திருத்தூதர் யாக்கோபு விழாo
அன்பார்ந்த சகோதரர்களே, சகோதரிகளே!
இன்று நாம் திருத்தூதரான தூய யாக்கோபுவின் திருவிழாவைக் கொண்டாடுகிறோம். இயேசுவின் நெருங்கிய சீடர்களுள் ஒருவராக விளங்கிய தூய யாக்கோபு, நம் இறைவனுக்கும் நமக்கும ஓர் இணைப்பு பாலமாக இருக்கின்றார். அவருடைய வாழ்வின் இரண்டு முக்கியமான அம்சங்களை நாம் இன்றைய வாசகங்களின் அடிப்படையல் நம்முடைய வாழ்க்கையிலும் பிரதிபலிக்க அழைக்கப்படுகிறோம்.
1. இயேசுவுக்காக துன்பங்களை ஏற்கும் மனபான்மை
இன்றைய முதலாவது வாசகத்தில் திருத்தூதர் பவுல் கூறுகிறார்:
"இயேசுவின் சாவுக்குரிய துன்பங்களை எங்கள் உடலில் சுமந்து செல்கிறோம்."
நாம் வாழும் வாழ்க்கையில் துன்பங்கள், சவால்கள் தவிர்க்க முடியாதவை. ஆனால் ஒரு கிறிஸ்துவராக, நாம் இவை அனைத்தையும் இயேசுவுக்காக ஒப்புக்கொள்கிறோமா?
தூய யாக்கோபு, இயேசு கேட்ட “நான் குடிக்கப்போகும் துன்பக் கிண்ணத்தில் நீங்கள் குடிக்க இயலுமா?” என்ற கேள்விக்கு “ஆம்” என்று துணிந்து பதிலளித்தார். அந்த “ஆம்” என்பது வெறும் வார்த்தை அல்ல, தன் உயிர் துறத்தலின் வழியாக அவர் அதை நிறைவேற்றி காட்டினார். இவரே மறைசாட்சியாக உயிர்நீத்த முதல் திருத்தூதர்.
2. சவால்கள் வந்த போதும் நம்பிக்கையைத் தழுவும் மன உறுதி
தூய யாக்கோபு ஆரம்பத்தில் ஒரு உணர்ச்சிவயப்பட்ட, சினம் கொள்ளும் மனிதராக இருந்தாலும், இயேசுவின் பயிற்சியிலும் மரியன்னையின் வழிகாட்டலாலும் அவர் மன உறுதி பெற்று, துன்பங்களைக் கடந்து நற்செய்தி அறிவிப்பில் அர்ப்பணமாகி, சாட்சியாக உயர்ந்தார்.
இன்று நாமும் நம்மை நோக்கிக் கேட்கவேண்டும்:
- சவால்கள் வந்தபோது மனம் சோர்வடைகின்றோமா ?
- அல்லது தூய யாக்கோபைப் போல இறைவனின் துணையோடு அதை எதிர்கொண்டு வருகிறோமா?
நம்மைத் தடுக்கும் எல்லா மனித முயற்சிகளையும் கடந்து, இறைச்செயலை மேற்கொள்வது தூய யாக்கோபின் பணி மூலம் நமக்குப் உணர்த்தப்படுகின்ற வாழ்வுக்கான பாடம்.
3. தன்னலமின்றி இறைவனுக்காக வாழும் வாழ்க்கை
தூய யாக்கோபு, தான் வாழ்ந்த உலகில் தன் நற்செய்தி அறிவிப்பு பணியால் உலகை மாற்ற இயேசுவுக்காக தம் வாழ்வை அர்ப்பணித்தார். நம்மும் இப்படித் தான், நம்முடைய வாழ்க்கையைத் தனக்கென அல்ல, இயேசுவுக்கென வாழும்போது, நிச்சயமாக இறைவனின் அருளும் ஆசிகளும் நம்மில் உறுதியாகும்.
தூய யாக்கோபுவைப் போல நாமும்:
- சவால்கள் வந்த போதும் நம்பிக்கையோடு நிலைத்து நிற்கலாம்....
- இயேசுவுக்காக துன்பங்களை ஏற்றுக்கொள்ளலாம்.....
- தன்னலமின்றி இறையாட்சிக்காக வாழலாம்....
இந்த திருநாளில் நாம் ஒவ்வொருவரும் தூய யாக்கோபுவைப் போல இயேசுவுக்காக நம் வாழ்வை அர்ப்பணித்து, நம்முடைய நம்பிக்கையைச் செயலாக்கும் சாட்சிகள் ஆக வாழ இறையருள் வேண்டுவோம்....இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்....
என்றும் அன்புடன்
அருள் பணி ஜே. சகாயராஜ் திருச்சி மறைமாவட்டம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக