செவ்வாய், 28 ஜனவரி, 2020

1. இளைஞனே நீ யாருக்காக?...

இளைஞனே நீ யாருக்காக?...
ஒரு சமூகத்தின் வளர்ச்சியில் மிகப் பெரிய பங்காற்றக் கூடியது இளைஞர்களின் செயல்பாடு என்றால் அது மிகையாகாது. இன்று இவ்வுலகில் பெரும்பாலும் இளைஞர்களை பார்த்து பலர் கேட்கக்கூடிய கேள்விகள் ஒன்று யார் நீ?... என்பதாகும். ஆனால், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் “கிறிஸ்து வாழ்கிறார்” என்ற தனது இளைஞர்களுக்கான ஊக்க உரையில் யாருக்காக நீ இருக்கிறாய்? என்ற கேள்வியை இளைஞர்களை பார்த்து முன்வைக்கின்றார். இளைஞனே நீ யாருக்காக? என்று சிந்திக்க வேண்டிய காலத்தின் கட்டாயத்திற்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.

ஒரு சமூகத்தில் பலரும் குறிவைப்பது இளைஞர்களையே… இது இன்று மட்டும் அல்ல பல ஆண்டுகளாக தொடரக்கூடிய ஒன்று. ஏன் நம்மில் பெரும்பான்மையானோர் இளைஞர்களாக இருக்கவே விரும்புகிறார்கள். இளைஞனே! இளமைபருவம் இனிமையானது திருவிவிலியம் கூறுகிறது “இளமைபருவம் மகிழ்ச்சியோடு இருப்பதற்கு” என்று. (சபைஉரையாளர் 11:9)

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதிய “கிறிஸ்து வாழ்கிறார்” என்ற இளையோருக்கான ஊக்க உரையில் “திருஅவையின் இதயம் இளம் புனிதர்களால் நிறைந்துள்ளது” என்கிறார் ஆனால், இளைஞனே நீ யாருக்காக என சிந்தித்தது உண்டா?

உலகில் அதிக இளைஞர்களை கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. முழு ஆளுமை கொண்ட நீ யாருக்காக இருக்கிறறாய்? “நூறு இளைஞர்களை கொண்டு இந்தியாவை மாற்றி காட்டுவேன்” என்றார் சுவாமி விவேகானந்தர். புதுச்சேரியில் உள்ள ஆரோபில் நகரம் பல இளைஞர்கள் நம் நாட்டிலிருந்து கொண்டுவந்த ஒருபடி மண்ணால் உருவானது என்பார்கள். உலக சகோதரத்துவத்தை எடுத்துக்காட்டு இந்த நகரம் இளைஞர்களால் உருவானது.
 
இளைஞர்களால் இயலாதது என்று எதுவும் இல்லை. இவ்வுலகில் முழு ஆளுமை கொண்ட ஒவ்வொரு இளையோரும் இன்று சமூகத்திற்கு தேவை. இதனை அனைத்து இளைஞர்களும் உணர வேண்டியது என்று அவசியமாகும். இன்று பல இளைஞர்கள் சமூக பிரச்சனை குறித்து குரல் எழுப்புவதும், வீதிக்கு வந்து உரிமையை நிலைநாட்ட முயல்வதும், பலவிதமான புதிய அணுகுமுறைகளை சமூகத்தில் கையாளுவதும் போற்றுதலுக்கு உரியதாகும். ஆனால், நாம் ஆழமான வேர்களைக் கொண்டு தெளிவான இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும். உறுதியாக நன்கு நிலைநாட்டப்படுவதற்கும், நம்மை தாங்கி பிடிப்பதற்கும் வலிமைமிக்க வேர்களைக் நாம் கொண்டிருக்காவிட்டால் வளர்வது என்பது சாத்தியமில்லை. வேரின்றி எதிர்காலத்தை கட்டியெழுப்ப இளைஞர்களை ஊக்கப்படுத்தும் போது தனக்கு அது மிகவும் துயரமாக உள்ளது என திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது “கிறிஸ்து வாழ்கிறார்” என்ற ஊக்க உரையில் கூறுகிறார்.

ஒரு மரம் தனது வேர்களை நீர் இருக்கும் இடம் நோக்கி நீட்டி தன்னை உறுதியானதாக மாற்றிக்கொள்ளும். அதுபோலவே முழு ஆளுமை கொண்ட இளைஞர்களாகிய நாமும் நம்மிடையே உள்ள ஆளுமைத் தன்மையாகிய வேர்களை வலுவுள்ளதாக மாற்றி தங்களை உறுதிப்படுத்திக்கொண்டு சமூகத்திற்கு நீங்கள் (இளைஞர்கள்) தேவை என்பதை உணர்ந்து தங்களுடைய முழு ஆளுமையுடன் சமூகத்தில் வழிகாட்ட வேண்டும். இதற்காக தூங்கிய தமிழினம் விழிப்பதற்கு தூங்காமல் எழுதியும் படித்தும் உலக அறிவுச் செல்வங்களை தமிழில் வழங்கிய அறிஞர் அண்ணாவின் வார்த்தைகளில் உங்களை அன்போடு அழைக்கின்றேன்.

இளைஞனே (தம்பி)
மக்களிடம் செல்…
மக்களிடம் வாழ்…
மக்களிடம் இருந்து கற்றுக்கொள்…
மக்களை நேசி…
அவர்களுக்கு என்ன தெரியுமோ அவற்றிலிருந்து தொடங்கு…
அவர்களிடம் என்ன இருக்கிறதோ அவற்றைக்கொண்டு உருவாக்கு…
உன்னையும் உலகையும்....



என்றும் அன்புடன்
சகோ. சகாயராஜ் ஜே.
அம்மாபேட்டை, திருச்சி. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இவரே உம் மகன்! இவரே உம் தாய்! (20-5-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!    இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். ...