திங்கள், 23 மே, 2022

நன்றியின் மக்களாக....(24.5.2022)

நன்றியின் மக்களாக....

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
      இன்பமும் துன்பமும் கலந்த மனித வாழ்வில் எது எப்போது வரும் என அறியாத வண்ணம் இறைவன் இரண்டையும் நமது வாழ்வில் மாறி மாறி அனுமதிக்கிறார் என்பதை நாம் ஆழமாக உணர்ந்து இருக்கிறோம்.  இவ்வார்த்தைகளின் அடிப்படையிலேயே இன்றைய முதல் வாசகமும், நற்செய்தி வாசகமும் அமைந்திருப்பதை நாம் உணரமுடிகிறது.  ஆண்டவர் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவித்ததன் காரணமாக,  பவுலும் பர்னபாவும்
 பிரச்சனைகளை சந்திக்க நேரிடுவதையும்,  அதே சமயம் ஆண்டவர் இயேசுவின் நற்செய்தி அறிவிக்கின்ற காரணத்தினால் காவலர் ஒருவர் மனமாற்றம் அடைந்து ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை இதயத்தில் ஏற்றுக்கொள்வதை பற்றியும், இன்றைய முதல் வாசகம் நமக்கு விளக்குகிறது.

      அது போல  நம்மோடு எப்போதும் இருக்கின்ற இறைவன் இயேசு கிறிஸ்து இறந்து உயிர்ப்புக்குப் பிறகாக விண்ணகம் செல்லுகின்ற நிகழ்வு, சீடர்களுக்கு துன்பத்தை வருவிப்பதாக இருந்தாலும்,  அவர்களின் துன்பத்தை போக்கும் வகையில் உங்களோடு எப்போதும் இருக்கும் வண்ணம் நான் ஒரு துணையாளரை உங்களுக்குத் தருவேன் என இயேசு கூறக்கூடிய வார்த்தைகள், மகிழ்வினை தரக்கூடியதாகவும் அமைகிறது.

 இவ்வாசகங்களின் பின்னணியில் நமது வாழ்வை இணைத்து பார்க்கிற போது, இன்பம் துன்பம் இரண்டும் இருக்கின்ற நமது வாழ்வில்,  துன்ப நேரங்களில் துவண்டு போகின்ற நாம், இன்ப நேரங்களில் இறைவனைத் தேட மறுக்கின்றோம்.  இன்பம் துன்பம் என்ற இரண்டு நிலையிலும் நாம், ஒரே மனநிலை கொண்டவர்களாய், இறைவனின் பெயரால் அனைத்தையும் ஏற்கத் துணிந்தவர்களாய் இருக்க , இன்றைய நாள் வாசகங்கள் நமக்கு அழைப்பு தருகின்றன.

எப்பொழுதும், மகிழ்ச்சியாக இருங்கள். இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள்.
எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள். உங்களுக்காகக் கிறிஸ்து இயேசு வழியாய்க் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் இதுவே.
1 தெசலோனிக்கர் 5: 16-18

                          என்ற இறைவார்த்தைக்கேற்ப அழைக்கும் இறைவனின் குரலுக்கு செவி கொடுத்தவர்களாய்,  இன்பம் துன்பம் இரண்டையும் அனுமதிக்கும் இறைவன், எல்லா நேரத்திலும் நம்மை உடனிருந்து காத்து வழிநடத்துவார்.  துன்ப நேரத்தில் துன்பத்தைக் கடந்து செல்வதற்கான ஆற்றலையும் வழிகளையும் கற்பிப்பார் என்ற மனநிலையோடு, எல்லாச் சூழ்நிலையிலும் இறைவனுக்கு நன்றி கூறக் கூடிய மக்களாக நாம் இருக்க இறையருள் வேண்டி இணைந்து தொடர்ந்து இந்த திருப்பலி வழியாக செபிப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...