விண்ணகத்தை உரிமையாக்கிக் கொள்வோம்...
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
இன்று தாய்த் திருஅவையாக இணைந்து நாம் அனைவரும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் விண்ணேற்புப் பெருவிழாவை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இந்த நல்ல நாளில் உங்கள் அனைவருக்கும் விண்ணேற்பு பெருவிழா வாழ்த்துக்களை உரித்தாக்கி மகிழ்கின்றேன்.
கணவர் வடக்கு வடக்கு என்றால் மனைவி தெற்கு தெற்கு என்பார்! காலச் சக்கரம் சுழன்றது! இருவருக்கும் வயதாகி விட்டது! கணவருக்கு 90 வயதும், மனைவிக்கு 85 வயதும் இருக்கும். ஆனால் சண்டை ஓயவில்லை !
ஒரு நாள் இரவு வீடு முழுவதும் வெளிச்சம். வானதூதர் ஒருவர் அந்த தாத்தா, பாட்டியின் முன்னால் நின்றார்.
அவர் அந்தத் தம்பதியரைப் பார்த்து, உங்களில் யாராவது ஒருவரை விண்ணகத்திற்கு அழைத்துப் போக வந்திருக்கின்றேன். உங்கள் இருவரில் யாருக்கு என்னோடு வர ஆசை? என்றார்.
உடனே தாத்தா, இவளை அழைத்துச் செல்லுங்கள் என்றார். பாட்டியோ. இல்லை, இல்லை இவரை அழைத்துச் செல்லுங்கள் என்றார்.
வானதூதருக்கு ஆச்சரியம்! அவர்களைப் பார்த்து, இப்படி அன்பு செய்யும் கணவன், மனைவியை இதுவரை நான் பார்த்ததே இல்லை ! என்றார்.
அதற்கு தாத்தா என்ன சொன்னார் தெரியுமா? அப்படியெல்லாம் ஒன்றுமில்லை! இவள் இல்லாத இடமே எனக்கு மோட்சம் என்றார்.
பாட்டியும், இந்தக் கிழவன் இல்லாத இடமே எனக்கு மோட்சம் என்றார்.
கும்பகோணம் மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி அவர்கள் கூறிய இந்தக்கதை ஒரு வேடிக்கையான ஒரு விளையாட்டான கதையாக இருக்கலாம்! ஆனால் மோட்சம் என்பது, விண்ணகம் என்பது துன்ப துயரங்கள், சோதனைகள், வேதனைகள் இல்லாத இடம், நிலை என்பது நமக்குப் புரிகின்றது.
ஆண்டவர் இயேசு கிறிஸ்து மனிதனாக இம்மண்ணில் பிறந்தார். ஒரு மனிதன் எப்படி வாழவேண்டும் என்பதை தன் வாழ்வால் நமக்கு வாழ்ந்து காட்டினார். பலரின் சூழ்ச்சியால் அவர் மரணத்தை சந்தித்தார். மரணத்திற்குப் பிறகாக முதன் முதலில் இறப்பிலிருந்து உயிர்த்தெழுந்தவரும் இவரே. இந்த இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த பின் உடனடியாக விண்ணகம் செல்லவில்லை.
40 நாட்களாக சீடர்களோடு இருந்து, அவர்களை ஆற்றல்படுத்தி, அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்தக் கூடிய நபராக இருந்தார். பல நேரங்களில் சீடர்கள், இயேசு உயிர்த்தாரா? இல்லையா? என்ற கேள்வி அவர்களுக்குள் எழுந்த போதெல்லாம், அவர்கள் முன்னிலையில் தோன்றி, அவர்களோடு உடன் நடந்து, இறைவார்த்தையை விளக்கிக் கூறி, அவர்களோடு அமர்ந்து உணவு உண்டு, தான் மெய்யாக உயிர்த்தார் என்பதை வெளிக்காட்டக் கூடியவராக இயேசு இருந்தார் என்பதை நாம் அறிவோம். இந்த இயேசு கிறிஸ்து நம்மை விட்டு பிரிந்து செல்வதற்கு முன்பாக, "உங்களோடு எப்போதும் இருப்பதற்கு ஒரு துணையாளரைத் தருவேன். அவரை கொண்டு நீங்கள் என் வார்த்தைகளின்படி உங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ளுங்கள்" என்று கூறியவராய், துணையாளராம் தூய ஆவியாரை நமக்காக பொழிந்தருளி அவர் விண்ணேற்றம் அடைந்தார்.
ஆண்டவர் இயேசுவின் விண்ணேற்பைக் கொண்டாடுகிற நாம், இந்த விண்ணேற்றம் அடைந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து, விண்ணில் என்ன செய்கின்றார்? என்ற கேள்வி நமது உள்ளத்தில் எழலாம்.
இன்றைய இரண்டாம் வாசகம் கூறுகிறது: கிறிஸ்து விண்ணகம் நுழைந்து நம் கடவுளின் முன் நிற்கிறார். எனவே உறுதியான நம்பிக்கையுடன் அவரை அணுகிச் செல்லவேண்டும். ஏனெனில் அவர் நம்பிக்கைக்கு உரியவர் (எபி 10:22-23).
விண்ணகம் சென்ற அவர் நமக்காக தொடர்ந்து இறைவனிடத்தில் பரிந்து பேசி கொண்டிருக்கிறார்.
நாம் பாவம் செய்தாலும் நமக்காகத் தந்தையிடம் கிறிஸ்து பரிந்து பேசுகிறார் (1 யோவா 2:1). கிறிஸ்து நமக்காகப் பரிந்து பேசுவதற்காகவே உயிர் வாழ்கிறார் என எபிரேயர் திருமுகம் கூறுகிறது (எபி 7:25)
விண்ணகத்திலிருந்து நமக்காக பரிந்து பேசுகின்ற இந்த இறைவனுடைய வார்த்தைகளை பின்பற்றும் மனிதர்களாக நாம் இந்த சமூகத்தில் வாழ அழைக்கப்படுகின்றோம்.
என்ன தான் இயேசு சீடர்களோடு இருந்து அவர்களை வலுப்படுத்தினாலும், திடப்படுத்தினாலும், அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை கற்பித்து இருந்தாலும், இயேசு விண்ணேற்றம் அடைந்த பிறகு, அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டு நிற்கக் கூடிய மனிதர்களாகத்தான் இருந்தார்களே ஒழிய, அவர்கள் செயலில் ஈடுபட தயங்கினார்கள்.
அப்போது தான் வானதூதர்கள் விண்ணிலிருந்து இறங்கி வந்து, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் நடந்ததைக் கண்டீர்கள் அல்லவா? நீங்களே அதற்கு சாட்சிகளாக மாறுங்கள் எனக் கூறி, இயேசுவின் சீடர்களை வலுப்படுத்துகிறார்கள், உறுதியூட்டுகிறார்கள்.
இயேசுவின் சீடர்களும் தமது வாழ்வை, தாங்கள் கண்ட அனைத்தையும் அடுத்தவரோடு பகிர்ந்து, இயேசுவின் பணியை செய்யும் சீடர்களாக , சாட்சிகளாக இந்த மண்ணில் மாறிப்போனார்கள். இந்த சாட்சிகளைப் பின்பற்றி வாழும் நாமும் இந்த இயேசுவுக்கு சாட்சிகளாக மாறிட இன்று அழைக்கப்படுகின்றோம்.
ஆலயத்திற்கு வந்து அவரது திருப்பலியில் இன்று கலந்து கொண்டோம். திருவிருந்தில் பங்கெடுத்தோம். திருவிருந்து மன்றாட்டு சொல்லப்பட்ட பிறகு, அனைத்தும் முடிவடைந்தது என்ற மனநிலையோடு நம்மில் பலர் பல நேரங்களில் கடந்து செல்லக்கூடியவர்களாக இருக்கிறோம். ஆனால் ஆண்டவர் இயேசு கிறிஸ்து, நம்மை அவரின் பிள்ளைகளாக மாற்றிட அழைப்பு தருகின்றார். ஆண்டவர் இயேசு கிறிஸ்து இந்த மண்ணில் வாழ்ந்த போது, நாம் எப்படி வாழவேண்டும் என கற்பித்தாரோ, அதன் அடிப்படையில் நமது வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பது தான் இந்த இறைவனின் விருப்பம்.
விண்ணகம் என்பது வெண்மையான தொங்கலாடை அணிந்தவர்கள் வாழும் இடம்! அவர்கள், ஆமென், புகழ்ச்சியும் பெருமையும் ஞானமும் நன்றியும் மாண்பும் வல்லமையும் வலிமையும் எங்கள் கடவுளுக்கே என்றென்றும் உரியன; ஆமென் (திவெ 7:12) என்று பாடிக்கொண்டிருப்பார்கள்!
அவர்கள் அனைவரும் தங்களின் தொங்கலாடைகளை ஆட்டுக்குட்டியின் இரத்தத்தில் துவைத்து வெண்மையாக்கிக்கொண்டவர்கள் (திவெ 7:14). வானுலகில் யாருக்கும் எந்தத் துன்பமும் இருக்காது (திவெ 7:16-17).
இந்த விண்ணகத்தை நாம் நமதாக்கிக்கொள்ள இறைவனின் திருவுளத்தை அறிந்தவர்களாய், ஆண்டவர் இயேசுவைப் போல வாழ முயல்வோம்.
ஆண்டவர் இயேசு கற்பித்த வாழ்வுக்கான நெறிகளை அடுத்தவரோடு பகிர்வோம். அப்படி பகிர்வதன் மூலமாக, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இறப்பிலும் உயிர்ப்பிலும் பங்குபெற்ற நாம், இயேசுவோடு இணைந்து, பரிந்து பேசக்கூடிய மனிதர்களாக மாறிட இறைவனிடத்தில் அருள் வேண்டி தொடர்ந்து இந்த திருப்பலி வழியாக பக்தியோடு செபிப்போம்.
🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇
பதிலளிநீக்கு