செவ்வாய், 28 ஜனவரி, 2020

3. இளைஞனே எதை நோக்கிப் போகிறாய்?

இளைஞனே எதை நோக்கிப் போகிறாய்?

ஒருமுறை ஒரு கூட்டத்தில் இன்றைய இளைஞர்கள் எப்படிப்பட்டவர்கள் என கேள்வி எழுப்பினேன். சிலர் இளைஞர்கள் என்றால் நடிகர்களின் பின் தொடர கூடியவர்கள் என்றனர். சிலர் இளைஞர்கள் என்றால் சாலையில் சாகசம் செய்பவர்கள் என்றனர். சிலர் சமூகவலைதளத்தில் வாழ்க்கையை தொலைத்தவர்கள் என்றனர். நாம் வாழும் பகுதியில் பெரும்பான்மையானவர்களின் பார்வை இளைஞர்களை பற்றிய எதிர்மறை விமர்சனம் கொண்டதாகவே உள்ளது. மிகவும் குறைவான நபர்களே இளைஞர்களை பற்றி நேர்மறையாக பேசுகின்றனர்.

நண்பா! இன்று நாம் வாழும் உலகில் இளையோர் ஆற்றும் பணி மறக்க இயலாத ஒன்று. உதாரணமாக… 
பண்பாட்டை காக்க மெரினாவில் கூடிய ஜல்லிக்கட்டு போராட்டமாகட்டும், சென்னையில் வெள்ளம் வந்த போது நீரில் தவித்த மக்களை காக்க கரம் நீட்டியதாக இருக்கட்டும், கஜா புயலில் நம் மாநிலம் பாதிக்கப்பட்ட போது தங்களின் வேலைகளை விட்டுவிட்டு வந்து உதவிய சூழலாக இருக்கட்டும். இவைகள் அனைத்துமே இன்று தமிழக இளைஞர்களை நோக்கி உலகை திருப்பிப் பார்க்க வைத்துள்ளது என்பது முற்றிலும் உண்மை...

நாம் வாழும் பகுதிகளில் நம்மை பற்றி நேர்மறையாகவும் ,எதிர்மறையாகவும் பேசுபவர்கள் எப்போதும் உண்டு. குறிப்பாக எதிர்மறை கருத்து கொண்டவர்கள் மிகவும் அதிகம். இன்று நேர்மறையானச் செயல்களை விட எதிர்மறையானச் செயல்களையே அனைவரும் கண்காணிக்கின்றனர். மேலும் அதைச் சுட்டிக்காட்டி தங்களை நேர்மையாளராக காட்ட எண்ணுகின்றனர். இச்சூழலில் நாம் எதை நோக்கிப் போகிறோம்? 
சமூகத்தின் நேர்மறையான கருத்து அடிப்படையில் நாம் நமது பாதையை அமைக்கின்றோமா? அல்லது சமூகத்தில் காணப்படும் எதற்கெடுத்தாலும் கெத்து என்று கூறிக்கொண்டு எதிர்மறையான கருத்துக்களின் அடிப்படையில் நமது பாதையை அமைக்க போகின்றோமா? பெரும்பான்மையான இளைஞர்கள் இன்று கெத்து என்ற பெயரில் எதிர்மறை கருத்துக்களை உள்வாங்கி அதன் அடிப்படையில் தங்களின் வாழ்வை அமைத்துக் கொள்ள முயன்றனர். ஆனால், திருத்தந்தை பிரான்சிஸ் “கிறிஸ்து வாழ்கிறார்” என்ற தனது ஊக்க உரையில் “நாம் வாழும் காலத்தை அதற்குரிய வாய்ப்புகளோடும், ஆபத்துகளோடும், அதன் மகிழ்ச்சியோடும், துயரங்களோடும். அதன் வெற்றிகளோடும், தோல்விகளோடும் நாம் நேசிக்க வேண்டும்” என்றும் “இளைஞர்கள் முதியோர் உடன் இணைந்து பயணிக்க வேண்டும் அவ்வாறு பயணிக்கும்போது நிகழ்காலத்தில் உறுதியாக வேரூன்றி, இங்கிருந்து கடந்த காலத்தை மீண்டும் ஒருமுறை பார்த்துவிட்டு, எதிர்காலத்தை சிறப்பாக நோக்க முடியும்” என ஊக்கமூட்டுகிறார்.

“நல்ல சிந்தனை (யோசனை) இருந்தால் வாழ முடியும். அதை நல்ல முறையில் பயன்படுத்தினால் மட்டுமே முன்னேற முடியும்” என்பதற்கு ஏற்ப சமூகத்தில் காணப்படும் குறைவான நேர்மறையான எண்ணங்களை கருத்தில்கொண்டு தொடர்ந்து பயணிக்க நாம் முயல வேண்டும். ஏனெனில் திருத்தந்தை பிரான்சிஸ் “கிறிஸ்து வாழ்கிறார்” என்ற தனது ஊக்க உரையில் நினைவூட்டும் பழம்பெரும் முதுமொழியான “இளைஞர்கள் அறிவையும், வலிமையையும் கொண்டு இருந்தால் அவர்களால் சாதிக்க முடியாதது என்று எதுவும் இல்லை” என்பது உண்மையாகும். தெளிவுள்ளவர்களாய் தெளிவான சிந்தனையோடும், நாம் நேர்மறையான எண்ணங்களோடும் முழு ஆளுமை கொண்ட நாம் நமது வாழ்வை அமைத்திடுவோம்… நமது நண்பர்களையும் அப்பாதை நோக்கி அழைத்துச் செல்வோம்...

என்றும் அன்புடன் 
சகோ. சகாயராஜ் 
அம்மாபேட்டை, திருச்சி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இவரே உம் மகன்! இவரே உம் தாய்! (20-5-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!    இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். ...