மகிழ்ச்சியின் தூதுவர்களாக மாறுவோம்
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
அழுகையோடு அகிலத்தை எட்டிப் பார்க்கும் நமக்கு, மகிழ்ச்சியைத் தருவதற்கு பலர் பலவிதமான முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். மகிழ்ச்சி என்பது மனித மனங்கள் விரும்பக்கூடிய ஒன்று. இந்த மகிழ்ச்சியையே இறைவன் தருகிறார். நாம் மகிழ்வோடு வாழ வேண்டும் என்பது தான் இறைவனின் விருப்பமாக உள்ளது. இந்த மகிழ்ச்சி அகிலத்தில் உள்ள அனைவரையும் அன்பு செய்வதன் வழியாக உதயமாகிறது என்பதை இயேசுவின் வாழ்வு நமக்கு வெளிக்காட்டுகிறது.
மகிழ்வோடு இந்த சமூகத்தில் நாம் வாழ வேண்டுமாயின், நாம் ஒருவர் மற்றவரை அன்பு செய்ய வேண்டும்; அனைவரையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்; இறைவன் தருகின்ற மகிழ்ச்சியை அப்போது நாம் உணர்ந்துகொள்ள முடியும்.
தொடக்க காலத்தில் இயேசுவை ஏற்றுக் கொண்ட பிற இனத்தார்கள், எப்படி எல்லாம் வாழ வேண்டும் என யூதர்கள் தாங்கள் பின்பற்றி வந்த சட்டத் திட்டங்களை அவர்கள் வாழ்வில் நுழைக்க முயன்ற போது, இறைவன் விரும்புவது, வெளிப்புற அடையாளத்தை அல்ல, உள்ளார்ந்த விசுவாசத்தையே என்பதை எடுத்துரைத்து, இறைவனை ஏற்பதற்கும், இறைவன் இயேசுவின் வழியில் நடப்பதற்கும், சட்டதிட்டங்கள் அவசியமல்ல; உண்மையான, உள்ளார்ந்த அன்பும், மகிழ்ச்சியுமே அவசியமானது என்பதை எடுத்துரைக்கும் வகையில், தொடக்க காலத்தில் அவ்வப்போது எழுந்த சிக்கல்களை எல்லாம் சீடர்கள் சரிசெய்து, மகிழ்வோடு ஒருவர் மற்றவரை அன்புசெய்து வாழ வழிவகை செய்து கொடுத்தார்கள். இதையே இன்றைய வாசகங்கள் வலியுறுத்துகின்றன.
நாம் மகிழ்வோடு இருக்க வேண்டும் என்பதற்காகவே, இறைவன் இந்த உலகத்தை படைத்திருக்கிறார். கடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும் உற்று நோக்கினார்; அவை மிகவும் அழகாக இருந்தன, என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப, அழகாக படைக்கப்பட்ட
இந்த உலகத்தில், நாம் அடுத்தவர் மகிழ்வில் இந்த உலகை இன்னும் அழகாக்கக் கூடிய மனிதர்களாக மாற இறைவன் இன்றைய நாளில் அழைப்பு தருகிறார்.
மகிழ்ச்சியின் தூதுவர்களாக மாறுவோம்; பிறரை மகிழ்விப்போம்; நாமும் மகிழ்வோம். பிறரின் மகிழ்வில் இறைவனைக் கண்டு கொள்ள இறையருள் வேண்டி இணைந்து தொடர்ந்து செபிப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக