செவ்வாய், 16 பிப்ரவரி, 2021

சாம்பல் புதன் - தவக்காலம் ஆரம்பம்

சாம்பல் புதன் - தவக்காலம் ஆரம்பம் 

இது தவக்காலம் , 
ஆண்டுதோறும் தவறாமல் வரும் காலம் . 
செபம் , தவம் , தானதர்மம் , உபவாசம் , ஒப்புரவு , சிலுவைப்பாதை , திருயாத்திரை போன்ற ஆலய அனுசரிப்புகளில் அதிகம் ஆர்வம் காட்டும் காலம் . 
இத்தகு புற மாற்றங்கள் நமக்குள் அக மாற்றத்தையும் அளித்தல் வேண்டும் . 
வெளி ஆடம்பரங்களில் மூழ்கிப் போன நமக்கு ஆலய அனுசரிப்புகளோடு பிறர் நலம் விசாரிப்புகளும் இருக்கட்டும் . 
உண்ணாமல் இருப்பது நோன்பென்றால் பசித்தோருக்கு உணவைப் பகிர்ந்தளிப்பதும் நோன்புதான் . 
சிலுவைப்பாதை செய்வது தவமென்றால் - பிறர் துன்பச் சுமைகளை தாங்கிக் கொள்வதும் தவம் தான்.
கண்ணீர் சிந்தி , இறைவனின் பாடுகளைத் தவக்காலம் தியானிப்பதோடு - பிறர்க்கு எண்ணில்லாக் கருணையைப் பொழிவதும் தியானம் தான் . 
ஒப்புரவு அருட்சாதனம் பெறுவதோடு , பகைவரோடு ஒப்புரவாகிப் போவதும் உண்மைத் தவம்தான் . 
ஊன் உண்ணாமை நன்றுதான் - ஆனால் பிறர்மனம் புண்ணாக்காமல் இருப்பது அதைவிட நன்றல்லவா ! 
செபிப்பது மட்டுமல்ல - தவம் வாழ்வில் திக்கற்றவர்களுக்கு செபிக்க வழிகாட்டுவதும் தவம்தான் . 
அன்று சாக்கு உடையும் , சாம்பலையும் போல் , இன்று காவி உடையும் கழுத்தில் செபமாலையும் அணிவது தவம் என்றால் , உள்ளத்தில் கனிவு , கருணை என்ற ஆடை அணிந்து ஆங்கோர் நலிந்தவைகளைக் கைத்தூக்கி விடுவதும் உண்மைத் தவம் தான் . 
ஏழைகள் மீது அக்கறையின்றி எடுக்கப்படும் எல்லா தவக்கால முயற்சிகளும் விழலுக்கிறைத்த நீர்தான் . 
எனவே , இவ்வாண்டு தவக்காலத்திலாவது நாம் எடுக்கும் நோன்புகளும் , நாம் செய்யும் செபங்களும் சிலுவைப்பாதைகளும் அகமாற்றத்தைத் தருவதோடு புறமாற்றத்தையும் , சமுதாய மாற்றத்தையும் தருபவையாக அமையட்டும் . அப்போது அர்த்தமுள்ள தவக் காலத்தில் வாழலாம் . 

திங்கள், 15 பிப்ரவரி, 2021

இயற்கையில் இறைவனைக் காண்போம்! (16.2.2021)

இயற்கையில் இறைவனைக் காண்போம்! 

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

         ஒரு முறை குப்புசாமி போலீஸ் வேலைக்கு நடந்த நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டார்.
மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றது யார் தெரியுமா? என்று அவரிடம் கேட்கப்பட்டது.

உடனே அவர் தேர்வு அதிகாரியிடம், எனக்கு கொஞ்சம் கால அவகாசம் வேண்டும் என்றார்.

அதிகாரியும் சிரித்துக் கொண்டே, சரி! ஒரு வாரம் தருகிறோம். விடையுடன் வா என்றார். அவர் வீடு திரும்பினார்.

வேலை கிடைத்து விட்டதா? என்று அவர் மனைவி கேட்டாள்.

அவர் சொன்னார், அநேகமாக வேலை கிடைத்த மாதிரிதான். இல்லாவிட்டால் நேர்முகத் தேர்வின் போதே கண்டுபிடிக்க எனக்கு ஒரு கேசைத் தருவார்களா? 

15 நாட்களுக்குள் அந்தக் கொலையாளியை நான் கண்டு பிடிக்க வேண்டும் என்று கூறினாராம். 
    
           அன்புக்குரியவர்களே! இன்றைய முதல் வாசகத்தில் மனிதரின் பொறுப்பற்ற தனத்தால் உருவான தீய செயல்களை காண்கின்ற கடவுள் மனம் வருந்துகிறார். உண்மையில் கடவுள் இந்த உலகத்தை படைத்த அந்த முதல் பொழுது, மனிதன் இந்த உலகத்தை ஆண்டு மகிழ்ந்திருக்க வேண்டுமென்று மிகுந்த ஆவல் கொண்டார். அவ்வாறு அனைத்தையும் படைத்த பின்னர், தான் படைத்த இயற்கை அனைத்தையும் மனிதனின் கரங்களில் ஒப்படைத்தார். மனிதனுக்கு துணையாக ஏவாளையும் கொடுத்தார். ஒவ்வொரு நாளும்  அவர்களோடு மாலையில் தோட்டத்தில் வந்து உலாவினார். அவர்களோடு உறவாடினார், உரையாடினார்.
அன்று ஆண்டவரோடு மகிழாந்திருந்த மனிதனும் அவனுடைய சந்ததியினரும் மெல்ல மெல்ல தாங்கள் விரும்பிய காரியங்களை விரும்பிய போதெல்லாம் செய்ய ஆரம்பித்தார்கள். அதனால் மனித வாழ்விலும் ஆண்டவர் படைத்த இயற்கையிலும் ஒரு கட்டுப்பாடற்ற சூழல் நிலவியது. ஒருவரோடு ஒருவர் இணக்கமாக வாழ முடியாமல் தீமைகள் பெருக ஆரம்பித்தன. இதனைக் கண்டு, தான் வருந்துவதாக இன்றைய முதல் வாசகத்தில் கடவுள் கூறுகிறார். 

              இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, சீடர்கள் தம் வாழ்வில் கொண்டிருக்க வேண்டிய விழிப்புணர்வின் முக்கியத்துவம் குறித்து பேசிக் கொண்டிருக்கிறார். அதனைத்தான், "பரிசேயர் மற்றும் ஏரோதியரின் புளிப்பு மாவைக் குறித்து கவனமாக இருங்கள்" என்று கூறுகிறார்.
பரிசேயர்கள், ஏரோதியர்கள், மற்றும் அங்கு வாழ்ந்த தலைமை குருக்கள் அனைவரும், தாங்கள் வகுத்த சட்ட திட்டங்களின் வழியாக தங்களது சுய நலத்திற்கு தூபமிட்டனர். தங்களது பதவி மோகத்திலும் அனைவரையும் அவர்களுக்கு கீழ்ப்படுத்தி மக்களின் இயல்பான வாழ்க்கையை, கடவுளின் பெயரால் கடினப்படுத்தினர். இக் காரியங்களைக் குறித்து ஆண்டவர் இயேசு பேசிக்கொண்டிருக்கும் பொழுது, அவருடைய சீடர்கள் இதனைப் புரிந்து கொள்ளாமல், தாங்கள் அப்பங்கள் கொண்டு வர மறந்து விட்டோமே என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். தங்கள் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை உணராமல் இருப்பதை பார்க்கின்ற இயேசு,  "உங்களுக்கு புரியவில்லையா?"  நீங்கள் என்னை நம்பவில்லையா?  என்று அவர்களின் நிலை குறித்து உள்ளத்தில் வருத்தம் அடைகிறார்.
     
                நமது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும்,  

 என்ற தனது சுற்று மடலில், இறைவன் படைத்த இயற்கையைப் பற்றி குறிப்பிடுகின்ற பொழுது, இறைவனால் படைக்கப்பட்ட இந்த இயற்கையானது எல்லோரும் மகிழ்ந்து வாழக்கூடிய வீடு என்கிறார். இந்த இயற்கையின் வீட்டில் இயற்கையோடும் மனிதர் அனைவரோடும் அன்போடு உறவோடு மகிழ்ந்திருந்த காலங்கள் இன்று மாறி, மனிதன் இந்த இயற்கையை தனது சுயநலத்திற்காக, தனது சொத்துக்களை பெருக்கிக் கொள்வதற்காக அழிக்கின்ற ஒரு சூழ்நிலையை இந்த நூற்றாண்டில் நாம் காண்கிறோம். இந்த இயற்கை இன்று நம்மால் அழிக்கப்படுகின்றதா? என்று நமது உள்ளத்தில் நாம் கேள்வி எழுப்பினால், நான் சிறிதளவு மரங்களைத் தானே வெட்டினேன்! நான் ஒரு வீடு கட்டுவதற்கு தானே ஆற்றில் மணல் அள்ளினேன்! எளிதாக அனைவருக்கும் தண்ணீர் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தானே ஆழ்துளை கிணறுகளை உருவாக்கினேன்! என்று நாம் செய்த தவறுகளை குறைவாக மதிப்பிட்டு நாம் கூறலாம். ஆனால் ஒரு சிறிய தவறு தான் ஒரு மிகப்பெரிய அழிவிற்கு வழிவகுக்கிறது. நாம் உண்ணுகின்ற உணவில் காரமோ, ஈப்போ, அல்லது வேறு ஏதேனும் ஒன்றோ, அதிகமாகிவிட்டால் நம்மால் அதனை சாப்பிட இயலாது. அதனை தயாரித்தவர்களை நமது பார்வையாலேயே நாம் எரித்து விடுவோம். ஆனால் அது போலத்தான் நாம் இயற்கைக்கு எதிராக செயல்படுகின்ற நமது சுயநல காரியங்களும் அமைகின்றன என்பதை இன்றைய நாளில் நாம் உணர்வோம். 

                  நாம் வாழுகின்ற இந்த இயற்கையானது, நமது எதிர்கால சந்ததியினரிடம் இருந்து நாம் பெற்றிருக்கின்ற கடன் என்பதை உணர்வோம். நமது கரங்களில் இருக்கின்ற இந்த இயற்கையை நாம் பத்திரமாகப் பாதுகாத்து, நமது சந்ததியினர் சரிவிகித வளம் பெற்ற இயற்கையை கொடையாக பெற்றுக் கொள்ள இன்றைய நாளில் நமது பங்களிப்பு என்ன? என்பதை உள்ளத்தில் சிந்திப்போம். 
          நாம் வாழும் இடங்களில் நமது வீடுகளைச் சுற்றி மரங்கள் நட உறுதி ஏற்போம். பொருட்கள் வாங்குவதற்கு கடைகளுக்குச் செல்லும் பொழுது நெகிழிப் பைகளை நாடாமல் நமது வீட்டிலிருந்து துணிப் பைகளையும் அல்லது சணல் பைகளையும் கொண்டு செல்ல உறுதி ஏற்போம். துரித உணவுகளுக்கு அடிமையாகாமல் இயற்கை அன்னை நமக்கு வழங்குகின்ற இயற்கையான உணவினை அன்போடும் மகிழ்வோடும் நாமும் உண்ணவும் நமது அடுத்த தலைமுறையினருக்கும் அதனை கற்றுக் கொடுக்கவும் உள்ளத்தில் உறுதி ஏற்போம். 

  மொத்தத்தில் இயற்கையை நேசிப்போம்! இயற்கையை பாதுகாப்போம்! இயற்கையில் இறைவனைக் காண்போம்! இயற்கையின் வழி மனிதர்கள் அனைவரையும் அன்பு செய்து ஆண்டவரை மகிழ்விப்போம்!

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2021

நாம் காவலாளிகள்.... (15.2.2021)

நாம் காவலாளிகள்....

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

 மனித மனமானது தனது வேண்டுதல்கள் அனைத்தையும் நிறைவேற்றுபவரிடத்தில் பரிபூரண மோகம் கொள்கின்றது. 
அங்கம் கொள்ளும் ஆசை பங்கம் விளைவிக்கின்றது. காரணம், ஆசை என்பது மனித மூளையை வியாபிக்கிறது. ஒருவரது ஆசையை உற்றவரே அறியாவிடில் மற்றவர் இவ்வாறு அறிந்து கொள்வார்கள்? நிறைவேறும் என்று நம்பிய ஆசைகள் நிறைவேறாமல் போனால், ஆசை கொண்ட மனமானது நிராசை அடைகிறது. நிராசை அடைந்த அந்த மனதில் போராட்டம் பிறக்கிறது. அங்குதான் அழிவு ஆரம்பமாகிறது. 
இன்றைய முதல் வாசகத்திலும் ஆண்டவரிடம் காயினும் ஆபேலும் காணிக்கைகளைக் கொண்டு செல்கின்றனர். கடவுள் ஆபேலின் காணிக்கையை ஏற்றார். காயினின் காணிக்கையை ஏற்கவில்லை. தன் காணிக்கையை இறைவன் ஏற்பார் என்ற மனநிலையோடு கடவுளிடம் சென்ற காயின்,  ஏமாற்றம் அடைந்ததால் வருத்தமுற்றான். வருத்தமுற்ற அவனிடம் கடவுள் கேட்டார், நீ நல்லது செய்தால் உயர்வடைவாய் அல்லவா! என்றார். இக்கூற்று அவனிடம் ஏதோ ஒரு நன்மையற்ற தனம் இருப்பதை நமக்கு சுட்டிக் காட்டுகிறது.  ஆனால் தன்னை சரி செய்து கொள்வதை விட்டு விட்டு இறைவன் நம் காணிக்கையை நிராகரித்தார் என்ற எண்ணத்தின் அடிப்படையில் தன் சகோதரனின் மீது கோபம் கொண்டு, அவனது இன்னுயிரை பறிக்கக்கூடிய செயலில் காயின் ஈடுபடுகிறான்.  காயினின் இச்செயல் கண்டு கடவுள் காயினை நோக்கி, உன் சகோதரன் எங்கே? என்று கேட்டபோது, நான் என்ன என் சகோதரனுக்கு காவலாளியா? என கடவுளிடம் மறு கேள்வி கேட்டான், காயின்.

                இன்று நம்மில் பலரும் பல நேரங்களில் நமது மனதில் இருக்கக்கூடிய ஆசைகள் நிறைவேறாமல் போகின்ற போது, நிராசை அடைந்த ஆசைகளின் காரணமாக, நமது உள்ளத்தில் போராட்டமானது பிறக்கிறது. நாம் நினைத்ததை, நமது ஆசையை எப்படியாவது அடையவேண்டும் என்ற எண்ணத்தோடு பலவிதமான தவறான வழிகளில் ஈடுபடுகிறோம்.  நமது வழிகளை சிலர் தவறு எனச் சுட்டிக் காட்டினாலும் அவர்களிடம் பதிலுக்கு வாக்குவாதம் செய்கின்றோம்.  உண்மையில் காயின் கேட்ட கேள்விக்கு ஏற்ற வகையில், நான் என்ன என் சகோதரனுக்கு காவலாளியா? என காயின் கேட்ட கேள்விக்கு பதில்,  ஆம்! நாம் அனைவரும் ஒவ்வொருவருக்கும் காவலாளிகள் தான். 

அன்னை தெரசா கூறுவார்,  இந்த உலகத்தில் ஒரு மனிதன் உணவின்றி இறக்கிறான் என்றால், அவனை கடவுள் பாதுகாக்கவில்லை என்று அர்த்தமல்ல. உன்னையும் என்னையும் போன்றவர்கள் அவனைப் பராமரிக்கத் தவறியதன் விளைவுதான் எனக் கூறுவார். 
இன்று நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில் ஒருவர் மற்றவருக்கு பாதுகாப்பாகவும் காவலாளிகளாகவுமாகத் தான் இருக்க அழைக்கப்படுகின்றோம். இயேசு  இந்த மண்ணில் வாழ்ந்த போது தான் சந்தித்த மக்களுக்கு தன்னாலான உதவிகளைச் செய்தார். துன்பத்தில் இருந்தவரின் துயர் துடைத்தார். நோயோடு வருந்தியவர்களுக்கு குணம் கொடுத்தார். சட்டத்தால் நசுக்கியவர்களுக்கு அச்செயல் தவறு எனச் சுட்டிக் காட்டினார்.  ஆனால் இயேசுவின் மீது பொறாமை கொண்டவர்களாக, இயேசுவை ஏற்றுக் கொள்ளாமல், எப்போதும் அவரை குற்றம் காணும் நோக்குடனும், அவரை எப்படியாவது மட்டம் தட்ட வேண்டும் என்ற எண்ணத்துடனும், ஒரு கூட்டம் அவரைப் பின் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. பலவழிகளில் அவரிடம் தங்களது வார்த்தைகளால் அவரை வெல்ல வேண்டும் என எண்ணினார்கள். அந்த எண்ணங்கள், ஆசைகளாக அவர்களுக்குள் வேரூன்றியது. அதன் அடையாளமாகத்தான் இன்று ஆண்டவர் இயேசுவிடம், எங்களுக்கு ஒரு அடையாளத்தை காட்டும் என அவர்கள் கேட்டதை நாம் நற்செய்தி வாசகத்தில் வாசிக்கின்றோம்.  உங்களுக்கு உங்கள் ஆசைகளை முன்னிட்டு, உங்கள் உள்ளத்தின் சோதிக்கும் நோக்கத்திலான எண்ணங்களின் அடிப்படையில் நீங்கள் என்னிடம் கேட்பதால்,   உறுதியாக உங்களுக்கு எந்த ஒரு அடையாளமும் காட்டப்படாது எனக் கூறிவிட்டு, தன் பணியைச் செய்யப் புறப்படுகிறார் இயேசு.  இன்று நாமும் நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில் பல நேரங்களில், நம்முள் இருக்கக்கூடிய ஆசைகளுக்கு அடி  பணிந்தவர்களாக நமது ஆசைகள் நிறைவேறாத போது, எப்படி அடுத்தவரை அழிக்கலாம் என சிந்திக்கக் கூடியவர்களாக இருப்போமாயின், அந்நிலையிலிருந்து மாற்றம் பெற்று,  நம்மிடம் இருக்கக்கூடிய ஆசைகளையும் நெறிப்படுத்தி வாழக் கூடியவர்களாக,  நடக்கும் அனைத்தையும் இறைவனின் திட்டத்திற்கு ஏற்ற வகையில் ஏற்றுக்கொண்டு, நமது ஆசைகள் நிராகரிக்கப்படும் பொழுது, ஏன் நிராகரிக்கப்பட்டது? நம்மில் எழ வேண்டிய மாற்றம் என்ன? என நம்மையே நாம் சுய ஆய்வு செய்து கொண்டவர்களாக, வாழ்க்கையில் மாற்றங்களை உருவாக்கிக் கொண்டு, அதன் வழி இறைவனால் நம் எண்ணங்கள் ஈடேறும் வகையில் நாம் நல்லதொரு வாழ்வை வாழ உள்ளத்தில் உறுதி ஏற்றவர்களாய், இந்நாளில் தொடர்ந்து பயணிப்போம்.

நம்மை அந்நியப்படுத்திக் கொள்ள வேண்டாம்.... (14.2.2021)

நம்மை அந்நியப்படுத்திக் கொள்ள வேண்டாம்....

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாளின் இறைவார்த்தைகளின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

ஒரு அறிஞரின் அனுபவப்பகிர்வு இவ்வாறாக அமைந்திருந்தது.

                  நமது வீட்டிற்கு வந்து போகும் உறவினர் போலவே இந்த உலகத்தில் நாம் ஒவ்வொருவரும் பிறந்திருக்கிறோம். அவரவர்களுக்கு என்ன பாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறதோ அதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம். அதைத் தவிர நாம் வேறு எதையும் செய்து காட்ட முடியாது. 

                          நீ உன்னை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறாயோ அப்படி வைத்துக் கொண்டு வாழப்பழகிக் கொள். அதில் நன்மை வந்தாலும், தீமை வந்தாலும் , உனக்கும் ஒரு அனுபவம் கிடைக்கும் . அதை வைத்து உன்னையும் திருத்திக் கொள்ளலாம்.

இன்பமானாலும் துன்பமானாலும் அதை நீயே சந்திக்கக் கற்றுக்கொள். அதை பகிர்ந்து கொள்வதற்கு கண்டிப்பாக ஒரு துணை இருந்தே ஆகவேண்டும் எனத் தேடாதே.

                  நீ பெண்ணாக இருந்தாலும், ஆணாக இருந்தாலும், வரும் துன்பத்தை எதிர்கொள்ளக்கூடிய ஆற்றலை உருவாக்கிக் கொள்.

             மனிதன் மீது வைக்கும் நம்பிக்கையை விட இறைவன் மீது வைக்கும் நம்பிக்கையை அதிகரித்துக் கொள்.

அழுவதாலும் சோர்ந்து போவதாலும் ஒன்றும் நடக்கப் போவதில்லை. எப்படி இருந்தாலும் நீதான் அந்த சுமையை சுமந்து ஆகவேண்டும். அழுது சுமப்பதை காட்டிலும். ஏற்று சுமப்பது உனக்கு சிரமம் இல்லாமல் இருக்கும்.
   
      ஆம் அன்புக்குரியவர்களே!
இன்றைய முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்களுள் தொழுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் எவ்வாறு பாளையத்திற்கு வெளியே தனிமைப்படுத்தப்படுகிறார் என்பதை நமக்கு எடுத்துரைக்கிறது. அவர் தனிமைப்படுத்தப்பட வேண்டுமா? இல்லையா? என்பதை அங்கு இருக்கின்ற குரு ஆராய்ந்து பார்த்து முடிவு செய்வார் என்பதையும் கூறுகின்றது.
     
        இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் நமது வாழ்வில் நாம் எந்த ஒரு செயலைச் செய்தாலும் அது உண்டாலும் குடித்தாலும் இன்னும் பல்வேறு மேன்மையான செயல்களைச் செய்தாலும் நாம் நற்பேறு பெற்றாலும் அனைத்தையும் ஆண்டவருக்காக செய்திட அழைப்பு  தருகின்றார். 

        இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தன்னை நாடி வந்து நம்பிக்கையோடு தன்னிடம் குணம் பெறுவதற்காக வந்திருந்த தொழுநோயாளரை இயேசு குணப்படுத்தியதை எடுத்துரைக்கிறது.

             இன்றைய முதல் வாசகத்தில் தொழுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் தன்னை சுற்றி இருக்கின்ற மனிதர்களால் தனிமைப்படுத்தப்பட்ட சூழ்நிலையை விவரிக்கின்றது. இந்நிலையில் பெரும்பாலான மனிதர்கள் தனது நிலையை எண்ணி வருந்தியவர்களாக, தனக்கு அருகில் யாராவது மனிதர் வருகின்ற பொழுது 'தீட்டு, தீட்டு' என்று சொல்லி மற்ற மனிதர்களிடம் இருந்து தன்னைத் தானே  விலக்கிக் கொள்ள வேண்டிய ஒரு கடினமான சூழ்நிலையை முதல் வாசகம் நமக்கு விளக்குகின்றது. 

      இன்றைய இரண்டாம் வாசகத்தின் வழியாக புனித பவுல், ஆண்டவரை நோக்கி நமது கண்களை உயர்த்திட நமக்கு அழைப்பு விடுக்கின்றார். நீங்கள் உண்டாலும் குடித்தாலும் எதைச் செய்தாலும் கடவுளுடைய மகிமைக்காக அதனை செய்யுங்கள் என்று கூறுகின்ற வேளையில், நமது வாழ்வின் இன்பத்தில் மட்டுமல்ல, துன்ப வேளையிலும், சோதனைகளின் மத்தியிலும், நாம் மனமுடைந்து போகும் நிலையிலும், நாம் எத்தகையதொரு கடினமான சூழ்நிலையில் இருந்தாலும் ஆண்டவர் இயேசுவை நோக்கி பார்க்க புனித பவுல் அழைப்பு தருகிறார். 

                இன்றைய முதல் மற்றும் இரண்டாம் வாசகங்களின் நிறைவாக இன்றைய நற்செய்தி வாசகத்தை நாம் வாசிக்க கேட்கிறோம். இன்றைய நற்செய்தியில் நாம் சந்திக்கின்ற தொழுநோயால் பாதிக்கப்பட்ட நபர் தனது இன்னல்களையும் கடந்தவராக, ஆண்டவரை நோக்கி பார்க்க வேண்டும் என்ற ஆவல் கொண்டவராக ஆண்டவர் இயேசுவை தேடி வருகின்றார். தனது நிலை குறித்து மனம் நொந்து தன்னை ஒடுக்கிக் கொள்ளாமல், ஆண்டவர் இயேசுவின் வழியாக புதிய வாழ்வை பெற்றுக்கொள்ள, விடுதலை வாழ்வை பெற்றுக்கொள்ள, நம்பிக்கையோடு ஆண்டவரை நோக்கிப் பார்த்தவராக இயேசுவை அணுகுகின்றார்.

இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார்.
திருப்பாடல்கள் 34:6 
         என்ற திருப்பாடலின் வரிகளுக்கு ஏற்ப நம்பிக்கையோடு ஆண்டவர் இயேசுவை நோக்கி கூவி அழைக்கின்றார்.


                    அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை.
திருப்பாடல்கள் 34:5
   
                என்று இறை வார்த்தைக்கேற்ப, தனது நிலையினையும்  கடந்து, ஆண்டவர் இயேசுவை நோக்கிப் பார்த்த அந்த தொழுநோயாளர், அன்று தன்னுடைய வாழ்வில் நிலைத்த பேரின்பத்தை கண்டு கொண்டார். அவரது முகம் மகிழ்ச்சியால் மலர்ந்தது. 
        
              இவ்வாறாக இன்றைய வாசகங்கள் அனைத்தும் நமது கண்களை ஆண்டவரை நோக்கித் திருப்ப நமக்கு அழைப்பு தருகின்றன. நம்முடன் எப்பொழுதும் வருகின்ற நமது நிழல் போல நமது சோதனைகளும் இடர்பாடுகளும் தடைகளும் எதிர்மறைத் தாக்கங்களும் நம்மைப் பின்தொடர்ந்து நமது வாழ்வில் வந்து கொண்டே இருக்கலாம். ஆனால் நாம் அதனை வலிந்து பற்றிக்கொண்டு ஆண்டவரிடமிருந்து நம்மை அந்நியப்படுத்திக் கொள்ளாமல்,   வாழ்வின் ஊற்றாம், ஒளியின் ஊற்றாம், ஆண்டவரை நோக்கிப் பார்த்து நமது கண்களுக்கு ஒளியையும், நமது உடலுக்கு வலிமையையும், நமது உள்ளத்திற்கு  இறை ஞானத்தையும் ஆண்டவரிடமிருந்து பெற்றுக்கொள்ள இன்றைய நாளில் உற்சாகத்தோடும் ஆர்வத்தோடும் ஆண்டவரை நோக்கிப் பார்ப்போம். அவரது உறவினில் நம்மையும் இணைப்போம்.

சனி, 13 பிப்ரவரி, 2021

நாமும் முன்மாதிரிகளாக மாறிடுவோம்.... (14.2.2021)

நாமும் முன்மாதிரிகளாக மாறிடுவோம்....

இறைவன் இயேசுவின் அன்புக்குரியவர்களை 

 இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
மனித வாழ்வில் இன்பம் அதிகமா? துன்பம் அதிகமா? என்று கேட்டால் துன்பம் தான் அதிகம் இன்று.

 உலகம் முக்காற் பங்கு தண்ணீரால் ஆனது. மனித வாழ்க்கையும் முக்கால் பங்கு கண்ணீரால் ஆனது என்பார்கள்.

இன்பங்களை எண்ணி சொல்லி விடலாம். ஆனால் துன்பங்களின் வகைக்கோ கணக்கே இல்லை. 

எத்தனை வகையான துயரங்கள் மனிதனுக்கு. அத்தனையையும் அவன் தாங்கிக் கொண்டு தானே வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

மனித இதயம் அதிசயமான ஆற்றல் உடையது. அது எத்தகைய துயரத்தையும் தாங்கிக் கொள்கிறது.
துயரத்தைத் தாங்கிக் கொள்ளும் சக்தி இதயத்திற்கு இல்லை என்றால் முதல் துயரத்தில் மனிதர் எல்லோரும் இடிந்து போயிருப்பார். இன்று உலகில் மனிதன் இருந்திருக்கவே மாட்டான்.

துன்பங்களில் தாங்கிக் கொள்ள முடியாதது எது? என்று சிந்திக்கும் பொழுது உடல் உபாதைகள் தான் மிகவும் ஒருவரை வாட்டுகின்ற ஒன்றாக உள்ளது.

இன்றைய முதல் வாசகத்தில் உடல்மீது ஏற்படக்கூடிய தொழுநோய் பற்றி நாம் வாசிக்கின்றோம். தொழுநோய் என்பது பரவக்கூடிய ஒரு நோயாக பார்க்கப்பட்டது. எனவே தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மக்களோடு தொடர்பில் இருத்தலாகாது. எனவே அவர்கள் தனித்து வைக்கப்பட்டனர். பல நேரங்களில் இந்த உடல் உபாதைகள் எல்லாம் கடவுளால் தரப்படுவது என மக்கள் நம்பி நோய்த் தொற்று ஏற்பட்டதால் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டார்கள்.
பிற்காலத்தில் தனித்து வைக்கப்பட்டவர்கள்  எல்லாம் ஒதுக்கி வைக்கப்பட்டவர்களாக சித்தரித்து. சமூகம் அவர்களோடு தொடர்பில் இல்லாமல் அவர்களை பாவிகள் என்று கூறி ஒதுக்கி வைத்தது. ஆனால் ஒதுக்கி வைக்கப் படுவது அல்ல நமது நோக்கம். நோய்த்தொற்று காரணமாக தனிமைப்படுத்திக் கொண்டவர்களுக்கு ஆறுதலும் ஆதரவும் தருவது தான் நமது நோக்கமாகும். தற்போது கூட கோரோனா நோய் தொற்று காரணமாக ஆங்காங்கே மக்கள் தனிமையில் இருந்தபோது பல நல்ல உள்ளங்கள் இந்த தனிமையில் வாடும் உள்ளங்களுக்கு தேவையானவைகளை செய்தார்கள் என்பது நம்மில் யாரும் மறுக்க முடியாத ஒன்று. 


இத்தகைய பணியை தான் இயேசு அன்று அந்தச் சமூகத்தில் செய்தார். தொழுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவரை இயேசு தொட்டு குணப்படுத்தினார். மேலும் ஒருவன் குணம் பெற்றதன் அடையாளமாக கோவிலில் செலுத்தவேண்டிய காணிக்கைகளை செலுத்தி... தான் நோயிலிருந்து முற்றிலும் குணம் பெற்றான் என்பதை அனைவரும் அறியும் வகையில் அறியச் செய்து உன் வாழ்க்கை பயணத்தில் அடுத்தவருக்கு உதவி செய்ய கூடியவனாக வாழ்வதற்கு வழி செய்து கொடுத்தவர் தான் இந்த இயேசு. 

அன்று சமூகத்தால் நோயின் காரணமாக ஒதுக்கப்பட்டவர்களை ஒதுக்கி வைக்காமல் அவர்களை தொட்டு அவர்களோடு உறவாடி இயேசுவைப் போல நாம் ஒவ்வொருவரும் வாழ வேண்டும் என்ற செய்தியை தான் இன்றைய இரண்டாம் வாசகம் வழியாகவும் பவுலடியார் நமக்கு உணர்த்துகிறார். 
பவுல் தான் வாழ்ந்த காலங்களில் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்கும் போது பலவிதமான இன்னல்களையும், ஒடுக்குமுறைகளையும், அடக்குமுறைகளையும் சந்தித்தார்.ஆனால் மனம் தளராமல் எங்கெல்லாம் இயேசுவை ஏற்றுக் கொள்பவர்களுக்கு எதிராக அநீதி இழைக்கப்படுகிறதோ அங்கெல்லாம் நம்பிக்கையை தரக்கூடிய வார்த்தைகளை விதைத்தார். 

ஒரு காலத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரை அறிவிப்பவர்களையெல்லாம்  அழித்து, அவர்களை கொல்ல தேடிக் கொண்டிருந்த இவர் இன்று அதே ஆண்டவரின் பெயரை அறிவிக்கக்கூடியவர்களுக்கு நம்பிக்கையை ஊட்டும் நல்ல ஒரு முன்மாதிரியாக மாறினார்.

நாமும் பவுலைப் போல முன்மாதிரிகளாக மாறிட இறையருளை வேண்டி நமது செயல்களில் நல்லதொரு மாற்றத்தை உருவாக்கி கொண்டு சொல்வதை நிறுத்தி செயலில் காட்டக்கூடிய இயேசுவின் சீடர்களாக இவ்வுலகில் வலம்வர இறையருளை வேண்டுவோம். 

வெள்ளி, 12 பிப்ரவரி, 2021

ஏற்றுக்கொள்ள வேண்டுமா? (13.2.2021)

ஏற்றுக்கொள்ள வேண்டுமா?

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
  இன்றைய வாசகங்கள் அனைத்துமே நாம் நம்மை ஏற்றுக் கொள்ள வேண்டும், நம்மை ஏற்றுக் கொள்வதன் வழியாக அடுத்தவரை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற பாடத்தை அருமையாக கற்பிக்கின்றன. இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தன்னைத் தேடி வந்த, தான் சொல்வதை கேட்கக் கூடியிருந்த பெருந்திரளான  மக்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்கிறார். அவர்களை தன்னோடு இணைத்துப் பார்க்கிறார். நெடுநேரமாக நான் கூறுவதைக் கேட்டுக் கொண்டிருக்கக் கூடிய இம்மக்களை வீட்டிற்கு செல்லுங்கள் என அனுப்பி வைத்தால், பசியில் வழியில் மயக்கமுற நேரலாம். எனவே, அவர்களுடைய தேவையை தன்னுடைய தேவையாக பார்க்கிறார். அவர்களோடு தன்னை ஒப்பிட்டுப் பார்க்கிறார். அவர்களுடைய இன்ப துன்பங்களை தனது இன்ப துன்பமாக கருதுகிறார். அவர்களோடு தன்னை இணைத்து பார்க்கும் பொழுது அவர்களின் துன்பம் தனக்கு நேர்ந்தால் தான் என்ன செய்வேன் என்ற சிந்தனைக்கு உட்பட்டவாராய் அங்கு கூடியிருந்த மக்கள் அனைவரையும் இயேசு தன்னை ஏற்றுக் கொண்டது போல, அடுத்தவரையும் ஏற்றுக் கொள்கிறார். அதன் விளைவே அவர்களின் பசியை உணர்ந்தவராய், அவர்களின் உடல் நிலையை அறிந்தவராய், அவர்களுக்கு உணவு கொடுக்க வேண்டும் என்கிறார். இயேசு தான் தன்னை ஏற்றுக் கொண்டது போல இந்த மக்களை ஏற்றுக்கொண்ட செயலை தன்னோடு வைத்துக் கொள்ளாமல், தன் சீடர்களுக்கும் கற்பிக்க எண்ணுகிறார். எனவேதான் சீடர்களிடம் உணவு கொடுக்கச் சொல்கிறார்.  இயலாது என்று கூறும் போது கூட, உங்களிடம் இருப்பது என்ன? எனக் கேட்கிறார். ஏழு அப்பங்கள் என்கிறார்கள். அதை கொண்டு வரச் சொல்கிறார். அந்த அப்பங்களை அங்கிருந்த அனைவருக்கும் பகிர்வதற்கு இயேசு இறைவேண்டல் செய்து புதுமையை நிகழ்த்துகிறார். அப்பங்களைப் பலுகச் செய்தவருக்கு அதை பரிமாறத் தெரியாமல் இல்லை. ஆனால் அந்த அப்பங்களை எல்லாம் சீடர்களை பரிமாறச் சொல்கிறார். தான் அடுத்தவரை தன்னை ஏற்றுக் கொண்டது போல எப்படி அடுத்தவரையும் ஏற்றுக் கொண்டாரோ, அதே பாடத்தை தன்னுடைய சீடர்களும் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற காரணத்தினால், அவர்களிடம் இருந்ததைப் பெற்று, அவர்களிடம் இருந்ததை மிகுதியாகி அதை அவர்கள் வழியாகவே அடுத்தவரோடு  பகிரச் சொல்லி, ஒருவர் தன்னை ஏற்றுக் கொள்ளவும், ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ளவும் பாடம் கற்பிக்கிறார் இயேசு. ஆனால் 


இன்றைய முதல் வாசகத்தில் தன்னைத் தானே ஏற்றுக் கொள்ளாததாலும், அடுத்தவரை ஏற்றுக் கொள்ளாததாலும், விளைந்த ஒரு நிகழ்வை தான் வாசிக்க கேட்கின்றோம். என் எலும்பின் எலும்பும் சதையின் சதையும் ஆனவள் என்று கூறிய ஆண், உண்ணக் கூடாது என்ற கனியை உண்ட பிறகு, கடவுள் நீ என்ன செய்தாய்? அந்த மரத்தின் கனியை உண்டாயா? என்று கேள்வி எழுப்பும் போது நீர் எனக்குத் தந்த அந்தப் பெண் எனக்கு கொடுத்தாள், நானும் உண்டேன் என்கிறான். அதுவரை என் எலும்பின் எலும்பும் சதையின் சதையும் என்று கூறியவன் அவளை பிரித்துப் பார்க்கிறான். நீர் தந்த பெண் என்று கூறி அவளை தன்னிடமிருந்து அந்நியப்படுகிறான். தான் செய்த செயலை, தான் தவறியதை ஏற்றுக்கொள்ள இயலாத அவன், தன் தவறை, அது அடுத்தவரால் என, அடுத்தவரை அந்நியப்படுத்தி சுட்டிக் காட்டுகிறான். அதுபோலவே பெண்ணும் கடவுளின் கட்டளைக்கு செவி திறக்க,  கடவுளின் கட்டளைக்கு இதயத்தை திறக்க மறுத்து, பாம்பின் குரலுக்கு இதயத்தைத் திறந்து அந்த கனியை தான் உண்டதோடு மட்டுமன்றி அடுத்தவருக்கும் கொடுத்தாள். உண்டு அடுத்தவருக்கும் கொடுத்த அந்தப் பெண் கடவுள் கேட்டபோது, பாம்பு என்னை ஏமாற்றியது. நான் ஏமாந்தேன் எனக் கூறுவதை விட அடுத்தவர் என்னை ஏமாற்றினார்கள் என, தான் செய்த செயலை தான் ஏற்றுக் கொள்ளாமல்,  அடுத்தவர் மீது ஏற்றி கூறக்கூடிய செயலை நாம் வாசிக்கின்றோம்.  எனவேதான் இரக்கமே உருவான இறைவன் அங்கு நியாயமான ஒரு நீதிபதியாக செயலாற்றுகிறார். இன்று நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில், நாம் நம்மை ஏற்றுக் கொள்ள வேண்டும். நம்மால் நமக்கு நிகழக்கூடிய இன்ப துன்பம் அனைத்தையும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். நம்மை ஏற்றுக் கொள்வது போலவே அடுத்தவரையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த ஏற்றுக்கொள்ளும் பண்பை நாம் உள்வாங்கிக் கொள்ளும் போது நம்மிடையே வேறுபாடுகள் இல்லை. உயர்வு தாழ்வு என்பது இல்லை.  நம் இடையில் சண்டைகள் இல்லை. இதை உணர்ந்தவர்களாக நம்மை நாம் ஏற்றுக் கொள்வது போல அடுத்தவரையும் ஏற்றுக்கொண்டு, ஆண்டவரின் அன்பு கட்டளையான உன்னை நீ அன்பு செய்வது போல அடுத்தவரையும் அன்பு செய் என்ற கட்டளைகளின்படி வாழ்வதற்கு நாம் தயாராவோம். அதற்கு நாம் நம்மை ஏற்றுக் கொள்வோம். பிறகு நம்மை ஏற்றுக் கொள்வது போல அடுத்தவரையும், அவர்களின் உணர்வுகளையும் எண்ணங்களையும் ஏக்கங்களையும் உணர்ந்து கொள்வோம், ஏற்றுக் கொள்வோம்.  இதற்கான அருளை வேண்டி இறைவனிடம் இறைஞ்சி மன்றாடி, இறைவனிடத்தில் பெற்றுக்கொள்வோம்.

வியாழன், 11 பிப்ரவரி, 2021

இதயக் கதவுகளை திறப்போம் (12.2.2021)

இதயக் கதவுகளை திறப்போம் 

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
           அது ஓர் அழகிய நகரம். அந்த நகரத்தின்  நுழைவு வாயிலில் எப்போதும் ஒரு வயதான பெரியவர்  அந்நியர்கள் யாரும் உள்ளே சென்று விடாமல் காவல் காத்துக்கொண்டிருப்பார். ஒரு நாள் வாலிபன் ஒருவன் நகரத்தின் வாயிலை நோக்கி குதிரையில் வந்துகொண்டிருந்தான். 

அப்போது அங்கிருந்த வயதான காவலாளியிடம் "ஐயா பெரியவரே, இந்த ஊர் மக்கள் எப்படி?"என்று கேட்டான்.

அதற்குக் காவலாளி "ஏன் கேக்குற தம்பி ? இந்த ஊருக்கு குடிவரப் போறியா?" என்று சந்தேகத்துடன் கேட்டார்.

"ஆமாம் ஐயா. நான் முன்னாடி இருந்த ஊர் ரொம்ப மோசம். எதுக்கெடுத்தாலும் சண்டைக்கு வருவாங்க. ஒருத்தரைப் பத்தி ஒருத்தர் தப்பா பேசிக்கிட்டும் திட்டிக்கிட்டும் , எப்படா அந்த ஊரை விட்டு வருவோம்னு இருந்தது. அதான் கேட்டேன் இந்த ஊர் எப்படி?" என்று கேட்டான்.

''நீ வேற தம்பி, இந்த ஊர் உன்னுடைய ஊரைவிட ரொம்ப  மோசம். போட்டி, பொறாமை, ஜாதிச் சண்டை, கலவரம்ன்னு ஏதாவது ஒரு பிரச்னை இருந்துக்கிட்டே இருக்கும். நீயே நிம்மதியைத் தேடி வர்ற, உனக்கு இந்த ஊரு சரிப்படாது தம்பி " என்று கூறி அந்த வாலிபனை  வெளியே வழியனுப்பி வைத்தார். 
                
                   சிறிது நேரம் கழித்து,
அவ்வழியாக  வந்த வேறொரு ஆள் காவலாளியிடம் அதே கேள்வியைக் கேட்டான்.

"ஐயா, இந்த ஊரில் தங்கி வியாபாரம் பண்ணலாம்ன்னு இருக்கேன். இந்த ஊர் மக்கள் எப்படி?"
  
                                பெரியவர் சிரித்துக்கொண்டே , "ஏன் தம்பி, உனக்குக் கல்யாணம் ஆகிடுச்சா ?"என்று கேட்டார்.

"மூன்று குழந்தையே இருக்குதுங்க ஐயா" என்றான்.

"அப்புறம் ஏன்? இந்த ஊருக்கு வர்ற? உங்க ஊர்லயே வியாபாரம் பண்ணலாம்ல? " என்றார் காவலர்.

"எங்க ஊர் மாதிரி வராதுங்க.. அந்த ஊர் மக்கள் ரொம்பப் பாசக்காரங்க. என் குடும்பம் இப்போ வறுமையில இருக்கு. சம்பாதிக்கத்தான் இந்த ஊருக்கு வந்தேன். நல்லா  சம்பாதிச்சிட்டு மறுபடியும் அங்கேயே போயிடுவேன்" என்று கண் கலங்கியபடியே கூறினான்.

"அழாதே தம்பி, இந்த ஊர் மக்களும் ரொம்ப நல்லவங்க. தைரியமா நீ வியாபாரம் பண்ணலாம்" என்று கூறி கதவுகளைத் திறந்து உள்ளே அனுப்பி வைத்தார்.

காவலாளியின் அருகில் இருந்த ஒருவர் இந்த இரண்டு சம்பவங்களையும் கவனித்துக்கொண்டிருந்தார்.

உடனே அவரிடம் "முதலில் வந்தவர்கிட்ட இந்த ஊர் பொல்லாததுன்னு சொன்னீங்க, இவர்கிட்ட மட்டும் நல்ல ஊர்ன்னு சொல்லுறீங்களே ஏன்?" என்று சந்தேகத்துடன் கேட்டார்.

அதற்குப் பெரியவர்  "இந்த உலகம் கண்ணாடி மாதிரி. நாம எப்படி இருக்கிறோமோ அப்படித்தான் கண்ணாடி நம்மைக் காட்டும்'' என்றார். ஒரு சிறு விதை போன்றது தான் நமது வாழ்வும். நல்ல எண்ணங்களை விதைத்தால் நன்மையை அறுவடை செய்வோம். போட்டி பொறாமையுடன் தீய எண்ணங்களை விதைத்தால் தீயவற்றை தான் அறுவடை செய்வோம், என்றார் அந்த பெரியவர்.

  ஆம்! அன்புக்குரியவர்களே!

மேற்கண்ட நிகழ்வில் நாம் காணும் காவலாளி, வாயிலின் உள்ளே வருவோரையும் போவோரையும் கவனித்துக் கொள்பவராக, வாயில் கதவினை யாருக்கு, எந்த நேரத்தில் திறக்க வேண்டும் என்பதை அறிந்தவராக  இருக்கிறார். இந்த காவலாளியைப் போலவே நாமும் நமது மனதிற்கு உள்ளே செல்கின்ற காரியங்களையும் அவற்றில் இருந்து வெளியேறுகின்ற காரியங்களையும் நாம் கவனிக்க வேண்டும், சிந்தித்து சீர்தூக்கி பார்க்க வேண்டும் என இன்றைய வாசகங்கள் வழியாக இறைவன் நமக்கு அழைப்பு விடுக்கின்றார்.

              இன்றைய முதல் வாசகத்தில் சூழ்ச்சி மிக்க பாம்பு கூறிய வார்த்தைகள் அனைத்தையும் சிந்தித்துப் பார்க்காமல்,  அந்த வார்த்தைகளால் கவரப்பட்ட ஏவாள்,  பாம்பு கூறிய வார்த்தைகளைப் பற்றி, அந்த வார்த்தைகளின் விளைவுகளைப் பற்றி எண்ணாமல், அவற்றை தனது இதயத்தினை திறந்து அதனுள் அனுமதித்தாள்.  
                 கடவுள் தொடக்கத்தில் இவ்வுலகில் மனிதர்களை படைத்த பொழுது, அவர்களுக்கு திறந்த செவிகளையும் ஒளிரும் கண்களின் பார்வையையும், வார்த்தைகளை எடுத்துரைக்க தெளிவான நாவையும் கொடுத்தார். தனது உடலின் காதுகள் திறந்திருந்தாலும் தனது உள்ளத்தின் காதுகள் உணர்வற்று இருந்தபடியால், அன்று அந்த பாம்பின் வார்த்தைகளுக்கு செவி கொடுத்து செயல்பட்டதனால், அந்த வார்த்தைகளால் தனது ஆசீர்வாதத்தை இழந்து போகின்றாள். 
        
                   இன்றைய நற்செய்தி வாசகத்தில் பல ஆண்டுகளாக காதுகளும் வாயும் கட்டப்பட்டதாக வாழ்ந்து கொண்டிருந்த மனிதனுக்கு அவனுடைய காதுகளையும் நாவையும் ஆண்டவர் இயேசு திறந்து விடுகின்றார், கட்டவிழ்த்து விடுகின்றார். வாழ்நாள் முழுவதும் அடைபட்ட காதுகளுடன் கட்டப்பட்ட வாயுடன் வாழ்ந்து கொண்டிருந்த அந்த ஏழை மனிதன் தனது இதயக் கதவுகளை, தனது இதயத்தின் செவிகளை, ஆண்டவரின் ஆசீர்வாதத்திற்கு திறந்துவைத்து இருந்தபடியால் அன்று அந்த மனிதன் ஆண்டவர் இயேசுவை கண்டு கொண்டான். அன்று ஆண்டவரின் வார்த்தைக்குச் செவிகொடுத்து அந்த மனிதன் தனது கட்டுகளிலிருந்து அன்று விடுவிக்கப்பட்டான். அடைபட்டிருந்த காதுகள், அன்று அவனுக்கு ஆண்டவர் இயேசுவினால் திறந்து விடப்பட்டன. தனது வாழ்நாள் முழுவதற்குமான ஆசீர்வாதங்களை அன்று அந்த மனிதன் பெற்றுக் கொண்டான்.

                 இன்று நமது வாழ்வில் கவர்ச்சிகரமாக வந்து நம்மை ஏமாற்ற காத்திருக்கும் சாத்தானுக்கு செவிகொடுத்துக் கொண்டிருக்கிறோமா? அல்லது உண்மையின் வழியில், நன்மையின் வழியில் வாழ நம்மை அழைக்கும் ஆண்டவர் இயேசுவின் குரலுக்கு செவி கொடுக்கின்றோமா? யாருடைய குரலுக்கு நமது செவிகளை திறந்து வைத்து இருக்கின்றோம் என சற்று சிந்திப்போம். ஆண்டவர் இயேசுவின் ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ள நமது இதயக் கதவுகளை, ஆண்டவர் இயேசுவை நோக்கி திறந்து வைப்போம்.  நமது இதயத்தை காவல் செய்து நாம் பெற்ற நன்மைகள், ஆண்டவரின் ஆசிகள், நமது அண்டை அயலாருக்கும் கிடைக்கப்பெற, எல்லோரும் வாழ்வு பெற இன்றைய நாளில் இவ்வேளையில் சிறப்பாக ஜெபிப்போம்.

புதன், 10 பிப்ரவரி, 2021

நாம் வைத்த பெயர்களை நினைவு கூர்வோம்!...(11.2.2021)

நாம் வைத்த பெயர்களை நினைவு கூர்வோம்!...

 இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
இன்றைய முதல் வாசகத்தில் மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று, அவனுக்குத் தகுந்த துணையை உருவாக்குவேன் என்று, ஆண்டவர் தகுந்த துணையை உருவாக்கியும் இவ்வுலகில் அவர் உருவாக்கிய உயிரினங்கள் அனைத்தையும் மனிதனின் முன்பாகக் கொண்டுவந்து நிறுத்தி இவற்றுக்கு மனிதன் என்ன பெயரிடுகிறான் என்று பார்க்க அனைத்தையும் அவனிடம் கொண்டு வந்தார். உயிருள்ள ஒவ்வொன்றுக்கும் அவன் என பெயரிட்டானோ அதுவே  அவைகளின் பெயராக மாறியது. படைத்தவருக்கு பெயரிடத் தெரியாமல் அல்ல.  மாறாக படைத்தவர் படைப்புகளின் மகிழ்வை தன்  மகிழ்வாக எண்ணினார். அதன் விளைவே அனைத்திற்கும் பெயரிட அனைத்தையும் மனிதனிடம் கொண்டு வந்தார். மனிதன் தனிமையாக இருப்பது நல்லதல்ல என்று உணர்ந்து கடவுள் அவனுக்கு தகுந்த துணையை உருவாக்கி, அந்த துணையையும் அவனிடம் கொண்டுவந்தார். அந்த துணையை கண்ட மனிதன், இவளே என் எலும்பின் எலும்பும் சதையின் சதையும் ஆனவள். ஆணிடம் இருந்து எடுக்கப்பட்டதால் இவள் பெண் என்று அழைக்கப்படுவாள் என பெண் என பெயரிட்டதை இன்றைய முதல் வாசகம் வழியாக நாம் வாசிக்கிறோம். பொதுவாகவே நாம் பெயர்களைக் குறித்து மகிழக் கூடியவர்களாக இருக்கிறோம். நான் என்னுடைய களப்பணியை திருச்சியில் இருக்கக்கூடிய நாசரேத்து என்னும் ஊரில் உள்ள புனித வளனார் குழந்தைகள் இல்லத்தில் எனது களப்பணி யை நான் செய்திட, முதன்முதலாக அந்த இடத்திற்குச் சென்றபோது அங்கிருந்த குழந்தைகளின் பெயர்களை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக அனைவரையும் வட்டமாக அமர வைத்து, உங்கள் பெயர்களை எனக்கு அறிமுகப்படுத்துங்கள். ஆனால் நான் என்றும் உங்கள் பெயரை மீண்டும் மறந்து விடாத படி, மறந்துவிட்டு உங்களிடம் கேட்காதபடி நீங்கள் ஏதாவது ஒரு புனைப் பெயரை வைத்துக் கொண்டு உங்கள் பெயரை எனக்கு அறிமுகப்படுத்துங்கள் என்று கூறினேன். வட்டமாக அமர்ந்து உங்கள் பெயர்களை எனக்கு அறிமுகப்படுத்துங்கள் என்றேன். உடனே ஒவ்வொருவராக எழுந்து தங்கள் பெயருக்கு முன்பாக ஒரு அடைமொழியை வைத்துக் கொண்டு தங்களின் பெயர்களை எனக்கு அறிமுகப்படுத்தினார்கள். அவைகளுள் சில, 
சந்தோஷ சந்தோஷ், 
பெயர் ராகுல்,  விளையாட்டு வீரர் ராகுல் சர்மா என்று கூறினான். 
சாந்தமான சாம்சன்,
என பலர் தங்கள் பெயர்களை அறிமுகப்படுத்தினார்கள். 

நான் அவர்களிடம், சரி! இப்போது நீங்கள் எல்லோரும் ஒரு புனை பெயரோடு உங்கள் பெயர்களை எனக்கு சொன்னீர்கள். இருந்தாலும் அதை மனதில் வைத்துக் கொள்வது என்றால், அனைத்தையும் உடனடியாக மனதில் ஏற்றிக் கொள்ள முடியவில்லை. எனவே  வருகிற நாட்களில் உங்கள் பெயர்கள் அனைத்தையும் மனதில் வைத்துக் கொள்கிறேன். இன்னும் எளிமையாக எனக்கு பெயர்களை உங்களால் சொல்ல முடியுமா என்று கேட்டேன். அப்போது அவர்கள், அடுத்தவரின் பெயரை உங்களுக்கு எங்களால் நினைவூட்ட முடியும் என்று கூறினார்கள்.  ஒவ்வொரு நபருக்கும் ஒரு அடைமொழி பெயர் வைத்து, இவனை இப்படி மனதில் வைத்துக்கொள்ளுங்கள். அவனை அப்படி மனதில் வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறி,  ஒவ்வொருவருக்கும் ஒரு புனைப் பெயர் வைத்தார்கள். அப்போது குழந்தைகளிடத்தில் நான் கூறியது, நமக்கு நாம் பெயர் வைத்துக் கொள்ளும் பொழுது மிகவும் அழகான அன்பான சாந்தமான பெயர்களையும் புகழ்மிக்கவர்களின் பெயர்களையும் நமது பெயரோடு இணைத்து கூறினோம். அதேபோல் அடுத்தவருக்கு பெயர் வைக்கச் சொல்லும் பொழுது, அது அடுத்தவருக்கு என்றால்,  மிகவும் இழிவான,  பலரும் கேட்டு நகைக்கக்கூடிய ஒரு அடைமொழியை  பெயருக்கு முன்னால் சேர்க்கிறோம்.  நம்மைப்போல அடுத்தவரையும் நாம் நேசிக்க வேண்டும் என்ற பாடத்தை என்று அவர்களுக்கு கற்பித்தேன். அதே சமயம் நானும் பலரின் பெயர்களை மனதில் உள்வாங்கிக் கொண்டேன்.  பலருக்கு பெயர் வைக்கும் பொழுது நமக்கு நல்ல பெயர்களை வைத்துக் கொள்ள விரும்பும் நாம், அடுத்தவருக்கு நல்ல பெயர்களை வைப்பதற்கு பதிலாக, தரக்குறைவான, இழிவான பெயர்களை வைக்கக்கூடிய ஒரு செயலை அங்கு நான் கண்டுணர  முடிந்தது.  அச்செயலை நான் தொடரக் கூடாது என்ற பாடத்தை அன்று நானும் கற்றுக்கொண்டேன், குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுத்தேன்.  இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட இச்சமுதாயம் ஒரு பெண்ணை, நாய் எனக் கருதி அழைப்பதை இயேசு சுட்டிக்காட்டுகிறார். இயேசு இந்த மண்ணில் வாழ்ந்த போது இயேசு என்பவர் யூத இனத்தில் பிறந்தவர். எனவே, மெசியா என்பவர்,  யூதர்களுக்கு மட்டுமே என்ற சிந்தனை மேலோங்கி காணப்பட்டது. யூதர்கள் தாங்கள் மட்டுமே நேர்மையானவர்கள், கடவுளுக்கு உகந்தவர்கள், கடவுளின் பிள்ளைகள் எனக் கருதினார்கள். யூதரல்லாத கலப்பின மக்கள் அனைவரும் புறவினத்தார்.  அவர்களுக்கு கடவுளுடைய மீட்புத் திட்டத்தில் பங்கு இல்லை. நமது கடவுள் அவர்களுக்கான கடவுள் இல்லை என்ற எண்ணத்தில் அவர்களை ஒதுக்கியும், சமுதாயத்தில் வேறுபாடுகளை உருவாக்கிக் கொண்டும் வாழ்ந்து வந்தார்கள்.  இச்சூழலில் தான் நாய்கள் எனக் கூறக் கூடிய வழக்கம் இருந்தது, இத்தகைய பண்பை இயேசு இன்று சுட்டிக்காட்டுகிறார். தன்னை சுற்றி இருக்கக் கூடிய சீடர்கள், சதுசேயர்கள், பரிசேயர்கள்,  யூதர்களுக்கு மத்தியில், ஒரு கனானியப் பெண் உதவி கேட்டு வரும்பொழுது,
பிள்ளைக்குரிய உணவை எடுத்த நாய்க்கு போடுவதில்லை என்று இயேசு பயன்படுத்தக்கூடிய வார்த்தையானது, அன்று அச்சமூகத்தில் கனானிய பெண்கள், புறவினத்துப் பெண்கள் எப்படி நடத்தப்பட்டனர் என்பதை சுட்டிக்காட்டுகிறது. நமக்கு நல்ல பெயர்களை வைத்துக் கொள்ள விரும்பக்கூடிய ஒவ்வொருவரும் அடுத்தவருக்கு இழிவான பெயர்களை சூட்டுகிறோம். நாய் நன்றியுள்ள விலங்கு தான்.  அது இழிவானது எனக் கூறவில்லை.  ஆனால் மனிதனை நாய் எனக் கூறுவது இழிவாக பார்க்கப்படுகிறது. இயேசுவும் அதே வார்த்தைகளை பயன்படுத்தினார்.  ஆனால் கானானிய பெண்ணோ,  தாழ்ச்சியோடு மேஜையின் மேலிருந்து கீழே விழும் துண்டுகளை  நாய்கள் தின்னுமே என்று தன்னுடைய உள்ளத்தில் இயேசுவின் மீது தான் கொண்டிருந்த நம்பிக்கையை வெளிப்படுத்தியதன் விளைவாக, இயேசு அன்று அங்குச் கூடியிருந்த மக்கள் அனைவருக்கும் தன்னுடைய சீடர்களுக்கும், மெசியா ஒரு குறிப்பிட்ட இனத்தவருக்கு மட்டுமல்ல அனைவருக்கும் உரியவர். 

மேஜை மீது அமர்ந்திருக்கும் பிள்ளைகள் ஆனாலும் சரி, நாய்கள் என்று நீங்கள் சொல்லக்கூடிய மேஜைக்கு கீழே இருப்பவர்கள் ஆனாலும் சரி, அனைவரும் உண்பது ஒரே வகையான உணவையே!
அதுபோலவே மெசியா என்பவர் அனைவருக்குமானவர் என்ற பாடத்தையும் அங்கு கற்பிக்கின்றார்.  மனிதனை மனிதன் தாழ்வாகவும் இழிவாகவும் நடத்தக் கூடிய செயல் தவறானது என்பதை தன் வார்த்தைகள் வழியாக எதார்த்தமாக அங்குள்ளவர்களுக்கு, அவர்களின் மனநிலையை அறிந்தவராக இயேசு அவர்கள் வழியில் அவர்களுக்கு பாடம் கற்பிக்கின்றார். இன்று நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில் பல நேரங்களில் பலருக்கு நாம் இழிவான பெயர்களைச் சூட்டி மகிழ்ந்திருக்கிறோம். நமக்கு யாரேனும் ஒருவர் இழிவான பெயர் சூட்டினால் நாம் எவ்வாறு துன்புறுகிறோமோ அதுபோல அடுத்தவர்களும். பெயர் என்பது மனிதனின் உடலில் உயிர் உள்ளவரை மட்டுமே. உடலை விட்டு உயிர் பிரிந்தால் உடலை எடுங்கள் என்று தான் கூறுவார்களே தவிர, பெயரைச் சொல்லி அவரை எடுங்கள் என்று கூற மாட்டார்கள். நாம் இருக்கும் இந்த உலகத்தில் நாம் காணக்கூடிய ஒவ்வொரு மனிதரையும் நம்மைப் போலவே நேசிப்போம். நம்மைப் போலவே அவர்களையும் ஏற்றுக்கொள்வோம். நமக்கு இருப்பதுபோலவே சிறப்பு பண்புகள் அவர்களுக்கும் இருக்கின்றன என்பதை உணர்ந்தவர்களாக, ஒருவர் மற்றவரை அன்போடு நேசிக்கவும் அரவணைத்து வாழவும் உள்ளத்தில் உறுதி ஏற்றுக் கொள்வோம். எப்படி கடவுள் தொடக்கத்தில் தான் படைத்த அனைத்துக்கும் தான் பெயரிட்டு மகிழாமல் அடுத்தவன் மகிழ வேண்டும் என்ற எண்ணத்தோடு தனது படைப்பின் சிகரமான மனிதன் முன் கொண்டு வந்து நிறுத்தி, அனைத்திற்கும் பெயர் வைக்கச் சொல்லி அவன் வைத்த பெயரை குறித்து மகிழ்ந்தாரோ, அந்த இறைவன் இன்று நாம் வாழும் சமூகத்தில் அடுத்தவர்களுக்கு  நாம் கொடுக்கக்கூடிய பெயர்களைக் குறித்து மகிழவேண்டும். சாதி மத இன மொழி அடிப்படையில் ஒருவரை ஒருவர் நம்மை விட தாழ்ந்தவர்கள் என மதிப்பிட்டுக்கொள்வதையும் இழிவாக நடத்துவதையும் இழிவான பெயர்களால் அவர்களை அழைப்பதையும் இறைவன் விரும்புவதில்லை. இத்தகைய பெயர்களில் நாம் மற்றவர்களை அழைக்கக் கூடியவர்களாக இருப்போமாயின், கண்டிப்பாக கனானியப் பெண்ணின் அருகில் நின்ற இயேசு, இன்று நம் அருகில் நின்று நமக்கு கற்றுத்தரும் பாடம், இவ்வாறு செய்யாதே என்பதாகும்.  அனைவரையும் அன்போடு ஏற்றுக் கொள்கின்ற பாடமாகும். இயேசு கற்பித்த இந்த பாடத்தை உணர்ந்து கொண்டவர்களாக வாழ்வில் மாற்றத்தை உருவாக்கிக் கொண்டு, காணும்  மனிதர்களிடம் இயேசுவை கண்டு கொள்ள, இன்றைய நாளில் தொடர்ந்து இறையருள் வேண்டி பயணிப்போம்.

செவ்வாய், 9 பிப்ரவரி, 2021

உள்ளத்தின் வெளிப்பாடு என்ன? (10.2.2021)

உள்ளத்தின் வெளிப்பாடு என்ன?

 இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! 
இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

 இன்றைய முதல் வாசகத்தில் இறைவன் தான் படைத்த இப்புவியை பண்படுத்தவும் பாதுகாக்கவும் மனிதனை உருவாக்கினார். தான் உருவாக்கிய மனிதன் எப்படி செயல்பட வேண்டும் என்பதை உள்ளத்தில் சிந்தித்தவராய், தான் உருவாக்கிய மனிதனுக்கு இவ்வுலகில் உள்ள அனைத்தையும் தன் விருப்பம் போல பயன்படுத்த அனுமதிக்கிறார். ஆனால்  நன்மை,தீமை அறியும் மரத்தின் கனியை மட்டும் உண்ணாமல் இருக்க கட்டளையைப் பிறப்பிக்கின்றார்.  

பொதுவாகவே மனித மனமானது ஆசையின் அடிப்படையில் நகரக் கூடியது.
மனிதன் என்ற படகுக்கு ஆசைகள் தான் துடுப்புகளாக இருக்கின்றன. 
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆசை. 
ஒருவன் பொன்னை விரும்புகிறான். 
ஒருவன் மண்ணை விரும்புகிறான்.  
ஒருவன் பதவியை விரும்புகிறான். 
ஒருவன் பணத்தை விரும்புகிறான். 
ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு விதமான ஆசை மனிதனுக்குள் துளிர்விடுகிறது. 
ஆசை இல்லாத மனிதனே இல்லை. 
ஆசைகளைத் துறக்க வேண்டும் என்பவனும் மோட்சத்தை விரும்புகிறான்.  
மனிதன் ஆசைப்படுவதெல்லாம் அவனுக்கு கிடைத்துவிடுவதில்லை.

முதல் பெற்றோர்களிடம் எப்படி கடவுள் செய்யக்கூடாது எனக் கூறியதை, ஆசையின் அடிப்படையில் மனிதன் செய்தானோ, அது போலத்தான் இன்றும், இச்சமூகத்தில் செய்யக்கூடாது என்பதை தான் கொண்ட ஆசையினால் சுயநலத்திற்காக செய்கின்றான்.  அதன் பிறகு தான் செய்ததை சரியென நியாயப்படுத்த விரும்பியவனாய் குற்றத்தை  பிறர் மீது சாட்டுகின்றான். இப்படிப்பட்ட மனித வாழ்வில் இன்றைய நாளில் நற்செய்தி வழியாக இறைவன் நமக்கு தரக்கூடிய செய்தி... 
மனிதனுக்கு உள்ளே செல்லக் கூடிய எதுவும் அவனை தீட்டுப்படுத்துவதில்லை. மாறாக, மனிதனிடமிருந்து வெளிவருவதே தீட்டுப்படுத்துகிறது என்கின்றார்.

மனிதனுக்குள்ளாக இருக்கக்கூடிய ஆசை என்ற உணர்வானது, இந்த அகிலத்தில் பலவிதமான அநீதிகள் உருவாகுவதற்கு வழிவகுக்கிறது.உள்ளத்தில் இருந்து வெளிவரக்கூடிய ஆசையின் அடிப்படையில் மனிதன் பலவற்றை இவ்வுலகத்தில் செய்கிறான். அதனால் பலவிதமான இன்னல்களை சந்திக்கின்றான். ஆசை, இச்சை, விருப்பம், பேரவா இவை அனைத்தும் மனிதனிடம் இருந்து வேரோடு பிடுங்கப்பட வேண்டியவை. இவைகள் மனிதனை அடக்கியாள நினைக்கும். ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் ஆசை என்பது இருக்கிறது. இதைத் தான், ஆசை யாரை விடும்? அது அனைவர் மனதிலும் வேரை விடும் எனக் கூறுவார்கள்.  ஆசையை வென்றவர்  அகிலத்தில் யாருமில்லை என்று கூறுவார்கள். கடவுளைப் போல மாற வேண்டுமென்ற ஆசையின் வெளிப்பாடு தான், மனிதன் கடவுளின் கட்டளையை மீறினான்.    நமக்குள் இருக்கக்கூடிய இந்த ஆசையின் அடிப்படையில் உதயமாகும் ஆசை, இச்சை, விருப்பம், பேரவா போன்றவற்றை சிறப்பாக நெறிப்படுத்தி கையாள நாம் அழைக்கப்படுகிறோம். 

கிறிஸ்து இயேசுவை ஆண்டவராக ஏற்றுக்கொண்டீர்கள். அவரோடு இணைந்து வாழுங்கள்.
கொலோசையர் 2:6 நாம் இயேசுவில் வேரூன்றியவர்களாகவும் அவர் மீது கட்டியெழுப்பப்பட்டவர்களாகவும் இருங்கள். நீங்கள் கற்றுக்கொண்ட விசுவாசத்தில் உறுதியாக நில்லுங்கள். நன்றி மிக்கவர்களாய்த் திகழுங்கள்.
கொலோசையர் 2:7 என்று திருத்தூதர் பவுல் நம்மை ஆசையிலே வேரூன்றியவர்களாக அல்ல, மாறாக, கிறிஸ்து இயேசுவில் வேரூன்றியவர்களாக வாழ நம்மை அழைக்கின்றார்.

ஏனெனில், பரத்தைமையில் ஈடுபடுவோர், ஒழுக்கக் கேடாக நடப்போர், சிலை வழிபாடாகிய பேராசை கொண்டோர் போன்ற எவரும் கிறிஸ்துவுக்கும் கடவுளுக்கும் உரிய அரசில் உரிமைப் பேறு அடையார் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.
எபேசியர் 5:5 
                எனவும் தனது சுயநலப் போக்கின்படி வாழ்பவர்களை புனித பவுல் எச்சரிக்கின்றார்.

                                மனிதன் ஒரு உயர்ந்த மலையின் அடியில் நின்று கொண்டே, சிகரத்தின் உச்சியை அடைய வேண்டும் என எண்ணினால், அவனது மன எண்ணம் நிறைவேறுமா? இயலாது. முயற்சிக்க வேண்டும். முயற்சியின்போது தடைகள் உருவாகும். 
தடைகளை உடைத்து எறிய சக்தியையும் யுக்தியையும் பயன்படுத்த வேண்டும். 
சூழலுக்கு ஏற்ப வாழப் பழகிக்கொள்ள வேண்டும். 
இறைவனை மனதில் இருத்தி எதையும் துவங்க வேண்டும். 
அந்த அடிப்படையில், உள்ளத்தில் இருக்கக்கூடிய ஆசை, இச்சை, பேரவா, விருப்பம் போன்ற நமக்குள் இருக்கக்கூடிய தீய எண்ணங்களை எல்லாம் களைவதற்கான முயற்சியில் நாம் ஈடுபட வேண்டும். 
அதற்கான முயற்சியில் தோல்விகளை நாம் சந்தித்தாலும், முயற்சிகளை கைவிடக்கூடாது. தொடர்ந்து முயற்சித்து நம்மிடம் நம்முள் இருந்து வெளிவரக்கூடிய அன்பால் இச்சமூகத்தில் அநீதியையும், அமைதியற்ற சூழலையும் உருவாக்காமல் அன்பை அடிப்படையாகக் கொண்டதாக அமைந்திட வேண்டும் என்ற சிந்தனையை இன்றைய வாசகங்கள் மூலம் இறைவன் நமக்குத் தருகின்றார். இறைவனது குரலினை உணர்ந்து கொண்டவர்களாக, நம்மையே நாம் சரி செய்து கொண்டு, அவர் காட்டும் பாதையில் அவரைப் பின் செல்ல நம் உள்ளத்தின் வெளிப்பாடு என்ன?என்பதை கண்டுணர்ந்து கொள்ள இறையருளை வேண்டுவோம்.

திங்கள், 8 பிப்ரவரி, 2021

மரபுகள் கற்பிக்கும் பாடம் என்ன? (9.2.2021)

மரபுகள் கற்பிக்கும் பாடம் என்ன?

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய வாசகங்கள் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்....

 இன்றைய முதல் வாசகத்தில் இறைவன் உயிரினங்களை படைப்பதை நாம் வாசிக்க  கேட்கின்றோம்.  கடல் வாழ் உயிரினங்கள், தரையில் நடமாடக் கூடிய கால்நடைகள் என அனைத்தையும் இறைவன் படைக்கின்றார்.  இறைவனின் படைப்பு அனைத்தும்   இறைவனின் அன்பை இவ்வுலகத்திற்கு வெளிப்படுத்துவதற்காகவே படைக்கப்பட்டன. இந்த படைப்புகள் அனைத்தும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான பாடத்தை நமக்கு கற்பிக்கின்றன. அவைகளுள் சில மரபுகளாக மாறுகின்றன. நேர்மறையான மரபுகளை புறம் தள்ளிவிட்டு மனிதன் தனக்கு சாதகமான  மரபுகளை மட்டும் இறுக பிடித்துக்கொண்டு மரபுகளின் அடிப்படையில் ஒருவரை ஒருவர் குறைகாணக் கூடியவர்களாக இருக்கின்ற தன்மையை தான் இன்றைய நற்செய்தி வாசகத்தின் வழியாக இயேசு சுட்டிக்காட்டுகிறார்.

நமது முன்னோர்களின் மரபுகளை படிப்பதையும், அம்மரபுகளின் அடிப்படையில் நமது வாழ்க்கைமுறை தொடரும் பொழுதும் நம் முன்னோர் காலத்தில் இருந்தது போன்ற பொற்காலத்தை இப்போது உருவாக்கலாம் என்று மரபுகளை பின்பற்றும் சிலர் கூறுவார்கள்.

ஆனால் நவீன கவிதை கூறுகிறது பொற்காலத்தை பற்றி படிப்பதைவிட அதை உருவாக்க முயற்சி எடுப்போம் என்று ...

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் சீடர்கள் செய்த செயல்களை சுட்டிக் காண்பித்து முன்னோரின்  மரபுபடி நடவாமல் இருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டினை இயேசுவின் சீடர்கள் மீது  வைக்கும்பொழுது கடவுளின் கட்டளையை கைவிட்டுவிட்டு மனித மரபைப் பின்பற்றி வருகிறீர்கள் என்று மரபுகள் குறித்து தாங்கள் கொண்டிருந்த எண்ணங்களை சீர்தூக்கி பார்க்க அழைப்பு தருகிறார்.  
ஆபிரகாமின் பிள்ளைகள் என மார்தட்டிக் கொள்ளக்கூடிய ஒவ்வொருவருமே ஆபிரகாமிடம் இருந்தும் ஈசாக்கிடம் இருந்தும் பாடம் கற்றுக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. அன்று கடவுளின் வார்த்தைக்கு இணங்கி ஆபிரகாம் தன் மகனை அழைத்துக்கொண்டு பலியிடுவதற்காக மலைக்குச் சென்றார். தன்னைத்தான் பலியிட போகிறார் என்பதை அறியாதவராய் பலிக்கு தேவையான விறகு கட்டையை சுமந்துகொண்டு தந்தையின் பின் சென்றவர் ஈசாக்கு.
ஆபிரகாம் கடவுளின் வார்த்தைக்கு செவி கொடுத்து கடவுள் மீது தான் கொண்டிருந்த  நம்பிக்கையை வெளிக்காட்டினார் . 
முன்னோர்கள் வகுத்துத் தந்த மரபுகளை எல்லாம் பிடித்துக் கொள்ள கூடிய ஒவ்வொருவரும் ஆபிரகாமிடம் காணப்பட்ட கடவுள் மீதான நம்பிக்கையை இருக பிடித்துக்கொள்ள வேண்டும். ஆனால் அதைச் செய்யத் தவறிய பரிசேயர்களை இயேசு சுட்டிக்காட்டுகிறார்.

சுட்டிக் காட்டக்கூடிய இயேசு முன்னோரின் மரபுகளை பின்பற்றதவறல்ல இவர். ஆபிரகாமை விட ஒரு படி உயர்ந்து ஈசாக்கின் இடத்தைப் பெறுகிறார்.  தன்னைத்தான் பலியிட போகிறார்கள் என அறியாமல் சென்ற ஈசாக்கை விட, தான் இந்த உலகத்தில் மக்களுக்காக பலியாக போகிறேன். இது கடவுளின் விருப்பம் என்று உணர்ந்தவராய் தன்னை முழுவதும் பலியாக ஒப்படைத்தவர்தான் இயேசு. இவரிடம் காணப்பட்ட நம்பிக்கைதான் பலவிதமான நற்செயல்களை இவர் மண்ணில் செய்வதற்கு காரணமாக அமைந்தது. ஆபிரகாம், ஈசாக்கு,யாக்கோபு என்ற மூதாதையர் கொண்டிருந்த கடவுள் மீதான ஆழமான நம்பிக்கையின் அடிப்படையில் தான் செயல்படுவதால். நீங்களும் நம்புங்கள் உங்களால் நலமான பணிகளைச் செய்ய முடியும் என்ற பாடத்தை தன் வாழ்க்கை மூலமாக நமக்கு கற்பித்தவர் இயேசு.  
இறைவனால் உருவாக்கப்பட்ட உயிரினங்களிடமிருந்து இத்தகைய நேர்மறையான மரபுசார்ந்த  வாழ்க்கைப் பாடங்களை உள்வாங்கிக் கொண்டவர்களாக,நாம் நமது வாழ்க்கையில்  மாற்றத்தை முன்னெடுக்க கூடிய  மனிதர்களாகிட இன்றைய வாசகங்கள் வழியாக இறைவன் நமக்கு அழைப்பு தருகிறார்.

இறைவனோடும் மனிதரோடும் உள்ளார்ந்த விதத்தில் உன்னதமான உறவில் வளர, மரபுகள் வழியாக விதைக்கப்படும் நம்பிக்கையை உள்வாங்கி கொண்டு இயேசுவைப் போல மனிதநேய பணிகளைச் செய்து ஒருவரை ஒருவர் அன்பு செய்து படைத்தவரை பறைச்சாற்றுவோம். 

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2021

நாம் படைக்கப்பட்ட நோக்கம் என்ன? (8.2.2021)

நாம் படைக்கப்பட்ட நோக்கம் என்ன?
ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள். ஏனெனில் அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். 
                        திருப்பாடல் 98: 1 

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய வாசகங்களின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

 இன்றைய முதல் வாசகத்தில் கடவுள் இவ்வுலகை படைத்தது குறித்து நாம் வாசிக்கின்றோம்.  கடவுளின் வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது என்ற இறை வார்த்தைகளுக்கு ஏற்ற வகையில், ஆண்டவரது வார்த்தைகள் வடிவமாகுவதை இன்றைய முதல் வாசகத்தில் நாம் வாசிக்கின்றோம்.

 யோவான் நற்செய்தி 1 : 1 வது வசனம் கூறுகிறது, தொடக்கத்தில் வாக்கு இருந்தது; அவ்வாக்கு கடவுளோடு இருந்தது;  அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது. வாக்கு என்ற அவரே தொடக்கத்தில் இருந்தார் எனச் சொல்லப்படுகிறது. இவ்வார்த்தைகளுக்கு ஏற்ற வகையில் கடவுள் இவ்வுலகத்தை படைக்கும் பொழுது, "ஒளி தோன்றுக"! என்றார், அவரது வார்த்தை அங்கு ஒளியாக வடிவமானது. இருளையும் ஒளியையும் இறைவன் பிரித்தார்.  முதல் நாள் முடிவுற்றது.  நீர்த்திரள்களுக்கு இடையே வானம் தோன்றுக என்றார். அதுவும் அவ்வாறே உருவானது.  ஆண்டவரின் வார்த்தைகள்  அனைத்தும் வடிவம் ஆகின்றன.
ஆண்டவர் இவ்வுலகத்தில் உள்ள அனைத்தையும் படைத்ததன் நோக்கம் என்ன? என சிந்திக்கும் பொழுது, இவ்வுலகமானது, அன்பால் உருவானது என்பதை உணரலாம். இறைவன் தான் அன்பு செய்யப்பட வேண்டும் என்பதற்காக படைப்புகளை உருவாக்கினார். 

யாக்கோபே, உன்னைப் படைத்தவரும் இஸ்ரயேலே, உன்னை உருவாக்கிய வருமான ஆண்டவர் இப்போது இவ்வாறு கூறுகிறார்: அஞ்சாதே, நான் உன்னை மீட்டுக் கொண்டேன்; உன் பெயரைச் சொல்லி உன்னை அழைத்தேன்; நீ எனக்கு உரியவன், என்று
எசாயா 43:1 கூறுகிறது. 
இறைவன் படைத்த இவ்வுலகில், 
ஆண் பெண் என்ற உயர்திணை மட்டும் அல்ல, உயிரற்ற அஃறிணையும் அன்பு செய்ய வேண்டும் என்பதற்காகவே எல்லாவற்றையும் ஆண் பெண்ணாக, சமமாக உருவாக்கினார். 
உயிர் உள்ளவற்றில் மட்டுமல்ல உயிரற்றவற்றிலும் ஆண் பெண் வேறுபாடு உண்டு.
 கல்லில் கூட ஆண் கல், பெண் கல் என்று உண்டு. சிற்பி சிலை செய்ய ஆண் கல்லையே பயன்படுத்துகிறார், 
பகல், இரவு, வானம், பூமி, வாழ்க்கை, மரணம், இன்பம், துன்பம் என எதிரெதிர் துருவங்களாக இருக்கக்கூடிய அனைத்தும் இறைவனால் உருவாக்கப்பட்டது.  
மனிதன் இன்று இவ்வுலகில் உயிரோடு இருக்கிறான் என்பதற்கு அடையாளம், அவன் மூச்சு விடுவதல்ல,  அவன் அன்பு செய்வதே. 
ஒருவன் அன்பு இருக்கிறது என்றால், அவன் உயிரோடு இருக்கின்றான் எனப் பொருள். அன்பு இல்லையேல் அவன் பிணம் என்றுதான் கருதப்படுகிறான் என அப்துல் ரகுமான் அவர்கள், தன்னுடைய மந்திரச் சிறகு என்ற புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.  
கடவுள் இவ்வுலகத்தில் உள்ள ஒவ்வொன்றையும் படைத்ததன் நோக்கம், அது அனைவருக்கும் பயன் தர வேண்டும் என்பதற்காகவே. ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து எது எப்படி இருந்தால் மனிதனுக்கு நலமாக இருக்கும்?  என்று சிந்தித்தவராய் இறைவன் அனைத்தையும் படைத்தார். படைத்த அனைத்தும் அதனதன் பணியை செவ்வனே செய்கின்றன. மனிதர்களாகிய நாம் படைக்கப்பட்ட நோக்கம் என்ன என்பதை உணர்ந்தது உண்டா? அந்நோக்கத்திற்காக நமது செயல்பாடுகள் அமைந்தது உண்டா? என சிந்திக்க இன்றைய நாள் வாசகங்கள் அழைப்பு விடுக்கின்றன. 



அன்பின் அடிப்படையில் உருவான இவ்வுலகத்தில் மனிதனின் பணி என்னவென்று சிந்திக்கும் பொழுது?  இன்றைய நற்செய்தி வாசகம் அதற்கு பதில் தருகிறது. இயேசு மனிதனாக இம்மண்ணில் வலம் வந்தபோது நோயாளிகள், ஏழைகள், பலவிதமான துயரங்களால் வாடக்கூடியவர்கள் என அனைவரும் இயேசுவைத் தேடி வந்தார்கள். காரணம், இயேசு அவர்களை தேடிச் சென்றார். இன்று அவர்  தேடப்படக் கூடியவராக மாறினார்.  அவரைத் தேடி வந்தவர்கள் எல்லாம் உள்ளத்தில் ஆழமான அன்பும் நம்பிக்கையும் கொண்டிருந்தனர். இயேசுவின் ஆடையைத் தொட்டால் போதும்,  நான் குணம் அடைவேன் என்ற எண்ணத்தோடு அவரைச் சூழ்ந்திருந்த, அவரை காண ஓடி வந்திருந்த ஏழைகள், அனாதைகள், துன்புறுவோர், பசியால் வாடுவோர், உடல் ஊனமுற்றோர் என அனைவருமே அவரைத் தொட வேண்டும் என விரும்பினர். தொட்டு நலம் பெற வேண்டும் என விரும்பினர். அவ்வாறே தொட்டு நலம் பெற்றனர். மனிதர்கள் இறைவன் படைத்த இந்த அழகிய உலகத்தில் செய்ய வேண்டிய மகத்துவமான பணி, அன்பு செய்வதாகும். இறைவன் அன்பு செய்வதற்காகவே படைப்புகளை எதிரும் புதிருமாக படைத்தார். நாமும் இந்த உலகத்தில் படைக்கப்பட்டதன் நோக்கம் ஒருவர் மற்றவரை அன்பு செய்யவும், இருக்கக்கூடிய இறைவனது படைப்பை பாதுகாத்து அதை வரக்கூடிய தலைமுறையினருக்கு கொடுத்துச் செல்லவுமே நாம் அனைவரும் இவ்வுலகில் படைக்கப்பட்டு இருக்கிறோம். 

                இயேசு தன்னுடைய செயல்கள் மூலம் அவர் இவ்வுலகத்திற்கு வந்ததன் நோக்கம் என்ன என்பதை வெளிக்காட்டினார். நாம் நமது வாழ்வில், நாம் ஏன் பிறந்தோம்? வளர்ந்தோம்? ஏன் நகர்ந்து கொண்டே இருக்கிறோம் ஒவ்வொரு நாளும்? எனச் சிந்திப்பதை விட,  நாம் இவ்வுலகில் இருப்பதும் இயங்குவதும் அன்பு செய்யவே என்பதை உணர்ந்தவர்களாக, இறைவன் படைத்த இயற்கையின் உதவியோடு ஒருவர் மற்றவருக்கு உதவி செய்து, அன்போடும் அருளோடும் வாழ இறையருளை வேண்டுவோம்.  மாற்றம் வேண்டும் எனில் முதலில் நாம் மாற வேண்டும். இறைவன் படைத்த இந்த அழகிய உலகினில் நாம் இருக்கும் நாட்கள் எவ்வளவு நாள் என்பது யாரும் அறியாத ஒன்று. எனவே இருப்பதோ கொஞ்சம் நாள் தான். அதில் வஞ்சகம் இல்லாத நெஞ்சங்களாக வாழ்ந்திடவும்,  இறைவன் படைத்த இயற்கையை பாதுகாத்து வருங்கால தலைமுறையினருக்கு அதை வழங்கிடவும் இறையருளை வேண்டி இணைந்து ஜெபிப்போம்.

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...