தேடிச் செல்லவும்...
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
மரியாவை சந்திக்கிற போது சங்கடங்கள் மறையும் என்பார்கள்.
மரியா எலிசபெத்தம்மாளை சந்தித்தல் நிகழ்வை
இன்று விழாவாக கொண்டாடிக் கொண்டிருக்கக்கூடிய நாம், மரியாவின் சந்திப்பு நமக்கு தரும் வாழ்வுக்கான பாடம் என்ன என்பதை உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகின்றோம்.
மரியா முதிர்ந்த வயதில் எலிசபெத்து கருவுற்றிருக்கிறார் என்ற செய்தியை கேட்ட மாத்திரமே, பல மைல் தூரம் பயணம் செய்து எலிசபெத்தம்மாளின் துயரத்தில் உடன் இருப்பதற்காக தன் பயணத்தை மேற்கொண்டார்.
நமது வாழ்வில் பல நேரங்களில் நாமும் பல மனிதர்களை தேடுகிறோம். நாம் தேடுகிற மனிதர்களை எதன் அடிப்படையில் நாம் தேடிக் கொண்டிருக்கிறோம்? நாம் நலன்களைப் பெற வேண்டும், உதவிகளைப் பெற வேண்டும் என்ற எண்ணத்திலா? அல்லது நாம் அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்திலா?
எந்த அடிப்படையில் நாம் அனுதினமும் மனிதர்களைத் தேடிக் கொண்டிருக்கிறோம்? என்பதை சிந்திக்க இந்த நாள் நமக்கு அழைப்பு தருகிறது. மரியா எலிசபெத்தம்மாளை சந்தித்தபோது வாழ்த்தினார். அவரின் வாழ்த்துச் செய்தி எலிசபெத்தம்மாளின் வயிற்றிலிருந்த குழந்தையை மகிழ்ச்சியால் துள்ளச் செய்தது. நாமும் அனுதினமும் பல மனிதர்களை சந்திக்கிறோம். நமது வார்த்தைகளால் எத்தனை மனிதர்களை ஊக்கமூட்டுகிறோம்? மகிழ்ச்சிப்படுத்துகிறோம்? என்ற கேள்வியை இன்று நமக்குள்ள எழுப்பிப் பார்ப்போம்.
அடுத்தவரின் துயரத்தை துடைப்பதற்காகவும்,
அவர்கள் நலனுக்காக அடுத்தவரை நாம் தேடிச் செல்லவும், நமது வார்த்தைகள் மூலமாக அவர்களை மகிழ்ச்சிப்படுத்தவும், ஊக்கமூட்டவும், இறைவனிடத்தில் அருள்வேண்டி இத்திருப்பலியில் தொடர்ந்து செபிப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக