செவ்வாய், 28 ஜனவரி, 2020

எங்களுக்கு உண்டா எதிர்காலம்?

எங்களுக்கு உண்டா எதிர்காலம்?
அன்புக்குரிய நண்பர்களே, குடியுரிமை மசோதாவால் நாடெங்கும் போராட்டங்கள் ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கின்றன என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மையே. சிறுபான்மையினர் நசுக்கப்படும் நிலை இன்று வெளிப்படையாகவே நடக்கிறது. ஆட்சி அதிகாரத்தில் பெரும்பான்மையாக நாங்கள் இருக்கிறோம் எனவே நாங்கள் எடுப்பதே முடிவு என்று கூறி எதிர் கட்சிகளையும் மற்ற மக்கள் பிரதிநிதிகளையும் மதிக்காது தங்களுக்கு தோன்றுவதை எல்லாம் சட்டமாக இயற்ற கூடிய சூழலில் இன்று நமது பாராளுமன்றம் திகழ்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் எங்களிடையே வன்முறையைத் தூண்ட வேண்டாம், எங்களை மதம் ரீதியாகவும், மொழி ரீதியாகவும், இன ரீதியாகவும் பிரிக்க வேண்டாம் என எண்ணக்கூடிய மக்களை பிரித்தாளும் சூழ்ச்சிகள் இங்கு நடந்தேறுகின்றன. இதனை எதிர்த்து மக்கள் வீதிக்கு வந்தால் தடியடி பரிசாகக் இருக்கின்றன. தமிழ்நாட்டில் ஒரு ஓட்டு தான் அளித்தோம் ஆனால், மூன்று முதல்வர்களை கண்டு விட்ட நிலையில் என்ன செய்வதென அறியாது தவிக்கிறார்கள் மக்கள். பெரும்பான்மை இருந்தால் எதையும் செய்யலாம் என்ற நியதியை உடைத்து ஒவ்வொருவரின் கருத்தும் மதிப்புமிக்கது என்பதை உணரும் வகையில் பெரும்பான்மையாக இருந்தாலும் நீதி எது என்பதை சிந்தித்து அதையே சட்டமாகும் வகையில் மாற்றப்பட வேண்டும் நமது சட்டத்திருத்தங்கள். பதவிக்கு வந்தவுடன் செயல்படாமல் இருக்கக்கூடிய அதிகாரிகள், சுயநலம் கொண்டு செயல்படக்கூடிய அதிகாரிகள், அதிகாரத்தால் மக்களை அடக்கி ஆளும் தலைவர்கள் இவர்களை எல்லாம் தேர்வு செய்தது மக்களாகிய நாம். நாம் நினைத்தாலும் இவர்களை மாற்ற இயலாத வகையில் சட்டங்கள் உள்ளன. இந்நிலைகள் மாறவேண்டும். மாற வேண்டியது பழைய ரூபாய் நோட்டுக்கள் மட்டுமல்ல அதிகாரம் அளித்த மக்களுக்கு அதிகாரம் கொண்டிருப்பவர் மீது அதிகாரம் இல்லாமல் இருக்க கூடிய நிலையும் மாற்றம் பெற வேண்டும். இத்தகைய சூழலில் கிறிஸ்து பிறப்பை ஒரு கற்பனை செய்து பாருங்கள். நமது அண்டை நாடுகளில் இயேசு பிறந்து இருக்கிறார் என வைத்துக்கொள்வோம் அவரை கொல்வதற்காக அன்று ஏரோது தேடியது போல ஏதோ ஒரு கும்பல் தேடுகிறது. எனவே சூசை அவர்கள் இயேசுவை எடுத்துக்கொண்டு எருசலேமுக்கு அன்று ஓடி அங்கு பல நாட்கள் தங்கியிருந்தார். அதனடிப்படையில் அவர் நசரேயன் எனவும் அழைக்கப்பட்டார். ஒருவேளை இன்று இச்சூழலில் இயேசுவைத் தூக்கிக் கொண்டு சூசை இந்தியாவிற்கு வருகிறார் என வைத்துக்கொள்ளுங்கள் அவர் குறிப்பிட்ட மதத்தை பின்பற்றினால் மட்டுமே இந்த நாட்டிலே தங்க முடியும் இல்லை என்றால் அவரை இந்த நாட்டிற்குள் அனுமதிக்க முடியாது என்கிறது நமது குடியுரிமை சட்ட மசோதா. அந்த மசொதாவில் கிறித்தவர்களுக்கு விதிவிலக்கு இருந்தாலும் கிறிஸ்துவை கிறிஸ்தவர்களுக்கு மட்டுமே என்று பார்க்க இயலாது. ‘சகோதரர்கள் ஒன்றுபட்டு வாழ்வது எத்துணை நலம்’ என்கிறது திருப்பாடல். ஆனால் நமது அரசியலமைப்புச் சட்டத்தின் படி எந்த மதத்தினரும் இங்கு வாழலாம் என்ற கோட்பாட்டை உடைக்கும் வகையிலும் மதம் ரீதியாக ஒரு இனத்தை துன்புறுத்தும் வகையிலும் இன்றைய சூழல் நிலவுகிறது. இந்த குடியுரிமை சட்ட மசோதாவால் இன்றைய சூழலில் பலருடைய மனதில் எங்களுக்கு எதிர்காலம் உண்டா? என்ற கேள்வியே பெரும்பாலான சிறுபான்மையினரின் மனதிலே ஒலித்துக்கொண்டிருக்கிறது.  இப்போது நமக்குத் தேவையானத ஒன்று மட்டுமே. அது நம்பிக்கை என்பதாகும். ஒரு நாள் விடியும் நமக்கு ஏற்றது போல, நாம் விரும்புவது போல, நல்லதொரு மாற்றம் நிகழும், நமக்கும் உண்டு எதிர்காலம். எனவே நம்பிக்கை இழக்காது இருப்பத அவசியமாகம். அகிலத்தில் உள்ள அனைவரும் சமம். நமது தமிழ் இலக்கியங்கள் கூறுகிறது “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற வார்த்தைகள் எல்லாம் வெறும் மேடையில் பேசும் வெற்று வார்த்தைகள் அல்ல அது உண்மையான அர்த்தம் கொண்டவை அதனை நாம் மனதில் நிறுத்துவோம். ஒருவரை ஒருவர் அன்பு செய்து ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து ஒருவர் நலனில் ஒருவர் அக்கறை கொண்டவர்களாய் பிறருடைய கருத்துக்களையும் மதித்து இணைந்து வாழ்வோம். வேற்றுமை உள்ள நாட்டில் ஒற்றுமையோடு வாழ்வோம். அதுவே அகிலத்திற்கு முன் உதாரணமாகும். இச்சிந்தனைகளை எல்லாம் நமது உள்ளத்தில் பதிய வைப்பதுதான் இன்றைய சூழலின் முக்கிய நோக்கமாகும். அதிகாரம் கொண்டவர்கள் ஆயிரம் கருத்துக்களை கூறினாலும் அதை எல்லாம் கேட்டு மயங்கி விடாது, அதற்கு நம்மையே நாம் அடிமையாக்கி கொள்ளாது, சுய சிந்தனையோடு அனைவருடனும் அன்பு கொண்டு இணைந்து வாழ இப்புது வருடத்தில் உறுதி ஏற்றுக்கொள்வோம். மனதிலே எங்களுக்கு உண்டா எதிர்காலம்? என்று ஏங்கக்கூடிய மனங்களுக்கு உண்மையோடும், தைரியத்தோடும், சகோதரத்துவ உணர்வோடு சொல்வோம் உங்களுக்கும் உண்டு எதிர்காலம். 

சகோ. சகாய ராஜ்;
அம்மாபேட்டை
புனித பவுல் இறையியல் கல்லூரி 
திருச்சி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இவரே உம் மகன்! இவரே உம் தாய்! (20-5-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!    இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். ...