செவ்வாய், 28 ஜனவரி, 2020

குடியரசு தினவிழா

குடியரசு தினவிழா
இயேசுவில் அன்புக்குரிய இறை மக்களே உங்கள் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கிறேன். இன்றைய நாள் வாசகங்கள் வழியாக இயேசு ‘வாருங்கள் நான் உங்களை மனிதரைப் பிடிப்பவரர்க்குவேன்’ என்று கூறி தம்மை பின்தொடர அழைப்பு விடுகிறார். இன்று நாம் வாழக்கூடிய இந்நாட்டிலே ஒவ்வொருவரும் ஒவ்வொருவரின் பின்னால் சென்று கொண்டிருக்கிறோம். கணவன் மனைவியின் பின்னும், மனைவி கணவனின் பின்னும், குழந்தைகள் பெற்றோரின் பின்னும், பெரும்பான்மையான இளைஞர்கள் கனவுகளுக்குப் இன்னும், சில தரைவர்களுக்கு பின்னுமாக சென்று கொண்டிருக்கிறார்கள். எனவே இன்றைய நாளில் நாம் யாரின் பின் சென்று கொண்டிருக்கிறோம்? என்பது குறித்து சிந்திக்க உங்களை அன்போடு அழைக்கின்றேன்.
நம் நாட்டை ஆங்கிலேயர் ஆட்சி செய்தபோது அவர்களிடம் இருந்து விடுதலையை பெற வேண்டும் என்பதற்காக பலர் அகிம்சையை பின்தொடர்ந்தார்கள். சிலர் ஆயுதம் ஏந்தி போருக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடு அந்த எண்ணங்களின் அடிப்படையில் சிலரை பின் தொடர்ந்தார்கள். அன்று உரிமை வேண்டி உரிமைக்காக விடுதலை வேண்டி விடுதலை எண்ணத்தை பின் தொடர்ந்தவர்கள் பலர். அவர்களால் கிடைத்ததே இந்த சுதந்திரம். ஆனால் இன்று நாம் வாழக்கூடிய நாட்டில் ஆளும் ஆட்சியாளர்களிடமிருந்து வாழ்வதற்கான உரிமையை வேண்டி மக்கள் வீதிகளில் களமிறங்கி இருக்கிறார்கள். இச்சூழலில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து ‘என்னை பின் தொடருங்கள் நான் உங்களை மனிதரைப் பிடிப்பவராக்குவேன்’ என்று இன்றைய நற்செய்தி வாசகத்தின் வழியாக நமக்கு அழைப்பு தருகிறார்.
இயேசுவை பின்தொடர்பவர்கள் மனிதர்களை பிடிப்பவர்களாக இருக்க வேண்டும் என்பதனை இன்றைய நாளில் எவ்வாறு அர்த்தம் கொள்வது?.
இயேசுவைப் பின்தொடர்பவர்கள் சாதி, மதம், இனம், மொழி என வேறுபாடுகள் அனைத்தையும் கடந்து ஒற்றுமையோடு ஒரே இறைவனின் பிள்ளைகளாக  வாழவேண்டும். நாம் வாழும் பொழுது எந்தவித பாகுபாடுமின்றி ஒவ்வொருவரும் அடுத்தவரைப் பற்றிய நல்லவிதமான ஒரு ஒற்றுமை உணர்வோடு உறவுகளை வளப்படுத்திக் கொள்வோம். அப்படி வளப்படுத்திக் கொள்வது மனிதரைப் பிடிப்பதாகும்.
இந்த சமூகத்தில் புறம்தள்ளப்பட்ட ஏழைகள், அனாதைகள், தொழுநோயாளர்கள் ஆகியோரை அன்பால் அரவணைத்து ஒன்றிணைத்து வாழ்ந்து அவர்களுக்காக அவர்களுடனே இறந்தவர் அன்னை தெரசா. அவரின் வழியிலேயே அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவது இன்று ஆண்டவர் கொடுக்கக்கூடிய அழைப்பாக இருக்கின்றது.
சில நாட்களுக்கு முன்பாக கிறிஸ்தவ ஒன்றிப்பு என்னும் பெயரில் அருகில் இருக்கக்கூடிய பிரிவினையை சகோதரர்களோடு இணைந்து வழிபாடுகளில் நாம் பங்கெடுத்தது ஒற்றுமையின் அடையாளம். நம்மிடையே வேற்றுமைகள் பல இருந்தாலும் இயேசுவின் பெயரால் ஒன்றிணைந்து நாம் வாழ வேண்டும் என்பதன் அடையாளமாகவே அந்நிகழ்வு அமைந்தது. மதத்தின் பெயராலும், கருத்துக்கள் அடிப்படையிலும் சண்டையிட்டுக் கொள்வதை விட வேற்றுமைகளை ஏற்றுக்கொண்டு ஒன்றித்து வாழ்வதே இறைவன் கொடுக்கக்கூடிய அழைப்பாகும்.
சில காட்களுக்கு முன் நமக்கு மதாந்திர தியானம் கொடுத்த அருள்தந்தை. சேவியர் அந்தோணி அவர்கள் நம்மிடம் நிலவக்கூடிய ஒற்றுமையின்மை குறித்து வேடிக்கையாக ஒர சிறுகதையை கூறியுள்ளார். ஒரு கோவிலிலே ஒரு புறா வாசித்து வந்தது. சில நாட்கள் கழித்து அந்த கோவிலை சுத்தம் செய்யத் துவங்கினார்கள். எனவே புறாக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டன. வெளியேறிய அந்தப் புறாக்கள் அங்கிருந்து நேரடியாக ஒரு கிறிஸ்தவ தேவாலயத்திற்கு சென்றது. அங்கு சில நாட்கள் தங்கியிருந்து அங்கும் தூய்மைப்படுத்தும் பணி துவங்கியதால் அங்கிருந்து சென்று மசூதியில் தஞ்சம் புகுந்தது. சில நாட்கள் கழித்து மசூதியில் இருந்து வெளியேறி மீண்டும் இந்து கோவிலுக்கு சென்றது. மீண்டும் அங்கிருந்து தேவாலயம் அதனைத் தொடர்ந்து மசூதி என வலம் வந்து கொண்டே இருந்தது. அப்புறாக் கூட்டத்திலிருந்து ஒரு சிறிய புறா பெரிய புறாவை நோக்கி கேட்டது நாம் பல இடங்களுக்கு செல்கிறோம் பலவிதமான மனிதர்களை சந்திக்கிறோம். ஆனால் நம்முடைய பிளவுகள் இல்லை ஏன் இந்த மனிதர்கள் மட்டும் சண்டையிட்டு பிளைவுபட்டு பிரிந்திருக்கிறார்கள் என்று கேள்வியை எழுப்பியது.
இன்று மதத்தின் பெயரால் நம்மை பிளவுபடுத்தும் சக்திகள் ஏராளமாக உதயமாகி கொண்டிருக்கின்றனர். இன்று நாம் வாழக்கூடிய நாட்டில் ஒற்றுமையை குலைக்கும் விதத்தில் பலவிதமான நிகழ்வுகள் நாளுக்கு நாள் அரங்கேற்றப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இச்சூழ்நிலையில் ஒற்றுமையை விரும்புவர்களாகவும் அதனை பின்தொடர்பவர்களாகவும் நாம் உருவாகிட அழைக்கப்படுகிறோம்.
திருவிவிலியத்தில் திருப்பாடல் 133 இவ்வாறாகக் கூறுகிறது ‘சகோதரர்கள் ஒன்றுபட்டு வாழ்வது எத்துணை நன்று, எத்துணை இனியது’ என்று. யோவான் நற்செய்தி 17ஆம் அதிகாரம் 21ஆவது வசனம் கூறுகிறது ‘எல்லோரும் ஒன்றாய் இருப்பார்களாக’ என்று. இந்த குடியரசு நாளில் இறைவன் நமக்கு கொடுக்கக்கூடிய அழைப்பு ஒற்றுமைக்கான அழைப்பு. நாம் ஒருவர் மற்றவரை மதித்து ஒன்றித்து வாழ வேண்டும் என்பதே இறைவன் இன்றைய நாளில் நமக்கு தரக்கூடிய செய்தியாக உள்ளது.
மதத்தின் பெயரால் மொழியின் பெயரால் பலவிதமான பிரிவுகளை இன்று பலர் நம்மிடையே விதைக்க முயன்றாலும் அதில் சிக்கிக் கொள்ளாமல் நாம் ஒருவரை ஒருவர் மதித்தும், ஏற்றுக் கொண்டும் மனிதர் என்னும் முறையில் ஒன்றித்து வாழ நாம் இன்றைய நாளில் உறுதி ஏற்றுக் கொள்வோம். ஓன்றுபட்டு வாழும் போது நாம் ஆண்டவர் இயேசு கூறியது போல ‘மனிதர்களை பிடிப்பவராகுவோம்’ மனிதரை பிடிப்பவராகும் போது சாதி, மதம், இனம், மொழி என்ற வேறுபாடுகளைக் கடந்து மனிதர்களோடு உறவு கொண்டவர்களாக நாம் உருமாறுவோம். நம்மிடம் இருக்கக்கூடிய வேறுபாடுகளுக்கு மத்தியில் ஒற்றுமை உணர்வோடு ஒன்றித்து வாழ அருள் வேண்டியவர்களாக இந்த திருப்பலியில் தொடர்ந்து பயணிப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இவரே உம் மகன்! இவரே உம் தாய்! (20-5-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!    இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். ...