சனி, 12 ஜூலை, 2025

இறை அன்பும் பிறர் அன்பும் நம் இரு கண்களாகட்டும் ... (13.7.2025)

இறை அன்பும் பிறர் அன்பும் நம் இரு கண்களாகட்டும் ...
ஆண்டவர் இயேசுவில்  அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். இன்றைய இறை வார்த்தையானது நாம் இதயத்தில்
 1. இறையன்பை குறித்தும் 
2. பிறர அன்பை குறித்தும் 
சிந்திக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. 

இன்று நாம் வாசித்த முதல் வாசகத்தில் ஆண்டவரின் வார்த்தைகள் வெறுமனே அறைகளில் எழுதி வைப்பதற்கானதோ அல்லது உடலில் எழுதி வைத்துக் கொள்வதற்கானதோ அல்ல மாறாக அதை இதயத்தில் எழுதப்பட வேண்டியது என்பதை நமக்கு வலியுறுத்துகிறது ...

இயேசுவின் வாழ்வு மூலமாக நாம் நமது வாழ்வில் பின்பற்றுவதற்கு அவர் தந்த கட்டளைகள் என உற்று நோக்குகிற போது அது  இயேசுவின் அன்பு கட்டளைகள் அதாவது 
1. எல்லாவற்றிற்கும் மேலாக இறைவனை அன்பு செய்வது. 
2. உன்னை நீ அன்பு செய்வதுபோல உனக்கு அடுத்து இருப்பவரை அன்பு செய்வாயாக. 

இந்த இரண்டு கட்டளைகளும் இயேசு நமக்கு கொடுத்த கட்டளைகள் ஆகும்.
இந்த இரண்டு கட்டளைகளையும் புதியது என்ற மனப்பான்மையோடு உற்றுநோக்காமல் விவிலியத்தின் துணைகொண்டு ஆராய்கின்றபோது இணைச் சட்டம் 6: 5 லேயே இந்த இருச் சட்டங்களை பற்றி வலியுறுத்தப்பட்டு இருப்பதை நாம் உணர்ந்து கொள்ள முடியும்... இந் இரு சட்டங்களை இதயத்தில் இருத்திக் கொண்டு பயணிக்கவே இயேசு நமக்கு அழைப்பு விடுக்கிறார்.

இந்த அழைப்பை உணர்ந்தவர்களாக நாம் நமது வாழ்வில் இயேசுவின் அன்பு கட்டளைகளாகிய
 1.இறை அன்பையும் 
பிறர் அன்பையும் மையப்படுத்திய இரு கட்டளைகளையும் வாழ்வாக்க கடமைப்பட்டிருக்கிறோம் ...

ஆனால் பல நேரங்களில் இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுல் கொலோசைய நகரப் பகுதி மக்களுக்கு எழுதியது போல அனைத்திற்கும் அப்பாற்பட்டவரும் முதன்மையானவருமாக  கடவுள் இருக்கின்றார் என்பதை உணர்ந்தவர்களாய் அவர் நமக்கு கொடுக்கும் கட்டளைகளை இதயத்தில் பதித்துக் கொண்டவர்களாய் நாம் சொல்லாலும் செயலாலும் சான்று பகர வேண்டும். 

 இதை வலியுறுத்தியே தன்னை சோதிக்கும் நோக்கத்தோடு வந்து கேள்வி எழுப்பிய நபரிடத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து நல்ல சமாரியர் உவமையை எடுத்துரைக்கிறார் ...
இது வரலாற்று நிகழ்வு அல்ல என்றாலும் இயேசுவின் இந்த உவமை அன்றைய காலகட்டத்தில் இருந்த சூழலை முற்றிலுமாக நாம் உணர்ந்து கொள்ள உதவியாக உள்ளது.

ஏறக்குறைய மூன்று மணி நேரம் பயணம் செய்தால் மட்டுமே எரிக்கோவில் இருந்து எருசலேமுக்கு செல்ல முடியும். மிகவும் கரடு முரடான அந்தப் பாதையில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்காது ஆனால் கொள்ளையர்கள் இருப்பதாக இயேசு சுட்டிக் காட்டுகிறார். இந்த கயவர்களால் குற்றுயிரும் குலையுயிருமாக கிடக்கின்ற ஒருவரை கண்டும் காணாதவர் போல நகர்ந்து செல்லுகிற பணியை ஒரு குருவானவர் செய்கிறார்.  

பொதுவாக குருத்துவ பணியை செய்கின்ற யூதர்கள் இறந்து போன நபர்களின் உடலை தொட்டால் ஏழு நாட்கள் அவர்கள் தீட்டு பட்டவர்களாக கருதப்பட்டு இறைபணியை செய்ய இயலாது.  எண்ணிக்கை புத்தகம் 19 ஆம் அதிகாரத்தில் இதை பற்றி நாம் வாசிக்கலாம்.  இதை மையப்படுத்தி  ஆண்டவரின் பணியை செய்வது மட்டுமே முதன்மையானது என எண்ணியவராய் உயிருக்கு போராடிக் கொண்டு  கிடக்கின்ற இவரை எடுத்துச் செல்லும்போது ஒருவேளை இறந்து போனால் நாம் ஏழு நாட்கள் இறை பணி செய்ய இயலாது என்ற எண்ணத்தோடு அவர் அங்கிருந்து நகர்ந்து இருக்கலாம் என விவிலிய அறிஞர்கள் விளக்கம் கொடுக்கிறார்கள்.

ஆனால் அடுத்தவருக்கு உதவாமல் ஆண்டவரின் பணியை செய்வது எந்த விதத்திலும் ஏற்புடையது அல்ல என்பதை இந்த சமூகத்தில் உள்ள அத்தனை பேரும் உணர்ந்து கொள்ளவே இயேசு இங்கு ஒரு குருவை சுட்டிக்காட்டுகிறார். என்பதை நாம் உணர்ந்திட வேண்டும்.

அதுபோல லேவியர் ஒருவர் உயிர் போகின்ற நிலையில்  கிடக்கின்ற நபரை காண்கின்றார்.  கண்டதும் அவர் ஏதும் செய்யாமல் நகர்ந்து செல்கிறார்.  ஒருவிதத்தில் இந்த லேவியரின் செயல் அன்றைய சமூகத்தில் துன்புறுகிற ஒரு நபருக்கு உதவி செய்ய சென்றால் ஒருவேளை அவரை துன்பப்படுத்தியது நாம் தான் என்று சொல்லி இந்த சமூகம் நம்மை தண்டித்து விடுமோ..? என்ற அச்ச உணர்வு மேலோங்கி இருந்ததை சுட்டிக்காட்டும் வண்ணமாக இங்கு லேவியரை இயேசு உருவகமாக பயன்படுத்தினார் என விவிலிய அறிஞர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள் ... இது நாம் வாழும் சமூகத்திலும் இதுபோன்ற நிலை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. துன்புறுகிற ஒரு நபரை கண்டு அவருக்கு உதவி செய்தால் எங்கு நமக்கு பிரச்சனைகள் வந்து விடுமோ என்ற அச்ச உணர்வோடு இன்றும் துன்புறுகிற நபர்களை கண்டும் காணாமல் செல்லுகிற நபர்கள் நம் மத்தியில் உண்டு ... ஆனால் இயேசு இத்தகைய மனநிலையோடு பயணிக்காமல் இறைவனை நம்பி இறைவன் விரும்புகிற பணியை முன்னெடுப்பவர்களாக துன்புறும் நபர்களுக்கு துணை நிற்பது இறைவன் விரும்புகிற பணி என்பதை இந்த லேவியரை பயன்படுத்தி சுட்டிக்காட்டுவதாக நாம் உணர்ந்து கொள்ள முடியும்.

மூன்றாவதாக இந்த நபரை அதாவது உயிர் போகின்ற நிலையில்  கிடந்த நபரை ஒரு சமாரியர் சந்திக்கிறார். அவர் அவனுக்கு உதவி செய்கிறார். என்பதை இயேசு சுட்டிக் காட்டுகிறார் ஒரு விதத்தில் அன்றைய சமூகத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டவர்களாக கருதப்பட்ட இந்த சமாரியர்களிடத்தில் நற்பண்புகள் நிறைந்திருக்கிறது இந்த நற்பண்புகள் தான் இறைவன் விரும்பக் கூடியது பாகுபாடுகளை மையப்படுத்தி மனிதனை மனிதன் ஒதுக்காமல் அனைவரோடும் இணைந்து ஆண்டவருடைய பணியை இன்முகத்தோடு முன்னெடுக்கக்கூடிய நபர்களாக நாம் இருக்க வேண்டும் என்பதைத்தான் இந்த சமாரியரை மையப்படுத்தி இயேசு இந்த சமூகத்திற்கு பாடம் கற்பித்தார் என்பதை உணர்ந்து கொள்ள நாம் அழைக்கப்படுகிறோம் ... அடுத்திருப்பவர் யாராக இருந்தாலும் அவர்களை அரவணைப்பதும் அவர்களுக்கு நம்மால் இயன்ற சின்னஞ்சிறிய உதவிகளை செய்வதும் தான் இயேசுவின் இறைப்பணி ...இயேசுவை அன்பு செய்கின்ற அவரின் வார்த்தைகளை வாழ்வாக்குகின்ற நாம் அத்தனை பேருமே நமது வாழ்வில் இந்த இயேசுவிடம் காணப்பட்ட நற்பண்புகளை நமது நற்பண்புகளாக மாற்றிக்கொண்டு இறைவனையும் மனிதனையும் ஒருசேர மதித்து இறைப்பணி என்பது  மனிதநேயத்தோடு நாம் செய்கிற செயல்கள் என்பதை உணர்ந்தவர்களாய்
 1. இறைபணியிலும் 
2. பிறரன்பு பணியிலும் நம்மை இணைத்துக் கொள்ள இன்றைய நாளில் இறையருள் வேண்டுவோம் ...

என்றும் அன்புடன் 
அருள்பணி ஜே. சகாயராஜ் 
திருச்சி மறைமாவட்டம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஒருவரால் அழிவு - ஒருவரால் வாழ்வு (21.10.2025)

அன்புள்ள  சகோதரர் சகோதரிகளே, இன்றைய வாசகங்களில் திருத்தூதர் பவுலும், நம் ஆண்டவராகிய இயேசுவும்,  ஒரே மையக்கருத்தை நமக்குக் கூறுக...