அன்பார்ந்த சகோதர சகோதரிகளே,
இன்றைய வாசகங்கள் இறை அனுபவம் ஒரு மனிதனின் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக மாற்றுகிறது. என்பதை நமக்கு உணர்த்துகிறது ...
முதல் வாசகத்தில், மோசே சீனாய் மலையில் கடவுளோடு நேரில் பேசினார். அந்த சந்திப்பில் அவர் முகம் ஒளிமயமாக மாறியது. ஆனால் மோசேக்கே அது தெரியவில்லை! கடவுளின் ஒளி அவரை மேம்படுத்தியது, மாற்றியது, ஆனால் மற்றவர்கள் அதை பார்த்து அச்சமடைந்தனர்.
இது நமக்கு ஒரு வாழ்க்கை பாடத்தை கற்று தருகிறது ....
நாம் எவ்வளவு நேரம் இறைவனுடன் செலவழிக்கிறோமோ, அவ்வளவு நம்முடைய வாழ்க்கையில் மாற்றங்கள் நிகழ்கிறது எனவே, நம்மால் மற்றவர்களின் வாழ்வில் ஒளியூட்ட முடியும்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசு இரு சிறிய உருவகங்களை கொடுக்கிறார்:
- நிலத்தில் புதையல் கண்டவர்.
- விலை உயர்ந்த முத்தை கண்ட வணிகர்.
இருவரும் ஒரே செயலையே செய்கிறார்கள்: தமக்குள்ள யாவற்றையும் விற்று அந்த ஒரு பொக்கிஷத்திற்காக தங்கள் வாழ்க்கையை மாற்றுகிறார்கள். அல்லது தங்களிடம் இருப்பதையெல்லாம் இழக்கத் துணிந்து அந்த பொக்கிஷத்தை தமதாக்கிக் கொள்கிறார்கள்.
அவர்கள் வாழ்க்கையின் மையமும் மாறுகிறது.
இறை அனுபவத்தின் வெளிப்பாடும் இதுவே:
- மோசே, கடவுளின் அருகாமையை அனுபவித்ததால், அவரின் உடலும் முகமும் ஒளிர்ந்தது.
- நற்செய்தியின் கதாபாத்திரங்கள், விண்ணரசின் மதிப்பை உணர்ந்ததால், தங்களுடைய பழைய வாழ்வை விட்டுவிட்டு புதிய ஒன்றைப் பிடித்தனர்.
இன்றைய வாசகங்கள் நமக்குத் தருகின்ற அழைப்பாக கீழ்க்கண்ட கேள்விகளை இதயத்தில் எழுப்பி சிந்திக்கலாம் ....
- நாம் இறைவனுடன் நேரம் செலவழிக்கிறோமா?
- இறைவனது வார்த்தையை நம் இதயத்தில் புதையல் போல் மதிக்கிறோமா?
- இறைவனுக்காக எதை விட்டுக் கொடுக்கத் தயாராக இருக்கிறோம்?
நிறைவாக, இந்த நாள் நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்வில் எதை முதன்மைப்படுத்துகிறோம் என்பதை சிந்திப்போம்...
அன்புள்ள சகோதர, சகோதரியே,
விண்ணரசு ஒரு விலை உயர்ந்த புதையல். அதை நம்முடைய வாழ்க்கையில் பெற, நாம் இறைவனோடு ஆழமான உறவை கட்டியெழுப்புவோம். அப்போது மோசேபோல் நாமும் ஒளியூட்டும் மனிதர்களாக இருப்போம்!
இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார் ...
என்றும் அன்புடன்
அருள்பணி. ஜே. சகாயராஜ்
திருச்சி மறை மாவட்டம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக