வெள்ளி, 29 ஜூலை, 2022

புனித மார்த்தா நினைவு....(29.7.2022)

புனித மார்த்தா நினைவு....(29.7.2022)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

இன்று தாய்த்திரு அவையானது புனித மார்த்தாவை பற்றி நினைவு கூர நமக்கு அழைப்பு விடுக்கின்றது.

மார்த்தாவை  பற்றி விவிலியத்தின் துணைகொண்டு ஆய்வு செய்கின்றபோது லூக்கா நற்செய்தி 10 ஆம் அதிகாரத்தில் மார்த்தாவின் வீட்டிற்கு இயேசுவும் அவரோடு சீடர்களும் வருவதை நாம் வாசிக்க கேட்கலாம்.

இந்நிகழ்வில் மார்த்தா வீட்டிற்கு வந்த ஆண்டவர் இயேசு உபசரிக்க வேண்டும் என்பதில்  மட்டும் நிலைத்திருக்கக் கூடியவராக,  பற்பல பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.

அதனைத் தொடர்ந்து மார்த்தாவினை விவிலியத்தில் யோவான் நற்செய்தி 11 ஆம் அதிகாரத்தில் 
 நாம் வாசிக்க கேட்கலாம்.
இந்த இடத்தில் இறந்து போன லாசருடைய வீட்டிற்கு ஆண்டவர் இயேசு கிறிஸ்து வருகிற போது மார்த்தா அவரை எதிர்கொண்டு, நீர்  எங்களோடு இருந்திருந்தால் எங்கள் சகோதரன் ஆன லாசர் இறந்திருக்க மாட்டான் என எடுத்துரைக்கக் கூடியதை நாம் வாசிக்க கேட்கலாம். 

        அச்சமயத்தில் மார்த்தா இயேசுவினிடத்தில், நீர் விரும்பி கேட்பதை எல்லாம் இறைவன் தருவார் என்பதை நாங்கள் அறிவோம் என கூறுகிறபோது கடவுள் மீது அவர் எந்த அளவிற்கு நம்பிக்கை கொண்டிருந்தார் என்பதை அவ்வார்த்தைகள் வெளிப்படுத்துவதை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.

    அதனை தொடர்ந்து மார்த்தாவை யோவான் செய்தி 12 ஆம் அதிகாரத்தில
 நாம் காணலாம். 

லாசரின் உயிர்ப்புக்குப் பிறகாக இயேசுவுக்கும் அவரோடு இருந்தவர்களுக்கும் உணவு விருந்தை  மார்த்தா பரிமாறுவதை குறித்து இப்பகுதியில் இடம்பெற்றிருக்கிறது. 

மொத்தத்தில் மார்த்தாவின் வாழ்வு ஆண்டவரை புரிந்து கொண்ட ஒரு வாழ்வாக, தம்மை நாடி வருகின்றவர்களை எல்லாம் உபசரிக்கின்ற ஒரு வாழ்வாக அமைந்தது என்பதை, விவிலியத்தின் பின்னணியோடு நாம் அறிந்து கொள்ள முடியும். 

வரலாற்றை சற்று திருப்பிப் பார்க்கிறபோது, இயேசுவின் இறப்பிற்கு பிறகு, இந்த மார்த்தா, மரியா, லாசர் மூவரையுமே ஒரு துடுப்பு இல்லாத படகில் வைத்து, யூதர்கள் கடலில் அனுப்பி வைத்ததாக வரலாறு கூறுகிறது. அப்படி கடலில் சென்றவர்கள் கடவுளின் அருளால் பிரான்ஸ் நாட்டு பகுதிக்குச் சென்று கரை இறங்குகிறார்கள். 

மக்களுக்கு இயேசுவை குறித்து அறிவித்து லாசர் ஆயராக செயல்பட்டார். அங்கு மரியா ஒரு குகையில் சென்று தவ வாழ்வை மேற்கொண்டு தன் வாழ்வை கழித்துக் கொண்டதாகவும், மார்த்தா பெண்களுக்கென ஒரு துறவு மடத்தை நிறுவி, தன் வாழ்வை கழித்துக் கொண்டதாகவும், வரலாற்றின் அடிப்படையில் அவர்களைப் பற்றி பதிவு செய்கின்றார்கள்.

    இன்று நாம் நினைவு கூருகின்ற இந்த மார்த்தாவின் வாழ்வோடு நமது வாழ்வை ஒப்பிட்டு பார்க்கிற போது நம்மை நாடி வருகிற ஒவ்வொருவரையுமே நாம் உபசரிக்கின்ற மனிதர்களாக இருப்பதற்கான ஒரு அழைப்பை இறைவன் தருகிறார். 

அதே சமயம் உபசரிப்பு மற்றும் நிலையானது அல்ல. வந்திருக்கின்ற விருந்தினர்களோடு, வருகின்ற நபர்களோடு, அமர்ந்து உரையாடுவதும் அவர்ளுக்கு செவி கொடுப்பதும், அவர்களின் இன்ப துன்பத்தை கேட்டு நமது உடன் இருப்பை வழங்குவதும் அவசியம் என்பதை இன்றைய நாள் இறைவார்த்தையின் வழியாக, நாம் நினைவு கூருகின்ற புனிதரின் வாழ்வு வழியாக நாம் உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகிறோம். 

      இறைவன் உணர்த்தும் இந்த வாழ்வுக்கான பாடத்தை இதயத்தில் ஏற்றுக்கொண்டு, இறைவனை நோக்கிய பாதையில் நாமும் அவரை பின்தொடர்ந்து பயணம்  செய்வோம்.  இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.

வியாழன், 28 ஜூலை, 2022

புனித அல்போன்சா அவர்களை பின்பற்ற...(28.7.2022)

புனித அல்போன்சா அவர்களை பின்பற்ற...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் !
        இன்றைய முதல் வாசகத்தின் வாயிலாக நாம் செய்கின்ற எல்லா செயல்களிலும் கடவுள் உடனிருந்து ஆசிகளை வழங்குவார் என்று வாக்குறுதியானது வழங்கப்படுதலை நாம் வாசிக்க கேட்டோம். 

           இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட ஆண்டவர் இயேசு கிறிஸ்து கோதுமை மணி மண்ணில் விழுந்து மடிந்தால் ஒழிய அது பலருக்கு பயன் தராது என்பதை எடுத்துரைக்கின்றார். 

              இந்த இரண்டு வாசகங்களையும் இன்று நாம் தாய்த்திரு அவையாக இணைந்து நினைவு கூருகின்ற புனித அல்போன்சா அவர்களுடைய வாழ்வோடு ஒப்பிட்டு பார்க்கிறபோது,  அல்போன்சா அவர்கள் சிறு வயது முதலே ஆண்டவருக்கான பணியை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் கொண்டிருந்தார். 
 அடுத்தவர் நலனை பேணுவதிலும் அடுத்தவருக்காக ஜெபிப்பதிலும் நிலைத்திருக்க வேண்டும் என எண்ணியவர், துறவு மடத்திற்கு சென்று ஒரு அருட்சகோதரியாக மாற விரும்பினார். ஆனால் இவரது விருப்பத்திற்கு வீட்டில் உள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, இவருக்கு மணமுடித்து வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்த போது, தன் காலில் தீக்காயத்தை ஏற்படுத்தியாவது இந்த திருமணத்தை தடுத்து விட வேண்டும் என எண்ணியவர், அதற்கான முயற்சியில் ஈடுபட்டார். ஆனால்,  தெரியாமல் தீயில் முழுவதுமாக  விழுந்து விடக்கூடிய சூழலை அவர் சந்தித்தார்.  இந்நிலை காரணமாக,  திருமணமானது தடைப்பட்டு போனது. தன் வாழ்வை ஆண்டவருக்கென அர்ப்பணிக்க வேண்டும் என்ற ஆர்வத்தோடு இருந்தமையால்,  துறவு மடத்தில் தன்னை இணைத்துக் கொண்டு, நல்லதொரு அருட்சகோதரியாக  பலருக்கான பல நல்ல பணிகளை முன்னெடுத்தவராக, எப்போதும் அடுத்தவருக்காக செபிக்கக்  கூடிய கூடிய ஒரு பெண்மணியாக இச்சமூகத்தில் வாழ்ந்து மறைந்தார். 

        இவர் நமது பங்கின் பாதுகாவலையான குழந்தை தெரசாவின் மீது அதீத நம்பிக்கை கொண்டவர். இந்த குழந்தை தெரசாவை போல தானும் ஒரு புனிதையாக மாற வேண்டும் என்ற எண்ணத்தோடு எப்போதும் அனுதினமும் செபத்தின் வாயிலாக இறைவனோடு உரையாடக் கூடிய ஒரு நபராக இவர் இருந்தார் என்பதை இவரது வாழ்வில் இருந்து நாம் அறிந்து கொள்ள முடியும்.

        இப்புனிதையை. நினைவு கூருகின்ற இந்த நன்நாளில் நாம் நமது வாழ்வுக்கான பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டியது எது என சிந்திக்கின்ற போது,  மண்ணில் பிறந்த மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவருமே நமது வாழ்வை நமக்கான வாழ்வாக மட்டும் கருதாது, நமது வாழ்வு பலருக்கு பயன் தரக்கூடிய வாழ்வாக அமைய வேண்டும் என்ற சிந்தனையினை உள்வாங்கியவர்களாக, ஆண்டவர் கிறிஸ்துவின் வார்த்தைகளுக்கு ஏற்ப அடுத்தவரை அன்பு செய்யக்கூடியவராக, அடுத்தவரின் நலனில் அக்கறை காட்டக் கூடிய மனிதர்களாக புனித அல்போன்சா அவர்களை பின்பற்றி நமது வாழ்வையும் அமைத்துக் கொள்ள  இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசிர்வதிப்பார்.

புதன், 27 ஜூலை, 2022

இழக்கத் துணிந்த மனிதர்களாக...(27.4.2022)

இழக்கத் துணிந்த மனிதர்களாக...


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் !
      மண்ணில் வாழுகிற ஒவ்வொரு மனிதனும் மகிழ்வோடு இருக்க  வேண்டும் என  எண்ணுகிறான். இந்த மகிழ்விற்காக பலவற்றை இந்த உலகத்தில் தேடித்தேடி சேர்த்து வைக்கிறான். ஆனால் உண்மையான மகிழ்ச்சி என்பது,  ஆண்டவரின் வார்த்தைகளை கேட்டு, அதன்படி வாழ்வதில் தான் அடங்கி இருக்கிறது என்பதை இன்றைய நாள் இறைவார்த்தை வழியாக நாம் உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகின்றோம்.

             இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எரேமியா ஆண்டவரின் வார்த்தைகளை அறிவித்து, அதன் விளைவாக சுற்றி இருந்த மக்களால் ஒதுக்கித் தள்ளப்பட்டு தனிமையில் வாடுகின்ற போது கடவுளை நோக்கி புலம்பக்கூடிய  புலம்பலை தான் இன்றைய முதல் வாசகமாக நாம் வாசிக்கக் கேட்டோம். 

புலம்பிய எரேமியாவின் குரலுக்கு செவி கொடுத்த இறைவன், "நான் உன்னோடு இருக்கிறேன். உன்னை அவர்கள் முன்னிலையில் பெருமைப்படுத்துவேன்" என்று கூறி, துன்பத்தில் துணையாக நிற்கின்ற இறைவனை இன்றைய முதல் வாசகமானது நமக்கு எடுத்துக்காட்டுகிறது.


       இந்த இறைவனுடைய வார்த்தைகளின் அடிப்படையில் நாம் நமது வாழ்வை அமைத்துக் கொள்ளுகிற போது, கடவுள் நம்முடைய எல்லா சூழ்நிலைகளிலும் உடனிருந்து நம்மை வழிநடத்தக் கூடியவராக இருக்கின்றார். 

        இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட, விலை உயர்ந்த ஒரு புதையலை கண்டுபிடித்த ஒரு மனிதன் தன்னிடம் இருப்பதை எல்லாம் விற்று, அதிலிருந்து வரக்கூடிய பணத்தை கொண்டு புதையலை உரிமையாக்கி கொள்கிறான் என இறைவன் ஒரு உவமையை சுட்டிக் காட்டுகின்றார்.  அதுபோலவே விலை உயர்ந்த முத்தை ஒருவன் உரிமையாக்கிக் கொள்ள, தன்னிடம் இருப்பதை எல்லாம் விற்றுவிட்டு அதிலிருந்து கிடைக்கின்ற பணத்தைக் கொண்டு அந்த விலை உயர்ந்த முத்தை உரிமையாக்கி கொள்கிறான் என்கின்றார். 

         இந்த உவமைகள் அனைத்துமே நமக்கு தருகின்ற வாழ்வுக்கான பாடம் என்ன என சிந்திக்கின்ற போது,  நம்மிடம் இருக்கின்ற அனைத்தையும் இழக்கத் துணிந்தவர்களாய், இறைவனின் வார்த்தைகளை ஏற்றுக் கொண்டு அதன்படி நமது வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற வாழ்வுக்கான பாடத்தை இன்றைய வாசகங்கள் வழியாக இறைவன் வழங்குகிறார். இறைவன் வழங்கும் இந்த வாழ்வுக்கான பாடத்தை உணர்ந்து கொண்டவர்களாய், ஆண்டவரின் வார்த்தைகளின்படி வாழ்வதற்காக,  அனைத்தையும் இழக்கத் துணிந்த மனிதர்களாக நாம் இருப்பதற்கு இறைவனிடத்தில் இன்றைய நாளில் அருள் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.

வாழ்வில் நல்லதொரு மாற்றத்தை முன்னெடுத்துக் கொண்டு பயணிக்க(24.7.2022)

வாழ்வில் நல்லதொரு மாற்றத்தை முன்னெடுத்துக் கொண்டு பயணிக்க

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
            இன்றைய நாள் வாசகங்கள் அனைத்துமே நாம் அடுத்தவருக்காக பரிந்து பேசக்கூடிய நபர்களாக அடுத்தவருக்காக மன்றாடக் கூடிய நபர்களாக இருப்பதற்கான ஒரு அழைப்பை வழங்குகின்றன.

                       இன்றைய முதல் வாசகத்தில் கடவுளின் கோபத்திற்கு ஆளான சோதோம் கொமாரா பகுதி மக்களுக்காக ஆபிரகாம் பரிந்து பேசுவதை முதல் வாசகமாக நாம் வாசிக்க கேட்டோம். 

              இன்றைய இரண்டாம் வாசகத்தில் கூட, நமக்காக, நமது மீட்புக்காக, தன் இன்னுயிரை தியாகம் செய்த இயேசுவின் தியாகத்தை நாம் நினைவு கூருகின்றோம். 

             நற்செய்தி வாசகத்தின் வாயிலாக கடவுள், நாம் எப்படி செபிக்க வேண்டும் என்பதை தம் சீடர்களுக்கு கற்றுக் கொடுத்ததை நாம் வாசிக்க கேட்டோம். 

              இந்த வாசகங்கள் அனைத்துமே நமது செபங்களிலும், நமது மன்றாட்டுக்களிலும் நாம் அடுத்தவர்களை மையப்படுத்தியவர்களாக, அடுத்தவர் நலனுக்காக மன்றாடக்கூடிய மனிதர்களாக இருப்பதற்கான அழைப்பை இறைவன் தருகின்றார். நாம் கேட்பதற்கு முன்பதாகவே நம் தேவைகளை அறிந்து வைத்திருக்கின்ற இறைவன், தகுந்த நேரத்தில் நம் தேவைகளை நிவர்த்தி செய்வார். நம்பிக்கையோடு நாம் அவரிடம் கேட்கவும், நம்மை சுற்றி உள்ளவர்களின் நலனுக்காக அவரிடம் பரிந்து பேசவும், இன்றைய நாள் வாசகங்கள் வழியாக நாம் அழைக்கப்படுகின்றோம்.

          வாசகங்கள் தருகின்ற வாழ்வுக்கான பாடத்தை இதயத்தில் எடுத்துக் கொண்டவர்களாய், நமது வாழ்வில் நல்லதொரு மாற்றத்தை முன்னெடுத்துக் கொண்டு பயணிக்க இறையருள் வேண்டுவோம் இன்றைய நாளில். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.

அர்த்தம் உள்ள வகையில் அவரின் வார்த்தைகளை வாழ்வாக்குவோம்...(23.7.2022)

அர்த்தம்  உள்ள வகையில் அவரின் வார்த்தைகளை வாழ்வாக்குவோம்...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
            இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எரேமியா கடவுளின் உடனிருப்பை உணர்ந்தவர்களாக இந்த கடவுளை நாடிச் செல்லக்கூடிய ஒவ்வொருவரும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார். கடவுள் இஸ்ரயேல் மக்களுக்கு பலவிதமான நன்மைகளை செய்து இருந்தாலும், அந்த இஸ்ரேல் மக்கள் கடவுளை ஆலயத்தில் இருக்கின்ற இறைவனாக மட்டுமே எண்ணிக்கொண்டு ஆலயத்திற்கு வந்து செல்வதும், அங்கு வந்துவிட்டு கடவுளை சந்தித்து செல்வதும் தங்களுக்கு பாதுகாப்பை தருவதாக எண்ணிக் கொண்டார்கள். ஆனால், அவர்களின் வாழ்வானது இந்த ஆண்டவரின் வார்த்தைகளுக்கு முற்றிலுமாக புறம்பான  ஒரு வாழ்வாக இருந்தது. இதை அறிந்த இறைவன் இறைவாக்கினர் எரேமியா  வழியாக ஆலயத்திற்கு வந்து செல்லுகிறவர்களின் காதுகளில் விழும் வண்ணமாக எருசலேம் தேவாலயத்தின் முற்றத்தில் நின்று கொண்டு இறைவாக்கினர் எரேமியா வழியாக அவர்களின் தவறான வாழ்வினை சுட்டிக்காட்டுவதை  இன்றைய முதல் வாசகமாக நாம் வாசிக்க கேட்டோம். இந்த முதல் வாசகத்தின் பின்னணியோடு நமது வாழ்வை ஒப்பிட்டு பார்க்கிற போது அனுதினமும் ஆண்டவரை தேடி அவரின் சன்னதிக்கு வந்து செல்லுகின்ற நமது மனநிலை எத்தகைய மனநிலையாக இருக்கிறது என்ற கேள்வியை எழுப்பி பார்ப்போம்.  கடவுளைத் தேடி, கடவுளை நாடி வருகின்ற நாம் கடவுளோடு உரையாடுகின்ற இடமாக இதை கருதுகிறோமா? அல்லது மற்றவரை பார்த்து பெருமை கொள்வதும், மற்றவர் நம்மை புகழ வேண்டும் என்ற  எண்ணத்தோடும் ஆடம்பரத்திற்காகவும் வேடிக்கையாகவும் இந்த ஆலயத்திற்கு வந்து சென்று விட்டு நகர்ந்து கொண்டிருக்கிறோமா? என சிந்திப்பதற்கான ஒரு அழைப்பை இறைவன் தருகிறார். நாம் பார்க்கின்ற பல மனிதர்கள் இத்தகைய தவறான வாழ்வை தங்கள் வாழ்வாக கொண்டிருக்கிறார்கள். இந்த வாழ்வையே நாமும் நமது வாழ்வாக மாற்றிக் கொண்டு பல நேரங்களில் பயணம் செய்கிறோம். அப்படிப்பட்ட நிகழ்வைதான் இறைவன் கதிர்களுக்கு இடையே முளைத்த களைகளாக குறிப்பிடுகின்றார். நற்செய்தி வாசகத்தில் கதிர்களையும் களைகளையும் ஒனறாக வளர விட்டு, உரிய காலம் வரும்போது  களைகளை பிடுங்கி தீக்கிரையாக்குவதற்கு கட்டுகின்ற இறைவன்,  தானியங்களை களஞ்சியத்தில் சேர்த்து வைக்கின்றார். நாம் ஆண்டவரை நாடி வருகின்ற போது இதயத்தில் களைகளை சுமந்தவர்களாக ஆண்டவரின் சன்னதியில் அமர்ந்திருக்கிறோமா? அல்லது  களஞ்சியத்தில் சேர்க்கப்படுகின்ற தானியங்கள் போல நற்பண்புகளை நம்மகத்தே கொண்டு, ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளை வாழ்வாக்குகின்ற மனிதர்களாக இந்த ஆலயத்தை நாடி வருகின்றோமா? என்ற  கேள்வியை நமக்குள்ளாக எழுப்பி பார்த்து, சிந்திப்பதற்கும் செயல் வடிவில் மாற்றத்தை உருவாக்குவதற்கும் இறைவன் இந்த நாளில் அழைப்பு தருகின்றார். 

     இறைவன் தரும் அழைப்பை இதயத்தில் ஏற்றுக் கொண்டவர்களாய் ஆலயத்திற்கு வந்து செபிக்கின்ற நாமும் அல்லது இணைய வழியில் இறைவனோடு இணைந்து இருக்கக்கூடிய நாமும் அர்த்தம்  உள்ள வகையில் அவரின் வார்த்தைகளை வாழ்வாக்குகின்ற மனிதர்களாக தொடர்ந்து பயணிக்க இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

மகதலா மரியா வழியாக...(22.7.2022)

மகதலா மரியா வழியாக...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
இன்று தாய் திருஅவையானது மகதலா மரியம்மாளுடைய திருநாளை கொண்டாடுகிறது. உயிர்த்த ஆண்டவரை முதன் முதலில் கண்டு கொண்டவர் இந்த மகதலா மரியா.
தானறிந்த இயேசு கிறிஸ்துவை இயேசுவின் சீடர்களிடத்தில் வந்து சொல்லி அறிந்து கொள்வதற்கு காரணமாக அமைந்திருந்தவர்  இந்த மகதலா மரியா. இவரை குறித்து விவிலியத்தில் பல இடங்களில் பலவற்றை நாம் வாசிக்கலாம்.

விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணாக இந்த மகதலா மரியா விவிலியத்தில் காட்டப்படுகிறார். இவரிடத்தில் இருந்து ஏழு பேய்களை ஆண்டவர் இயேசு விரட்டியதாக  கூறுகிறது. ஆண்டவரே இயேசு கிறிஸ்து சிலுவையில் தொங்குகின்ற போது சிலுவை அடியில் நின்று கொண்டிருந்த பெண்மணிகளுள் இவரும் ஒருவர். இறந்த இயேசுவின் கல்லறைக்கு இயேசுவைத் தேடிச் சென்ற பெண்மணியும் இவர். உயிர்த்த ஆண்டவரை முதல் முதலில் கண்டு கொண்டவரும் இவர்.

        இவரிடம் காணப்பட்ட ஆழமான நம்பிக்கை நமது நம்பிக்கையாக மாற வேண்டும் என்பதைத்தான் இன்றைய நாள் நமக்கு வலியுறுத்துகிறது. ஆண்டவரோடு இணைந்திருந்தவர்கள், அவரோடு உடன் பயணித்தவர்கள், அவர் சொன்னதை கேட்டு தங்கள் வாழ்வை செதுக்கி கொண்டவர்களுள் முதன்மையான நபராக இந்த மகதலா மரியாவை நாம் அடையாளப்படுத்தி காட்டலாம். 

     இந்த நன்னாளில் நாம் நமது வாழ்வை சீர்தூக்கி பார்ப்போம். தவறுகள் செய்திருந்தால் மனம் மாறி ஆண்டவரை நோக்கி திரும்பி வரவும், அவரது வார்த்தைகளில் நம்பிக்கை கொண்டவர்களாய் மகதலா மரியாவை போல பயணம் செய்ய இறையருள் வேண்டி இணைந்து தொடர்ந்து இன்றைய நாளில் ஜெபிப்போம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

வியாழன், 21 ஜூலை, 2022

கடவுளுக்கு அர்ப்பணம்....(21.7.2022)

கடவுளுக்கு அர்ப்பணம்....

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

             இன்றைய நாள் முதல் வாசகத்தின் வாயிலாக இஸ்ரேல் மக்கள் கடவுளுக்கு அர்ப்பணம் செய்யப்பட்டவர்கள்  என்பதை இறைவாக்கினார்கள் வாயிலாக  இறைவன் எடுத்துரைப்பதை நாம் வாசிக்க கேட்டோம். நாம் ஒருவருக்கு ஒன்று செய்தால் அவர் நமக்கு மற்றொன்று செய்வார் என்ற எண்ணத்தோடு நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலுமே  நமது சுயநலத்தின் வெளிப்பாடாக அமைகிறது. 

             ஆனால் நமது உடல் பொருள் ஆவி அனைத்தையும் நாம் ஒருவருக்காக அர்ப்பணிக்கிறோம் என்றால் அதற்குப் பெயரே அர்ப்பணம் என கருதப்படுகிறது. இந்த அர்ப்பணம் மனிதர்களிடத்தில் நடைபெற வேண்டியது அல்ல, மாறாக கடவுளிடத்தில் நடைபெற வேண்டியது.

      இஸ்ரேல் மக்கள் தங்களை கடவுளுக்கு அர்ப்பணம் செய்வதற்கு பதிலாக தங்கள் சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருந்த பிற சமய மனிதர்களைப் போல தங்கள் கைகளால் சிலைகளை செய்து அந்த சிலைகளுக்கு முன்பாக தங்களை அர்ப்பணம்  செய்யக் கூடியவர்களாக இருந்தார்கள். அவர்களின் இச்செயல் தவறு என்பதை இறைவன் இறைவாக்கினார்கள் வாயிலாக எடுத்துரைப்பதை இன்றைய நாளில் முதல் வாசகமாக நாம் வாசிக்க கேட்டோம்.

         இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட இயேசு உவமைகளை பயன்படுத்துவதை குறித்து சீடர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். இயேசுவின் ஒவ்வொரு கற்பித்தலுமே பலவிதமான பாடங்களை பலருக்கு கற்பித்தது. அதன் அடிப்படையில் தான் இறைவாக்கினர்கள் வாயிலாக இறைவன் உரையாடியதும் உவமைகள் வாயிலாக இயேசு உரையாடியதும் உண்மையான அர்ப்பணம் கடவுளிடத்தில் நடைபெற வேண்டும். அந்த அர்ப்பணம் கடவுளின் வார்த்தைகளை இதயத்தில் ஏற்றுக் கொண்டு அந்த வார்த்தைகளுக்கு ஏற்ப வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை இறைவன் வலியுறுத்துகின்ற இத்தகைய ஒரு வாழ்வை நாம் நமது  வாழ்வாக மாற்றிக்கொள்ள வேண்டுமாயின் நம்மை முழுவதுமாக கடவுளுக்கு அர்ப்பணம் செய்தவர்களாக அவரின் வார்த்தைகளை இதயத்தில் ஏற்று அதை செயலில் வெளிக்காட்டக் கூடிய மனிதர்களாக நாம் இச்சமூகத்தில் வாழ வேண்டும் என்ற சிந்தனையினை இறைவன் இன்றைய நாளில் நமக்கு தருகின்றார். இறைவன் தருகின்ற இந்த சிந்தனையை இதயத்தில் இருத்தி சிந்தித்தவர்களாய் நமது செயல்கள் மூலம் அதற்கு வடிவம் தரக்கூடிய மனிதர்களாக மாறிட இறைவனிடத்தில் இன்றைய நாளில் அருள் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.

ஆண்டவர் விரும்புகின்ற மக்களாக வாழ ....(20.7.2022)

ஆண்டவர் விரும்புகின்ற மக்களாக வாழ ....


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

                   இன்றைய முதல் வாசகத்தில் எரேமியாவின் அழைப்பை பற்றி நாம் வாசிக்க கேட்கின்றோம். எரேமியாவின் அழைப்போடு இந்த புத்தகமானது துவங்குகிறது. தாயின் வயிற்றில் இருக்கும் பொழுதே கடவுள் நம்மை அறிந்திருக்கிறார் என்பதற்கான மிகப்பெரிய உதாரணமாக எரேமியாவின் அழைப்பு பார்க்கப்படுகிறது.

                      நம்மை அறிந்து வைத்திருக்கின்ற இறைவன்,  அவரது வார்த்தைகளின்படி நமது வாழ்வை அமைத்துக் கொள்வதற்கான அழைப்பை அனுதினமும் வழங்கிக் கொண்டிருக்கிறார். அவரது வார்த்தைகளைக் கேட்டு, நல்ல நிலத்தில் விழுந்த விதைகளாக,   நூறு மடங்கு விளைச்சல் தரக்கூடிய 
மனிதர்களாக நாம் வாழ வேண்டும் என்பதை இறைவன் வலியுறுத்துகிறார்.  இறைவன் வலியுறுத்தும் இந்த வாழ்க்கை பாடத்தை உணர்ந்து கொண்டவர்களாக, ஆண்டவரின் வார்த்தைக்கு கவனத்தோடு செவிகொடுத்து அவரின் வார்த்தைகளின்படி நமது வாழ்வை அமைத்துக் கொண்டு, நூறு மடங்கு விளைச்சல் தருகின்ற நல்ல மக்களாக, ஆண்டவர் விரும்புகின்ற மக்களாக வாழ இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

திங்கள், 18 ஜூலை, 2022

வார்த்தைகளுக்கு செயல் வடிவம் தருகின்ற மனிதர்களாவோம்...(19.7.2022)

வார்த்தைகளுக்கு செயல் வடிவம் தருகின்ற மனிதர்களாவோம்...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின்  அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
 இன்றைய முதல் வாசகம் மீக்கா நூலில் இருந்து எடுக்கப்பட்டது.  மீக்கா புத்தகமானது கண்டனத்தோடு தொடங்கி, கடவுள் மீதான ஆறுதலான வார்த்தைகளை கொடுத்து, இறை புகழ்ச்சியோடும், பிறகு கடவுள் மீதான ஆழமான நம்பிக்கையோடும் இந்த புத்தகமானது நிறைவை நோக்கி செல்லும். அதன் அடிப்படையில் கடவுளுக்கு நிகர் வேறு எவரும் இல்லை என்பதையும், இந்த இறைவன் நமது பாவங்களை மன்னிக்க வல்லவர், நமது  குற்றங்களை எல்லாம் மன்னித்து, ஆசிகளை நமக்கு தரக்கூடியவர் என்பதை எடுத்துரைக்கிறது. இதையே இன்றைய முதல் வாசகமாக நாம் வாசிக்க கேட்டோம்.

          இன்றைய நற்செய்தி வாசகத்தில் என்னுடைய வார்த்தைகளை கேட்டு கடைபிடிப்பவரே என் தாயும் சகோதரரும் என இயேசு குறிப்பிடுகின்றார். ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளை கேட்டு, அதன்படி நமது வாழ்வை அமைத்துக் கொள்ளக்கூடிய நபர்களாக நாம் இருக்கின்ற போது, நாமும் கடவுளின் மீதான நம்பிக்கையோடு அவரிடம் இருந்து ஆசிகளை பெற்றுக் கொள்ள முடியும் என்பதை இன்றைய வாசகங்கள் நமக்கு தெளிவாக எடுத்துரைக்கின்றன.  நமது குற்றம் குறைகளை எல்லாம் மன்னித்து நம்மை ஏற்றுக்கொண்ட இந்த இறைவனுடைய வார்த்தைகளை இதயத்தில் ஏற்றுக்கொண்டு, அந்த வார்த்தைகளுக்கு செயல் வடிவம் தருகின்ற மனிதர்களாக நாம் வாழ இறைவனிடத்தில் தொடர்ந்து அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

இறைவனோடு இணைந்த வாழ்வு....(16.07.2022)

  இறைவனோடு இணைந்த வாழ்வு....


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!


 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!




இன்றைய வாசகங்கள் அனைத்துமே ஆண்டவரின் அருகில் அமர்ந்திருக்க, ஆண்டவரோடு உரையாட, ஆண்டவரோடு உறவை வளர்த்துக் கொள்ள நமக்கு அழைப்பை தருகின்றன.


             இன்றைய முதல் வாசகத்தில் ஆபிரகாம் கடவுளின் தூதர்களை கண்டு கொள்வதையும், அவர்களை உபசரிப்பதையும், அவர்களோடு உரையாடி, உறவாடி, அவர்களின் ஆசிகளை பெற்றுக் கொள்வதையும் வலியுறுத்துகின்றன.


           இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் கடவுளின் வார்த்தைகளை வாழ்வாக்கக் கூடிய நபராக, ஆண்டவரின் வார்த்தைகளின் மீது அவர் கொண்டிருக்கின்ற ஆழமான நம்பிக்கையும், இந்த வார்த்தைகளின் வழியாக அவரோடு அவர் இணைந்துள்ள வாழ்வையும் நம்மிடையே எடுத்துரைப்பதாக இரண்டாம் வாசகம் அமைகிறது.


    இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட மார்த்தா மரியா என்ற இருவரில், மரியா நல்ல பங்கை தேர்ந்து கொண்டார் என, தன் அருகில் அமர்ந்து தன்னோடு உரையாடிக் கொண்டிருந்த மரியாவைப் பற்றி இயேசு புகழ்ந்துரைப்பதை இன்றைய நற்செய்தி வாசகமாக நாம் வாசிக்க கேட்டோம். 


     இந்த வாசகப் பகுதிகள் அனைத்துமே வலியுறுத்துகின்ற வாழ்வுக்கான பாடம் என்ன என சிந்திக்கின்ற போது,  கடவுளோடு நேரம் செலவிடக்கூடிய மனிதர்களாக, அவரோடு உரையாடக் கூடியவர்களாக, உறவாடக் கூடியவர்களாக, நாளும் வளர  நமக்கு அழைப்பு தருகின்றன. இறைவனோடு இணைந்த வாழ்வை நமதாக்கிக் கொள்ள இறையருள் வேண்டுவோம், இன்றைய நாளில். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசிர்வதிப்பார்.

அடையாளமாக நாம் மாறுவேரம்......(18.07.2022).

அடையாளமாக நாம் மாறுவேரம்....

 

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!


 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!



      இன்றைய முதல் வாசகமானது கடவுளுக்கு உகந்த ஒரு வாழ்வை வாழ அழைப்பு தருகிறது. நல்லது எதுவோ, நேர்மையானது எதுவோ, நீதி எதுவோ, அதனை பின்பற்றக்கூடிய மனிதர்களாக நாம் வாழ வேண்டும் என்ற அழைப்பு  முதல் வாசகம் வழியாக நமக்கு தரப்படுகிறது. 


                  இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசுவினிடத்தில் தங்களுக்கு அடையாளத்தை காட்டுமாறு பரிசேயர்களும் சதுசேயர்களும் இயேசுவை அணுகுகிறார்கள். ஆனால் இயேசு அவர்களுக்கு அடையாளம் தரப்பட மாட்டாது என்கிறார். 


                    இயேசுவின் இந்த வார்த்தைகளை இதயத்தில் இருத்தி சிந்திக்கின்ற போது, அடையாளங்களை கேட்கின்ற நபர்களாக நாம் இல்லாமல், நமது செயல்கள் மூலமாக நாம் பின்பற்றுகின்ற இந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்கான அடையாளமாக நாம் மாறுவதற்கு இன்றைய நாள் இறைவார்த்தை வழியாக நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகின்றோம்.

வெள்ளி, 15 ஜூலை, 2022

மனிதநேயமிக்க மனிதர்களாக...(15.7.2022)

மனிதநேயமிக்க மனிதர்களாக...


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறை வார்த்தையின்  அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
 இன்றைய முதல் வாசகத்தில் அசீரியப் படையெடுப்புக்கு உள்ளாக்கப்பட்டிருந்த எசேக்கியா  தன் வாழ்நாள் முடிவதற்குள்ளாக தனது உரிமை நாட்டிற்கு சென்று விட வேண்டுமென கடவுளை நோக்கி மன்றாடுகிறார். கடவுளும் அவரது குரலுக்கு செவி கொடுக்கிறார். இதுநாள் வரை அவர் செய்த நன்மைத்தனங்களின் நிமித்தமாக அவரது வாழ்நாளை அதிகரிக்க செய்கின்றார்.

             இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட இயேசுவின் சீடர்கள் ஓய்வு நாள் சட்டங்களை பின்பற்றாமல் கதிர்களை கொய்தார்கள் எனக் கூறி குற்றம்  சாட்டப்படுகிறார்கள். கடவுள் அவர்களுக்கு தாவீதின் செயலை சுட்டிக் காண்பித்து,
சட்டங்களைவிட மனிதத்துவம் மதிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார். லேவியர் புத்தகம் 25 ஆம் அதிகாரம் குறிப்பிடுகின்றது, கடவுளின் திருமுன்னிலையில் இருக்கின்ற மேஜையின் மீது ஆறு அப்பங்கள் எப்பொழுதும் இருக்க வேண்டும். இந்த ஆறு அப்பங்களையும் குருக்கள் மட்டுமே உண்ண வேண்டும். அதனை உண்டதற்குப் பிறகாக மாற்று ஆறு அப்பங்களை எப்பொழுதும் கடவுள் திருமுன்னிலையில்  வைத்திருக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. 

ஆனால்  தாவீதும் அவருடன் இருந்தவர்களும் பசியாய் இருந்த காரணத்தினால் , குருக்கள் மட்டுமே உண்ணக்கூடிய அப்பத்தை அவர்கள் உண்டார்கள் என்ற , நிகழ்வை சுட்டிக் காண்பித்து
இறைவன், மனிதத்துவம் முக்கியமானது; மனிதத்துவம் மதிக்கப்பட வேண்டியது; சட்டங்களை விட  மனித நேயத்திற்கும் மனிதத்துவத்திற்கும் அதிக முக்கியத்துவம் தர வேண்டும் என்பதை இறைவன் வலியுறுத்துகிறார். 

    இந்த மனிதநேயத்தை மனதில் கொண்டு நாம் செய்யக்கூடிய அனைத்து விதமான நற்செயல்களின் வழியாக கடவுளின் ஆசிகளை நாம் பெற்றுக்கொள்ள முடியும். அப்படித்தான் எசேக்கியா அவர்களும் பெற்றுக் கொண்டார்; தன் வாழ்நாளை காத்துக்கொண்டார். 

         இந்த எசேக்கியாவைப் போல நாமும் இந்த சமூகத்தில் பலவிதமான சட்ட திட்டங்கள் இருந்தாலும், சட்ட, திட்டங்கள் வலியுறுத்துகின்ற வாழ்வுக்கான நெறிகளை உள்ளத்தில் உணர்ந்தவர்களாக, அதே சமயம் மனிதநேயமிக்க மனிதர்களாக இந்த சமூகத்தில் பயணம் செய்ய இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம்.  இறைவன் உங்களை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

புதன், 13 ஜூலை, 2022

நம்பிக்கை கொண்ட மனிதர்களாக....(14.7.2022)

நம்பிக்கை கொண்ட மனிதர்களாக....

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில்  மகிழ்ச்சி அடைகின்றேன்!
 இன்றைய நாள் இறை வார்த்தை முழுவதுமே, கடவுள் மீது ஆழமான நம்பிக்கை கொள்ள நமக்கு அழைப்பு விடுக்கிறது. மனித வாழ்வு என்பது இன்பமும் துன்பமும் கலந்த ஒன்று. இரண்டும் எப்போது வரும் என அறியாத வண்ணம் இறைவன் இரண்டையும் நமது வாழ்வில் அனுமதிக்கின்றார். துன்பம் வரும்போது துவண்டு விடாமல் கடவுள் மீது ஆழமான நம்பிக்கை கொண்டு
 பயணிக்க இன்றைய நாள் இறைவார்த்தை வழியாக நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகின்றோம்.

     சுமை சுமந்து சோர்ந்து இருப்பவர்களே எல்லோரும் என்னிடம் வாருங்கள்  என்று கூறக்கூடிய இறைவனின் வார்த்தைகளின் மீது ஆழமான நம்பிக்கை கொண்டவர்களாக வாழ்வில் துன்பங்களை சந்திக்கின்ற போது, இறைவனின் துணையை நாடக்கூடிய மனிதர்களாக, இறைவனின் துணையோடு துன்பங்களை துணிவோடு எதிர்கொள்ளக்கூடிய மனிதர்களாக நாம் நமது வாழ்வை அமைத்துக் கொண்டு ஆண்டவர் மீது ஆழமான நம்பிக்கையோடு தொடர்ந்து பயணம் செய்ய இறைவன் அழைப்பு தருகின்றார்.

     இறைவன் தருகின்ற அழைப்பை இதயத்தில் ஏற்றுக்கொண்டு நாம் ஆண்டவர் மீது ஆழமான நம்பிக்கை கொண்ட மனிதர்களாக நமது வாழ்வை அவரின் பாதையில் அமைத்துக் கொள்ள உள்ளத்தில் உறுதி ஏற்போம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.

இறைவன் விரும்புகின்ற மாற்றம்...(12.7.2022)

இறைவன் விரும்புகின்ற மாற்றம்

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
கடவுள் மனிதனை படைத்து இந்த மண்ணில் வாழ்வதற்கான, வாழ்வுக்கான நெறிகளை கற்பித்தார். கடவுள் கற்பித்த நெறிகளின்படி வாழ்வை அமைத்துக் கொள்ளாமல் மனிதன் பல நேரங்களில் தன் மனம் போன போக்கில் வாழக்கூடியவனாகவே இருந்தான். படைப்பின் தொடக்கத்திலேயே மனிதனை குறித்து கடவுள் வருந்துவதை தொடக்க நூல் ஆறாம் அதிகாரம் 5 ஆம் வசனத்தில் நாம் வாசிக்கலாம்.

       இன்றைய நாள் நற்செய்தி வாசகத்திலும் கூட கடவுள் சில நகரங்களை தண்டிக்கக் கூடியவராக, கடுமையான வார்த்தைகளை அவர்களிடம் உதிர்க்கக் கூடிய நபராக இருக்கின்றார். ஏன் இத்தகைய வார்த்தைகள் இயேசுவிடமிருந்து வெளிப்பட்டன? என சிந்திக்கின்ற போது கடவுளுடைய வார்த்தைகளை கேட்டும் மனம் மாற்றம் அடையாத மனிதர்களாகவே அவர்கள் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். அவர்களின் கடின உள்ளத்தை பொறுத்தே கடவுள் கடுமையாக வார்த்தைகளை அவர்களோடு உதிர்க்கக் கூடிய நபராக இருக்கின்றார். கடவுள் உதிர்க்கின்ற இந்த வார்த்தைகள் கூட, ஒரு விதமான மன மாற்றத்தை அடைந்து கொண்டு, ஆண்டவர் காட்டுகின்ற பாதையில் பயணம் செய்வதற்கான அழைப்பை அந்த மக்களுக்கு அன்று தந்தது.

          இன்று நாமும், வார்த்தையை கேட்கின்ற ஒவ்வொருவருமே இந்த ஆண்டவரின் வார்த்தைகளை வாழ்வாக்குகிறோமா? அல்லது கேட்டுவிட்டு தன் மனம் போன போக்கில் தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்கிறோமா? என சிந்திக்க இந்த நாள் அழைப்பு தருகிறது. இறைவன் தருகின்ற இந்த அழைப்பை இதயத்தில் இருத்தி சிந்தித்தவர்களாய், நமது வாழ்வில் ஆண்டவர் விரும்புகின்ற மாற்றங்கள் நிகழ வேண்டும் என்ற எண்ணத்தோடு, இறைவன் விரும்புகின்ற மாற்றத்தை நம் வாழ்வில் நாம் பின்பற்றக்கூடிய மனிதர்களாக மாற இறைவனிடத்தில் அருள் வேண்டி இந்த நாளை ஆண்டவருக்கு உகந்த நாளாக மாற்றுவோம். இறைவன் நம்மை ஆசீர்வதிப்பார்.

ஆண்டவரின் பாதையில் பயணம் செய்ய....(13.07.2022)

ஆண்டவரின் பாதையில் பயணம் செய்ய....

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
 இன்றைய முதல் வாசகமானது இறைவாக்கினர் எசாயா நூலில் இருந்து எடுக்கப்பட்டது. இஸ்ரயேல் மக்கள் அசிரியப் படையெடுப்புக்கு உள்ளான போது, தாங்கள் செய்த தவறின் விளைவாக இந்த அசிரிய படை எடுப்புக்கு அவர்கள் உள்ளாகப்பட்டிருக்கிறார்கள் என்பதை இறைவாக்கினர் எசாயா எடுத்துரைத்து கடவுளை விட்டு தவறிச் செல்லுகின்ற போதெல்லாம் இது போன்ற துன்பங்களை வாழ்வில்? சந்திக்கின்றோம்.  எனவே, கடவுளோடு இணைந்த ஒரு வாழ்வை வாழ வேண்டும் என்ற சிந்தனையினை இறைவாக்கினர் எசாயா இஸ்ரயேல் மக்களுக்கு வழங்குவதை நாம் இன்றைய முதல் வாசகமாக வாசிக்கக் கேட்டோம். 

     இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட மனிதர்களாகிய நாம் குழந்தைகளை போல இருப்பதற்கு அறிவுறுத்தப்படுகிறோம். பல ஞானிகளுக்கு மறைத்து பலவற்றை குழந்தைகளுக்கு கடவுள் வெளிப்படுத்தி இருப்பதாக நாம் இன்று வாசிக்கக் கேட்ட இறை வார்த்தை பகுதி  நமக்கு தருகின்ற வாழ்வுக்கான பாடம் என்ன என சிந்திக்கின்ற போது, சிறுவயதில் இருந்த போதோ அல்லது குழந்தைகளாக நாம் இருந்தபோதோ,  நம்மிடம் இருந்த பலவிதமான  நற்பண்புகளை வளர வளர புறம் தள்ளிவிட்டு, மனிதன் என்ற முறையில், வளர்ந்து விட்டோம் என்ற பெயரில், பலவிதமான இறுக்கமான மனநிலை கொண்டு நாம் இந்த சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.  ஆனால் குழந்தைகளை போல கள்ளம் கபடமற்ற மனிதர்களாக நாம் ஒவ்வொரு நாளும் வாழ வேண்டும் என்ற சிந்தனையினை  இறைவன் இன்று வலியுறுத்துகிறார். 

      ஞானிகளுக்கு பலவற்றை மறைத்து குழந்தைகளுக்கு பலவற்றை கடவுள் வெளிப்படுத்தியதாக கூறப்படக்கூடிய வார்த்தைகள், குழந்தைகளிடம் இருக்கக்கூடிய நற்பண்புகளை சுட்டிக் காண்பிக்கின்றன. நம்மிடமும் இந்த நற்பண்புகள் நாம் குழந்தைகளாக இருந்தபோது நம்மில் இருந்தவை தான்.  வளர்கிறபோது அதை நாம் புறம் தள்ளி இருக்கிறோம். ஆனால் குழந்தைகளுக்குரிய மனநிலை கொண்டவர்களாக, கடவுளோடு இணைந்திருக்க கூடியவர்களாக, எப்போதும் கள்ளம் கபடமற்ற மனிதர்களாக, அடுத்தவரை அன்பு செய்யக் கூடியவர்களாக, அனைவரையும் மன்னிக்கும் மனம் படைத்தவர்களாக வாழ இறைவன் இன்றைய நாளில் அழைப்பு தருகிறார்.  இறைவன் தருகின்ற இந்த அழைப்பை உணர்ந்து கொண்டவர்களாக வாழ்வில்  துன்பங்களை சந்திக்கின்ற போதெல்லாம் நமது தவற்றை உணர்ந்து திருந்தியவர்களாக ஆண்டவரின் பாதையில் பயணம் செய்ய இறையருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

வெள்ளி, 8 ஜூலை, 2022

வார்த்தைகளை வாழ்வாக்குவோம்.(8.7.2022)

வார்த்தைகளை வாழ்வாக்குவோம்...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
இஸ்ரயேலே!  உன் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வா என்ற அழைப்பினை கடவுள் இஸ்ரயேல் மக்களைப்  பார்த்து கொடுக்கின்றார்.  இந்த அழைப்பு இஸ்ரயேல் மக்களுக்கு மட்டும் தரப்பட்ட ஒரு அழைப்பாக நாம் நகர்ந்து விட முடியாது. இந்த அழைப்பு நம் ஒவ்வொருவருக்குமான ஒரு அழைப்பாகவே
பார்க்கப்படுகிறது.  தவறிய வாழ்வில் இருந்து மனம் திரும்பியவர்களாய் இந்த ஆண்டவர் இயேசுவின் பாதையில் நாம் நமது வாழ்வை அமைத்துக் கொள்ள இறைவன் இன்றைய நாளில் அழைப்பு விடுக்கின்றார். 

        இந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை வாழ்வாக மாற்றிக் கொண்டு பயணிப்பது எளிதான ஒரு காரியம் அல்ல. இயேசு அன்று தன்னுடைய சீடர்களை தனது பணியை செய்ய மக்களிடையே அனுப்பிய போது,  அவர் அவர்களுக்கு அறிவுறுத்திய வார்த்தைகளை தான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் வாசிக்க கேட்டோம். ஓநாய்களுக்கு மத்தியில் உங்களை அனுப்புகிறேன். எனவே விவேகத்தோடு இருங்கள் என இறைவன் வலியுறுத்துகிறார். 

       இந்த இயேசுவின் பணியை செய்வதால் பலவிதமான இன்னல்களையும் எதிர்ப்புகளையும் நீங்கள் சந்திக்க நேரலாம். சந்திக்கின்ற போதெல்லாம் மனம் தளர்ந்து விடாதீர்கள் என்ற வாழ்வுக்கான பாடத்தை இறைவன் தன்னுடைய சீடர்களிடம் கூறினார். இதே பாடத்தை தான் இன்று நமக்கும் கற்பிக்கின்றார். 

       ஆண்டவரின் வார்த்தைகளை இதயத்தில் ஏற்றுக்கொண்டு, நமது செயல்களில் அதனை வெளிப்படுத்துகிற போது இந்த சமூகத்தில் பலரின் கேலி பேச்சுகளுக்கும் எள்ளி நகையாடக்கூடிய தன்மைக்கும் நாம் உள்ளாக நேரிடலாம். அவைகளை எல்லாம் கண்டு மனம் தளர்ந்து விடாமல் இறுதி வரை ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளை வாழ்வாக்கிக் கொண்டு பயணிப்பதை மட்டுமே நமது வாழ்வின் இலக்காகக் கொண்டு நாம் நமது பயணத்தை அமைத்துக் கொள்ள இறைவன் இன்றைய நாளில் அழைப்பு தருகின்றார். 

            இறைவன் தருகின்ற இந்த அழைப்பை இதயத்தில் ஏற்றுக் கொண்டவர்களாய், அவரது வார்த்தைகளை வாழ்வாக்கும் மனிதர்களாக, நாம் நமது வாழ்வை அமைத்துக் கொள்ள இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருளினை வேண்டுவோம்.

புதன், 6 ஜூலை, 2022

நமது வாழ்வால் சான்று பகர....(7.7.2022)

நமது வாழ்வால்  சான்று பகர....

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! 

 இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
       இன்றைய முதல் வாசகமானது, தவறிய நிலையில் இருந்தாலும் இஸ்ரேல் மக்கள் மீது இறைவன் இரக்கம் காட்டக்கூடியவராக இருந்தார். அந்த இரக்கத்தின் வெளிப்பாட்டை இன்றைய முதல் வாசகமாக நாம் வாசிக்க கேட்டோம். எந்த தவறுகளை புரிந்திருந்தாலும் உன்னை நான் எப்படி தள்ளி விடுவேன்? என்று கூறி, அவர்கள் மீது இரக்கத்தை பொழிந்து தவறிய மக்களை மீண்டும் தனது பாதையில் அழைத்து வரக்கூடியவராக கடவுள் தென்பட்டதை இன்றைய முதல் வாசகம் வலியுறுத்தியது. 

       இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட ஆண்டவர் இயேசுவின்  பணியை செய்வதற்காக சீடர்கள் அனுப்பப்பட்டிருந்த நிலையில், அவர்கள் இயேசுவை மட்டும் இதயத்தில் சுமந்தவர்களாய் பயணத்தை மேற்கொள்ள வேண்டும். மற்றவற்றின் மீது நாட்டம் இல்லாமல், மற்றவைகளை நம்பி தங்களது வாழ்வை அமைத்துக் கொள்ளாமல், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை மட்டுமே நம்பி, தங்கள் வாழ்வை நகர்த்த வேண்டும். தங்கள் வாழ்வின் நோக்கத்தை கண்டு கொள்ள வேண்டும்.  தங்கள் வாழ்வின் லட்சியத்தை மற்றவருக்கு அறிவிக்க வேண்டும் என்ற  வாழ்வுக்கான பாடத்தை இறைவன் இன்றைய நாளில் முன்மொழிகின்றார்.  

     இத்தகைய வாசகப் பகுதிகளோடு நமது வாழ்வை நாம் ஒப்பிட்டு பார்க்கிற போது நாம் தவறிய மனிதர்களாக இருந்தாலோ, அல்லது கடவுளின் விருப்பத்திற்கு ஏற்ப வாழத்தவறி இருந்தாலோ, நம்மை இறைவன் மனம் மாறி அவரது பணியை செய்ய அழைப்பு தருகின்றார்.  அவரது பணியை செய்ய அழைக்கப்பட்டு இருக்கக்கூடிய நாம் ஒவ்வொருவருமே இந்த உலக இச்சைகளை எல்லாம் புறம் தள்ளியவர்களாய், இதயத்தில் இயேசுவை மட்டுமே சுமந்தவர்களாய், அவர் மீது ஆழமான நம்பிக்கை கொண்டு, அவரது பணியை செய்யும் மனிதர்களாக இந்த உலகத்தில், அனுதினமும் பயணம் செய்ய இறைவன் அழைக்கின்றார் இறைவன் தருகின்ற இந்த அழைப்பை இதயத்தில் நிறுத்திக் கொண்டவர்களாய் நமது வாழ்வால் அவருக்கு சான்று பகர இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம்.

திங்கள், 4 ஜூலை, 2022

இறைவன் இரக்கம் உள்ளவர்....(5.7.2022)

இறைவன் இரக்கம் உள்ளவர்....


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாள் இறைவார்த்தையானது, இறைவன் இரக்கம் உள்ளவர் என்பதை நமக்கு வலியுறுத்துகிறது. இந்த இறைவன் இரக்கம் உள்ளவராய் இருப்பதற்கான காரணம், நம் மீது அவர் கொண்ட அளப்பரிய அன்பு. அந்த அன்பை உணர்ந்து கொண்டவர்களாக, இறைவனின் இரக்கத்தை உணர்ந்து கொண்ட மனிதர்களாக, நாம் நமது  வாழ்வை சீரமைத்துக்கொள்ள வேண்டும் என்ற வாழ்வுக்கான பாடத்தை இன்றைய நாள் வாசகங்கள் நமக்கு வழங்குகின்றன. 

    இன்றைய நாளில் நாம் வாசிக்க கேட்ட முதல் வாசகமானது, ஓசேயா புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. இந்த ஓசேயா புத்தகம் முழுவதுமே, 
கடவுளுக்கும் மனிதர்களுக்குமான, இஸ்ரயேல் மக்களுக்குமான உறவை, ஒரு கணவன் மனைவி உறவுக்கு இணையாக ஒப்பிட்டு பேசுகிறது.  எப்படி ஒரு கணவன் மனைவி உறவுக்குள் அன்பும் நம்பிக்கையும் நிலைத்திருக்க வேண்டுமோ, அந்த அன்பும் நம்பிக்கையும் நமக்கும் கடவுளுக்கும்  இடையே நிலைத்திருக்க வேண்டும் என்பதை இந்த புத்தகம் நமக்கு வலியுறுத்துகிறது. 

         கடவுள் பல்வேறு நிலைகளில் இருந்து இந்த இஸ்ரயேல் மக்களை, பாதுகாத்து பராமரித்து வந்தார். எகிப்தில் அவர்கள் அடிமைகளாக இருந்தபோது, அவர்களின் அடிமைத்தனத்தைக் கண்டு, துயரத்தில் அவர்கள் எழுப்பிய குரலுக்கு செவி கொடுத்தவராய், அவர்களை அந்நிலையிலிருந்து நன்னிலை நோக்கி நகர்த்திச் செல்லக் கூடியவராய், கடவுள் இருந்தார். எகிப்தியரின் அடிமைத்தனத்திலிருந்து அவர்களை அழைத்து வந்திருந்த நிலையிலும் கூட, அவர்களை பாலை நிலத்தில் அவர்களை மீட்டு வந்து கொண்டிருந்த போது கூட, அவர்கள் அனைவரும் பார்க்கும் வண்ணமாக, கடலை இரண்டாக பிரித்து அவர்களை வழி நடத்தியவர் இந்த இறைவன்.

      பசியோடு அவர்கள் தங்களுக்கு உண்ண உணவு வேண்டும் எனக் கேட்டபோது, வானில் இருந்து மன்னாவை பொழியச் செய்தவர் இந்த இறைவன். எங்களுக்கு இறைச்சி வேண்டும் எனக் கேட்டபோது, காடைகளை கொடுத்தவர் இந்த இறைவன். எங்களுக்கு நல்ல தண்ணீர் வேண்டும் என கேட்டபோது, பாறையில் இருந்து பாலை நிலத்தில் தண்ணீரை வரச் செய்தவர் இந்த இறைவன். 
இவ்வாறு இறைவன் அவர்களை பாதுகாத்து பராமரித்து,  வழிநடத்தி வந்தார். 

       தங்களை வழிநடத்துகின்ற இந்த கடவுளை இவர்கள் பல நேரங்களில்,  உதறித் தள்ளக்கூடிய மனிதர்களாக,  மனம் போன போக்கில் தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ளக்கூடியவர்களாகவே வாழ்ந்தார்கள்.  அப்படி வாழ்ந்த நேரங்களில் எல்லாம் பலவிதமான இன்னல்களையும் இடையூறுகளையும் வாழ்வில்  பல விதமான துன்பங்களையும் அவர்கள் சந்தித்தார்கள். இந்த துன்பங்களை எல்லாம் அவர்கள் சந்திக்கின்ற போது,  கடவுளின் கட்டளைக்கு புறம்பாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற தங்கள் வாழ்வு நெறி தவறு என்பதை இறைவாக்கினர்களின் வாயிலாக உணர்ந்து கொண்டு, தங்கள் வாழ்வை மாற்றிக் கொண்டு வந்தார்கள்.  

        பல நேரங்களில் இந்த மக்கள் தவறு இழைத்து ஆண்டவரை விட்டு விலகிச் சென்றாலும், ஆண்டவர் எப்போதும் இவர்களோடு இருந்தார். துன்பங்களுக்கு மத்தியிலும் இவர்களோடு துணையிருந்து இவர்களை வழி நடத்தினார். மனம் வருந்தியவர்களாய் அவர்கள் திரும்பி வந்த போதெல்லாம், அவர்களை தங்கள் மார்போடு அணைத்துக் கொள்ளக்கூடிய கடவுளாக, இறைவன் இருந்தார் என்பதை தான் விவிலியம் நமக்கு வெளிக்காட்டுகிறது. 

     இத்தகைய பின்னணியோடு தான் இன்றைய நாள் முதல் வாசகமும் அமைகிறது. தங்களை இதுநாள் வரை வழிநடத்தி வந்த இறைவனை புறம் தள்ளியவர்களாய், தங்களுக்கு பிடித்தமான தலைவர்களை தாங்களே தேர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு, தங்களுக்காக அரசர்களை ஏற்படுத்தினார்கள். தங்களுக்காக தெய்வங்களை உருவாக்கினார்கள். தங்கள் கைகளால் உருவாக்கிய சிலைகளை, தெய்வமாக மாற்றினார்கள். தாங்கள் விரும்பிய வகையில் அதனை வழிபடக் கூடியவர்களாக இருந்தார்கள். இது தவறு, இவர்கள் செல்லுகிற பாதை தவறு என்பதை, ஓசேயா இறைவாக்கினர் வாயிலாக இறைவன் எடுத்துரைக்கின்ற ஒரு நிகழ்வையே,  இன்றைய முதல் வாசகமாக நாம் வாசிக்க கேட்டோம். 

        இந்த வாசகப் பகுதியோடு நமது வாழ்வை நாம் ஒப்பிட்டு பார்க்கிற போது, பல நேரங்களில் கடவுள் நமது வாழ்வில் ஏற்பட்ட எல்லா இன்ப துன்பங்களிலும் உடன் இருந்திருந்தாலும், பல நேரங்களில் அவரை மறந்து விட்டு பயணம் செய்யக் கூடிய மனிதர்களாகவே நாம் இருக்கிறோம். 

       நாம் செல்லுகின்ற பாதை தவறு என்பதை உணர்ந்து, அவரை நோக்கி திரும்புகிற போது, அவர் நம்மை அரவணைக்க கூடிய இறைவனாக இருக்கின்றார். இந்த இரக்கம் நிறைந்த இறைவனை நாம் நம்பிக்கையோடு இறுகப் பிடித்துக் கொள்ள, இன்றைய நாள் வாசகங்கள் வழியாக அழைக்கப்படுகின்றோம். 

           இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட பேச்சிழந்த ஒரு மனிதரை சிலர் இயேசுவிடம் கொண்டு வருகிறார்கள். அவர்களின் நம்பிக்கையை கண்டு வியந்து போனவராய், பேச்சிழந்த மனிதரை பேச வைக்க கூடிய இறைவனாக இறைவன் இருக்கின்றார். துன்பங்களின் மத்தியில் ஆண்டவரை தேடி வரக்கூடிய அவர்களின் நிலையைக் கண்டு, அவர்கள் மீது பரிவு கொள்ளக் கூடியவராக இறைவன் இருக்கின்றார். வாழ்வில் என்ன நிலையில் நாம் இருந்தாலும், வாழ்வில் நாம் செல்லுகிற பாதை தவறு என்பதை உணர்ந்து, ஆண்டவரை நோக்கி நாம் திரும்புகிற போது, நம் மீது பரிவு கொள்ளக் கூடியவராய் , நம்மை தன் மார்போடு அணைத்துக் கொள்ளக் கூடியவராய், இந்த இறைவன் இருக்கிறார் என்பதை இன்றைய வாசகங்கள் நமக்கு வெளிப்படுத்துகின்றன. 

       இவ்வாசகங்களின் அடிப்படையில்,  நாம் நமது வாழ்வை சீர்தூக்கி பார்ப்போம். ஆண்டவரிடத்தில் காணப்படுகின்ற இரக்கமும் பரிவும் நம்மிடம் குடிகொண்டு இருக்கிறதா என்பதை இன்று நாம் நமக்குள்ளாக சிந்தித்துப் பார்க்க கடமைப்பட்டிருக்கிறோம். தவறு இழைத்த நாமும் செய்தது தவறு என்பதை உணர்ந்து ஆண்டவரை நோக்கி திரும்புகிற போது அவர் நம்மை மன்னிக்கின்றார். 

    நமக்கு எதிராக நாம் வாழுகின்ற இந்த உலகத்தில், நமக்கு எதிராக தவறிழைத்த சக மனிதர்களை, நம்மால் மன்னிக்க முடிகிறதா? இயேசுவிடம் காணப்பட்ட இரக்கமும் பரிவும், நமது வாழ்வில் செயலாகிறதா? சிந்தித்துப் பார்ப்போம். அனுதினமும் நாம் பயன்படுத்துகின்ற " விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே" என இயேசு கற்பித்த செபத்தில் கூட, நாம் குறிப்பிடுகிறோம், பிறருடைய குற்றங்களை நாங்கள் மன்னிப்பது போல, எங்கள் குற்றங்களை மன்னியும் என்று. நம்மிடம் மன்னிப்பு மேலோங்கி இருக்கிறதா?  பரிவு மேலோங்கி இருக்கிறதா? என்ற கேள்வியை இதயத்தில் எழுப்பி பார்ப்போம். 

          இயேசுவிடம் காணப்பட்ட இரக்கமும் பரிவும், நம்மிடம் வெளிப்படுகிற போது, நாம் கடவுளின் மக்களாக, கடவுளைப் போல இரக்க குணம் உள்ளவர்களாக, இச்சமூகத்தில் பயணம் செய்ய முடியும். இதற்கான அருளை இறைவனிடத்தில் இன்றைய நாளில் வேண்டுவோம்.

வெள்ளி, 1 ஜூலை, 2022

மரியாவின் மாசற்ற இதயம் .... (25.6.2022)

 மரியாவின் மாசற்ற இதயம் 




 மரியாவின் மாசற்ற இதயம் என்பது கன்னி மரியாவின் தூய இயல்பையும் அன்பையும் சுட்டிக்காட்டுவதாகும். இறைவனின் திட்டத்திலும், மனிதகுல மீட்பிலும் மரியாவின் பங்களிப்பை நாம் தியானிக்க உதவும் ஒரு பக்தி முயற்சியாக இது திருஅவையால் கொண்டாடப்பட்டு வருகிறது. இயேசுவின் திரு இதய பெருவிழாவைத் தொடர்ந்து வரும் சனிக்கிழமை மரியாவின் மாசற்ற இதயத்துக்கான விழாவாக கொண்டாடப்படுகிறது.

கடவுள் ஒரு நாள் அருள்பணியாளரிடம் வந்து, "நான் மனிதர்களோடு கண்ணாமூச்சி விளையாடப் போகிறேன. எங்கு ஒளிவது என்று என்னுடைய தூதர்களைக் கேட்டேன். அவர்களில் சிலர் “கடலுக்கு அடியில்” என்றார்கள், சிலர் “உயர்ந்த மலையில்” என்றார்கள், பலர் “நிலவின் மறு பகுதியில்” என்றார்கள், வேறு சிலரோ “தொலை தூரத்தில் உள்ள விண்மீன் ஒன்றில் ஒளிந்து கொள்ளுங்கள்” என்றார்கள், எந்த இடத்தில் ஒளிந்து கொண்டால் மனிதர்களால் என்னை எளிதில் கண்டுபிடிக்க முடியாது என்பதை நீர் சொல்லும்" என்று கேட்டாராம்! அதற்கு அந்த அருள்பணியாளர் நன்குசிந்தித்துவிட்டு சொன்னாராம், மனிதரின் இதயத்தில் ஒளிந்து கொள்ளுங்கள்! அங்குதான் மனிதர் அவ்வளவு எளிதாய் தேட மாட்டாரகள்;; என்றாராம்! இறைவன் குடிகொண்டிருப்பது எங்கோ அல்ல, நம் ஒவ்வொருவரின் உள்ளத்திலே. 

உங்கள் உடல் நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட தூய ஆவி தங்கும்


கிறிஸ்து இயேசுவில் பிரியமான வத்திக்கான் வானொலி நேயர்களுக்கு என் வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன். ஜூன் மாதம் திரு இருதயங்களுக்கு விழா எடுத்து இறை அன்பில் நாம் மகிழும் மாதம்! இன்று மரியாவின் இதயத்தை பற்றி சிந்திக்க நற்செய்தியை புரட்டி பார்க்க உங்களை அழைக்கிறேன்


மரியாவின் இதயம் மாசற்ற இதயம்


லூக்கா நற்செய்தி பிரிவு ஒன்று, இறைச்சொற்றொடர்கள் 28-30: “வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, “அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்” என்றார். இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக்கொண்டிருந்தார். வானதூதர் அவரைப் பார்த்து, “மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்.”


கன்னி மரியா அருள்மிகப் பெற்றவர்! கடவுளின் அருளை அடைந்தவர்! கடவுளைத் தாங்கும் ஆலயம்! அதனால்தான் மரியாவின் இதயம் மாசற்ற இதயம்!


மரியாவின் இதயம் இறைதிட்டத்தின் ஏற்கும் இதயம்


யோவான் நற்செய்தி பிரிவு ஒன்று, இறைச்சொற்றொடர்கள் 1, மற்றும் 14ல் வாசிக்கின்றோம்: “தொடக்கத்தில் வாக்கு இருந்தது; அவ்வாக்கு கடவுளோடு இருந்தது; அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது… வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார்.”


கடவுள் இவ்வுலகத்தை அன்பு கூர்ந்து தன் ஒரே மகனை இவ்வுலகத்திற்கு அளிக்க நினைத்த போது (யோவா.3,16) மரியாவை தேர்ந்துதெடுத்தார்.  அதற்கு மரியா, “இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!” என்று கேள்வி எழுப்பிய து (லூக்.1,34) வானதூதர் அவரிடம், “தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால், உம்மிடம் பிறக்கப்போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும்.” (லூக்.1,35) என்ற இறைத்திடத்தை அறிவிக்கின்றார். அதற்கு மரியா, “நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்றார். (லூக்.1,38)!  மரியாவின் இதயம் இறைதிட்டத்தை ஏற்று தன்னை முழுமையாக அர்ப்பணிக்கும் இதயம்.


பல நேரங்களில் வாழ்வில் வருகின்ற துன்பங்களை நினைத்து வாடும் நாம்  இறைவனை தூற்றுகின்றோம்! இது இறைவன் திட்டம் என்று ஏற்க மறுக்கின்றோம்! மரியாவின் வழியில் “நீரே என் புகலிடம்; என் அரண்; நான் நம்பியிருக்கும் இறைவன்” (தி.பா.91:2) என்று நம்மால் கூறமுடியுமா?


மரியாவின் இதயம் உதவிட ஓடும் இதயம்


முதிர்ந்த வயதில் கடவுளின் அருளால் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். தம் உறவினராகிய எலிசபெத்து (லூக்.1:36) என்ற வானதூதர் சொல் கேட்டு மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார். அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார். (லூக்.1:39 -40).


கருவுற இயலாதவர் என்ற அவப்பெயரைக் கேட்டு மனம் வெதும்பி இருக்கும் எலிசபெத்; கன்னியான தான் அருகில் இருந்தால் மேலும் மனம் வாடும் என்று ஒதுங்கி இருந்த மரியர்  இன்று எலிசபெத் கடவுளால் அருள் பெற்றிருக்கிறார்! அவருக்கு இந்த நேரத்தில் உதவவேண்டும் என்று ஓடோடிச் செல்லுகிறார்! மரியாவின் இதயம் பிறரின் தேவையை அறிந்து உதவிட ஓடும் இதயம் என்று படம் பிடித்து காட்டுகிறது லூக்கா நற்செய்தி!


பிறரின் தேவைகள் அறிந்தும் நம் உள்ளத்தை மூடி கொள்கிறோமே ஏன் என்று கேள்வி எழுப்புகிறார் அன்னை மரியா?


மரியாவின் இதயம் பரிந்துரைக்கும் இதயம்


யோவான் நற்செய்தி பிரிவு இரண்டு, இறைச்சொற்றொடர்கள் 3 – 5 பார்க்கின்றோம்: திருமண விழாவில் திராட்சை இரசம் தீர்ந்து போகவே இயேசுவின் தாய் அவரை நோக்கி, “திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது” என்றார். இயேசு அவரிடம், “அம்மா,⁕ அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே” என்றார். இயேசுவின் தாய் பணியாளரிடம், “அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்” என்றார்.


திருமண விழாவில் வந்தவர்களை திருப்தியாக கவனித்து அனுப்ப வேண்டும் என்ற பண்பாட்டை காக்க முடியாமல் போய்விடுமேர் அவமானத்தில் தலைகுனியப் போகும் அந்த குடும்பத்தின் நிலை அறிந்த மரியா வேடிக்கை பார்க்காமல் தன்னால் இயன்ற உதவியை செய்ய விரைகிறார்!


அடிப்பட்டு துடிக்கின்ற மக்களை உதவாமல் தங்களையே அவர்களோடு புகைப்படம் (செல்பி) எடுக்கும் நம் மனநிலையை கேள்வி கேட்கின்றது மரியாவின் இதயம்?


மரியாவின் இதயம் ஒரு தாயின் இதயம்


யோவான் நற்செய்தி பிரிவு 19, இறைச்சொற்றொடர்கள் 25-27ல் வாசிக்க கேட்கின்றோம்”  “சிலுவை அருகில் இயேசுவின் தாயும், தாயின் சகோதரியும் குளோப்பாவின் மனைவியுமான மரியாவும், மகதலா மரியாவும் நின்றுகொண்டிருந்தனர். இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், “அம்மா, இவரே உம் மகன்” என்றார். பின்னர் தம் சீடரிடம், “இவரே உம் தாய்” என்றார்.”


“நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்” (லூக்.1,38)! என்று தன்னையே இறைவனை பெற்றுத்தரும் தாயான மரியா இப்போது இயேசுவால் திருஅவைக்கு தாயாகத் தரப்படுகிறார்!


மேல்மாடியில் சீடர்களோடு இணைந்து ஒரே மனத்தோடு இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்த அன்னையாக பார்க்கின்றோம் (தி.ப.1,14). துன்பத்தில் துணை இருக்கும் ஒரு தாயாக்  திரு அவையில் வேண்டுதல்களை இறைவனிடம் எடுத்துச் செல்லும் தாயாகப் பார்க்கின்றோம்


மரியாவின் இதயம் தன்னை முழுமையாக அர்ப்பணிக்கும் இதயமாக் இறைவனை முழுமையாக நம்பும் இதயமாக (எலிசபெத்து வாழ்த்து லூக்.2:45ஸ் மரியா வாழ்வில் நடக்கின்ற நிகழ்ச்சிகளையெல்லாம் (இடையர்களும் வானதூதர்களும் லூக்.2:19ஸ் சிமியோன் வாழ்த்து செய்தி லூக்.2:51) தம் உள்ளத்தில் பதித்து இருத்திச் சிந்திக்கின்ற இதயமாக் நமது கூக்குரலை கேட்கும் இதயமாக, நமக்கு உதவிட ஓடிவரும் இதயமாக நற்செய்தி காட்டுகிறது!  அன்னை மரியாவின் புகழ்பாடும் நாம் அவர் வழியில் பிறர் பணி புரிய இறைவன் அருள்புரிவாராக!


இறைவனின் பாதையில் ...(2.7.2022)

இறைவனின் பாதையில் ...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
 இன்றைய முதல் வாசகத்தில் தவறி போன இஸ்ரயேல் மக்களின் தவறை ஆமோஸ் இறைவாக்கினர் சுட்டிக்காட்ட,
ஆமோஸ் இறைவாக்கினரின் வார்த்தைகள் இறைவனது வார்த்தைகள் என்பதை உணர்ந்து, தங்களது வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ளுகிற அவர்களுக்கு, ஆமோஸ் இறைவாக்கினர், கடவுளின் வாக்காக, "இதோ நாட்கள் வருகின்றன. அப்போது தாவீதின் குடும்பத்தை உயர்த்துவார் எனக் கூறி, அவர்களின் மனமாற்றத்திற்கான பரிசாகிய இறைவனது அளப்பரிய வல்லமையான செயல்களை சுட்டிக்காட்டுகிறார். 

         இந்த இறைவார்த்தைப் பகுதியோடு இன்றைய நற்செய்தி வாசகத்தை ஒப்பிட்டு பார்க்கிற போது, மனிதர்களாகிய நாம் செய்கிற ஜெபம் தவம் தர்மச் செயல்கள் இவை அனைத்துமே நமக்கு நிறைவை தருவதை விட, இவைகளின் மூலமாக நாம் இறைவனை விலைக்கு வாங்க எண்ணுவதை விட, இவைகளின் அர்த்தத்தை உணர்ந்தவர்களாய் நாம் பின்பற்ற வேண்டும் என்ற செய்தியினை, நமக்குத் தருகின்றன. 

        நோன்பு இருப்பதனை ஒரு சடங்காகவே மட்டுமே கருதி, சட்டமாக அதனை தங்கள் இதயத்தில் எழுதிக் கொண்டு, பின்பற்றுபவர்களாகத் தான் பரிசேயர்களும் சதுசேயர்களும் இருந்தார்கள். 
ஆனால் இறைவன் இயேசு கிறிஸ்து, நோன்பு பற்றிய உண்மைத் தன்மையை உணர்ந்து கொள்ள நமக்கு அழைப்பு தருகின்றார். எந்தவித மாற்றமும் இல்லாமல் வெறுமனே, இந்த ஒறுத்தல் மட்டுமே நம்மை ஆண்டவர் இடத்தில் ஐக்கியப்படுத்தும் என்பது அல்ல. 

           நோன்பு என்ற பெயரில் நாமும், உண்ணாது இருக்கின்ற உணவை இயலாதவரோடு பகிர்ந்து கொள்ளும் போது தான், நோன்பு முழுமை பெறுகிறது. பாவங்கள் செய்து விட்டு, உதவிகள் செய்யாமல் நோன்பு இருப்பதில் அர்த்தம் இல்லை.  நோன்பு இருக்கிறேன் என்று சொல்லி விட்டு பொருட்களை வீட்டில் சேமித்து வைப்பதாலும் அர்த்தம் இல்லை. உறவுகளை புதுப்பித்துக் கொண்டு, நாம் தியாகம் செய்கின்ற உணவுகளை அடுத்தவரோடு பகிர்ந்து கொண்டு, அடுத்தவர் மனம் குளிர செய்வது தான் நோன்பின்  உண்மை அர்த்தம் என்பதை இயேசு உணர்த்துகிறார்.  

              நாம் செய்கின்ற சின்ன சின்ன அறப்பணிகளும், எத்தகைய மனநிலையோடு செய்யப்படுகிறது? அல்லது எந்த அளவிற்கு அதன் உண்மை தன்மையை நாம் உணர்ந்தவர்களாக செய்கின்றோம்? என்பதை இதயத்தில் இருத்தி  சிந்திக்கவும், நமது செயல்களை சரி செய்து கொண்டு இறைவனின் பாதையில் அவர் விரும்பும் மக்களாக தொடர்ந்து பயணிக்கவும், இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம்.

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...