சனி, 14 மே, 2022

அன்பே கட்டளை...(15.5.2022)

அன்பே கட்டளை...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
ஒரு மனிதனின் இறப்பு இன்று வரை ஒவ்வொரு நாளும் பலரால் நினைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.  அதே மனிதனுடைய உயிர்ப்பு  இன்றுவரை பல இடங்களில் கொண்டாடப்பட்டு கொண்டிருக்கிறது. அது நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இறப்பு உயிர்ப்பு என்பதை நாம் ஒவ்வொருவருமே அறிந்திருக்கிறோம். ஆண்டவர் இயேசு உயிர்த்தார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அவரை பின்தொடருகின்ற நாம் ஒவ்வொருவருமே,  பாஸ்கா  காலத்தை அனுசரித்துக் கொண்டிருக்கிறோம்.  அந்த அடிப்படையில் பாஸ்கா காலத்தின் ஐந்தாம் வாரமான இந்த நாளில் ஆண்டவர் இயேசுகிறிஸ்து இந்த மண்ணில் மனிதனாக வாழ்ந்த போது நாம் பின்பற்ற வேண்டும் என நமக்கு கற்பித்த கட்டளைகளின் அடிப்படையில் நமது வாழ்வை அமைத்துக்கொள்ள இன்றைய நாளில் நாம் ஒவ்வொருவருமே அழைக்கப்படுகின்றோம்.

ஆண்டவர் இயேசு கிறிஸ்து இந்த மண்ணில் மனிதனாக வாழ்ந்த போது மனிதனை மனிதனாக மதித்து ஒருவர் மற்றவரை அன்பு செய்து வாழ கற்பித்தார்; தான் கற்பித்ததை தன் வாழ்வாக அமைத்துக் கொண்டார்.  அதன் விளைவாகத் தான் பலரின் சூழ்ச்சியால் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார். சிலுவையில் உயிர் விடும் தருணத்திலும் தன்னை  இந்நிலைக்கு ஆளாக்கியவர்களை மன்னிக்கும் மனிதனாக இயேசு செயல்பட்டார்.  இந்த இயேசுவைப் பின்பற்றித் தான் பல மனிதர்கள் தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ளக் கூடியவர்களாக மாறினார்கள்.  

    அவர்களுள் ஒருவரான பவுலை குறித்தே இன்றைய முதல் வாசகத்தில் நாம் வாசிக்க கேட்டோம். பவுல் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரை அறிக்கையிடுபவர்களை எல்லாம் தேடிப் பிடித்துக் கொல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடு தனது பயணத்தை தொடங்கியவர்.  ஆனால் இயேசு அவரை ஆட்கொண்டு, தன்னை பற்றிய நற்செய்தியை,  தான் கற்பித்த கட்டளைகளை, அகிலம் முழுவதும் உள்ள அனைவருக்கும் அறிவிப்பதற்கான கருவியாக அவரை மாற்றினார்.  பவுல் பல ஆயிரம் மைல்கள் தூரம் கடந்து சென்று ஆண்டவரே இயேசு கிறிஸ்துவே உண்மையான இறைவன்; அவர் நமக்காக இறந்தார்.  அவர் கற்பித்த கட்டளைகளின்படி நமது வாழ்வை நாம் அமைத்துக் கொள்ள வேண்டும் என,  பல இடங்களுக்கு, பல மைல் தூரம் பயணம் செய்து கற்பித்தார்.

      பொதுவாக பவுல் நான்கு தூதுரைப் பயணங்களை மேற்கொண்டதாக விவிலியம் நமக்கு குறிப்பிடுகிறது.  ஒரு இடத்தில் இருந்து துவங்கி மீண்டும் அதே இடத்திற்கு வந்து சேருவதை ஒரு தூதுரைப்  பயணமாக பார்க்கிறோம்.  இன்று பவுல் முதல் தூதுரை பயணத்தை நிறைவு செய்வதை குறித்து நாம் வாசிக்க கேட்டோம். இந்த முதல் தூதுரை பயணத்தின் போது பலவிதமான எதிர்ப்புகளையும் இடையூறுகளையும் இன்னல்களையும் பவுல் சந்திக்க நேர்ந்தது. 

 இயேசுவைப்பற்றி அறிவித்ததனால் சொந்த மக்களால் இகழ்ந்து தள்ளப்பட்டார்.  சொந்த மக்களால் பலவிதமான இன்னல்களுக்கு ஆளானார்.  ஆனால், அனைத்திற்கு மத்தியிலும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார். 

 இன்னல்களுக்கு மத்தியிலும் எப்படி இந்த மனிதன் இந்த பணியை செய்ய முடிந்தது? என சந்திக்கின்ற போது அவர் தன் வாழ்வில் படுகின்ற அனைத்து துன்பங்களையும் இயேசுவின் சிலுவை மரணத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தார்.  இயேசு சிலுவையில் பட்ட வேதனைகளை விட இவை ஒன்றும் மிகப்பெரிய வேதனைகள் அல்ல என்பதை ஆழமாக உணர்ந்திருந்தார்.  அந்த அடிப்படையில் தான் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்காக அனைத்தையும் குப்பை எனக் கருதி உதறித் தள்ளியவராய்,  ஆண்டவர் இயேசுக் கிறிஸ்துவை ஆதாயமாக்கிக் கொள்ள அனைத்தையும் குப்பை என உதறித் தள்ளிய   ஒரு மனிதனாய், இன்னல்களுக்கும் இடையூறுகளுக்கும் மத்தியிலும், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கட்டளைகளை கற்பிப்பதில் முழுமூச்சோடு செயல்பட்டார். 

 அப்படி என்ன கட்டளைகளை அவர் கற்பித்தார் என சிந்திக்கின்ற போது, இயேசு இந்த மண்ணில் மனிதனாக வாழ்ந்த போது, ஒருவர் மற்றவரை அன்பு செய்து வாழ கற்பித்தார். இயேசு கற்பித்த அந்தக் கட்டளையை தன் வாழ்வாக மாற்றிக்கொண்டு சக மனிதர்களை அன்பு செய்து, அனைவரையும் கிறிஸ்துவுக்குள் கொண்டுவரக்கூடிய மனிதனாக செயல்பட்டார்.  ஒரு வேளை இந்த பவுலடியார் மட்டும் இல்லாது போயிருந்தால்,  இந்த கிறிஸ்தவ மதம் என்பது யூதர்களுக்கு மட்டுமே உரித்தான ஒரு மதமாக மாறியிருக்கும். இவர் தான் புறவினத்தாரையும்  ஆண்டவருடைய மக்கள்; அவர்களுக்கும் ஆண்டவர் இயேசு கிறிஸ்து உரியவர் என்பதை எடுத்துரைத்து அனைவரையும் கிறிஸ்துவின் தலைமையில் ஒன்று சேர்த்தார் என்பது வரலாறு நமக்குச் சுட்டிக்காட்டுகின்ற ஒரு பாடம்.  இந்த பாடங்களை எல்லாம் மனதில் இருத்தியவர்களாய்,  ஒருவர் மற்றவரை அன்புசெய்து  பொதுவாகவே அறியாத நபர்களை விட, அறிந்த நபர்களால் தான் நாம் அதிகம் காயப்படுத்தப்படுகிறோம். பவுலும் சரி,  இயேசுவுடன் இருந்த சீடர்களும் சரி , 

நற்செய்தி அறிவிப்புப் பணிக்காக சென்ற இடங்களில் அவர்களை அறிந்து  வைத்திருந்தவர்கள் பல நேரங்களில் பல விதமான இடையூறுகளையும் இன்னல்களையும் தந்தார்கள். இந்த இடையூறுகளையும் இன்னல்களையும் சந்திக்கின்ற போதெல்லாம் திருத்தூதர்களும் சரி, தொடக்க கால கிறிஸ்தவர்களும் சரி,  தாங்கள் கொண்டிருந்த நம்பிக்கையில் அவ்வப்போது தளர்ச்சியுறக் கூடியவர்களாக இருந்தார்கள்.  ஆனால் தளர்ச்சியுறுகிற நேரத்திலெல்லாம் ஆண்டவரின் வெளிப்பாடானது அவர்களுக்கு வழங்கப்பட்டு கொண்டே இருந்தது. 

 அந்த அடிப்படையில் தான் இன்றைய நாளின் இரண்டாம் வாசகம் அமைகிறது. இன்றைய நாளில் திருவெளிப்பாட்டு நூலில் இருந்து எடுக்கப்பட்ட அந்த வாசகமானது,  புதிய விண்ணகமும், புதிய மண்ணகமும் கடவுளால் வழங்கப்படும் என்பதை வலியுறுத்துகிறது. 

         கடவுளின் ஆட்சி இவ்வுலகத்தில் கண்டிப்பாக ஒருநாள் நிலைநாட்டப்படும்.  அதற்கான கருவிகளாய் நாம் இருக்க வேண்டும் என்பதை,  காட்சிகள் வழியாக அவ்வப்போது இறைவன் வெளிப்படுத்திக் கொண்டேயிருந்தார். இறைவன் வெளிப்படுத்தக்கூடிய இந்த வெளிப்பாடுகளின் அடிப்படையில்,  தளர்வுகளையும் சிக்கல்களையும் சந்திக்கின்ற நேரங்களில் எல்லாம் தங்களைத் தாங்களே புதுப்பித்துக் கொண்டவர்களாய் ஆண்டவர் இயேசு விதைத்த  அன்பினை அடிப்படையாகக் கொண்டு அன்பு பணியையே தங்களின் அறப்பணி என்பதை உணர்ந்தவர்களாய் சக மனிதர்களை அன்பு செய்யும் மனிதர்களாக இயேசுவின் சீடர்களும் தொடக்ககால கிறிஸ்தவர்களும் இருந்தார்கள். 


 இந்த இயேசுவும் இவ்வாறு தான் வாழ்ந்து காட்டினார்.  தன்னை சிலுவை மரணத்திற்கு தீர்ப்பிட்ட மனிதர்களையும் அவர் அன்பு செய்யக் கூடியவராக அவர்களுக்காக இறைவனிடத்தில் பரிந்து பேசக் கூடியவராக இயேசு இருந்தார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. 

 இந்த இயேசுவைப் பின்பற்றிய சீடர்களும் தொடக்ககால கிறிஸ்தவர்களும் அப்படிப்பட்டவர்களாகத் தான் இருந்தார்கள்.  நாம் காணுகின்ற ஒவ்வொரு மறைசாட்சியும் ஒவ்வொரு புனிதரின் வாழ்வும் நமக்கு வெளிப்படுத்துவது,  இந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து கூறிய அன்பினை அடிப்படையாகக் கொண்டு தங்கள் வாழ்வை அமைத்துக் கொண்டதன் விளைவாக தங்கள் இன்னுயிரையும்  இழக்கத் துணிந்தார்கள். 

 அவர்களின் அந்தத் தியாகம் வலியுறுத்துவது, தங்களுக்கு முன்மாதிரியான இயேசு இத்தகைய அன்பின் அடிப்படையில் தன்னுயிரை தியாகம் செய்தார்.  நாமும் அவரைப் பின் தொடர்கிறோம்.  அவரைப் பின்தொடர்வதன் அடையாளமாக அந்த அன்பின் அடிப்படையில்,  தமது இன்னுயிரையும் தியாகம் செய்யத் துணிந்தார்கள்.  இன்று அந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை பின்பற்றுகிறோம் என்று சொல்லக்கூடிய நாம், எப்படிப்பட்ட மனநிலையோடு இந்த சமூகத்தில் பயணம் செய்து கொண்டிருக்கிறோம் என சிந்தித்துப் பார்ப்போம்.  கிறிஸ்தவர்கள் என்றால் கையில் ஜெபமாலை வைத்திருப்பவர்கள்; விவிலியத்தை பிடித்து இருப்பவர்கள்; சிலுவையை பார்த்து தந்தை மகன் தூய ஆவியின் அடையாளம் வரையக் கூடியவர்கள் என்ற வெளிப்படையான அடையாளம் நமக்கு அவசியம் அல்ல. 

கிறிஸ்தவர்கள் என்றால், அன்பின் மறு உருவம். 

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்

 என்ற திருவள்ளுவரின் வார்த்தைக்கு இணங்க நல்லது செய்தாலும்,  தீயது செய்தாலும், காணுகின்ற மனிதர்களை எல்லாம் இறைவன் பார்த்த அதே பார்வையோடு உற்று நோக்கி,  ஒவ்வொருவரையும் அன்பு செய்யக் கூடியவர்களாக நாம் இருக்க வேண்டும் என்பது தான் இறைவன் இன்றைய நாளில் நமக்கு வலியுறுத்துகின்ற வாழ்வுக்கான பாடம் என்பதை உணர்ந்து கொள்வோம். 

திருச்சபை நாம் பின்பற்ற வேண்டுமென பல ஆயிரம் கட்டளைகளை தந்தாலும், அனைத்துக் கட்டளைகளுக்கும் அடிப்படையாக அமைவது, ஆண்டவர் இயேசு கொடுத்த அன்புக் கட்டளை மட்டுமே.  

                 இந்த அன்பு கட்டளையை வாழ்வின் இறுதி மூச்சு இருக்கும் வரை பின்பற்றக்கூடிய மனிதர்களாக நாம் வாழ்கிற போது, நாமும் தொடக்க கால கிறிஸ்தவர்களைப் போல, இயேசுவைப் பின்பற்றிய சீடர்களைப் போல ஒரு சாட்சிய வாழ்வை இந்த சமூகத்தில் வாழ முடியும் என்பதை உணர்ந்தவர்களாக, அத்தகைய ஒரு வாழ்வை வாழுவதற்கான முயற்சிகளில் ஈடுபட,  இறைவன் அழைப்பு தருகின்றார். 

          நீங்கள் ஒருவர் மற்றவரை அன்பு செலுத்துவதன் வழியாக என் சீடர்கள் என்பதை உலகம் அறிந்து கொள்ளட்டும் என்ற இறைவார்த்தைக்கு ஏற்ப நமது வாழ்வை அமைத்துக்கொள்ள இறையருள் வேண்டி தொடர்ந்து இந்த திருப்பலி வழியாக செபிப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...