நம்பிக்கைக்குரிய நண்பர்களாக...
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
ஊரும் சதமல்ல!
உற்றுப் பெற்ற பேரும் சதமல்ல!
பெண்டீர் சதமல்ல!
பிள்ளை சதமல்ல!
சீரும் சதமல்ல!
செல்வமும் சதமல்ல! -நின் தேசத்திலே யாதும் சதமல்ல! ஒன்றை சதம் - அது கச்சியேகம்பனே!
பட்டினத்தாரின் இப்பாடலுக்கான விளக்கம்: ஊரும் நிரந்தரமல்ல. உற்றாரும் நிரந்தரமல்ல. உற்றுப் பெற்ற பேரும் நிரந்தரமல்ல. கட்டிய மனைவி, கொண்டு வந்த சீர், பெற்ற பிள்ளை என எதுவும் இந்த உலகத்தில் நிரந்தரம் அல்ல. ஆனால் ஒன்றே ஒன்று நிரந்தரம், அது இந்த இறைவன் ஒருவன் மட்டுமே. இந்த இறைவன் நம்மை பணியாளர்கள் என அழைக்க மாட்டேன், உங்களை நான் நண்பர்கள் என அழைப்பேன் என்று கூறினார். ஏன் இவர் நம்மை பணியாளர் என அழைக்கவில்லை? என்ற கேள்வி உள்ளத்தில் எழுகின்ற போது, தொடக்க காலத்தில் இறைவாக்கினர்கள் அனைவரும் தங்களை கடவுளின் ஊழியர்களாக கருதினர்.
ஊழியர் என்றால் பணியாளர் என்ற அர்த்தம். பணியாளர் என்ற வார்த்தைக்கு அடிமைகள் எனவும் அர்த்தம் கொடுக்கப்படுகிறது. உதாரணத்திற்கு இணைச்சட்ட நூல் 34வது அதிகாரத்தில் நாம் வாசிப்போமாயின், மோசே தன்னை கடவுளின் ஊழியர் எனப் பதிவு செய்துள்ளார். யோசுவா புத்தகம் 24ஆம் அதிகாரத்தில் நூனின் மகனாகிய ஆண்டவரின் ஊழியனாகிய யோசுவா என, யோசுவா தன்னை அடையாளப்படுத்துகிறார். திருப்பாடல் 89ல் கூட, தன்னுடைய ஊழியன் தாவீதை நான் கண்டு கொண்டேன் என தாவீதும் கடவுளின் ஊழியன் என்பது வெளிப்படுத்தப்படுகிறது.
ஏன், புதிய ஏற்பாட்டு லூக்கா நற்செய்தி 1ம் அதிகாரம் 38ம் வசனத்தில் அன்னைமரியா ஆண்டவரின் கட்டளைக்கு இணங்கியவராய், தன்னை முழுவதும் கையளித்து, நான் ஆண்டவரின் அடிமை எனக் கூறி தன்னை முழுவதுமாக இறைவனின் விருப்பத்திற்கு கையளிக்கிறார். இவ்வாறு தொடக்க காலத்தில் இருந்த கடவுளின் பணியாளர்கள் என்ற மனநிலையை மாற்றும் வகையில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து இனி உங்களை நான் பணியாளன் என அழைக்க மாட்டேன். உங்களை நான் நண்பர்கள் என அழைப்பேன். நண்பர்கள் என்கிற போது நான் செய்கின்ற அனைத்தையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். என்னோடு சம உரிமை உங்களுக்கு உண்டு. எதையெல்லாம் நான் செய்கிறேனோ அதையெல்லாம் நீங்களும் செய்யமுடியும் என அவர்களுக்கு பாடம் கற்பித்து, நட்பிற்கு நல்லதொரு உதாரணமாக, நட்பு, உயிரையும் கொடுக்கத் துணியும் என்பதை தனது வாழ்வால் நமக்கு வெளிக்காட்டிச் சென்றிருக்கிறார்.
இந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளின் அடிப்படையில் சிந்திக்கிற போது, இன்றைய நாள் இறைவார்த்தை நமக்குத் தருகின்ற வாழ்வுக்கான பாடம் என்ன என்ற கேள்வியை எழுப்புகிற போது, விபரம் தெரிந்த நாளிலிருந்து இந்நாள் வரை ஒவ்வொருவருமே பலவிதமான நட்பு வட்டாரங்களை நமக்கென கொண்டிருப்போம். குழந்தையாக இருந்த போது, இளைஞனாக மாறிய போது, திருமணம் முடித்த போது, முதுமை அடைந்த போது என ஒவ்வொரு நிலையிலும் பல வகையான நண்பர்களை நமது வாழ்வில் சந்தித்திருப்போம். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பல உறவுகள் நம்மோடு வந்து பழகி, நமது இன்ப துன்பங்களில் பங்கெடுத்து நம்மை கடந்து சென்றிருப்பார்கள். அவர்களை எல்லாம் நன்றியோடு நினைவு கூரவும், அவர்களுக்காக செபிக்கவும், மண்ணில் வாழுகிற ஒவ்வொரு நாட்களும் இந்த நட்பு உறவுகளோடு இணைந்து இருக்கவும், போட்டி, பொறாமை, சண்டை, சச்சரவு என அனைத்தையும் கடந்தவர்களாய், நட்பால் அனைவரோடும் இணைந்திருக்க இன்றைய நாளில் இறைவன் அழைப்பு தருகிறார்.
இறைவன் தருகின்ற இந்த அழைப்பை உணர்ந்து கொண்டவர்களாக, நம்மை நண்பர் என அழைத்த இந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்கு நம்பிக்கைக்குரிய நண்பர்களாக, உயிரை கொடுக்கக் கூடிய நண்பர்களாக மாறிட இறையருள் வேண்டி தொடர்ந்து இந்த திருப்பலி வழியாக செபிப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக