“புனித நாளில் ஆண்டவரைச் சந்திப்போம்; நம் உள்ளத்தைத் திறப்போம்”
இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவர் மோசேயை மூலமாக இஸ்ரயேலருக்குக் கொடுக்கின்ற பல விழாக்கள், ஓய்வு நாள்கள் குறித்து பேசுகிறார். இது வெறும் கலாச்சார நிகழ்வுகள் அல்ல, ஒவ்வொன்றும் இறைசந்திப்புக்கான நேரங்கள்.
- பாஸ்கா, புளிப்பற்ற அப்பப் பண்டிகை, அறுவடைக் கொண்டாட்டங்கள், பாவக் கழுவாய் நாள், கூடாரப் பெருவிழா என ஆண்டுதோறும் மக்களைக் கூடி ஆண்டவரை மகிழ்வோடு வழிபட அழைக்கும் நாட்கள்.
- இவற்றில் முக்கியமாக “இறைமக்களாய் ஒன்று கூடி ஓய்வு நாளைப் புனிதமாய்க் கடைப்பிடியுங்கள்” என்பது திரும்பத் திரும்ப வலியுறுத்தப்படுகிறது.
🔹 இன்றைய சூழலில் நாம் ஓய்வு நாளைப் புனிதமாய் கடைப்பிடிக்கிறோமா?
🔹 வாராந்திர திருப்பலிக்கு செல்லும் அந்த நேரத்தை நாம் ஆண்டவரைச் சந்திக்கும் நாளாக காண்கிறோமா?
ஓய்வு நாள் என்பது வேலை செய்யாத நாளல்ல;
அது நம்மை நமது ஆண்டவரைச் சந்திக்க அழைக்கும் நாள்.
இன்றைய நற்சொய்தி வாசகத்தில் இயேசு தமது சொந்த ஊருக்கு வருகிறார். அவர்களுக்குள் ஒருவராக வசித்து வளர்ந்த இயேசுவின் வார்த்தைகள், வல்ல செயல்கள் – இவை அவருடைய ஊரார் மனதில் வியப்பை மட்டும் இல்லாமல், நம்பிக்கை குறையை ஏற்படுத்துகின்றன.
- “இவர் தச்சரின் மகன் அல்லவா?” – என்று பழைய (தந்தையின் தொழிலை அடிப்படையில்) தகுதியைக் கொண்டு அவரது ஆற்றலை மறுக்கிறார்கள்.
- இயேசுவின் செயல்கள் அவர்களுக்குத் தெரியும், ஆனால் அதற்குப் பின்னிலுள்ள இறைவனின் செயலை அவர்கள் உணரவில்லை.
🔹 நம்முடைய வாழ்க்கையிலும் இறைவன் புதியவிதமாக செயல் படும்போது, நாம் அதை ஏற்க தயங்குகிறோமா?
🔹 பழைய நினைவுகள், பழைய மதிப்பீடுகள், நம் பார்வையை மூடுகிறதா? சிந்திப்போம்....
நம்பிக்கையற்ற மனம் கடவுளின் செயலைத் தடுத்துவிடும்.
எனவே இயேசு சொல்வதுபோல், "தம் சொந்த ஊரிலும் வீட்டிலும் தவிர, இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்" என்ற அவல நிலையை நம்முடைய குடும்பத்திலும் சமூகத்திலும் மாற்ற வேண்டியது நம் கடமை.
ஒவ்வொரு திருப்பலியும், ஒவ்வொரு வார இறுதியும் — நம்மை மாற்றும் சந்திப்பாக இயேசுவின் சந்திப்பு இருக்கட்டும்.
இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார் ...
என்றும் அன்புடன்
அருள் பணி ஜே. சகாயராஜ்
திருச்சி மறை மாவட்டம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக