செவ்வாய், 3 மே, 2022

தணியாத தாகம் .(4.5.2022)

தணியாத தாகம் .

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
இன்றைய நாள் இறைவார்த்தையில் ஆண்டவர் இயேசுவிடம் வருபவருக்கு பசியே இராது, என்றுமே தாகம் இராது என்று கூறுகிறார். தன்னையே உணவாக தந்த ஆண்டவர், இன்று நாம் அவரிடம் நம்பிக்கை கொள்ளவும் அவரை நாடி வரவும் சிறப்பான அழைப்பினை தருகின்றார்.

இன்றைய முதல் வாசகத்தில் பிலிப்பு சமாரியப் பகுதியில் நற்செய்தி அறிவித்ததை கேட்டு மக்கள் செவிசய்த்து ஆண்டவரை தமது உள்ளத்தில் ஏற்றுக் கொண்டபோது அவர்களை பிடித்திருந்த தீய ஆவியிடமிருந்து அன்று விடுதலை பெற்றனர். உடல் ஊனத்தாலும் முடக்குவாதத்தாலும் தம்மையே முடக்கிக் கொண்டிருந்த மக்கள், நான் என்றாவது ஒருநாள் இந்த துன்பங்களிலிருந்து விடுதலை பெற மாட்டேனா? 

எனக்கும் மற்றவருக்கும் ஆன காரியங்களை என்னால் செய்ய இயலாதா? 

இறைவன் என்னை இந்த உலகில் படைத்ததன் நோக்கத்தை நிறைவேற்ற நான் எழுந்து நடக்க மாட்டேனா?  
என்று வாழ்வுக்கான ஏக்கமும் தாகமும் கொண்டிருந்த மக்களுக்கு அன்று பிலிப்பு அறிவித்த ஆண்டவரைப் பற்றிய நற்செய்தி அவர்களுக்கு விடுதலை அளித்தது. அவர்களுக்கு வாழ்வை வழங்கியது. அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஆண்டவர் இயேசுவின் சீடர்களாக மாறினர். 

எனவேதான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் கூறுகிறார், வழியும் உண்மையும் வாழ்வும் நானே என்று. ஆண்டவர் இயேசுவின் பெயரும் அவருடைய வார்த்தையும் எப்பொழுதும் விடுதலையை வழங்கும் என்பதை உணர்ந்து கொண்டவர்களாய், உண்மையான வாழ்வாகிய ஆண்டவர் இயேசுவை நமது வாழ்வின் மையமாக்கிட அவரது வார்த்தையால் வாழ்வு பெற, நாம் அவருக்கு செவிசாய்க்கக் கூடியவர்களாய், நமது இதயத்தின் செவிகளை ஆண்டவர் பால் திருப்பவும், அவருக்கு செவிகொடுத்து அவர் காட்டும் பாதையில் வழிநடக்கவும் இறையருள் வேண்டி இந்த திருப்பலியில் இணைந்து செபிப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...