செவ்வாய், 28 ஜனவரி, 2020

திருக்காட்சி பெருவிழா - 2020


திருக்காட்சி பெருவிழா - 2020

அன்புக்குரிய இறைமக்களே! உங்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் விண்மீனை பின்தொடர்ந்து சென்ற ஞானிகள் பாலன் இயேசுவை கண்டு கொண்ட நிகழ்வை நாம் வாசிக்க கேட்டோம். அதன் அடிப்படையில் பிறந்துள்ள இப்புதிய ஆண்டிலே நாம் எதனை அல்லது யாரை பின்பற்றிக் கொண்டு எப்படி அல்லது எதன் அடிப்படையில் செல்லப் போகிறோம்  என சிந்திக்க உங்கள் ஒவ்வொருவரையும் அழைக்கின்றேன்.

சமீபத்தில் கடந்த ஆண்டுகளில் விகடன் பத்திரிக்கையில் சாதனை படைத்த 10 மனிதர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. அந்தப் பட்டியலில் நான்காவது இடத்தை; பிடித்தவரின் பெயர் டாக்டர் காந்திமதிநாதன். யார் இந்த காந்திமதிநாதன்? என்று தேடிப் பார்த்த பொழுது மதுரைக்கு அருகாமையில் இருக்கக்கூடிய தோப்பூர் எனும் பகுதியில் உள்ள அரசு நெஞ்சக மற்றும் தோற்று நோய் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்ற கூடியவர் இவர்.

அரசு மருத்துவமனை என்றால் நம் அனைவருக்கும் தெரியும் அது எந்த அளவிற்கு சுத்தமானதாகவும், சுகாதாரமான சூழல் கொண்டதாகவும் இருக்கும் என்று. நகர்புறங்களில் இருக்கும் அரசு மருத்துவமனைகளை காட்டிலும் கிராமப்புறங்களில் இருக்கக்கூடிய அரசு மருத்துவமனைகளின் நிலை மிகவும் கவலைக்கிடமானது.  அவ்வகையில் இந்த தோப்பூரில் இருக்கக்கூடிய அரசு நெஞ்சக மற்றும் தொற்று நோய் மருத்துவமனை முழுவதும் முட்புதர்கள்  மண்டையும், மக்கள் கால் வைக்க தயங்க கூடிய ஒரு மருத்துவ மனையாகவே இருந்தது. எனவே மக்கள் அனைவரும் அதனை காட்டாஸ்பத்திரி என்றே அழைப்பார்கள்..

இச்சூழலை மாற்றும் விதத்தில் மருத்துவமனை வளாகத்தை ஒரு பசுமை வளாகமாக மாற்றிய ஒரு மகத்துவமான மனிதர் தான் இந்த டாக்டர் காந்திமதிநாதன் என்பவர். மிகவும் தூய்மையான வார்டுகள், ஒவ்வொரு வார்டிலும் டிவி, ரேடியோ, சுகாதார வசதிகள் கொண்ட சலூன், மூலிகைத்தோட்டம், நூலகம், விளையாட்டு அரங்கங்கள், நோயாளிகளுக்கு என தொழிற் பயிற்சிகள் என இவரது முயற்சியால் முழுமையான “மறுவாழ்வு மையமாகவே” இம்மருத்துவமனை மாறியுள்ளது.

நாம் நற்செய்தியில் வாசித்த ஞானிகள் விண்மீனை தொடர்ந்து ஆண்டவர் இயேசுவை கண்டுகொண்டார்கள். இந்த மருத்துவர் காந்திமதிநாதன் என்பவர் எதனை பின் தொடர்ந்து இத்தகைய நல்ல செயலில் ஈடுபட்டார் என்று நேர்காணல் செய்யும் பொழுது நான் இருக்கும் இடம் மிகவும் சுத்தமாகவும் பலர் வந்து செல்லக்கூடிய வண்ணமாகவும் இருக்க வேண்டும் என்ற என்னுடையநல்லெணணத்தின் வெளிப்பாடே இதற்கு காரணம். நான் என்னிடத்தில் உள்ள நல்லெண்ணத்தை கண்டுக் கொண்டு அதன் வழி நடக்கிறேன் என்றார். அதன் விளைவே பலருக்கு நன்மை தரும் நல்ல ஒரு சூழல் கொண்ட மருத்துவமனை உருவாக வழி வகுத்தார்.

விவிலியத்தில் தொடக்கநூல் 1 ஆம் அதிகாரம் 26 ஆம் வசனம் கூறுகிறது “கடவுள் மனிதரைத் தம் உருவிலும் நம் சாயலிலும் உண்டாக்கினார்” என்று.  நாம் ஒவ்வொருவரும் கடவுளின் சாயல்.  கடவுளின் கைவண்மையால் உருவானவர்கள். திருவிவிலித்தில் தொடக்கநூல் 1 ஆம்; அதிகாரத்தில் 31 ஆம் வசனம் கூறுகிறது “கடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும் நோக்கினார் அவை மிகவும் நன்றாய் இருந்தன” என்று.

அன்புக்குரியவர்களே! ஆண்டவர் இயேசுவை கண்டு கொள்ள வேண்டும் என்ற எண்ணமே பல மைல் தூரத்தில் இருந்து ஞானிகளை புறப்பட்டு வரச் செய்தது. நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே உங்களை நல்லது செய்ய வைக்க முடியும். மனிதரான டாக்டர் காந்திமதி நாதனிடத்தில் காணப்பட்ட நல்லெண்ணம் போல் நம் அனைவரிடத்திலும் பலவிதமான நற்பண்புகள் உள்ளன. இப்புதிய ஆண்டில் நம்மிடம் உள்ள நல்லெண்ணங்களையும், நற்பண்புகளையும் கண்டுக் கொள்வோம். ஞானிகள் விண்மீனை பின்தொடர்ந்து பாலன் இயேசுவை கண்டுக்கொண்டதுப் போல நாமும் நம் ஒவ்வொருவரிடத்திலும் புதைந்து கிடக்கும் நல்லெண்ணங்களையும், நற்பண்புகளையும் கண்டுக் கொண்டு இவ்வருடம் முழுவதும் அதனை பின்தொடர்ந்து செல்வொம். வாழ்வில் மற்றவர் வளம் பெற உங்கள் வாழ்வு அவர்களுக்கு உகந்த வாழ்வாக அமையட்டும்.

இதுவே இன்றைய நாளில் மூன்று ஞானிகள் அல்லது திருக்காட்சி பெருவிழா நமக்குத் தரும் மையச் செய்தியாக அமையும்.

ஒன்றை பின்தொடர்ந்து செல்வது என்பது மிகவும் எளிதான காரியமல்ல...  வாழ்வில் நற்செயலை செய்யத் துவங்கும் போதுதான் பலவிதமான இன்னல்களையும், இடையூறுகளையும் நாம் சந்திக்க நேரிடும்... அப்படி உங்கள் வாழ்வில் நீங்கள் பலவிதமான இன்னல்களையும், இடையூறுகளையும் சந்திக்கும் போது மனம் தளர்ந்து விடாதீர்கள்.  மனவுறுதி கொண்டவர்களாய் விவிலியத்தின் பேதுரு எழுதிய முதல் கடிதம் 5 ஆம் அதிகாரம் 6 முதல் 10 வரை உள்ள வசனங்களை உங்கள் மனதில் இருத்துங்கள்... 
“கடவுளின் வல்லமை மிக்க கரத்தின் கீழ் உங்களைத் தாழ்த்துங்கள் அப்போது அவர் ஏற்ற காலத்தில் உங்களை உயர்த்துவார்”.

நற்செயல்களை செய்யும் போது நமக்குள் கர்வம் எலலாம், பேராசைகள் எலலாம், புகழை மனம் தேடலாம். ஆனால் கடவுளின் வல்லமை மிக்க கரத்தின் கீழ் உங்களை தாழ்த்துங்கள் அவர் உங்களை ஏற்ற காலத்தில் உயர்த்துவார்.

“உங்கள் கவலைகளையெல்லாம் அவரிடம் விட்டு விடுங்கள். ஏனென்றால் அவர் உங்கள் மேல் கவலை கொண்டுள்ளார்”.

இவ்வருடம் முழுவதும் நான் செய்ய வேண்டும் என்று எண்ணிய நற்செயல்களை எல்லாம் என்னால் செய்ய முடியவில்லை. குடும்பத்தில் கவலைகள், கஷ்டங்கள் வந்து என்னை குழப்புகின்றன என எண்ணும்போது நினைவில் நிறுத்துங்கள். “உங்கள் கவலைகளை அவரிடம் விட்டுவிடுங்கள் அவர் உங்கள் மேல் கவலை கொண்டுள்ளார்”.

“அறிவுத்தெளிவோடு விழிப்பாய் இருங்கள் உங்கள் எதிரியாகி அழகை யாரை விழுங்கலாம் என கர்ஜிக்கும் சிங்கம் போல உங்களை தேடித்தருகிறது. அசையாத நம்பிக்கை கொண்டவர்களாய் அதனை எதிர்த்து நில்லுங்கள்”.
நற்செயல்கள் செய்யும் போது பலர் உங்களை கண்டு எள்ளி நகை ஆடலாம், இவர் பெரிய ஆளு, பேருக்காக பண்றான் டா... என்றுச் சொல்லக்கூடியவர்கள் உங்களிடையே உதயம் ஆகலாம். அதையெல்லாம் கண்டு மனம் உடைந்து விடாதீர்கள். அசையாத நம்பிக்கை கொண்டவர்களாய் உங்கள் இலக்கு எதுவோ அதை நோக்கி முன் செல்லுங்கள். நீங்கள் பின்தொடர தீர்மாணிக்கும் நற்செயலை மனதில் உறுதியோடு ஏற்று அதனை பின்தொடர்ந்து செல்லுங்கள். 

“உலகெங்கிலுமுள்ள உங்கள் சகோதரர் சகோதரிகளும் உங்களைப் போலவே துன்பங்களுக்கு உள்ளாகிறார்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள் அல்லவா?”

இவ்வுலகில் நீங்கள் மட்டுமல்ல... ஒருவர் ஒரு நல்ல செயலைச் செய்ய முன்வரும்போது இவ்வுலகிலுள்ள ஒவ்வொருவருமே பலவிதமான இன்னல்களையும், இடையூருகளையும் சந்திக்கிறார்கள். அவர்களில் நீங்கள் மட்டும் தனித்துவமானவர்கள் அல்ல. அவர்களுள் ஒருவர் தான் நீங்களும். மற்றவர்கள் பலவிதமான இன்னல்களையும், இடையூருகளையும் எதிர்கொண்டு எப்படி முன்வருகிறார்களோ அதுப்போல உங்களாலும் முடியும் என நம்புங்கள். முன்னால் குடியரசு தலைவர் அப்துல்கலாம் அவர்கள் கூறுவார் “நீங்கள் முடியாது என சொல்லக்கூடிய ஒரு விஷயத்தை எங்கோ யாரோ ஒருவர் செய்து கொண்டுதான் இருக்கிறார்” என்று. என்னால எல்லாம் இந்த நல்ல செயலை இறுதிவரை செய்ய முடியாது என்று எண்ணக்கூடியவராக நீங்கள் இருந்தால் மனதில் இருத்திக் கொள்ளுங்கள்  நீங்கள் முடியாது என எண்ணுவதை எங்கே யாரோ ஒருவர் செய்து கொண்டுதான் இருக்கிறார்.. (உதாரணமாக கலெக்டர் திரு. சகாயம் ஐயுளு) எனவே உங்களால் முடியும் என நம்புங்கள்..


“எல்லா அருளும் நிறைந்த கடவுள் இயேசு கிறிஸ்துவுக்குள் என்றும் நிலைக்கும் தம் மாட்சியில் பங்குகொள்ள உங்களை அழைத்திருக்கிறார் சிறுதுகால துன்பங்களுக்கு பிறகு உங்களை சீர்படுத்தி, உறுதிபடுத்தி, நிலை நிறுத்துவார்”.

துன்பங்களுக்கு மத்தியில் தான் இன்பத்தை உணர முடியும். துன்பமே இல்லாத வாழ்க்கை வாழ்க்கையாகாது.... இன்பமும் துன்பமும் கலந்ததுதான் மனித வாழ்க்கை. நற்செயலை செய்யும் பொழுது சில துன்பங்களின் மத்தியில் கடவுள் உங்களை உறுதிபடுத்தி, வலுபடுத்தி உங்கள் நற்செயல்களை பின்தொடர்ந்து நீங்கள் வாழ்வில் பலருக்கு வழிகாட்டக்கூடிய மனிதர்களாக உருவாக இறைவன் உங்களுக்கு உதவுவார். நட்சத்திரம் ஞானிகளுக்கு வழி காட்டியது போல நீங்களும் மற்ற மனிதர்களுக்கு வழிகாட்டுங்கள். பெற்றோர் பிள்ளைகளுக்கும், பிள்ளைகள் உடன் உள்ள நண்பர்களுக்கும் என ஒருவருக்கொருவர் நல்வழி காட்டுங்கள். பிறந்திருக்கும் இவ்வாண்டு முழுவதும் நற்செயல்கள் நம் வாழ்வில் நிறைந்திருக்க உள்ளத்தில் உறுதி ஏற்றவர்களாய் இறைவனின் அருளையும் நாடி இந்த திருப்பலியில் தொடர்ந்து செபிப்போம்.


சகோ. சகாய ராஜ்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இவரே உம் மகன்! இவரே உம் தாய்! (20-5-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!    இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். ...