இணைக்கும் முயற்சியில் ஈடுபட...
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
ஆண்டவர் இயேசுவோடு இணைந்திருப்பது நம்மை கனிதரும் மரம் போல இந்த சமூகத்தில் சிறந்து விளங்க வைக்கும். கடவுள் நம்மோடு இருக்கிறார் என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை. நாம் கடவுளோடு இணைந்திருக்கிறோமா? என்ற கேள்வியை நமக்குள் எழுப்பிப் பார்ப்போம். கடவுளோடு இணைந்த வாழ்வே ஒரு அர்த்தமுள்ள வாழ்வு. கடவுள் நமது வாழ்வில் நாம் அறியாத வகையில் பல நேரங்களில், பல வழிகளில், பல மனிதர்கள் வழியாக பலவிதமான நன்மைகளை மட்டுமே நமக்கு தந்து கொண்டிருக்கிறார். நன்மைகளை தருகின்ற இறைவனுக்கு நாம் தரும் கைமாறு என்ன? என்ற கேள்வியை எழுப்பி பார்ப்போம். இறைவன் நம்மிடம் இருந்து மிகப் பெரிய காரியங்களை எதிர்பார்ப்பது இல்லை. நாம் அவரோடு இணைந்திருப்பதை மட்டுமே விரும்புகிறார். பல பணிகளுக்கு மத்தியில் ஓடிக் கொண்டிருக்கக் கூடிய நாம், ஆண்டவரோடு எவ்வளவு நேரம் செலவிடுகிறோம் என சிந்திப்போம். ஆண்டவரோடு நாம் நமது நிலையை உணர்ந்தவர்களாக நம்மை நாம் மாற்றிக் கொண்டு அவரோடு நாம் இணையும் பொழுது, கனி தரும் மரங்களாக மாறுகின்றோம்.
நம்மிடமிருந்து பலவிதமான பயன்களை மற்றவர்கள் பெற்றுக் கொள்ள துவங்குகிறார்கள். நாமாக எதையும் செய்யாவிட்டாலும் நம்மோடு இணைந்து இருக்கின்ற இறைவன் நம்மை பலருக்கு பயன் தரும் மனிதர்களாக மாற்றுகின்றார். இந்த உண்மையை உணர்ந்து கொண்டவர்களாக இறைவன் இயேசு கிறிஸ்துவோடு இணைந்து திராட்சை கொடியின் கிளைகளாக நாம் இருப்பதற்கு இந்த நாளில் இறைவன் நமக்கு அழைப்பு தருகின்றார்.
பவுல் ஆண்டவர் இயேசுவை அறியாத மனிதராக இருந்தார். அறிந்த போது கடவுள் அவரை தன்னோடு இணைத்துக் கொண்டார். அவரை வைத்தே பலரும் பயன்பெறக்கூடிய வகையில் பலரும், இயேசுவை அறிந்து கொள்ளக்கூடிய வகையில், இயேசு காட்டிய அன்பு நெறியில் பயணம் செய்யக்கூடிய மனிதர்களை உருவாக்க திருவுளம் கொண்டார். பவுலின் வாழ்வு இத்தகைய வாழ்வாக அமைய ஒரே காரணம் அவர் கடவுளோடு இணைந்திருந்தார் என்பது மட்டுமே.
இறைவனோடு இணைந்திருப்பதே இந்த அகிலத்தில் பல விதமான நன்மைகளை உருவாக்குவதற்கான வழி. இறைவனோடு இணைய வேண்டுமாயின் நாம் எப்படிப்பட்ட மனிதர்களாக இருக்க வேண்டுமென விவாதிக்க தேவையில்லை.
இன்றைய முதல் வாசகத்தில் கூட, இயேசுவை ஏற்றுக்கொண்டவர்கள், விருத்தசேதனம் செய்ய வேண்டும்- செய்யாவிட்டாலும் பரவாயில்லை, என்ற கருத்து மோதல் எழுந்தது. இந்த பிரச்சினைக்கான தீர்வாக, திருத்தூதர்கள் கூறியது, விருத்தசேதனம் செய்தாலும் செய்யாவிட்டாலும், நாம் கொள்ளுகின்ற நம்பிக்கையே நாம் இறைவனோடு இணைந்து இருப்பதற்கான அடையாளம் என்பதை வெளிப்படுத்தினார்கள். நாம் இறைவனோடு இணைந்து இருப்பதற்கு நாம் எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பது அவசியம் அல்ல. நாம் இறைவனோடு இணைந்திருப்பது மட்டுமே அவசியமான ஒன்று. இறைவனோடு இணைந்து இருக்க முயலுவோம். அவரோடு உரையாடுவோம். அவர் காட்டும் வழியில் நமது வாழ்வை அமைத்துக் கொள்வோம்.
நாம் விரும்பாவிட்டாலும் நாம் இணைந்து இருக்கின்ற இறைவன், நம்மோடு இணைந்து இருக்கின்ற இறைவன், நம்மை, நம் மூலமாக இந்த சமூகத்தில் பலர் பயன் பெறக் கூடிய வகையில், பயன் தரும் மரங்களாக, நம்மை பயன்படுத்துவார் என்ற நம்பிக்கையோடு நாம் நமது வாழ்வை நகர்த்திட, நாம் நம்மை இறைவனோடு இணைக்கும் முயற்சியில் ஈடுபட இறையருள் வேண்டி இந்த திருப்பலியில் இணைந்து செபிப்போம்.
Nice fr...
பதிலளிநீக்கு