தந்தையின் அரவணைப்பில்.....
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
பவுல் மற்றும் பர்னபா இவர்களின் நற்செய்தியை கேட்ட மக்கள் ஆண்டவரை ருசித்து பார்க்க ஆவல் கொண்டவர்களாய், மகிழ்ச்சியோடு அவர்களின் போதனைகளுக்கு செவிசாய்த்தார்கள். ஆனால் அங்கிருந்த யூதர்கள் அவர்களது போதனைகளை முன்னிட்டு பொறாமை அடைந்தவர்களாய் சில வசதி படைத்த, பணம் படைத்த நபர்களை தூண்டிவிடடு பவுல் பர்னபாவிற்கு எதிராக பேசச் செய்தனர். பொறாமையின் அலைகள் வீசினாலும், ஆண்டவரின் பணிகள் தொய்வு இல்லாமல் நடைபெற்றதை, ஆண்டவரின் நற்செய்தி எங்கும் பரவியதை இன்றைய முதல் வாசகத்தில் வாசிக்க கேட்டோம்.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் எல்லா நாட்டையும் குலத்தையும் இனத்தையும் மொழியையும் சார்ந்த மக்கள் ஆண்டவர் திருமுன் நிற்கின்றனர். இவர்கள் அனைவரும் அறிவிக்கப்பட்ட ஆண்டவரின் நற்செய்தியை கேட்டு அவரை ஆர்வத்தோடு பின்பற்றியவர்கள். ஆண்டவருக்கு எதிராக செயல்படுகின்ற நபர்களால் பெரும் இன்னல்களுக்கும் வேதனைகளுக்கும் உள்ளானவர்கள்.
ஆனால் அவர்கள் இறுதிவரை மன உறுதியோடு அவர்களது நம்பிக்கையில் நிலைத்திருந்ததால், இன்று ஆண்டவரின் திருமுன் நிற்கும் பேறு பெற்றார்கள்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து, எனது ஆடுகள் எனது குரலுக்குச் செவி கொடுக்கின்றன என்கிறார். நானும் தந்தையும் ஒன்றாக இருக்கிறோம். அதுபோலவே எனது ஆடுகளும் எனது குரலுக்கு செவிசாய்த்து அனைவரும் ஒன்றாக இருப்பர். அவர்களிடையே உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்றோ, ஏழை பணக்காரன் என்றோ, வேறுபாடுகள் இருக்காது. தந்தையும் நானும் ஒன்றாய் இணைந்து இருப்பது போல, எனது ஆடுகளாகிய மக்களும், அனைவரும் கடவுளின் பிள்ளைகள் என்ற உண்மையை உணர்ந்தவர்களாய் , தங்களிடையே இருக்கும் வேறுபாடுகளை களைந்து , உண்மையான அன்புடன் அனைவரையும் மதித்து ஏற்று வாழ்வர். இவர்களே மாட்சிமிகு ஆண்டவர் திருமுன் நிற்க தகுதி பெற்றவர்கள்.
எனவே இன்றைய நாளில் நாம் அனைவரும் இந்த உலகத்தில் இறைவனால் படைக்கப்பட்டு இருக்கிறோம். நாம் வாழும் காலம் நிறைவு பெறும் பொழுது மீண்டும் அந்த இறைவனின் இடத்திற்கே செல்லவிருக்கிறோம். எனவே நாம் இந்த பூமியில் வாழ்கின்ற காலங்களில் ஆண்டவர் இயேசுவையும் , நம்மை சுற்றி வாழ்கின்ற அவரது மக்களையும் நிறை குறைகளோடு ஏற்று, மதித்து, ஆண்டவரின் இறைச்சாயலை அனைத்து மாந்தரிலும் கண்டு, அன்போடு இணைந்து செயல்பட இறையருள் வேண்டி இந்த திருப்பலியில் இணைந்து செபிப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக