திங்கள், 13 ஜனவரி, 2020

பொங்கல் விழா 2020


பொங்கல் விழா

இயேசுவில் அன்புக்குரிய அருள் தந்தையர்களை, அருள் சகோதரர்களே!

உங்கள் அனைவருக்கும் இனிய வணக்கம.; இன்று நாம் அனைவரும் இணைந்து தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழாவினை சிறப்பிக்க இங்கு ஒன்று கூடி இருக்கிறோம்.


நாம் வாழும் இவ்வுலகில் விழாக்கள் எல்லாம் எதற்காக உருவாக்கப்பட்டது என்றால் அது உறவையும், ஒற்றுமையையும், அன்பையும் வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் தான் உருவாக்கப்பட்டவை. இவ்வுலகில் நாம் கொண்டாடக்கூடிய ஒவ்வொரு விழாவிற்கும் ஒவ்வொரு விதமான வரலாறும், அர்த்தமும் இருக்கும். ஆனால் இன்றைய நாளில் நாம் சிறப்பிக்க கூடிய இந்த பொங்கல் திருநாளானது உழைப்பின் நாளாகவும், அறுவடைத் திருநாளாகவும், உழைப்புக்கு உதவி செய்யக்கூடிய உபகரணங்களையும், உயிர்களையும் மதித்து வணங்கும் நாளாகவும் இந்நாள் அமைந்துள்ளது. எனவே இன்றைய நாளில் உங்கள் ஒவ்வொருவருக்கும் தமிழர் திருநாளாம் பொங்கல் தின வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.


பொங்கல் வைக்கும் பொழுது பொங்கல் பொங்குகிறது. பொங்கல் பொங்கும் போது சுற்றியுள்ள அனைவரும் பொங்கலோ பொங்கல் என கூறி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். இப்படி கூறுவதோடு மட்டும் நமது மகிழ்ச்சி நிறைவடைவது அல்ல. மாறாக அதையும் கடந்து இன்றைய விழாவானது பலரின் மனங்களிலும் மகிழ்ச்சியை உருவாக்க கூடியதாக அமைந்திட வேண்டுமாயின் அதற்கான செயல்பாடுகளை நாம் முன்னெடுக்க வேண்டியதும் காலத்தின் கட்டாயமாக அமைந்துள்ளது.


விழாக்கள் என்பதெல்லாம் உறவுகளை புதுப்பித்துக் கொள்வதற்காகத்தான் உருவாகின. பிரிந்து போன உறவுகளை இன்று இனம் கண்டு கொள்வோம். பேச மறுத்த உறவுகளோடு இன்று உறவுகளை புதுப்பித்துக் கொள்வோம்.


இன்றைய நாளின் முதல் வாசகமானது சிறுவன் சாமுவேலின் அழைப்பை பற்றி நமக்கு கூறுகிறது. சிறுவன் சாமுவேலை ஆண்டவர் அழைத்தபோது தன்னை அழைப்பது ஆண்டவர் தான் என்பதை அறிந்து கொள்ள இயலாதவனாய் ஏலி என்ற குருவின் உதவியை நாடுகிறான். எலி என்பவரோ அழைப்பது ஆண்டவர் என்பதை அறிந்துகொண்டு அதை அந்தச் சிறுவன் சாமுவேல் கண்டுணர உதவி செய்கிறார். அதுபோலவே இன்றைய நாளானது வெறும் வார்த்தைகள் வழி மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்வதோடு அல்லாமல் செயல்வடிவம் கொடுக்க கூடிய விழாவாக மாறுவதே அவசியமாகும் இன்றைய நாளின் மகிழ்ச்சி என்பது உறவுகளை புதுப்பித்துக் கொள்வதில் தான் அமைந்திருக்கிறது. நம் வாழ்வில் நம்முடைய உழைப்புக்கு பயன்படுத்தக்கூடிய உபகரணங்களையும், உயிர்களையும் நினைவு கூறக்கூடிய நாம் இன்று நம்மை விட்டு பிரிந்த அல்லது நம் பிரிந்துக் கொண்ட உறவுகளையும் நினைவு கூறுவோம். உறவு  சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக உறவுகளை புதுப்பித்து இன்பமுற்று வாழ்வோம் இந்நாள் முதல்.


ஒற்றுமை இல்லாத காரணத்தினாலே இன்று உலகில் பலவிதமான பிரச்சனைகளுக்கு நாம் ஆளாகி கொண்டிருக்கிறோம். இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து பலருடைய நோய்களை குணமாக்குகிறார், பலரை தேடி சென்று உதவி செய்கிறார். “வாருங்கள் நாம் அடுத்த ஊருக்கு போவோம் அங்கும் நான் நற்செய்திப் பணியை ஆற்ற வேண்டும்” என்று கூறி சீடர்களை அழைத்துக் கொண்டு இயேசு செல்வதை நாம் இன்றைய நற்செய்தி வாசகங்களில் வாசிக்க கேட்டோம்.


இவ்வுலகில் இயேசு வாழ்ந்த போது ஒவ்வொரு மனிதனையும் தேடிச் சென்று, அவர்களின் தேவைகளை நிறைவு செய்து, அவர்களோடு ஒரு உறவை ஏற்படுத்திக் கொண்டார.; அவரை தேடி வந்தவர்களை அதே உறவோடு ஏற்றும் கொண்டவர்.


இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு மனிதனை இன்றும் பின் தொடரக் கூடிய நாம். வெறும் வார்த்தை வடிவில் அவரை பின் தொடர்வதை விட்டுவிட்டு அவரின் வார்த்தைகளை வாழ்வாக்கியவர்களாக அவரை பின் தொடர்வதே அவசியமானதாகும். அதனடிப்படையில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து பிறரை தேடிச் சென்று அவர்களோடு நல்லுறவை ஏற்படுத்திக் கொண்டது போல, நாமும் நம் அருகில் உள்ளவர்களோடு நல்லுறவுடன் வாழ்கின்றோமா? என்பதை சிந்தித்துப் பார்ப்போம். ஏன்? நமது குடும்பங்களில் உள்ளவர்களுடன் உடலுறவுடன் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோமா? என்பதை சிந்திக்க இன்றைய நாள் உங்களை அழைக்கின்றது. ஒருவேளை உறவுகளிடையே சிக்கல்கள் இருக்குமாயின் புதுப்பித்துக் கொள்வோம். பொங்கல் பொங்கும் போது உண்டாகும் மகிழ்ச்சியை போல உறவுகள் இணையும்போதும், உறவுகள் புதுப்பிக்கப்படும் பொதும், உள்ளத்தில் எழக்கூடிய மகிழ்ச்சி அளவிடமுடியாதது. அந்த மகிழ்ச்சியே ஆண்டவர் இயேசு கிறிஸ்து விரும்பும் மகிழ்ச்சி. அதுவே இயேசுவையும் மகிழ்விக்க கூடியதாகும். உறவுகளை புதுப்பிக்கும் பொழுது உண்மையில் நாம் ஆண்டவர் இயேசுவோடு உறவில் இணைந்தவர்கள் இருக்கிறோம்.


ஒரு முறை வாழ்க்கை என்றால் என்ன? என்ற கேள்வியை கேட்ட போது ஒரு மாணவன் கூறினான் அறையிலிருந்து இன்னொரு அறைக்கு செல்வது தான் வாழ்க்கை என்று. அதாவது “கருவறையிலிருந்து கல்லறைக்கு செல்வதுதான் வாழ்க்கை” என்று கூறினான். இன்னொரு மாணவன் “சோதனை” என்று எழுதினான் அதில் இருக்கக்கூடிய “N” அழித்துவிட்டு கூறினான் “சாதனை”.  “சோதனையை உடைத்து சாதனை படைப்பதே வாழ்க்கை” என்றான். மற்றொரு மாணவி “யானையின் பலம்  தும்பிக்கையில் மனிதனின் பலம் நம்பிக்கையிலே” நம்பிக்கை தான் வாழ்க்கை என்றால். இன்னொரு மாணவன்.

“அன்பிலிருந்து வருவதும், அன்பைத் தருவதும், மீண்டும் அதே அன்பில் இணைவதும் தான் வாழ்க்கை” என்றான். அன்பற்ற உலகில் அன்பை விதைப்பது தான் விழாக்களின் மையமாகும். மனிதர்களிடத்தில் அன்பை விதைப்போம்.


“அன்புதான் உங்கள் பலவீனம் என்றால் இந்த உலகின் மிகச் சிறந்த பலசாலி நீங்கள்தான்” என்கிறார் அன்னை தெரசா அவர்கள். யாரென்று தெரியாதவர்களையும், குழந்தைகளையும் நோயாளிகளையும் அள்ளி அரவணைத்து, அவர்களுக்காக வாழ்ந்து, அவர்களுக்காகவே பணி செய்து, அவர்கள் மூலம் இயேசுவை கண்டவர் அன்னை தெரசா அவர்கள். இன்று நாம் வாழக்கூடிய இவ்வுலகில் அடுத்தவர் மீது அக்கறையும், அன்பும் காட்டக்கூடிய மனிதர்களே தேவைப்படுகிறார்கள்..


“குடும்பத்தில் அன்பை விதையுங்கள் அன்பை அங்கு நாம் அறுவடை செய்ய இயலும்”. அறுவடைத் திருநாளாம் இப்பொங்கல் திருநாளில் குடும்பங்களில் அன்பை விதைப்போம். ஒருவர் மற்றவரோடு இணைந்து வாழ்வோம். வாழ்க்கையின் அர்த்தத்தை கண்டு கொள்வோம். இந்நாள் முதல் ஒற்றுமையை வாழ்வின் இலக்காக அமையட்டும்  “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு”. தமிழர் திருநாளாம் இப்பொங்கல் திருநாளில் ஒற்றுமை உணர்வு நம்மிடையே மேலோங்கி வளர இறையருள் வேண்டியவர்களாய் இணைந்து இந்த திருப்பலியில் செபிப்போம். 





2 கருத்துகள்:

இவரே உம் மகன்! இவரே உம் தாய்! (20-5-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!    இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். ...