திங்கள், 13 ஜனவரி, 2020

முத்துக்குளித்துறையில் அண்ட்ரிக் அண்ட்ரிகசுவின் பணிகள்

முத்துக்குளித்துறையில் அண்ட்ரிக் அண்ட்ரிகசுவின் பணிகள் 
பொது முன்னுரை
“உலகெங்கும் சென்று படைப்பிற்கு எல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்” என்ற இயேசுவின் சொற்றொடருக்கேற்ப நற்செய்தியை அறிவிக்க இயேசுவின் சீடர்கள் உலகெங்கும் பயணப்பட்டனர். அவர்களுள் பலர் பல்வேறு இடங்களுக்குச் சென்று நற்செய்தியைப் பறைசாற்றினர். அவர்களுள் ஒருவரான புனித தோமா நற்செய்தி அறிவிப்பதற்காக இந்தியாவிற்கு வந்து, நற்செய்தியை அறிவித்து பலரின் மனங்களில் இயேசுவை விதைத்து, இயேசுவுக்காக தன் இன்னுயிரை துறந்தார் என்பதை வரலாறு நமக்கு சுட்டிக்காட்டுகிறது. அவரின் அடிச்சுவட்டைப் பின்தொடர்ந்து இந்தியாவிற்கு நற்செய்திப் பணியாற்றுவதற்காக பலர் வந்தனர். அவர்களில் ஒருவரான அண்ட்ரிக் அண்ட்ரிகசுவைப் பற்றிய ஆய்வுக் கட்டுரையாக இந்த கட்டுரையைப் படைக்கவிருக்கிறேன். இயேசுவைப் பற்றி பலர் நற்செய்தியை அறிவித்தாலும், நம் தாய் மொழியான தமிழ் மொழியைக் கற்றுத்தேர்ந்து, தமிழ் மொழியை பலருக்குக் கற்பித்தும், இயேசுவோடு இணைந்து தமிழ் மொழி என்னும் அமுதத்தை அயல்நாட்டவருக்கு, உள்நாட்டவருக்கு என பலரும் சுவைத்திட வித்திட்டவர் அண்ட்ரிக் அண்ட்ரிகசு. பொதுவாகவே கிறித்தவ சமையப்பணியாளர்கள் தனிநபர்கள் அல்ல, மாறாக ஓட்டுமொத்த ஒடுக்கப்பட்ட சமூகங்களின் அடையாளமாகப் பணியாற்றியவர்கள். இவர்கள் பணியாற்றிய காலத்தில் நடைபெற்ற ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான அத்தனை அடக்குமுறைகளையும் எதிர்த்து சமத்துவத்தை நிலைநாட்டியவர்கள். இந்தியாவைப் பொருத்தவரையில் சமையப்பணியாளர்கள் அனைவருக்கும் முன்னோடியாக திகழ்பவர் புனித சவேரியார். அவருக்குப் பின் அவரைத்தொடர்ந்து சமையப்பணியை வெகுசிறப்பாக மக்களிடையே செய்தவர் அண்ட்ரிக் அண்ட்ரிகசு அடிகளார், சமயப் பணியைக் கடந்து, மக்களின் அன்றாட வாழ்வோடு இரண்டறக் கலந்தவர். தமிழ்மொழியில் முதல் அச்சகம், முதல் நூல், தமிழகத்தின் முதல் மருத்துவமனை, நாள்காட்டிச் சீர்திருத்தம், பேச்சுத்தமிழ் இலக்கணத்தை அறிமுகம் செய்தது, போன்ற அவரது பணியை நாம் இன்றையச் சூழலோடு பொருத்திப் பார்த்தால், அவர் அடித்தள மக்களின் வாழ்வில் விடுதலையை சுவைத்துப் பார்க்க வைத்துள்ளார் என்பதைக் கண்டுணர இயலும். முத்துக்குளித்துறை பகுதியில் வாழ்ந்த பரதவச் சமூகத்தைச் சார்ந்த மீனவர்கள் தீண்டாமை எல்லைக்குள் அகப்படாமல் அவர்களைக் கல்வி, வழிபாடு, பொருளாதாரம் என்று எல்லாவற்றிலும் தன்னிறைவு பெற்றவர்களாக மாற்ற முயற்சி செய்துள்ளனர் சமயப்பணியாளர்கள். அண்ட்ரிக் அண்ட்ரிகசு அடிகளார் மக்களின் மொழியில் மக்களுக்கான சமயத்தை உருவாக்க விரும்பினார். எனவே தமிழ் மொழியை முழுமையாகக் கற்று, அந்த மொழியிலேயே மக்களுக்குத்தன் கருத்துகளைப் பரப்புரை செய்துள்ளார். தன் பணிக்காலத்தில் மக்கள் அரசியல், பொருளாதார, சமூக, சமய மறுவாழ்வுக்காக கடுமையாக உழைத்திருக்கிறார். அண்ட்ரிக் அண்ட்ரிகசு அடிகளாரை வாசிப்பது என்பது நாம் நம்மையும், நம் சமூகத்தின் தொன்மை வரலாற்றையும் அறிவதற்கான முயற்சியாக கருதலாம். இது தனிநபர் வரலாறு அல்ல, தனித்து விடப்பட்டவர்களின் வரலாறு என்று கூறுவதே சிறப்பாகும். தமிழ் மண்ணிலே தமிழர்களுக்காகப் பணியாற்றி இறந்துப்போனவரைச் சமயத்தோடு முடக்காமல் சமூகப் போராளியாக, தமிழ் மொழி ஆய்வாளராக மறுவாசிப்பு செய்வது இன்றைய காலத்தின் கட்டாயமும் அவசியமும் ஆகும். கிறித்தவ சமயம், தமிழ் மொழி வளர்ச்சிப் பணிகள், குமுகப் பணிகள் என இவர் முன்னெடுத்த பலவற்றை வரலாற்றுடன் சீர்தூக்கிப் பார்த்து இவ்வாய்வுக் கட்டுரையையும், அதனோடு இவரின் வரலாற்றை அறிந்து கொண்டு புதிய வரலாற்றை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இவ்வாய்வுக் கட்டுரையை தயாரிக்கிறேன்.

அலகு – 1
அண்ட்ரிக் அண்ட்ரிகசுவின் வாழ்க்கைக் குறிப்பு
1.1 பிறப்பும், இளமையும்
போர்த்துக்கல் நாட்டிலுள்ள வில்லேவிகாசோ என்ற ஊரில் 1520 - ஆம் ஆண்டு யூதக் கத்தோலிக்கக் குடும்பத்தில் பிறந்தவர் அண்ட்ரிக் அண்ட்ரிகசு அடிகளார். இவரது பெயர் ஹென்றிக்கு ஹென்றிக்கத் (ர்நுNசுஐழுருநு ர்நுNசுஐஞருநுணு) என்று போர்த்துகல் ஆவணங்களில் காணப்படுகிறது. இவரது பெயரை இவர் இயற்றிய தமிழ் நூல்களில் யுNசுஐஞருநு யுNசுஐஞருநுளு என்று பதிவு செய்துள்ளதை நாம் காண இயலும். இவரது பெற்றோர்கள் பெரும் செல்வந்தர்கள் அதிலும் புதிதாகக் கிறித்தவத்தைத் தழுவியவர்கள். செல்வ வளமிக்கக் குடும்பத்தில் இவர் பிறந்தாலும், தன்னை முழுமையாகச் சமயப்பணிக்கும், ஏழை எளியவர்களின் நலவாழ்வுக்கும் அர்ப்பணித்துக் கொண்டவர் அண்ட்ரிக் அண்ட்ரிகசு. தன்னிடம் இருக்கும் பொருளைத்துறந்து அதைப் பிறருக்குக் கொடுத்திட வேண்டும் என்ற திருவிவிலிய மதிப்பீடுகளின்படி தன் பெற்றோர்களின் செல்வத்திலிருந்து தனக்குச் சேரவேண்டிய பங்கைப் பிரித்து, அதை விற்று ஏழைகளுக்குக் கொடுத்து விட்டு துறவுமடம் நோக்கிச் சென்றார். 

1.2 துறவியருக்கான முயற்சியும் பயிற்சியும்
அண்ட்ரிக் அண்ட்ரிகசு (ர்நசெஙைரந ர்நசெஙைரநள) அவர்கள்; சிறு வயது முதல் யூத  சமய சடங்குகளை நன்கு அறிந்து அதனைப் பின்பற்றி வந்தார். ஆனால் இயேசு கிறித்துவின் வாழ்வையும், அவரது சீடர்களின் போதனைகளாலும் கவரப்பட்டு இயேசுவைப் பின்பற்றும் நோக்கத்துடன் தன்னை முழுவதும் வெறுமையாக்கி பிரான்சிசு துறவு அவையில் சேர்ந்தார். அவருடைய பெற்றோர்கள் யூதமரபைச் சார்ந்த கிறித்தவர்கள் என்பதை அறிந்த துறவு அவையினர் அவரை துறவு அவையில் தொடர அனுமதிக்கவில்லை. ஏனெனில் இயேசுவைக் கொன்றவர்கள் யூதர்கள் என்றும், அவர்களே தொடக்கத் திருஅவையில் மறைச்சாட்சியரைக் கொன்று குவித்தவர்கள் என்ற காரணத்தினாலும் கிறித்தவர்கள் யூதர்களை அன்று வெறுத்தனர். தொடக்கத்திலிருந்தே யூதர்களுக்கும் கிறித்தவர்களுக்கும் இடையே பல கலவரங்களும் போர்களும் நடைபெற்றுள்ளன என்பதை நாம் வரலாற்றிலிருந்து அறியலாம். மேலும் வரலாற்றில் புதிதாகக் கிறித்தவம் தழுவியவர்களை பிரான்சிசு துறவு அவையில் மிகவும் இழிவாக நடத்தினார்கள். “புதிய கிறித்தவ இனத்தினர்” என்றே அவர்களை அழைத்துள்ளார்கள். அதாவது அவர்கள் மரபுக் கிறித்தவர்களைக் காட்டிலும் சமூகத்தில் இழிவானவர்களென்று கருதப்பட்டுள்ளனர். திருஅவையில் யூதர்களை எதிரிகளாகச் சித்தரித்த காலங்களும் உண்டு. அவர்களின் மனமாற்றத்திற்காக மன்றாடிய காலங்களும் உண்டு. இந்த வரலாற்றுப் பின்னணியில் யூதராகப் பிறந்த அண்ட்ரிக் அடிகளார் கிறித்தவம் தழுவியவர் என்பதால், 'புதிய கிறித்தவர்” இனத்தைச் சார்ந்தவர் என்று பிரான்சிசு அவையிலிருந்து நீக்கப்பட்டார். 16 ஆம் நூற்றாண்டில் திருத்தந்தையர்களும் ஆயர்களும் நேரடியாகவே யூத சமயத்தை வெறுத்து ஒதுக்கிய காலம். இருப்பினும் அண்ட்ரிக் அடிகளார் மக்கள் பணியாற்ற வேண்டும் என்ற தீராத ஆசையில் இயேசு அவையில் சேர்ந்தார். அந்நாள்களில் இயேசு அவையின் நிறுவுநர் எல்லாராலும் வெறுத்து ஒதுக்கப்பட்ட புதிய கிறித்தவர்களைத் தன் அவையில் ஏற்றுக்கொண்டார். சைமன் ரொட்ரிக்கத் என்ற இயேசு அவைத்துறவியின் உதவியால் அண்ட்ரிக் அண்ட்ரிகசு இயேசு அவையில் சேர்ந்தார். அண்ட்ரிக் அண்ட்ரிகசு அடிகளார் 1545ஆம் ஆண்டு போர்த்துகல் நாட்டின் கொம்பேராநகரில் திருஅவையின் சட்டங்களைக் கற்றார். 1546ஆம் ஆண்டு இயேசு அவையில் அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். அதே ஆண்டிலே ஏப்ரல் 26ஆம் நாள் இந்தியாவுக்கு மற்ற இருள்பணியாளர்களுடன் பயணமானார். அவருடன் இணைந்து 12 இயேசு சபை குருக்கள் பயணமாகியுள்ளனர். அனைவரும் 1546ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ஆம் நாள் கோவாவுக்கு வந்து சேர்ந்தனர். இவர்கள் வந்த போது சவேரியார் அங்கு இல்லை. அவ்வேளையில் சவேரியார் மலாக்காவில் பணியாற்றிக் கொண்டிருந்தார். ஆனால் அவர்கள் அனைவரையும் சவேரியார் முத்துக்குளித்துறைக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியபடி அண்ட்ரிக் அண்ட்ரிகசு அடிகளாரும் சென்று பணி புரியத் துவங்கினார். 
1.3. இறுதிக்காலம்
அண்ட்ரிக் அண்ட்ரிகசு அடிகளார் தன் இறுதி காலங்களில் பல நாள்கள் நோயின் கொடுமையினால் மிகவும் சிரமப்பட்டார். தன்னுடைய பணிக்காலத்தின் தொடக்கத்தில் இருந்தே அவருக்கு பலவிதமான நோய்கள் உண்டு. இருப்பினும் தன்னுடைய ஆற்றலால் அவற்றைத்தாங்கிக் கொண்டார். வயது மூப்பு காரணமாகக் கீழ்வாத நோயால் நடக்க முடியாத அளவுக்கு அவர் பெரிதும் துன்புற்றார். அவரைக் கட்டிலில் படுக்க வைத்து மக்கள் தூக்கிச் செல்வது வழக்கம். முதுமையின் காரணமாக அவரால் திருப்பலி நிறைவேற்ற முடியவில்லை, 06. 02. 1600 ஆம் ஆண்டு தமது 80 ஆம் வயதில் அண்ட்ரிக் அண்ட்ரிகசு அடிகளார் புன்னைக்காயலில் மரணமடைந்தார். மக்களால் அதிகம் நேசிக்கப்பட்ட அடிகளார் தன் பணிவாழ்வுக்கு ஓய்வு கொடுத்து இறைவனோடு இணைந்தார். அவரது மரணத்தால் ஒட்டு மொத்த முத்துக்குளித்துறையும் சோகத்தில் ஆழ்ந்தது. கிறித்தவர்கள் மட்டுமல்லாமல் இசுலாமியர்களும் தங்கள் இரங்கலைப் பதிவு செய்துள்ளனர். அன்றைய நாள்களில் புன்னைக்காயல் பரதவர்களுக்கும், காயல்பட்டணம் இசுலாமியர்களுக்கும் இடையே பகைமை உணர்வு மேலோங்கி இருந்தது. ஆனாலும் அண்ட்ரிக் அண்ட்ரிகசு அடிகளார் அனைவருடனும் தோழமை உணர்வு கொண்டு வாழ்ந்தார் என்பதற்கு அவரின் இறுதி சடங்கில் பங்கேற்றோரே சான்று. அவரின் இறப்பு காரணமாக பிற சமய மக்களும் இரண்டு நாள்கள் நோன்பிருந்து தங்கள் கடைகளை எல்லாம் மூடித் துக்கம் கொண்டாடினர். பல்சமய உரையாடல்கள் இல்லாத நாள்களிலேயே அவர் எல்லாச் சமயத்தவர்களையும் அரவணைத்துச் செல்லக் கூடிய பண்பாளராக வாழ்ந்துள்ளார் என்பதற்கு இது சான்றாகும்.
இயேசு அவையினரின் இல்லத்திலிருந்து அவரது உடலை அவர் கட்டிய பங்கு கோயிலுக்குள் எடுத்துச் செல்ல முடியாத அளவுக்கு கூட்டம் அதிகமாக இருந்தது. மக்கள் தங்கள் கையில் வைத்திருந்த செபமாலையை அடிகளாரின் உடல்மீது தொட்டு அதைப் புனித பொருளாக எடுத்துக்கொண்டனர். புன்னைக்காயலிலிருந்து அவரது உடல் இரகசியமாகவே தூத்துக்குடிக்கு கடல் வழியாகத் தோணியில் எடுத்துச் செல்லப்பட்டது. அவரது உடல் தூத்துக்குடிக் கரையை அடைந்தபோது தூத்துக்குடி பரதவர்கள் ஆறு தோணிகளில் கடலில் எதிர்வந்து அவரது உடலைப் பெற்று, ஊர்வலமாக எடுத்துச் சென்று பனிமய மாதா கோயிலில் அடக்கம் செய்துள்ளனர். கோயிலின் பல்வேறு கட்டடப்பணியின் போது அவரது கல்லறை சேதமடைந்துள்ளது. அவரது கல்லறை இருந்த இடத்தில் மக்கள் வழிபாடு செய்துவந்துள்ளனர். திருப்பலியின் போது மக்கள் கோயிலின் தெற்கு வாசல் பகுதியில் இருந்த சுவரை முத்தமிட்டுள்ளனர், வழிபடவும் செய்துள்ளனர். இதனைத்தடுக்க வேண்டும் என்ற நோக்கில், அருள்பணியாளர்கள் நற்கருணையை மையப்படுத்த வேண்டும் என்பதற்காக கோயிலில் கல்லறை வழிபாட்டை அங்கீகரிக்கவில்லை. அந்தக் கல்லறையை இடித்துவிட்டு அவரது எலும்புகளை மட்டும் கோயில் சுவரின் ஒரு தூணில் வைத்துப் பூசியுள்ளனர். மக்கள் அவரது எலும்புகள் வைக்கப்பட்டிருந்த தூணை வழிபடத்தொடங்கினார்கள். பின்நாள்களில் அதையும் தடுக்க விரும்பிய அருள்பணியாளர்கள் தூணை இடித்து எலும்புகளை எடுத்துப் பாதுகாப்பாக பனிமய அன்னை கோயில் வளாகத்தில் அமைந்துள்ள புனித சவேரியார் மண்டபத்தில் வைத்தனர். இவருடைய எலும்பின் ஒரு பகுதி கொடைக்கானல் செம்பகனூர் இயேசு அவையினரின் அருஞ்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அவரது மண்டை ஓடு இன்றும் பனிமய மாதா கோயிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. மக்கள் சிலர் பனிமய மாதா கோயிலில் உள்ள மண்டை ஓடு 'பெண் புனிதரின் மண்டை ஓடு” என்றும் பதிவு செய்கிறார்கள். ஆனால் அந்நாள்களில் பெண் புனிதர்கள் யாரும் சமயப்பணிக்காக முத்துக்குளித்துறைக்கு வந்ததில்லை என்பது தெளிவான உண்மையாகும்.
அண்ட்ரிக் அண்ட்ரிகசு அடிகளாரை மக்கள் தங்களோடு வாழ்ந்த புனிதராகவே கருதினர். அவரது வாழ்வின் புனிதம் கருதி மக்கள் அவரது இறப்பிற்குப் பிறகும் அவரது கல்லறையை நோக்கி வந்தனர். அவருடைய பரிந்துரையால் நன்மைகள் கிடைக்கும் என்று நம்பினர். வாழ்ந்தபோது அரசியல் பொருளாதார, சமயச் சிக்கலில் இருந்து பாதுகாத்த அடிகளார் தங்களுக்காக இறைவனிடம் பரிந்து பேசுவார் என்ற நம்பிக்கை ஒருபுறம், மக்களுக்காக வாழ்ந்த இறையடியார்கள் மக்கள் மனங்களில் என்றும் நீங்கா இடம் பிடிந்துள்ளனர் என்பதற்கு இவரது கல்லறை சான்றாக உள்ளது. எரியும் திரிகளைக் கையில் ஏந்தி ஐந்து பெண்கள் ஒரு குழுவாக அவரின் கல்லறையில் மன்றாடிக் கொண்டிருந்தனர் என்று ஜோசப் தெத்கதெத் பதிவு செய்துள்ளார். இசுலாமியர்களும், பிறசமயத்தவர்களும் அதிக எண்ணிக்கையில் அவருடைய கல்லறையைத் தேடிவந்து மரியாதை செய்தனர். இவர்கள் அண்ட்ரிக் அண்ட்ரிகசு மீது உயர்வான மரியாதை வைத்திருந்தனர். மேலும் அன்றைய நாளில் கடற்கரையோர மீனவர்கள் ஆணையிட வேண்டுமென்றால் “சாமி அண்ட்ரிக் அண்ட்ரிகசு மீது ஆணையாக" என்றுதான் வாக்குறுதி கொடுப்பார்கள். தங்கள் பணிவாழ்வு முழுவதும் எந்த மக்களுக்காக உழைத்தாரோ, அந்த மக்கள் அவரைப் போற்றினர், அவரது மறைவுக்குப் பிறகு அவரை வழிபடவும் செய்தனர்.


அலகு – 2
அண்ட்ரிக் அண்ட்ரிகசுவின் சமயப்பணி
2.1 அண்ட்ரிக் அண்ட்ரிகசுவின் பணிகள்
சமயத்தொண்டு, தமிழ்த்தொண்டு மட்டுமல்லாது குமுகாயத்தொண்டும் அண்டிரிக் அடிகளார் செய்தார். தொடக்க காலத்தில் கோவாவில் சில காலம் வாழ்ந்தார். பின்னர் தூத்துக்குடியில் குடியேறினார். கிறித்தவ சமயப்பணி ஆற்ற மக்கள் மொழியான தமிழைக் கற்றார். தமிழ் மொழியில் புலமை பெற்றார். ஐரோப்பாவில் பிறந்து தமிழ்ப் புலமை அடைந்த முதல் அறிஞர் என்னும் பெருமையைப் பெற்றார். மேலும் அருள்பணியாளர் அண்ட்ரிக் அண்ட்ரிகசு மீன்வள கடற்கரையின் திருத்துஸதர் (1520-1600) என்றும் அழைக்கப்பட்டார்.
2.2 இந்தியாவில் இயேசு அவையின் மேலதிகாரி
அண்ட்ரிக் அண்ட்ரிகசு ஆரம்பத்தில் கோவாவில் 1557 வரை வாழ்ந்தார். பின்னர் புனித பிரான்சிசு சேவியரின் உத்தரவின் பேரில் தூத்துக்குடி நகருக்குச் சென்றார். அங்கு அவர் 1547 முதல் 1549 வரை சமயப்பரப்பாளராகப் பணியாற்றினார். அந்தோனி கிரிமினாலியின் படுகொலைக்குப் பின்பு அண்ட்ரிக் அண்ட்ரிகசு அடிகளாரைத் தலைமைக் அருள்பணியாளராக முத்துகுளித்துறைக்கு சவேரியார் நியமித்தார். 1549ஆம் ஆண்டு இருபத்தொன்பது வயது இளம் வயதினரான இவர் இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்கு மூன்று காரணிகள் உண்டு.
இவர் இப்பதவிக்குத் தகுதியானவர்.
தாம் பணியாற்றிய பகுதியில் வாழும் மக்களின் மொழியை முறையாகப் படித்தவர்.
மக்களுடன் நல்லுறவு கொண்டிருந்தவர். 
இளம் வயதிலேயே இவர் இப்பொறுப்பிற்குத் தகுதியானவர் என்ற பொறுப்பு கொடுக்கப்பட்டாலும் அவர்மீது சில விமர்சனங்களும் வைக்கப்பட்டன. அண்ட்ரிக் அண்ட்ரிகசு அடிகளார் 'புதிய கிறித்தவர்” இனத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக பிரான்சிசு அவையிலிருந்து நீக்கப்பட்டவர் என்பதால், அவர் இப்பொறுப்பிற்கு வரக்கூடாது என்று பலர் கூறினார்கள். 
2.3 புன்னைக்காயல் தலைமை இடமாதல்
முத்துக்குளித்துறையின் மிகப்பெரிய ஊர்களாகிய தூத்துக்குடி, வேம்பார், புன்னைக்காயல், வைப்பாறு போன்ற ஊர்களில் இவர் பணியாற்றினார். 1546ஆம் ஆண்டு முதல் தன் வாழ்நாள் முழுவதும் அவர் புன்னைக்காயலைத்தான் தன் இருப்பிடமாகக் கொண்டார். அங்கு தங்கியிருந்து கொண்டே எல்லா ஊர்களிலும் மறைக்கல்வியைப் போதித்தார். சமயப்பணியாளர்களும், போர்த்துக்கீசியப் படை வீரர்களும் புன்னைக்காயலைத் தலைமையிடமாகத் தேர்ந்தெடுக்க மிக முக்கிய காரணி, அது ஒரு தீவு என்பதேயாகும். போரிலிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ள தீவுப் பகுதியான புன்னைக்காயல் அவர்களுக்குப் பாதுகாப்பானதாக இருந்தது. 
அண்ட்ரிக் அண்ட்ரிகசு அடிகளாரின் புன்னைக்காயல் பணிகளை மூன்று தளங்களில் வகைப்படுத்த முடியும். அவை: 
மக்களின் மொழியில் வழிபாடுகளை நடத்துவது. 
கிராமத்திற்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் உருவாக்குவது. (எ. கா.) மருத்துவமனை, கல்விச்சாலை. 
பிறரன்புக் குழுமம் போன்ற மக்கள் இயக்கங்களைக் கட்டியெழுப்புவது.
2.4 மறைக்கல்விப் பணி 
தொடக்ககால சமயப்பணியாளர்களின் மறைக்கல்விப் பணியை இக்காலத் தலைமுறையினரால் புரிந்து கொள்வது சிரமம்தான். இன்று நிறுவனமயமாக்கப்பட்ட திருஅவையில் எல்லா வசதி வாய்ப்புகளோடு மறைக்கல்விப் பணி நடைபெறுகிறது. ஆனால் தொடக்ககால சமயப்பணியாளர்களின் பணி என்பது காலச்சூழலை அறிந்து கொள்வதன் மூலம் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். அண்ட்ரிக் அண்ட்ரிகசு மக்களுக்குத் திருமுழுக்கு கொடுப்பதை முதன்மைப் பணியாகக் கொண்டு செயல்பட்டார். முத்துக்குளித்துறையில் வாழ்ந்த பரதவர்கள் 1536 - 1537ஆம் ஆண்டுக்குள் கிறித்தவம் தழுவினாலும் அவர்களுக்கு முழுமையான திருஅவையின் கோட்பாடுகளும், இறைவேண்டல்களும் கற்றுக் கொடுக்கப்படவில்லை. ஏனென்றால் தமிழ் மொழி தெரிந்த சமயப்பணியாளர்கள் இல்லை. பிரான்சிசு சவேரியார் ஓரளவு மக்களுக்குத் தெரிந்த அளவுக்கு மறைக்கல்வி வழங்கியிருந்தாலும், அவரால் முழுமையாகக் கற்றுக்கொடுக்க முடியவில்லை. அவர் பல நாடுகளுக்குப் பயணம் செய்ய வேண்டிய தேவையும் சூழலும் இருந்தது. ஆகவே அவர் முத்துக்குளித்துறைக்குப் பொறுப்பாக அந்தோனி கிரிமினாலியை நியமிக்கிறார். அவர் வடுகர்களால் படுகொலை செய்யப்படுகிறார். அவரைத்தொடர்ந்து அந்தப் பணிக்கு மிகச் சரியான நபர் யார் என்று சிந்திக்கின்ற வேளையில் அண்ட்ரிக் அண்ட்ரிகசு அடிகளாரை சவேரியார் நியமிக்கிறார். இவர் மறைக்கல்விப் பணிக்காகவே தமிழை நன்கு கற்றுத்தேர்ந்தார். தமிழ் மொழியை 12 மாதங்களில் கற்றுத்தேர்ந்தார். மற்ற மறைப்பணியாளர்களும் சமயக்கல்வியை மக்களுக்குப் போதிக்க வேண்டும் என்பதற்காகத் தொடர்ந்து இலக்கண நூல்களையும் அவர் எழுதியுள்ளார். மக்களிடம் பேசும்போது பேசுவதை அப்படியே எழுதிக்கொள்வார். அதனை மீண்டும் மீண்டும் சொல்லி தன் தொடர்பு மொழியாக மாற்றிக்கொண்டவர். இவர் தமிழை மக்களிடமிருந்து கற்றார் என்பது வியப்புக்கு உரியதாகும். 
2.4.1 மக்களின் மொழியில் மறைக்கல்வி
 மறைக்கல்விப் பணி என்பது அண்ட்ரிக் அண்ட்ரிகசு அடிகளாரின் தனிச் சிறப்பான பணியாகும். அவர் எங்கெல்லாம் செல்கிறாரோ அங்கெல்லாம் மக்களின் மொழியிலேயே மறைக்கல்வி நடத்துவார். சிறுவர்களுக்கு மறைக்கல்வியை அறிமுகம் செய்தார். அந்நாள்களில் முத்துக்குளித்துறை முழுவதும் புதிதாகக் கிறித்தவத்திற்கு மாறியவர்கள் என்பதால், அவர்களுக்குக் கிறித்தவ இறைவேண்டல்களும், பக்தி முயற்சிகளும் அதிகம் தெரியாது. எல்லா மக்களுக்கும் மறைக்கல்வி சொல்லிக் கொடுப்பது என்பது மிகவும் சிரமமானது. சிறுவர்கள், பெரியவர்கள், இளையோர்கள் என்று அனைத்துத் தரப்பினரையும் மறைக்கல்விக்கு அழைப்பது அன்றைய நாள்களில் மிகவும் கடினமே. மக்களுக்கு எழுதவும், படிக்கவும் தெரியாது என்பதால், அவர்களின் வட்டார வழக்கில்தான் அனைத்து இறைவேண்டல்களையும் சொல்லிக் கொடுக்க வேண்டியிருக்கும். அண்ட்ரிக் அண்ட்ரிகசு அடிகளார் அதனைச் செவ்வனே செய்தார். முதிர்ந்த வயது பெண்களுக்கும், விதவைகளுக்கும் வெள்ளிக்கிழமைகளிலும், ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் மறைக்கல்வி நடத்தினார். இவர்களுக்கு அடிப்படை இறைவேண்டல்களைச் சொல்லிக் கொடுப்பதே சமயப் பணியாளர்களின் தொடக்ககாலப் பணியாக இருந்தது. வேதங்களும், புராணங்களும் அந்நிய மொழியில் இருந்த காலகட்டத்தில் மக்களின் மொழியை அடிகளார் அங்கீகரித்தார். சொந்த நாட்டு மக்களுக்கு அந்நிய மொழியில் வேதம் சொல்லிக்கொடுத்த ஆதிக்கவாதிகளுக்கு நடுவில், அந்நிய நாட்டிலிருந்து வந்து மக்களின் மொழியைக் கற்று அவர்களின் மொழியிலேயே மறைக்கல்வி நடத்தினார் அண்ட்ரிக் அண்ட்ரிகசு அவாகள். 
அண்ட்ரிக் அண்ட்ரிகசு அடிகளாரின் கடுமையான சமயப்பணியின் பயனாக 1551ஆம் ஆண்டு மட்டும் 30 கோயில்கள் (மரம், களிமண், பனை ஓலையால் வேயப்பட்டு) கடற்கரையோர ஊர்களில் கட்டப்பட்டன. இவையெல்லாம் 1553ஆம் ஆண்டு திருவாங்கூர் மன்னரால் சேதமாக்கப்பட்டாலும் அவை மீண்டும் கட்டப்பட்டன. அண்ட்ரிக் அண்ட்ரிகசு அடிகளாரின் மறைக்கல்விப் பணியால்தான் முத்துக்குளித்துறையில் கிறித்தவம் ஆழமாக வேரூன்றியது என்றால் அது மிகையாகாது. தொடக்ககாலத்தில் மக்கள் மறைக்கல்வி போதித்தவர்களை உயர்வாக எண்ணினர். வேம்பார் ஊரைச் சார்ந்த ஓர் இந்து சமய முனிவர் ஒருவரை அண்ட்ரிக் அண்ட்ரிகசு அடிகளார் மனந்திருப்பி உள்ளார். கிறித்தவத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை அவருக்கு விளக்கியுள்ளார். அதன் பயனாக அவர் 1550ஆம் ஆண்டு தூய ஆவியார் பெருவிழாவின்போது திருமுழுக்குப் பெற்றுள்ளார். கி. பி. 1578 – 80ஆம் ஆண்டுகளில் கிறித்தவக் கிராமங்களைப் பார்வையிட வந்த இயேசு அவை அருள்பணியாளர் வலிஞ்ஞானோ (ஏயடபையயெழ) அடிகளார் கொடுத்த அறிக்கையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். “முத்துக்குளித்துறையிலுள்ள முப்பது கிறித்தவக் ஊர்களில் முப்பதுக்கும் அதிகமான கோயில்கள் உள்ளன. கிறித்தவர்களின் தொகை நாற்பதினாயிரம் முதல் ஐம்பதினாயிரம் வரை இருக்கும். இயேசு அவையினர் ஆறு இடங்களில் தங்கியுள்ளனர். கடலோரப் பகுதியிலுள்ளக் கோயில்கள் சிறப்பாக உள்ளன….” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
2.4.2 பண்பாட்டோடு இணைந்த மறைக்கல்வி
 பரதவர் புதிதாகச் சமய மாற்றம் பெற்றதால் அவர்களிடையே நீண்ட நாள்களாக இருந்து வந்த சில பழக்கங்களை மாற்ற முடியவில்லை. அவற்றை அண்ட்ரிக் அண்ட்ரிகசு அடிகளார் பரிவுடன் அனுமதித்து விதிவிலக்களித்தார். எடுத்துக்காட்டாக, முத்துக்குளித்துறை மக்கள் நெருங்கிய உறவினரிடையே மணவுறவு கொண்டு வாழ்ந்தனர். இரத்த உறவுடையோர் திருமணம் செய்யக்கூடாது என்பது கிறித்தவக் கோட்பாடுகளிலொன்று. இரத்த உறவுடைய உடன்பிறப்புகள் நீங்கலாக ஏனைய உறவினருடன் மண ஒப்பந்தம் செய்வதை ஏற்றுக்கொண்டார். அவர்களை அதிகம் வற்புறுத்துவது அவர்களுக்கு இடர்ப்பாடாக அமையும் என்று எண்ணினார். மணஉறவுகள் எல்லாம் பண்பாட்டு அடிப்படையில் ஆழமாக வேர் கொண்டவை, உணர்வுபூர்வமானவை. அதனால் அத்தை மக்கள், மாமன் மக்கள் மண உறவு கொள்வது தமிழ்நாட்டு வழக்கம், அவ்வழக்கம் மாற்றுவதற்கு அரியது. இதனை நன்கு உணர்ந்து கொண்ட அண்ட்ரிக் அண்ட்ரிகசு அடிகளார் அதனை மாற்ற முயலவில்லை. எனவே மக்களுக்கான சமயமாகவே கிறித்தவத்தை உருவாக்கினார். அதுபோலவே சப்பரம் தூக்குவது, திருவிழாக்கள் கொண்டாடுவது, கொடிமரம், காணிக்கைகள் செலுத்துவது, நேர்ச்சைகள் என்று அனைத்து உரிமைகளையும் மக்கள் பெற்றார்கள். இதுவும் அன்றைய காலத்தில் மறைக்கல்வியாகவே பார்க்கப்பட்டது. ஆண்டுக்கு ஒரு முறையாவது பாவமன்னிப்பு பெறவேண்டுமென்பது கிறித்தவக் கடமையாகும். போதிய அருள்பணியாளர்களில்லாத குறையால் இதனையும் வலியுறுத்தவில்லை. உள்ளத்தூய்மையைக் கிறித்தவ சமயம் வலியுறுத்துகிறது. அதற்கு ஒரு வடிகாலாகப் பாவமன்னிப்பை கருதியது. ஆனால், போதிய அருள்பணியாளர்கள் இல்லாபோது இறுக்கமான அந்த விதியைச் சற்று தளர்த்தி, நெகிழ்ந்து கொடுத்து, சமயப் பணியாற்றினர். திருமண உறவு சமுதாய அடிப்படை சார்ந்தது. ஆனால் கத்தோலிக்கக் கிறித்;தவ சமயத்தில் அது சமய நிகழ்வாகவே மாற்றப்பட்டு விட்டது. கோயிலில் வைத்துத்திருமணம் செய்யவேண்டும் என்பதே விதி. இருப்பினும் அதனை மீறி இரகசியமாகத் திருமணம் முடித்துக் கொள்பவர்களுக்குச் சாதாரணத்தண்டனை கொடுத்தார் அண்ட்ரிக் அண்ட்ரிகசு அடிகளார். கடன் திருநாள், நோன்பு இவற்றைக் கட்டாயப்படுத்தவில்லை. குழந்தைகளுக்கு ஆடம்பர செலவு இல்லாமல் வீடுகளிலேயே திருமுழுக்குச் சடங்குநடத்த அனுமதி அளித்தார்.

அலகு – 3
அண்ட்ரிக் அண்ட்ரிகசுவின் சமூகப்பணி
3.1 போர்த்துக்கல் குடியேற்ற நாட்டினரும் தமிழும்
ஐரோப்பாவில் இருந்து சமயப் பரப்பு பணிக்காக இந்தியாவிற்கு பல சமயப்பரப்புப் பணியாளர்கள் வந்தனர். அவர்கள் எல்லாரும் போர்த்துக்கீசிய மொழி மூலமாகவே தமிழ்மொழியினைக் கற்றுக் கொண்டனர். “பாதிரியார்” என்பதே போர்த்துக்கீசிய சொல்தான். ஐரோப்பாவில் இருந்து இந்தியா வந்து தமிழ் மொழியைக் கற்றுக் கொண்டவர்களுள் முதன்மையானவர் அண்ட்ரிக் அண்ட்ரிகசு அவர்கள். இவர் வாழ்ந்த முத்துக்குளித்துறைப் பகுதிகளில் உள்ள எல்லா சமயத்தினரும் அண்ட்ரிக் அண்ட்ரிகசு அடிகளாரை நேசித்தனர்.
3.2 அண்ட்ரிக் அண்ட்ரிகசுவின் தமிழ் மொழி மீதான தாகம்
தமிழில் உள்ள எல்லா இலக்கண நூலையும் அறிந்தவர் அல்ல அண்ட்ரிக் அண்ட்ரிகசு அடிகளார். ஆனால் மக்களுக்கு மறையுரை, மறைக்கல்வி, இறைக்கோட்பாடுகளை விளக்கிச் சொல்லும் அளவுக்கு வட்டார மொழியை முத்துக்களித்துறைப் பகுதிகளில் நன்கு கற்றுக் கொண்டார். பேச்சுத்தமிழை அவர் நன்கு கற்றுக்கொண்டார். ஞாயிறு மறையுரைகளை ஒவ்வொரு வாரமும் தவறாமல் அவர் தமிழிலேயே எழுதிப் பயன்படுத்தினார். அதனை மற்ற கிராமங்களுக்கும் கொடுத்து வாசிக்க வைத்தார். தமிழ் மொழியில் நன்கு பேசக் கற்றுக்கொண்டதால், நல்ல நூல்களைத் தமிழில் மொழிபெயர்க்க விரும்பினார். சவேரியார் காலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருந்த இறைவேண்டல்களை எல்லாம் திருத்தம் செய்ய முற்பட்டார். அதில் சில சிரமங்கள் இருக்கவே அவரே புதிதாக மொழிபெயர்த்துள்ளார். இதனால் இவரைப் பேச்சுத்தமிழ் மொழியின் முதல் இலக்கண ஆசிரியர் என்றால் மிகையாகாது. 
3.2.1 தமிழ் மொழியை வளர்த்திட கல்லூரி
தமிழ்மொழியைக் கற்றதோடு மட்டுமல்லாமல் அந்த மொழியை வளர்க்க புன்னைக்காயலில் 1567ஆம் ஆண்டு தமிழ்க் கல்லூரி ஒன்றையும் நிறுவியுள்ளார். முத்துக்குளித்துறைப் பகுதியில் பணியாற்றிய இயேசு அவையினர் இக்கல்லூரியில் தமிழ் பயின்றனர். இக்கல்லூரியில் இயேசு அவையின் முதல் அருள்பணியாளர் கேரளத்தைச் சேர்ந்த பேதுரு லூயித் தமிழ்ப் பேராசிரியராக இருந்துள்ளார். அடிகளாரின் தமிழ் மொழி பெயர்ப்புப் பணியிலும், நூல் அச்சாக்கப்பணியிலும் இவர் பெரும் உதவியாக இருந்துள்ளார். இவரது போதனையால் பலர் உள்நாட்டில் கிறித்தவர்களானார்கள். மேலும் பரதவர்களின் பெரும் உதவியுடன் 1588ஆம் ஆண்டு புன்னைக்காயலில் குருத்துவக் கல்லூரி ஒன்றை நிறுவியுள்ளார். இதில் பயிலும் மாணவர்களுக்கு இலத்தின், போர்த்துக்கீசியம் போன்ற மொழிகளும் இறையியல், இசை, வழிபாட்டு முறைகள் ஆகியனவும் கற்றுக்கொடுக்கப்பட்டன. அண்ட்ரிக் அண்ட்ரிகசு அடிகளாரின் பணியைப் பாராட்டி, அவருக்குப் பாராட்டுக் கடிதம் எழுதும்படி, இயேசு அவை தலைவருக்கு 1549ஆம் ஆண்டு சவேரியார் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “போர்த்துக்கல் நாட்டு இயேசு அவையைச் சார்ந்த அருள்பணியாளர் கன்னியாகுமரியில் இருக்கிறார். அவர் பெயர் அண்ட்ரிக் அண்ட்ரிகசு. தமிழ் பேசவும், எழுதவும் தெரிந்த இவர் மிகவும் நல்லவர், முன்மாதிரியானவர். இந்த மொழியை நன்கு அறிந்திருப்பதால் இருவர் செய்யக் கூடிய நல்லதை காட்டிலும் அதிகமாக இவர் ஒருவரே செய்கிறார். இந்தப் பகுதியில் உள்ள கிறித்தவர்கள் இவர்மேல் மிகுந்த அன்பு வைத்திருக்கின்றனர். அவர்களுடைய மொழியில் அவர் செய்யக் கூடிய மறையுரைகளையும், சொற்பொழிவுகளையும் போற்றுகின்றனர்... என்று குறிப்பிட்டுள்ளார். 
அண்ட்ரிக் அண்ட்ரிகசு அடிகளார் சமயப்பணிக்காக மட்டும் தமிழ் மொழியைக் கற்றவர் அல்ல, மாறாக அம்மொழியை வளர்ப்பதற்கான அனைத்துப் பணிகளையும் மேற்கொண்டார். இவர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு மிகப்பெரும் பங்களிப்பைச் செய்துள்ளார். தமிழகத்தில் தமிழால் வளர்ந்தவர்கள் ஏராளம். தமிழை வளர்த்தவர்கள் சிலரே, இவவகையில் சமயப்பணியாளர்களால் உலக அரங்கில் மிக சிறப்பான இடத்தினை தமிழ் பெற்றுள்ளது.
3.3 முதல் அச்சுக்கூடம் தந்த அண்ட்ரிக் அண்ட்ரிகசு
ஜெர்மனியின் “ஆயணெ” என்ற நகரில் பிறந்த குட்டன்பெர்க் தான் முதல் அச்சு இயந்திரத்தைக் கண்டுபிடித்தார். 1455ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் நாள் அச்சு முறையில் உலகின் முதல் நூல் உருவானது. இலத்தின் மொழியில் இரண்டு தொகுதிகளில் திருவிவிலியம் 300 பக்கங்களுடன் வெளியானது. ஒவ்வொரு பக்கத்திலும் 42 வரிகள் இருக்கும். குட்டன்பெர்க் கண்டுபிடித்த அச்சு முறையில் உருவானது என்பதால் அது 'குட்டன்பெர்க் திருவிவிலியம்” (புரவநnடிநசப டீiடிடந) என்றே அழைக்கப்பட்டது. இவர் கண்டுபிடித்த முதல் அச்சு இயந்திரம் பிரான்சிசு துறவு அவை இல்லத்திற்கு விற்பனை செய்யப்பட்டதாகவும் அது சமயப்பரப்புக்குப் பயன்படுத்தப்பட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன. 
புன்னைக்காயல் தலைமையிடமாக போர்த்துக்கீசியர்களுக்கு இருந்தது. சமயப்பணியாளர்களும் அதைத் தங்களின் தலைமையிடமாகக் கொண்டனர். புன்னைக்காயலில் தன் வாழ்நாள் முழுவதும் தங்கியிருந்த அண்ட்ரிக் அண்ட்ரிகசு அடிகளார் முதல் அச்சகத்தை உருவாக்கினார். இந்த அச்சகத்திற்கு முத்துக்குளித்துறை பரதவர்கள் நானூறு குருசேடாக்கள் நிதி வழங்கியுள்ளனர்.. 
3.3.1 தம்பிரான் வணக்கம் 
தமிழில் மட்டுமல்ல இந்திய மொழிகளிலேயே முதன் முதலில் அச்சிடப்பட்ட நூல் 'தம்பிரான் வணக்கம்”. இது 1578ஆம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, கொல்லம் மீட்பர் இறையியல் கல்லூரியில் அச்சிட்டப்பட்டது. இதை வெளியிட்டவர் அண்ட்ரிக் அண்ட்ரிகசு அடிகளார் ஆவார். 1542ஆம் ஆண்டு சவேரியார் கோவா வந்தவுடன், புதிதாக கிறித்தவ சமயம் தழுவிய மக்களுக்கு இறைவேண்டல், மன்றாட்டுகளைச் சொல்லிக் கொடுப்பதற்காக னுழஉவசiயெ ஊhசளைவரஅ என்ற நூலைப் போர்த்துக்கீசிய மொழியில் எழுதினார். பின்னர் 1557ஆம் ஆண்டு கோவாவில் அச்சிடப்பட்டு சமயப்பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது. இந்நூலில் வெளியான நம்பிக்கைப் அறிக்கை என்ற இறைவேண்டல்களைத் தமிழில் மொழி பெயர்த்து அச்சிட்டு “தம்பிரான் வணக்கம்” எனும் பெயரில் அண்ட்ரிக் அண்ட்ரிகசு அடிகளார் வெளியிட்டார். சவேரியார் தனது போர்த்துக்கீசிய நூலுக்கு னுழஉவசiயெ ஊhசளைவரஅ என்று பெயரிட்டிருந்தார். இதனைக் கிறித்தவக் கோட்பாடு என்றே தமிழாக்கம் செய்திருக்க வேண்டும். ஆனால் அடிகளார் தம்பிரான் வணக்கம் என்று மொழி பெயர்த்துள்ளார். தம்பிரான் என்றால் கடவுளைக் குறிக்கும் சொல், தாமே பிரான் என்ற சொல்லை வெளிப்படுத்துவதாகும். 
3.3.2 கிரிசித்தியானி வணக்கம் 
    1579ஆம் ஆண்டு கொச்சியில் அண்ட்ரிக் அண்ட்ரிகசுவின் இரண்டாவது நூலான 'கிரிசித்தியானி வணக்கம்” அச்சானது. மார்க்கோத் ஜார்ஜ் என்பவர் போர்த்துக்கீசிய மொழியில் எழுதிய னுழஉசiயெ ஊhசளைவயஅ என்ற நூலின் தமிழாக்கமே இந்நூலாகும். இந்நூல் வினா - விடை வடிவில் அமைந்துள்ளது. இது கிறித்தவத்தின் அடிப்படை உண்மைகளைக் கூறுகிறது. இந்நூலை உருவாக்க வேறு தமிழறிஞர்களின் துணையை இவர் நாடிப்பெற்றுள்ளார். இந்நூலின் பெயர்க்காரணி குறித்து இராசமாணிக்கம் அடிகளார் பின்வருமாhறு விளக்கம் தருகிறார். “கிரிசித்தியானி” என்ற சொல்லுக்குக் கிறித்தவன் என்று பொருள். இறைவேண்டல் அல்லது வழிபாடு அல்லது வணக்கம் என்று பொருள் தரும். ஆகவே கிரிசித்தியானி வணக்கம் என்பது கிறித்தவன் செய்யும் வழிபாட்டைச் சுட்டிக்காட்டும் என்கிறார்.

3.3.3 கொம்பெசியொனாரு 
கத்தோலிக்கர்களின் சமய வாழ்வில் தாம் செய்த குற்றங்களை ஒத்துக்கொண்டு அதற்குப் ஒப்புரவு தேடுவது முதன்மை இடம் பெறுகிறது. பாவங்களைத்தலையான பாவங்கள், சாவான பாவங்கள் என இரண்டாகப் பகுத்துள்ளனர். தான் செய்த பாவங்களை ஒரு கத்தோலிக்கர் இரண்டு வழிகளில் ஒத்துக்கொண்டு அதற்குப் பொறுத்தல் (ஒப்புரவு) தேடலாம். 
திருப்பலியின் தொடக்கத்தில் அனைவரும் தாம் செய்த பாவங்கள் என்ன என்று குறிப்பிடாது பொதுவாக இறைவனிடம் மன்னிப்பு வேண்டுவது. “என் பாவமே, என் பாவமே, என் பெரும் பாவமே" என்று தன் மார்பில் அடித்து பாவமன்னிப்பு வேண்டுவது. இது ஒரு வெளிப்படையான நிகழ்வாகும். 
அருள்பணியாளரிடம் தாம் செய்த பாவங்கள் என்ன என்று குறிப்பிட்டு, ஆண்டவரிடம் பொறுத்தல் கேட்பது ஒப்புரவு அருளடையாளம் என்று அழைக்கிறார்கள். செய்த பாவங்களுக்கேற்ற பரிகாரங்களை மேற்கொள்ள அருள்பணியாளர் வழிகாட்டுவார். 
எனவே ஒவ்வொரு கத்தோலிக்கரும் பாவங்கள், பாவ மன்னிப்பு தொடர்பாகச் செய்ய வேண்டிய இறைவேண்டல் குறித்த அடிப்படை அறிவைப் பெற்றிருப்பது அவசியம். இதன் பொருட்டே இந்நூலை அடிகளார் அச்சிட்டு வெளியிட்டுள்ளார். ஊழகெநளளழையெசைழ என்ற போர்ச்சுக்கீசிய மொழிச் சொல்லின் ஒலி வடிவமாகவே இந்நூலின் தலைப்பு அமைந்துள்ளது. 
3.3.4 அடியார் வரலாறு
தமிழ் நாட்டு எல்லைக்குள் இரண்டாவது தமிழ் நூலாக அச்சிடப்பட்ட நூல் 'அடியார் வரலாறு” ஆகும். இது ஸ்பானிய மொழியில் கத்தோலிக்கப் புனிதர்களின் வரலாறைக் கூறும் குடழள ளுயnஉவழசரஅ என்ற நூலின் மொழிப்பெயர்ப்பாகும். ஆயினும் மூலநூலில் இருந்து விலகாமல் செய்யப்பட்ட மொழிபெயர்ப்பல்ல. தாம் பணியாற்றும் பணித்தளத்தில் வாழும் பெரும்பான்மையினரான பரதவர்களை மனதில் கொண்டு ஆங்காங்கே அவர்களுக்கு அறிவுரைகள் கூறும் முறையில் இந்நூல் அமைந்துள்ளது. அண்ட்ரிக் அண்ட்ரிகசு அடிகளாரின் முந்தைய மூன்று படைப்புகளையும் விட அதிகப் பக்கங்களைக் கொண்டது. இந்நூல் 669 பக்கங்கள் கொண்டது. 
3.4 நாள்காட்டி சீர்திருத்தம் 
இந்நூலின் இறுதியில் அண்ட்ரிக் அண்ட்ரிகசு அடிகளார் மேற்கொண்ட நாள்காட்டிச் சீர்திருத்தம் இடம் பெற்றுள்ளது. ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்த அருள்பணியாளர்களுக்கு தமிழ் நாள்காட்டி தெரியாது. அதுபோன்றே புதிதாகக் கத்தோலிக்க சமயத்தைத் தழுவியப் பரதவர்களுக்கு ஐரோப்பிய நாள்காட்டி தெரியாது. இதனால் கத்தோலிக்கச் சமயம் சார்ந்த விழாக்களைக் கொண்டாடுவதில் குழப்பம் ஏற்பட்டது. இதைத்தீர்க்கும் வகையில் அடிகளார் நாள்காட்டி சீர்திருத்தம் ஒன்றை உருவாக்கினார். இதன்படி தைத்திங்கள் ஆண்டின் முதல் மாதமாகி, சனவரி மாதத்திற்கு இணையாக்கப்பட்டது. சனவரி ஒன்றும், தை ஒன்றும் ஒன்றாக ஆக்கப்பட்டன. மாசி மாதம் பிப்ரவரிக்கு இணையாக்கப்பட்டு 28 நாள்களைக் கொண்டதாகியது. பிப்ரவரியைப் போன்றே நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை இருபத்தொன்பது நாள்களைப் பெற்றது. மார்கழி மாதத்தில், கிறித்து பிறப்பு விழா மார்கழி 25ஆம் நாள் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை நம்முடைய நாயகன் இயேசு கிறித்து பிறப்பு பெருநாள் என்று அண்ட்ரிக் அண்ட்ரிகசு அடிகளார் குறிப்பிட்டுள்ளார். அண்ட்ரிக் அண்ட்ரிகசு அடிகளார் மறைவுக்குப் பின்னரும் அவரது நாள்காட்டி சீர்திருத்தம் தமிழ்நாட்டில் கத்தோலிக்க மக்களிடையே நிலைபெற்றிருந்துள்ளது. வீரமாமுனிவர் தமது தேம்பாவணி காப்பியத்தில் இயேசுவின் பிறப்பைக் குறிப்பிடும்போது மாதம் “மார்கழி வைகல் ஐயைந்தாய்” என்றே குறிப்பிடுகிறார். தற்போதும் அண்ட்ரிக் அண்ட்ரிகசு அடிகளார் பணிபுரிந்த பரதவ மக்களின் பேச்சு வழக்கில் அடிகளாரின் நாள்காட்டி சீர்திருத்தம் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக ஆகத்து ஐந்தாம் நாள் நிகழும் தூத்துக்குடி பனிமய மாதா திருநாளை 'ஆவணி ஐந்து திருநாள்” என்று குறிப்பிடும் வழக்கம் பரதகுல முதியவர்களிடம் இன்றும் உள்ளது. 
3.5 அண்ட்ரிக் அண்ட்ரிகசு மலர்வித்த மக்கள் இயக்கம்
மக்கள் வரலாறை மறந்து போனால், வரலாறு மக்களை வேறு திசையில் கொண்டுசெல்லும் என்பதற்குச் சிறந்த சான்று அண்ட்ரிக் அண்ட்ரிகசு அடிகளார் தொடங்கிய பிறரன்புச் சகோதரத்துவ அவை ஆகும். இது ஆங்கிலத்தில் ஊழகெசயவநசnவைல ழக ஊhயசவைல என்றும், போர்ச்சுக்கீசிய மொழியில் ஊழகெசயசயை னய ஊயசனையனய என்றும் அழைக்கப்பட்டது. இன்று இது கொம்பீரியர் அவை என்று அழைக்கப்படுகிறது. மணப்பாடு, ஆலந்தலை, கூடுதாலை, வீரபாண்டியன் பட்டணம், உவரி, பெருமணல் போன்ற கடற்கரைக் கிராமங்களில் இந்த அவை இன்றும் காணப்படுகிறது. அண்ட்ரிக் அண்ட்ரிகசு அடிகளார் இந்தச் அவையைத் தொடங்கியதன் நோக்கம் மிக உயர்வானது. ஆனால் வரலாற்றில் இது வெறும் பக்த அவையாக மாறியுள்ளது வேடிக்கையும், நகைப்புக்குரியதுமாகும். அண்ட்ரிக் அண்ட்ரிகசு அடிகளார் முத்துக்குளித்துறைப் பணித்தளத்தின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பிறகு மீனவர்களின் அரசியல், சமூக, பொருளாதார, சமய வாழ்வில் நேரடியாக ஈடுபட்டுள்ளார். இவை அனைத்திற்கும் ஒரே தீர்வு மக்கள் இயக்கமாக மாறுவதுதான் என்பதை அவர் உணர்ந்து அவர்களை இயக்கமாக மாற்றி “பிறரன்பு சகோதரச் அவையைத்” தொடங்கினார். 1572ஆம் ஆண்டு இந்த அவை புன்னைக்காயலில் தொடங்கப்பட்டது. இந்தச் அவைக்கு 13 அதிகாரங்களைக் கொண்ட விதிமுறைகளை அவர் வகுத்தார். இவ்வமைப்பு கத்தோலிக்கப் பொதுநிiலையினருக்காக உருவாக்கப்பட்டிருந்தாலும், இதன் விதிமுறைகளுள் பெரும்பாலானவை எல்லா மக்களும் பயன்படுத்தக் கூடியதாகவே இருந்தது. இதில் ஆண்களும் பெண்களும் இணைந்தே இருந்துள்ளனர். பிறரன்பு சகோதரத்துவ அவையின் மிக முக்கியப் பணிகளாக அண்ட்ரிக் அண்ட்ரிகசு அடிகளார் வரையறுத்தவை பின்வருமாறு…
இறைவேண்டல் 
பிறரன்புப் பணிகள் 
நோயுற்றோருக்கு உதவுவது 
தேவையில் இருப்போருக்கு உதவுதல் 
சமூக ஒற்றுமை 
மருத்துவத்தொண்டு 
நற்பண்புகள் 
குழந்தை வளர்ப்பு
3.6 மருத்துவப் பணி
தமிழக வரலாற்றில் முதல் மருத்துவம் புன்னைக்காயலில் தொடங்கப்பட்டது. மருந்து இல்லாத காலத்தில் மக்கள் பெரும் கொள்ளை நோயினால் செத்துமடிவது அன்றாடச் செயல்பாடாக இருந்தது. இதைக் கண்டு மனம் வருந்திய அடிகளார் மக்களுக்காக மருத்துவமனையை நிறுவினார். உள்ூளுர் மக்களின் நன்கொடையாலே அந்த மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. நாளடைவில் மருத்துவமனையை நடத்துவதற்குப் போதிய பணம் இல்லாமல் துன்புற்றனர். ஏனென்றால் நோயுற்றோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருந்தது. மருந்துகளை வாங்குவதும் அதை மக்களுக்குக் குறைந்த விலையில் கொடுப்பதும் பெரும் பொருள் செலவை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் ஞாயிற்றுக்கிழமைகளில் கோயிலில் உண்டியலில் மருத்துவமனை பராமரிப்புக்காகக் காணிக்கை பிரிக்கப்பட்டது. போர்த்துக்கல் படைத்தளபதிகளுக்கும் இங்கு மருத்துவம் செய்யப்பட்டது. அக்காலத்தில் இந்தியா முழுவதுமே இரண்டு பெரிய மருத்துவமனைகள்தான் இருந்தன. ஒன்று கோவாவில் உள்ள சால்செட்டிலும் மற்றொன்று தமிழகத்தின் புன்னைக்காயலிலும் என்பதை நாம் பெருமையோடு எண்ணி வியக்க வேண்டியது. இரண்டையும் நிறுவியவர்கள் போர்த்துக்கீசியர்கள். அதில் தமிழகத்தில் நிறுவியவர் அண்ட்ரிக் அண்ட்ரிகசு அடிகளார். புன்னைக்காயலில் அண்ட்ரிக் அண்ட்ரிகசு அடிகளார் உருவாக்கிய மருத்துவமனைதான் தமிழ்நாட்டின் முதல் மருத்துவமனையாகும். முத்துக்குளித்துறையின் முதன்மை அருள்பணியாளராகப் பணியாற்றிய அண்ட்ரிக் அண்ட்ரிகசு அடிகளார் இம்முதல் மருத்துவமனையை 1550ஆம் ஆண்டு நிறுவினார் என்பதைப் பல்வேறு ஆவணங்களும் உறுதி செய்கின்றன. இதுபற்றி அடிகளார் உரோமையிலுள்ள இயேசு அவைத்தலைமையகத்திற்கு 12. 01. 1551ஆம் ஆண்டு எழுதிய கடிதத்தில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்: “முத்துக்குளித்துறையிலும், உள்நாட்டுப்பகுதியிலும் பிணியுற்ற ஏழைமக்களின் நலனுக்காக புன்னைக்காயலில் புதிதாக ஒரு மருத்துவமனையை உருவாக்கியுள்ளோம். இம்மருத்துவமனை, இந்நாட்டிலேயே மிகவும் வியக்கத்தக்க புதுமையான ஒரு நிறுவனமாகும். இப்படிப்பட்ட ஒன்றை இப்பகுதியில் வாழும் மக்கள் இதுவரை அனுபவித்ததே இல்லை. இம்மருத்துவமனை நமது (இயேசு அவை) இல்லத்திற்கு அருகிலேயே அமைக்கப்பட்டுள்ளது. இம்மருத்துவமனையில் சாதிமத வேறுபாடின்றி அனைவரும் சிகிச்சைபெற்று வருகின்றனர். இத்தகைய அன்பு அவர்களுக்கு முற்றிலும் புதிய அனுபவமாக உள்ளது. அதனால் கிறித்தவத் திருமறையை அவர்கள் தங்களின் தாய் எனக் கருதுகிறார்கள். பலர் தங்களின் மரணப்படுக்கையில் திருமுழுக்குப் பெற்று இறந்தனர்....” என்று குறிப்பிடுகிறார்.
புன்னைக்காயலில் மட்டுமல்லாது கிறித்தவ மக்கள் அதிகம் வாழும் பிற ஊர்களிலும் மருத்துவமனையைத் தொடங்கியுள்ளார். மருத்துவனை என்பது அன்றைய நாளில் எங்கும் இல்லாத சூழலில் மக்கள் மருத்துவமனையால் அடையும் நன்மையைப் பார்த்துவிட்டு அண்ட்ரிக் அண்ட்ரிகசு அடிகளாரின் பெரும் முயற்சியால் ஏழு மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டன. மாக்துவமனைகளின் நிர்வாகப் பொறுப்பு அனைத்தையும் கிறித்தவ மக்களிடமே கொடுத்துள்ளார். மக்களிடமிருந்து பெற்ற நன்கொடையால்தான் அனைத்து மருத்துவமனைகளும் நடைபெற்றுள்ளன. பொதுமக்கள் தாராளமாக நன்கொடை வழங்கியுள்ளனர். அதைக் கிறித்தவ வாழ்வின் விழுமியமாகவும் போதித்துள்ளார். 1572ஆம் ஆண்டு இயேசு அவை கணக்குப்படி முத்துக்குளித்துறையில் மொத்தம் 27 கிறித்தவ ஊர்களும், 20 கோயில்களும், 7 மருத்துவமனைகளும் இருந்தன. இவ்வேழு மருத்துவமனைகளும் கீழ்க்கண்ட ஊர்களில் இயங்கி வந்தன. மணப்பாடு, வீரபாண்டியன் பட்டணம், புன்னைக்காயல், தூத்துக்குடி, வைப்பார், வேம்பார், மன்னார் இவற்றில் புன்னைக்காயல் மருத்துவனையும், தூத்துக்குடி மருத்துவமனையும் ஏனைய மருத்துவமனைகளைக் காட்டிலும் அளவில் பெரியதாக இருந்தன. இங்கு சமய வேறுபாடின்றி நோயுற்றோர் அனுமதிக்கப்பட்டனர். அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. 1575ஆம் ஆண்டு அண்ட்ரிக் அண்ட்ரிகசு அடிகளார் எழுதிய கடிதம் ஒன்றில் “கிறித்தவராக விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், கிறித்தவரல்லாத நோயுற்றோருக்கும் இங்கு இடமுண்டு” என்று குறிப்பிட்டுள்ளார்.

3.7 அண்ட்ரிக் அண்ட்ரிகசுவின் வாழ்வு நமக்கு தரும் பாடம்
முத்துக்குளித்துறை மக்கள் கிறித்தவ சமயத்தைத் தழுவியதற்கு மிக அடிப்படைக் காரணி மக்கள் பாதுகாப்பற்ற சூழலில் வாழ்ந்ததே ஆகும். கிறித்தவ சமயம் பாதுகாப்பையும், மதிப்பையும், மாண்பையும், அங்கீகாரத்தையும் வழங்குகின்றது. அருள்பணியாளர்கள் மக்கள் சார்பாளர்களாகவே நிலைப்பாடு எடுக்கிறார்கள். அதற்காகத்தங்கள் வாழ்வை அர்ப்பணிக்கிறார்கள். தமிழகத் திருஅவை வரலாற்றில் அருள்பணியாளர்கள் புனிதர்களாக கருதப்பட்டு வணக்கத்திற்கு உரியவர்களாகவே கருதப்படுகிறார்கள். அவர்களின் புரட்சிகர அரசியல், மாற்றுப் பன்பாட்டுப் பணிகளுக்கு எல்லாம் புனிதம் என்று கற்பிக்கப்படுகிறது. அண்ட்ரிக் அண்ட்ரிகசு அடிகளாரின் பணியும், வாழ்வும் அப்படியே சமயத்தளத்திற்குள் முடக்கப்பட்டுள்ளது. அவரது விடுதலைப் பணி இன்றுவரை மக்களுக்கு விளக்கப்படவில்லை. எல்லா அருள்பணியாளர்களையும் சமயத்திற்குள்ளே முடக்கிவிட முடியாது. மாறாக அவர்களின் மாற்றுப் பணிகளை நாம் புதிய பொருள்கோள் முறையில் மறுவாசிப்புச் செய்ய வேண்டும். 
நிறைவாக
தமிழ்ச் சமூகம் இவரது தமிழ்ப் பணிக்காக இவரைப் பெருமைப்படுத்தியிருக்க வேண்டும், ஆனால் இன்றுவரை தமிழை முதலில் அச்சேற்றியவர் அண்ட்ரிக் அண்ட்ரிகசு அடிகளார் என்பதை அரசும், பொதுச் சமூகமும் அங்கீகரிக்க மறுக்கிறது. வரலாற்றை ஆதிக்கவாதிகளின் மனநிலையிலே நாமும் வாசித்துப் பழக்கப்பட்டுப் போனோம், அதில் கொலையுண்ட அடிமைக்கும் வரலாறு உண்டு என்பதை மறந்து போனோம். சமயங்களையும் கடந்த மனிதநேயப் பணியையே அடிகளார் செய்துள்ளார். இது இன்றைய சமயவாதச் சக்திகளுக்குப் பாடமாகும். 
வரலாறு என்பது நடந்த நிகழ்வுகளையும், செயல்களையும் நினைவுகூறுவது மட்டுமல்ல, மாறாக அவற்றைப் பின்புலமாகக் கொண்டு தற்கால வாழ்வியலை அமைத்துக்கொள்வது. அண்ட்ரிக் அண்ட்ரிகசு அடிகளார் இன்றைய மக்கள் பணியாளர்கள் அனைவருக்கும் ஒரு சான்றாக உள்ளார். மேலும் அவர் இன்று மக்களின் அன்றாட அரசியல், சமூக, பொருளாதார வாழ்வில் இரண்டறக் கலந்துள்ளார். இவர் தமிழைக் கற்றது என்பதை பார்ப்பனிய மறுப்பாகவே புரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் சமற்கிருதம் மட்டுமே இறைமொழி, சமய மொழி என்று தம்பட்டம் அடித்து மற்ற மொழிகளை அழிக்கும் ஆரியத்திற்கு எதிராக அன்றே மாற்று விதைகளை விதைத்தவர் அண்ட்ரிக் அண்ட்ரிகசு அடிகளார். தமிழைக் கற்பது என்பது அடித்தள மக்களின் மொழியைக் கற்பதாகும். மக்களின் மொழியில் மக்களிடம் பணிசெய்ததால் இன்றும் அவர் மக்களின் மனதில் வாழ்கிறார். திண்ணைப் பள்ளிகளில் தீண்டாமைக் கொடுமைகளை அனுபவித்து வந்த மக்கள் அடிகளாரின் கல்லூரியில் மனிதராக மதிக்கப்பட்டார்கள். அடித்தள மக்கள் பார்வை என்பதும், அடித்தள மக்களை மதிப்பது என்பதும் அவர்கள் மொழியை மதிப்பதுமாகும். இவ்வகையில் அண்ட்ரிக் அண்ட்ரிகசு அடிகளார் இன்றைய தலைமுறைக்கு சான்றாக உள்ளார். இன்று மக்களுக்கான நிலைப்பாடு எடுத்து வாழ்வோர் அண்ட்ரிக் அண்ட்ரிகசு அடிகளாரை வாசிக்காமல் பணிசெய்ய இயலாது. தமிழக வரலாற்றில் நீங்கா இடம் பிடித்தவர் அண்ட்ரிக் அண்ட்ரிகசு அடிகளார் என்று கூறி இக்கட்டுரையை நிறைவு செய்கிறேன்.

1 கருத்து:

நன்மை செய்வோம்! நல்லவராய் வாழ்வோம்! (18-6-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்! ...