இறைவன் விரும்புகிற வகையில் வாழ்வோம் ...
அன்பார்ந்த சகோதர சகோதரிகளே,
இன்றைய இறை வார்த்தையின் அடிப்படையில் உங்கள் இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்
“உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்ச வேண்டாம்; ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள்.”
கடவுள் மீது மட்டும் அச்சம் கொண்டவர்களாக கடவுள் விரும்புகிற செயல்களை மட்டும் முன்னெடுத்துச் செல்பவர்களாக நாம் நமது வாழ்வை அமைத்துக் கொள்ள இந்த இறை வார்த்தை வழியாக இன்று நாம் அழைக்கப்படுகிறோம்.
1. மாணவர்கள் தங்கள் குருவைப் ( இயேசுவைப்) போல ஆக வேண்டும்
"சீடர் தம் குருவைப் போல் ஆகட்டும்.”
இது ஒரு அழைப்பு — நாமும் இயேசுவைப் போலவே வாழ வேண்டும் என்பதை நமக்கு வலியுறுத்துகிறது. எதிர்ப்புகள் வந்தாலும் நிராகரிப்புகள் வந்தாலும் எல்லா சூழலுக்கு மத்தியிலும் கடவுள் விரும்புகிற காரியங்களை மட்டும் முன்னெடுத்துச் செல்லக்கூடியவர்களாக நாம் நமது வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும். அருகில் இருப்பவர்களுக்கு அஞ்சுபவர்களாக இருக்காமல் ஆண்டவர் ஒருவருக்கு அஞ்சக்கூடிய மனநிலையோடு ஆண்டவர் நம் செயல்களை உற்று நோக்குகிறார் என்பதை உணர்ந்தவர்களாக நாம் சொல்லாலும் செயலாலும் நாம் இயேசுவை பின்பற்றுகின்ற நபர்களாக அவரது உண்மை சீடர்களாக (மாணவர்களாக) நமது வாழ்வை நாம் அமைத்துக் கொள்ள வேண்டும்.
2. இறைவனின் பார்வையில் எதுவும் மறைக்கப்படாது ...
“மூடப்பட்டிருப்பது ஒன்றும் வெளிப்படாமல் இருக்காது.”
இவ்வார்த்தைகள் ஆண்டவரின் பார்வையில் எதுவும் மறைக்கப்படவில்லை என்பதை நமக்கு சுட்டிக்காட்டுகிறது எவருக்கும் தெரியாது என எண்ணி நாம் செய்கிற சின்னஞ்சிறிய காரியங்களை கூட இன்று நிறுத்திக் கொள்வதற்கான ஒரு அழைப்பாக இதை நாம் எடுத்துக் கொண்டு பயணிக்கலாம் ... ஆண்டவர் அனைத்தையும் உற்று நோக்குகிறவர் அவருக்கு உகந்தவர்களாக எல்லா சூழலிலும் நாம் செயல்படுவதற்கான ஆற்றலை இன்றைய நாளில் இறைவேண்டலாக பெற்றுக் கொள்ள நாம் அழைக்கப்படுகிறோம்.
3. நம்மை பாதுகாப்பது இறைவன்
இன்றைய நற்செய்தி வாசகத்தில் சிட்டுக் குருவிகளை எடுத்துக்காட்டுகிறார்:
ஒரு சிறிய பறவைக்கும் இறைவன் கவனம் கொடுக்கின்றார், நாம் அவருடைய பிள்ளைகளாக இருக்கும்போது அவர் நமக்கு எவ்வளவு அதிக முக்கியத்துவம் கொடுப்பார். இதை உணர்த்தும் வண்ணமாகத்தான் "நம் தலைமுடி கூட எண்ணப்பட்டிருக்கின்றது என்கிறார், அவர் நம்மை முழுமையாகவே தெரிந்தவர் என்பதையும், நமக்காக அக்கறை கொண்டவரெனும் உண்மையையும் உணர்ந்தவர்களாய் ஆழமான நம்பிக்கையோடு அவர் காட்டுகிற பாதையில் அவர் விரும்புகிற மக்களாக நாம் பயணிக்க வேண்டும்.
4. ஏற்றுக் கொண்டால் ஏற்றுக் கொள்ளப்படுவோம் ...
இயேசு மிகவும் நேரடியாகச் சொல்லுகிறார்:
"மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக்கொள்பவரை... நானும் ஏற்றுக்கொள்வேன்."
இது ஆண்டவரின் பணியை செய்து வாழுகிற நம் மத்தியில் இருக்கின்ற நபர்களை நாம் மனதார முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும் அப்போது கடவுளால் நாமும் ஏற்றுக் கொள்ளப்படுவோம் என்ற உயரிய சிந்தனையை நமக்கு என்று வழங்குகிறது.
எனவே இன்றைய நாளில் இறைவனின் மக்களாக நாம் அனைவரும் இறைவனின் பாதுகாப்பை ஒவ்வொரு நாளும் உணர்ந்தவர்களாய் ...இறைவனின் பார்வையிலிருந்து எதுவும் மறைக்கப்படாது என்பதை புரிந்து கொண்டவர்களாய் நாம் சொல்லையும் செயலையும் இறைவன் விரும்புகிற வகையில் அமைத்துக் கொள்ள இறையருள் வேண்டுவோம் இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.
என்றும் அன்புடன்
அருள்பணி ஜே. சகாயராஜ்
திருச்சி மறைமாவட்டம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக