திங்கள், 16 மே, 2022

"உங்களுக்கு அமைதி உரித்தாகுக!"(17.5.2022)

"உங்களுக்கு அமைதி உரித்தாகுக!"


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
உயிர்த்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன் சீடர்களுக்கு தந்த முதல் வார்த்தை, "உங்களுக்கு அமைதி உரித்தாகுக!" என்பதாகும். அகிலத்தில் வாழும் அனைவருக்கும் இன்று தேவையான ஒன்று, அமைதி. பரபரப்பான இந்த உலகத்தில், பல பணிகளுக்கு மத்தியில் அனுதினமும் ஓடிக் கொண்டிருக்கின்ற அனைத்து உள்ளங்களும் விரும்புவது இந்த அமைதி.  அனைத்தும் இருந்தும் அமைதி இல்லை என்றால் அங்கு நிம்மதி பிறக்காது. 

     அமைதிக்காகத் தான் அனைவருமே அனுதினமும் பல இடங்களுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். அமைதியைத் தேடி பல மலைகளுக்கு பயணம் செய்வோர் ஒருபுறமிருக்க, அடுத்தவருக்கு உதவுவதன் வழியாக அமைதியைப் பெற முடியும் என எண்ணுபவர்கள் பலர் இருக்க,  அன்றாட கடமைகளை சரிவர செய்வதால் அமைதியை கண்டுகொள்ள முடியும் என்ற எண்ணத்தோடு பலர் இருக்க, உலகத்தில் உள்ள ஒவ்வொருவருமே,  அமைதியை எப்படிப் பெறுவது என அமைதிக்காக ஏங்கிக் கொண்டிருக்கின்றார்கள். 

இந்த அமைதியைத் தர  வல்லவராக,  ஆண்டவர் இயேசு கிறிஸ்து இருக்கின்றார். "நான் உங்களுக்கு அமைதியை தருவேன்!" என்ற ஆண்டவர் இயேசுவின் வார்த்தை,  அவர் மீது ஆழமான நம்பிக்கை கொண்டு, அவர் இந்த மண்ணில் வாழ்ந்த போது நமக்கு வாழ்ந்து காண்பித்த
அவரது வார்த்தைகளுக்கு ஏற்ப,  நமது வாழ்வை அமைத்துக் கொள்வதன் வாயிலாக நாம் அமைதியைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதை இயேசு இன்றைய நாள் வாசகத்தின் வழியாக நமக்கு வலியுறுத்துகிறார். 

 ஆண்டவர் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அகிலத்திற்கு அறிவிக்கச் சென்ற பவுலும்  அவருடன் இருந்த உடன் உழைப்பாளர்களும் பலவிதமான இன்னல்களையும் எதிர்ப்புகளையும் சந்தித்தார்கள்.  சந்தித்த போது அவர்கள் அமைதியை இழந்து விடவில்லை. அவர்கள் அமைதியை ஆண்டவரிடத்தில் தேடினார்கள். ஆண்டவரின் வார்த்தைகளை அறிவிப்பதில் தான் அமைதி இருக்கிறது என்பதை முழுமையாக நம்பினார்கள். எனவே அவர்கள் அமைதியைக் கண்டு கொண்டார்கள்.  நாமும் நமது வாழ்வில் அமைதியை நம்முடையதாக மாற்றிக் கொள்ள வேண்டுமாயின் ஆண்டவருடைய வார்த்தைகளின் மீது அதீத நம்பிக்கை கொண்டவர்களாய்,  அவர் இந்த மண்ணில் வாழ்ந்த போது எப்படி வாழ்ந்தாரோ,  அவரைப்போல நாமும் வாழ முற்படுவோம்.  அவர் காட்டிய வழியில் பயணம் செய்வோம். அமைதியை  நம்முடையதாக மாற்றிக்கொள்ள நம்மை இறைவனிடத்தில் முழுமையாக அர்ப்பணிக்க இறையருள் வேண்டி தொடர்ந்து செபிப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...