின் மனநிலையை நமது மனநிலையாக்கிக்கொள்ள இறையருள் வேண்டி இந்த தவகாலத்தில் தொடர்ந்து இணைந்து இந்த திருப்பலியில் பக்தியோடு செபிப்போம்.

வியாழன், 10 மார்ச், 2022

சரி செய்ய....(11.03.2022)

சரி செய்ய....

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
 இன்று நம் தாய் திரு அவையானது நமது சக உடன் பிறந்தவர்களோடு உள்ள உறவில் நாம் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை நமக்கு எடுத்துரைக்கிறது.  சகோதர சகோதரிகளை முட்டாள் என திட்டுபவர் கூட,  கடுமையான தண்டனைக்கு உள்ளாவார்கள் என இறைவன் இயேசு வலியுறுத்துகிறார். நம்மோடு பிறந்தவர்களோடு நாம் நல்லுறவை கொண்டு வாழ வேண்டும் என்பதே இறைவன் இந்த நாளில் நமக்கு தருகின்ற செய்தி.  பல நேரங்களில் பல ஆண்டுகளாக நம் உடன் பிறந்தவர்களுடன் முறையான உறவு இல்லாமல் சண்டையோடும் சச்சரவுகளோடும் பிரிவினைகளோடும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் உறவுகளோடு மனவருத்தங்கள் உருவானாலும் அதனையெல்லாம் மன்னித்து அவர்களை ஏற்றுக் கொண்டு நல்ல முறையில் இணைந்து வாழ வேண்டும் என்பதே இறைவன் இன்றைய நாளில்
வலியுறுத்துகிறார். 

             இந்த தவக்காலத்தில் நமது உறவுகளை குறித்து நாம் சிந்திக்க கடமைப்பட்டிருக்கிறோம். பிரிந்து போன உறவுகளை சரி செய்து கொண்டு ஒருவர் மற்றவரை அன்பு செய்யவும், முழுமையான மனதோடு ஏற்றுக் கொள்ளவும் அருள் வேண்டி இந்த திருப்பலியில் பக்தியோடு இணைவோம்.

புதன், 9 மார்ச், 2022

கடவுளோடு நாமும், நம்மோடு கடவுளும் உரையாடிட...(10.3.2022)

கடவுளோடு நாமும், நம்மோடு கடவுளும் உரையாடிட...


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். 
தவக்காலமானது இறைவனோடு உள்ள உறவில் ஆழப்பட நமக்கு அழைப்பு விடுக்கிறது.  இறைவனோடு உள்ள உறவில் ஆழப்பட வேண்டுமாயின் அதற்கு செபம் இன்றியமையாத ஒன்று. 

 அன்றைய காலகட்டத்தில்  செபத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தவர்கள் யூதர்கள். அனைத்திலும் முதன்மையானது செபம் என்பது அவர்களின் எண்ணம். செபத்தைப்பற்றி யூதர்களுக்கு ஏதாவது கவலை இருந்தததென்றால், அது நாள்முழுவதும் நம்மால் செபிக்க முடியவில்லையே என்பதுதான். அந்த அளவுக்கு செபத்திற்கு வாழ்வில் முக்கிய இடத்தை கொடுத்திருந்தார்கள். யூதர்களுடைய வாழ்வே செபத்தை மையப்படுத்தியதாகத்தான் இருந்தது. இத்தகைய பின்புலத்தில் இயேசு, செபிப்பதால் கிடைக்கும் பலன்களை நமக்குச்சொல்கிறார். இறைவன் நம் செபத்தைக் கேட்கிறாரா? நாம் கேட்பதை இறைவன் நமக்குத்தருவாரா? இறைவன் எப்படிப்பட்டவர்? போன்ற கேள்விகளுக்கு பதிலையும் இன்றைய நற்செய்தியிலே தருகிறார்.

செபம் இறைவனோடு பேசுவதற்கு மட்டுமல்ல, இறை ஆற்றலை நிறைய பெற்றுக்கொள்வதற்கான பலமான ஆயுதம் என்பதை இயேசு ஆணித்தரமாக வலியுறுத்துகிறார். 

நாம் கடவுளோடு கொள்ளுகின்ற உறவானது தந்தை மகனுக்குரிய உறவு போல இருக்க வேண்டும் 
என்பதை இயேசு எடுத்துரைக்கிறார். தந்தையிடம் கேட்கின்ற போது தந்தை எப்படி நமக்கு நலமானதை நல்குவாரோ, அதுபோலவே இறைவனும் நமது தேவைகளை அறிந்தவராய் நாம் கேட்பதை நமக்கு தரக்கூடியவராக இருக்கிறார்.  ஆனால் ஆண்டவரோடு உரையாடும் போது நம்பிக்கையோடு உரையாட நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.

         நம்பிக்கையால் எல்லாம் கூடும்.  நம்பிக்கையால் ஆண்டவரையும் நலமானதை, நாம் விரும்புவதை நமக்கு தர வைக்கும்.  நாம் நம்பிக்கையோடு கேட்கிற போது நமது செபம்  கேட்கப்படும்.  நாம் நமது செபத்தில்  இறைவனோடு உள்ள உறவில் இன்னும் ஆழப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த தவக்காலம் தரப்பட்டுள்ளது. செபம் என்பதே கடவுளோடு கொள்ளுகின்ற உரையாடல். இந்த உரையாடலில் இருவரும் உரையாடவேண்டும்.  ஒருவர் மட்டும் பேசுவதும் மற்றவர் கேட்டுக் கொண்டிருப்பதும் முறையான செபம் ஆகாது. 

            இறைவன் எப்படி என்னோடு பேசுவார்?  அன்று சாமுவேலை நோக்கி சாமுவேல்! சாமுவேல்! என அழைத்தது போல நம்மை அழைத்து பேசுவாரா?  அல்லது அன்று எரேமியாவினிடத்தில் தோன்றி பேசிய வானதூதர்கள்  வழியாக பேசியவர் போல நம்மிடம் தோன்றிப் பேசுவாரா? என்ற கேள்வி இதயத்தில் எழலாம். ஆனால் அமைதியில் அமருகின்ற போது ஆண்டவரின் குரலை நாம் உணர முடியும். கடவுளின் ஆவியார் குடி கொண்டிருப்பது நமது உடலாகிய இந்த ஆலயத்திற்குள்.  

                    நமக்குள் இருந்து கொண்டு நமக்கு நல்லது கெட்டதை சொல்லித் தரக்கூடிய இந்த ஆவியானவரின் குரலுக்கு செவி கொடுக்கும் போது நாம் இறைவனின் குரலைக் கண்டு கொள்ள முடிகிறது.  நாம் இறைவனை எங்கெங்கோ தேடுவதை நிறுத்தி, நமக்குள்ளே உறைந்திருக்கும் இறைவனை நமக்குள்ளாக தேடுவோம்.  நமக்குள் இருந்து கொண்டு நன்மை தீமையை எடுத்துரைக்கக்கூடிய அவரின் குரலுக்கு கவனத்தோடு செவி கொடுப்போம்.  இத்தகைய செபத்தின் வாயிலாக கடவுளோடு நாமும், நம்மோடு கடவுளும் உரையாடுவோம்.  உரையாடல் வழியாக உறவுகளை பலப்படுத்திக் கொள்ள இறையருள் வேண்டி இணைந்து தொடர்ந்து இந்த திருப்பலி வழியாக செபிப்போம்.

செவ்வாய், 8 மார்ச், 2022

அனுபவத்தின் வாயிலாக ஆண்டவரோடு உறவில் ஆழப்பட....

அனுபவத்தின் வாயிலாக ஆண்டவரோடு உறவில் ஆழப்பட....


அன்பர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். 


நெற்றியில் சாம்பல் பூசியவர்களாய் கடந்த புதன் அன்று தொடங்கிய தவக்காலத்தை, இந்த புதன் கிழமையோடு ஒரு வாரத்தை நிறைவு செய்கிறோம்.  இந்த ஒரு வார காலத்தில் நாம் ஒரு சில உறுதிப்பாடுகளை நமக்கு நாமே எடுத்து இருப்போம். அந்த உறுதிப்பாடுகளில் நிலைத்தும் இருந்திருப்போம்.
சில நேரங்களில் அந்த உறுதிப்பாடுகளிலிருந்து அவ்வப்போது  நாம் தவறி போகின்ற சூழலிலும் கூட, நான் தட்டுத்தடுமாறி ஆண்டவர்மீது கொண்டிருக்கின்ற நம்பிக்கையின் அடிப்படையிலும், இந்த தவக்காலத்தை இதயத்தில் இருத்தியவர்களாய், சில ஒருத்தல் முயற்சிகளை செய்து கொண்டிருப்போம். ஒரு வார காலம் நாம் நன்றாக இருந்திருக்கிறோம். எனவே கடவுள் நமது வாழ்வில் அனைத்தையும் மாற்றி விடுவார் என்ற எண்ணம் நமக்குள் இருக்கலாம். ஆனால் நாம் எடுக்கின்ற ஒறுத்தல் முயற்சியிலும், நாம் மேற்கொள்கின்ற அனைத்து விதமான தவ முயற்சிகளும், ஆண்டவரோடு உள்ள உறவில் நாம் வளர்வதற்காகவே என்பதை மட்டுமே மனதில் இருத்த வேண்டுமே ஒழிய, பலனை எதிர்பார்த்து நாம் எதையும் செய்யக்கூடாது என்பதை இன்றைய வாசகங்கள் வலியுறுத்துகின்றன. 


யூதர்கள் பொதுவாக இயேசுவினிடத்தில் அடையாளத்தை கேட்டார்கள். ஏன் அவர்கள் அடையாளங்களை நாடினார்கள் என பார்க்கின்ற போது, மெசியா வருமுன் சில அடையாளங்கள் நிகழும் என அவர்கள் அறிந்திருந்தார்கள். அந்த அடிப்படையில் தான் இயேசுவை மெசியா என மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு, இவர் உண்மையாகவே மெசியாவாக இருப்பாரோ என்ற எண்ணம் அவர்களுக்குள் எழுந்தது. எனவே அவர் மெசியா என்பதை நிரூபிக்க அடையாளத்தை காட்டச் சொன்னார்கள். அடையாளத்தை கெட்ட மனிதர்களுக்கு இயேசு  அடையாளம் தரப்பட மாட்டாது என கூறினார். காரணம் ஒவ்வொருவரும் அவரவர் வாழ்க்கையில் அவரவர் பெறுகின்ற அனுபவங்களின் வாயிலாகத் தான் கடவுளை உணர்ந்து கொள்ள முடியுமே தவிர, அரும் அடையாளங்களால் மட்டும் கடவுளை உணர்ந்து கொள்ள முடியும் என்பவர்கள், இதைவிட இன்னொரு அருள் அடையாளத்தை காணுகின்ற போது இடறி போகக்கூடிய ஆடுகளாக தான் இருப்பார்கள். எனவே தான் ஆண்டவர் இயேசு கிறிஸ்து, அடையாளங்களை காண்பித்து தம்மை யாரென மெய்ப்பித்து காண்பிக்க விரும்பாதவராக உங்களுக்கு அடையாளம் தரப்படமாட்டாது என்று கூறினார். 

உங்களுக்கு யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு அடையாளம் தரப்பட மாட்டாது என ஆண்டவர் இயேசு கூறுகிறார். இவ்வார்த்தைகளின் அர்த்தத்தை உணர்கின்ற போது அன்று யோனா நினைவே நகர மக்கள் தவறான வாழ்வில் ஈடுபடுகிறார்கள் என்பதை சுட்டி காண்பிப்பதற்காக கடவுள் அவரை அனுப்பி வைத்தார். ஆனால் யோனா செல்ல மறுத்தார். பிறகு கடவுளின் கட்டளைக்கு கீழ்படிந்தவராய்  நினிவே நகருக்குச் சென்று அவர்களின் தவறான வாழ்வை சுட்டிக் காண்பித்தார். யோனாவின் வார்த்தைகளைக் கேட்டு அவர்கள் மன மாற்றம் பெற்றார்கள். இந்தத் தவக்காலத்தில் நாமும் தகுந்த மனமாற்றத்தை பெற வேண்டும் என்பதே இறைவனது விருப்பம். அந்த விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் பல நேரங்களில் நமக்கு அருள்பணியாளர்கள் வாயிலாகவோ, அருட்சகோதரிகள் வாயிலாகவோ, நமது குடும்பத்தில் இருக்கும் மூத்த உறுப்பினர்கள் வாயிலாகவோ மனமாற்றத்திற்கான அழைப்பை இறைவன் தருகிறார். இறைவன் தருகின்ற இந்த மனமாற்றத்திற்கான அழைப்பை உணர்ந்து கொண்டு,  நமது மனங்களை மாற்றிக் கொண்டு அவரின்பால் திரும்ப நாம் அழைக்கப்படுகிறோம். அவரின்பால் திரும்புகிற போது பல நேரங்களில் நாம் கடந்த ஒரு வார காலமாக ஒறுத்தல் முயற்சிகள் பல செய்திருக்கலாம். இந்த ஒருத்தல் முயற்சிகளால் எனது வாழ்வில் நடந்த நன்மை என்ன? எனக்கு கிடைத்த பயன் என்ன? என்ற கேள்வி உள்ளத்தில் எழலாம். 


                   நாம் அடையாளங்களைக் கொண்டு அந்த கேள்விகளுக்கு விடை தேட கூடாது. அடையாளங்கள் ஏதேனும் தென்படுகிறதா என தேடிக் கொண்டிருப்பதை நிறுத்திவிட்டு , அனுபவத்தின் வாயிலாக நாம் ஆண்டவரோடு இணைந்து இருக்கிறோம் என்பதை உணர்ந்து கொள்ள இந்த நாள் நமக்கு அழைப்பு தருகிறது.
நாம் மேற்கொள்ளுகின்ற தவா முயற்சிகளும் செபங்களும்,  அறச்செயல்களும் நம்மை ஆண்டவரோடு ஐக்கியப்படுத்தி இருக்கின்றன.

 ஆண்டவரோடு இன்னும் அதிகமான நெருக்கத்தை நமக்கு ஏற்படுத்தி இருக்கின்றன. அதனை நாம் அடையாளங்கள் கொண்டு உணர வேண்டிய அவசியமில்லை. நமது அனுபவம் கொண்டு உணர முடியும். இந்த அனுபவத்தின் வாயிலாக ஆண்டவரோடு உள்ள உறவில் இன்னும் ஆழப்பட இறையருளை வேண்டி, இணைந்து தொடர்ந்து இந்த திருப்பலியில் செபிப்போம்.

திங்கள், 7 மார்ச், 2022

அர்த்தம் உணர்ந்து செபிப்போம்....(8.3.2022)

அர்த்தம் உணர்ந்து  செபிப்போம்....


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
தவக்காலம் என்பது செபத்தின் வாயிலாக ஆண்டவரோடு இணைந்து இருக்க அழைப்பு விடுக்கின்ற ஒரு காலம்.  இந்த காலத்தில் நாம் ஏறெடுக்கின்ற செபம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதை இன்றைய வாசகங்கள் வழியாக இறைவன் நமக்கு உணர்த்துகின்றார். 

 அன்றைய காலகட்டத்தில் 
ஒரு சில யூதர்கள் மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக செபித்தார்கள். அதற்கு யூதர்களின் செபமுறையும் உகந்ததாக இருந்தது. யூதர்கள் செபிக்கிறபோது, நின்றுகொண்டு செபித்தார்கள். அவர்களின் இருகரங்களம் விரிக்கப்பட்டு, உள்ளங்கைகள் வானத்தை நோக்கியும், அவர்களின் சிரம் தாழ்த்தியும் செபித்தார்கள். காலையும், மாலையும் அவர்கள் செபித்தார்கள். எந்த வேலையைச் செய்தாலும், இந்த வேளைகளில் எங்கிருந்தாலும் அவர்கள் செபிக்க ஆரம்பித்தார்கள். தாங்கள் எப்படி செபிக்கிறோம்? என்பது மற்றவர்களுக்கு தெரிய வேண்டுமென்று செபித்தார்கள். குறிப்பாக தொழுகைக்கூடங்களின் முன்நின்று, நீண்ட நேரம், மற்றவர்கள் கண்ணில்படும்படி நின்றுகொண்டு செபித்தார்கள்.

ஒரு சில யூதப்போதகர்களே, மக்களை இத்தகைய செயலுக்காக கடுமையாக கண்டித்திருக்கிறார்கள். எனவே தான், வெளிவேடத்தனத்தோடு வேண்டப்படுகிற செபம், இறைவனால் கேட்கப்படாது என்று விளக்கம் கொடுத்தார்கள்.


நாம் கடவுளோடு எத்தகைய உறவை செபத்தின் வாயிலாக கொண்டிருக்க வேண்டும் என்பதை இயேசு என்று உணர்த்துகிறார்.  ஆண்டவர் இயேசு நாம் எப்படி செபிக்க வேண்டும் என்பதற்காக நமக்கு கற்றுக்கொடுத்த ஜெபத்தினை அனுதினமும் நாம் பல நேரங்களில் பல இடங்களில் பயன்படுத்துகிறோம்.  சில நேரங்களில் நாம் செய்கின்ற இந்த செபத்தினை குறித்து சிலர் கேலி செய்வதும் உண்டு. ஏன் இவர்கள் திரும்பத் திரும்ப ஒரே வார்த்தைகளை உச்சரித்து கொண்டே இருக்கிறார்கள் என்று கூட. ஆனால் இந்த வார்த்தைகளுக்குள் அடங்கி இருக்கக்கூடிய  மகத்துவத்தை அறியாத நிலையில் தான் அவர்கள் இவ்வாறு பேசுகிறார்கள். 

 "இந்த விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே" என்ற செபத்தின் வாயிலாக நாம் கடவுளை புகழுகிறோம்.  நமது அன்றாட தேவைக்காக இறைவனிடத்தில் மன்றாடுகிறோம். நாம் எப்படி இருக்க வேண்டும்? நாம் எப்படி இருந்தால் கடவுள் எப்படி இருப்பார் என்பதையும் இந்த செபமானது நமக்கு வலியுறுத்துகிறது. 

மன்னிப்பை பற்றி பேசுகிற நாம் மன்னித்தால் தான் கடவுள் நம்மை மன்னிப்பார் என்பதை இந்தச் செபம் வலியுறுத்துகிறது.  மனிதனின் அடிப்படைத் தேவை ஆகிய உணவுக்கு இறைவனுக்கு நன்றி கூற வேண்டும் என்ற உன்னத பாடத்தை இந்த செபம் நமக்குக் கற்பிக்கிறது. 

     இந்த ஜெபத்தை பத்தோடு பதினொன்று அத்தோடு நான் ஒன்று என்ற மனநிலையோடு நாம் சொல்லாது, மன நிறைவோடு அர்த்தம் உணர்ந்த வகையில்,  நாம் அனைவரும் இணைந்து வார்த்தைகளின் அர்த்தத்தை உணர்ந்தவர்களாக ஆண்டவர் இயேசு அர்த்தமுடன் ஜெபித்தது போல நாமும் அர்த்தத்தை உணர்ந்தவர்களாக, பிறரைப் போல அல்லாமல், அர்த்தத்தை உணர்ந்து செபிக்கக் கூடிய மக்களாக இருக்க வேண்டும் என்பதை இந்த நாள் நமக்கு வலியுறுத்துகிறது.  இத்தகைய சிந்தனையை உள்ளத்தில் ஏற்றுக் கொண்டவர்களாய், உள்ளார்ந்த எண்ணத்தோடு,  உண்மையான மன நிலையில் ஆண்டவர் கற்பித்த செபத்தை  அனைவரும் இணைந்து செபிப்போம். இணைந்து சொல்லுவோம். 


விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே! உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல, மண்ணுலகிலும் நிறைவேறுக! எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும்! எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல, எங்கள் குற்றங்களை மன்னியும்! எங்களை சோதனைக்கு உட்படுத்தாதேயும்! தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும். ஆமென்.

   என்று நாம் செபிக்கின்ற இந்த செபமானது, 
நமது வாழ்வை நெறிப்படுத்துவதாகவும் நமக்கும் கடவுளுக்கும் இடையே உள்ள உறவை இன்னும் ஆழப்படுத்தவும்,   உதவும் என்பதை மனதில் இருத்தியவர்களாய்,  நேரம் கிடைக்கிற போதெல்லாம் அர்த்தத்தை உணர்ந்தவர்களாக  இந்த செபத்தை நமது வாழ்வில் நாம் மேற்கொள்ள இறையருள் வேண்டி இந்த திருப்பலியில் இணைந்து செபிப்போம்.

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...